சனி, 31 ஜனவரி, 2015

ஐந்து தாய்கள்!

ஐந்துவகைத் தாய்கள்:

"உய்வகை பாராட்டுந் தாயூட்டுந்தாய்முலைத் தாய்கைத்தாய்
செய்வகையறிந்துபோற்றஞ்செவிலித் தாயைவர் தாயர்."

ஐந்து வகைத் தாய்கள்:
1. சீராட்டிப் பாராட்டும் தாய்;
2. ஊட்டும்தாய்;
3.முலைத்தாய்;
4.கைத்தாய்;
5. செவலித்தாய்;
இப்போது மாற்றாந்தாய் (Step-mother)என்று ஒன்றும் சட்டத்தில் சேர்ந்துள்ளது.

பெருகு சுப்பிரயோகம்

மரணத்தின் தன்மை:

"பெருகுசுப்பிரயோகம்பின் பிறந்தவிப்பிரயோகம்மேல்
மருவியசோகமோகமரணமுமுறையேசெய்யும்
பெருகுசுப்பிரயோகத்தான் பேச்சொடுநினைவுமாகும்
விரவுவிப்பிரியோகந்தான் வெய்துயிர்த் திரங்கலாமே.

சோகமேவெதுப்பினோடு துய்ப்பவைதெவிட்டல்செய்யும்
மோகமேயழுதலோடுமொழிபலபிதற்றலென்ப
வேமாமரணந்தானேமிகுமயக்கோடயார்ப்பாம்
பாகடர்சொல்லினல்லாய்பகருநூலியல்பிதாமே."

1. சுப்பிரயோகம் என்பது பேச்சும் நினைவும்.
2.விப்பிரயோகம் என்பது மூச்செறிந்து வருந்துவது.
3.சோகம் என்பது வெதுப்பும் உணவை வெறுத்தலும்.
4.மோகம் என்பது அழுதலும் பிதற்றலும்.
5.மரணம் என்பது மயக்கமும், அயர்ச்சியும்.

"மரணத்துக்கு முன் ஏற்படும் ஐந்து வகை அவஸ்தையை (அவத்தையை) இவ்வாறு சொல்கிறார்கள்.

முதலில், பேச்சும் நினைவும் மங்கும்
பின்னர், மூச்சுஉயிர் நிற்க முடியாமல் வருத்தும்
பின்னர், உணவு செல்லாது, பசிபோகும்
பின்னர், அழுகையும் வரும், பிதற்றலும் ஆரம்பிக்கும்;
பின்னர், மரணத்துக்கு சற்றுமுன் ஒருவித மயக்கமும், அயர்ச்சியும் உண்டாகி உயிர் பிரியும்.

போகபூமி!

போகபூமி என்பது என்ன?

"விதியுளிப தினாறாண்டுமேவியபன்னீ ராண்டுப்
பதியொடுமனைவி தெய்வப்பத்துப் பூந்தருவும் வேண்டும்
புதியபோகங்கொடுப்பப்புணர்ந்து தாம் பிரியாராகி
மதியொடுமருவுமென்ன வாழ்வது போகபூமி."

பதினாறு வயதுடைய ஆணும், பன்னிரண்டு வயதுடைய பெண்ணும், பத்துக் கற்பக மரங்களும் வேண்டிய புதிய புதிய போகங்களை கொடுக்க, அதைப் பெற்று, இருவரும் புணர்ந்து இன்பம் அனுபவித்து பிரியாது வாழும் பூமியே போகபூமி என்பது.

வெள்ளி, 16 ஜனவரி, 2015

யார் போலி? Who is the dupe?

Hannah Cowley
ஹன்னா கௌளி என்ற பெண்மணி இங்கிலாந்தில் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த நாடக எழுத்தாளர், கவிஞர்.

இவர் இங்கிலாந்தில் Devon மாநிலத்தில்  1743ல் ஒரு புத்தக வியாபாரிக்கு மகளாப் பிறந்தார். தாமஸ் கௌளி என்பவருக்கு மனைவியாகி லண்டன் போகிறார். அங்கே கணவர் ஒரு ஸ்டாம்பு அலுவலகத்தில் எழுத்தராக வேலை பார்க்கிறார். கணவர், கெஜட்டீர் என்ற பத்திரிக்கைக்கும் எழுதுவாராம். பின்னர் இவரின் கணவர்  இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து இந்தியா வந்து விடுகிறார். பின்னர் அவரின் கணவர் இந்தியாவிலேயே இறந்தும் விடுகிறார். லண்டன் திரும்பவே இல்லை. தனது குடும்பச் செலவுகளுக்காக ஹன்னா நாடகக்கதை எழுதுகிறார். கவிதை எழுதுகிறார். அனுபவமில்லாத எழுத்தாளராகவே எழுதிக் கொண்டிருக்கிறார். தனிமையில் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்த எழுத்துவெறிகூட வேறு ஒரு சமயத்தில் அசம்பாவிதமாக மனதில் தோன்றியதாம். ஒரு நாடகத்துக்கு போகிறார். அதை பார்த்துக் கொண்டிருக்கும்போது, இதுவிட நன்றாக நாம் எழுதலாமே என்று தோன்றுகிறதாம். அவரின் கணவரோ வேடிக்கையாகச் சிரிக்கிறார். மறுநாள் காலையில் தான் எழுதிய ஒரு சிரிப்பு நாடகக் கதையுடன் கணவர் முன் நிற்கிறார் ஹன்னா. அந்த நாடகத்தை The Runaway நாடக கம்பெனிக்கு அனுப்பிவைக்கிறார். அவர்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். அதன்பின் தொடர்ந்து நாடகங்களை எழுதுகிறார். அவரின் அடுத்த நாடகம்தான் Who is the dupe? தான் காதலித்தவனையே, தந்தையை தேர்வு செய்ய வைத்து ஏமாற்றிய கதைதான் அது. இது மிகப் பிரபல நாடகமாக 1779 ல் 126 முறை நாடக அரங்கம் ஏறியது.

அவரின் அடுத்தடுத்த நாடகங்கள்;
Albina
The Fatal Falsehood
The Fate of Sparta,
The Belle's Stratagem

பெண்களின் மனதை துல்லியாக வடித்தவர் என்றும், பெண்ணை பிரமண்ட கதாநாயகியாக காட்டாமல் இயல்பான பெண்ணாகவே காட்டி இருப்பார். பெண்களை மதிக்க வேண்டும் என்பதில் அழுத்தம் கொடுத்திருப்பார். அவர்கள் தன் தகப்பனார், கணவர் இவர்களிடம் அழுத்தி வைக்கப்படுவதை எதிர்த்துள்ளார்.

இவர் கவிதை எழுதுவதிலும் வல்லவர்.
இவர் எழுதிய கவிதையே "The Maid of Arragon." 1780ல் எழுதிய கவிதை இது. இவரின் அடுத்த கவிதைத் தொகுப்பு "More Ways Than One" இது ஒரு காமடி கவிதை. 1783ல் எழுதியுள்ளார். இதை இவரின் கணவர் கௌளிக்கு அர்பணித்துள்ளார். கணவர் இந்தியாவிலேயே தங்கிவிட்டார். இந்தியா சென்ற கணவருக்கு இந்த கவிதை அர்பணிப்பு. (இங்கிலாந்து திரும்பாமலேயே இறந்தார்). இந்த கவிதையில் ஒரு பெண்ணை இரண்டு வயதான பணக்காரர்கள் அடைய முயற்சி. கடைசியில், தான் காதலித்தவனை அடைகிறாள். பெண்ணுக்கு பணம் முக்கியமில்லை என்பதை உணர்த்துகிறார். (ஒருவேளை கணவரை நினைத்து எழுதி இருப்பாரோ?).

அடுத்த நாடகம் "A School for Greybeards" ஒரு இளம் பெண்ணை, ஒரு வயதானவர் சீண்டுவது நையாண்டியாக சொல்லப் பட்டுள்ளது.



வியாழன், 15 ஜனவரி, 2015

Iowa அயோவா

"அயோவா" (Iowa)
அமெரிக்கா நாட்டின் 50 மாநிலங்களில் நடுவில் உள்ள ஒரு மாநிலம் இது. இதன் சிறப்பே இந்த மாநிலத்தின் இரண்டு எல்லைகளிலும் இரண்டு நதிகள் ஒடிக்கொண்டிருக்கும். இந்த இரண்டும் எதுவென்றால், கிழக்கே ஓடும் ஆறு  "மிசிசிப்பி ஆறு." மேற்கே ஓடும் ஆறுகள் "மிசௌரி ஆறும், பெரிய சியாக்ஸ் ஆறும்."

எல்லை பிரிப்பதில், பக்கத்து மாநிலமான மிசௌரிக்கும் அயோவாவுக்கும் வெகுகாலம் சண்டை நடந்தது. அதை "தேன் சண்டை-Honey War" "ரத்தம் சிந்தா சண்டை" என்கின்றனர். இதில், மிசோரி மாநில அதிகாரி, அயோவா பகுதி மக்களிடம் வரிவசூலித்தார். எனவே அவரை அயோவா நிர்வாகம் சிறையில் இட்டது. எல்லைப் பிரச்சனையில் "மூன்று மரங்கள் தேன்கூட்டுடன் இருந்த" மரங்களை வெட்ட வேண்டியதாயிற்று. பிரச்சனை பெரிதாகி சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனது. 1849ல் தான் அமெரிக்க சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை தீர்த்து வைத்தது. State of Missouri vs State of Iowa, 48 U.S. 660 (1849). ஒன்பது நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் நீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகளுமே அயோவாவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர்.  அமெரிக்க வரைபடத்தை பார்த்தால் இந்த வித்தியாசம் தெரியும். மற்ற மாநிலங்கள் எல்லாம் ஸ்கேல் (scale) வைத்து கோடு போட்டதுபோல் எல்லைகளைப் பிரித்திருப்பார்கள். இந்த அயோவா மாநிலத்தின் கிழக்கு எல்லை ஆறு போன போக்கின் பகுதியிலேயே கோணல்-மாணலாகப் பிரித்து இருப்பார்கள். (இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுமே கோணல்-மாணல் எல்லைகள்தான், நேர் எல்லையே இல்லை!).


அயோவா மாநிலத்தை செல்லமாக "ஹாக்-ஐ"- Hawkeye என்றும் டூரிஸ்ட்டுகள் சொல்வர். அங்கு இருந்த பூர்வீக குடிகளின் தலைவன் ஹாக் என்றவர் தலைமையில் அமெரிக்கர்களுடன் ஹாக்-சண்டை 1832ல் நடந்தது. இதன் அடையாளமாக ஹாக்ஐ என்று பெயர் வந்தது. இந்த ஹாக் என்பவர் தென்அமெரிக்க நாட்டை பூர்வீகமாகக் கொண்ட இன்டியப் பழங்குடி இனம்.  

Xiaomi சைனா போன்

ஷியோமி (Xiaomi) ஸ்மார்ட் போன், சைனாவில் வெளியிடப்பட்டது. இது ஆப்பிளின் iPhone 6 plus க்கு போட்டி என்று சொல்லிக் கொள்கிறார்கள். இந்த சைனாக் கம்பெனி உலகின் மூன்றாவது பெரிய போன் கம்பெனி.

இன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்ற போன் மாடலாக, ஒரு புது மாடல் கொண்டு வந்துள்ளார்கள். அது "Mi Note Pro". இதன் விலை 3300 யான் என்கிறார்கள் (530 டாலர்).  

கங்கையில் கழுகுகள்

கங்கையில் கழுகுகளும் காக்கைகளும்

கங்கை ஒரு புனித நதிதான்; இங்கு புனிதநீராடினால் புண்ணியம் கிடைத்துவிடும். ஆனால், அங்கு பிணங்கள் மிதப்பதாக செய்திகள் இப்போது மனதை நெருடுகிறது.

பாதி எரிந்த பிணங்களும், எலும்புக் கூடுகளும் ஏராளமாக உள்ளன.  கங்கையின் நதிக்கரையோரமே பல சுடுகாடுகள் உள்ளனவாம். இங்கு பாதி எரிந்த நிலையிலேயே நதியில் தள்ளவிட்டு விடுவார்களாம். ஒரு பிணத்தை எரிக்க குறைந்த பட்சம் ரூ.7,000 தேவைப்படுமாம். ஏழ்மை நிலையில் இதை செலவு செய்ய முடியாதவர்கள் கங்கையில் தள்ளிவிட்டு காரியத்தை முடிக்கின்றனர். முழுதாக எரிப்பதற்கு முழுவிறகு வாங்க முடியாதார்களும் பாதி எரிந்ததை  நதியில் இழுத்து விட்டு விடுகின்றனராம்.

இமாயலத்திலிருந்து புனித நதியாக வரும் இந்த புனித கங்கை, இந்த அழுக்கையும் சேர்த்தே சுமக்கிறது.

கங்கோத்திரி சிகரத்தில் தோன்றும் கங்கை நதி 2500 கி.மீ. தூரம் ஒடி வங்கச் கடலில் கலக்கிறது. நடுவில், ஹரித்துவார், அலகாபாத், வாரணாசி, பாட்னா, ரிஷிகேஷ், கொல்கத்தா, சென்று வங்காள தேசத்துக்கும் போகிறது.

கங்கை நதியை, இந்துக்கள் 'கங்காதேவி' என்று இந்து பெண்தெய்வமாக வழிபடுகின்றனர். கங்கை நதி, அலகாபாத்தில் கங்கையைக் காட்டிலும் பெரிய யமுனை நதியுடன் கலந்து 'திரிவேணி சங்கமம்' ஆகிறது.

கங்கையானது ஆகாயத்திலிருந்து வந்தது; இதுவே பூமிலிருந்து ஆகாயத்துக்குப் போவதற்குறிய மார்க்கமும் (வழியும்) ஆகுமாம். எனவேதான் மூதாதையர்களுக்கு இங்கு "சிரார்த்த காரியம்" செய்கின்றனர். உயிர்போகும்போது கங்கைநீரைத் தெளிப்பது இதனால்தான். ஆன்மாக்களை கங்கை வழிநடத்தி சொர்க்கத்தில் சேர்ப்பாள்.


இந்த கங்கையை இன்று புனிதமாக இல்லையென்றாலும், சுத்தமாகவாவது வைத்துக் கொள்ள முடியவில்லை. 

புதன், 14 ஜனவரி, 2015

பயிர்களின் தேவதை!

டிமிட்டர்(Demeter). இவள் கிரேக்க இதிகாசத்தில் விவசாயத் தேவதை. இவளே பயிர்கள் வளர்வதற்கும், மனிதனின் உணவு தானியங்கள் வளர்வதற்கும் காரண தேவதை. எனவே மனிதன் தனது முதல் அறுவடையில் கிடைத்த தானியத்தைக் கொண்டு, முதல் ரொட்டியை தயாரித்து இந்த தேவதைக்கு படைத்துவருவான். இவள் கிரேக்க அரசன் குரோன்ஸ்-க்கும் அவன் மனைவி ரியா-வுக்கும் பிறந்த தேவதை. 

நன்றி: கூகுள் படங்களிலிருந்து
இவள், ஜீஸ், பொஷிடான், ஹேடிஸ் ஆகியோரின் சகோதரி. ஆனால் இவளை, அவர்களின் அன்றைய வழக்கப்படி முத்த சகோதரன் ஜீஸ் திருமணம் செய்து கொள்கிறான். இவள் இந்த பூமியின் தேவதை, விவசாயத்தின் தேவதை. ஆடுமாடுகளின் தேவதை. இவளுக்கு ஒரு மகள். அவள் பெயர் பெர்செபொனி(Persephone). இவளை ஹேடிஸ் கடத்திக் கொண்டு அவனின் பாதாள உலகம் கொண்டு செல்கிறான். இதனால் அவளின் தாய் டிமிட்டருக்கு கோபம் வருகிறது. பாதாள உலகத்தில் ஒரு பயிர்கூட வளரவிடாமல் செய்கிறாள். அவள் சோகமாக இருப்பதால், பூமியிலும் பயிர்கள் வளரவில்லை. குளிர் தாக்குகிறது. எனவே கடத்திச் சென்ற மகளை திரும்ப ஒப்படைக்கிறார்கள். 

ஆனாலும், அந்த மகள் அங்கு நான்கு மாதங்கள் தங்கி உணவு உண்டதால், அங்கு ஒவ்வொரு நான்கு மாதமும் செல்ல வேண்டும் என்று நிபந்தனையுடன் வந்திருக்கிறாள். அவள் பாதாள உலகத்திற்கு அந்த நான்கு மாதங்களும் திரும்பிச் செல்லும் போதெல்லாம் அவளின் தாய் டிமிட்டர் வருத்தம் அடைவாளாம். ஆகையால் இங்கு பூமியில் பயிர்கள் வளராமல் குளிர் காலமாகவே இருக்குமாம். 

இவளே காலங்களின் தேவதை என்பதால் இந்த குளிர் காலத்துக்குப் பின்னர் வசந்த காலம் வருமாம்.

*

தமிழ் தாத்தா

தமிழ்தாத்தா எனச் செல்லமாக அழைக்கப்பட்ட உ.வே.சா. என்னும் உ.வே.சாமிநாத அய்யர் மறைந்து (1948 ஏப்ரல் 28) 66 வருடங்கள் ஓடிவிட்டன. தமிழில் இருந்த இலக்கிய ஓலைச் சுவடிகளைத் தேடித்தேடி நாடுமுழுவதும் அலைந்து, திரிந்து, தேடிக் கொடுத்த மகான். சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்தாராம். பின் கும்பகோணம் கலைக் கல்லூரியில் ஆசிரியர். பின்னர், மீனாட்சி தமிழ் கல்லூரியில் முதல்வரானாராம். தமிழ் இலக்கியங்கள் இன்று நம்மிடம் உள்ளதற்கு இவரே முழுமுதற்காரணம்.

பொதுவாக, எல்லா நாட்டு இலக்கியங்களுமே கவிதை வடிவிலேயே உள்ளன. காரணம், எழுத்துக்கள் இல்லாத காலம். அறிந்தவற்றை நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. எனவே கவிதை வடிவில் இருந்தால், நினைவில் நன்கு நிற்கும். கற்கவும், கற்பிக்கவும் சிறந்த முறை இதுதான் என எல்லா இலக்கியங்களும் இப்படி செய்திருக்கின்றன, செய்யப்பட்டிருக்கின்றன.

தமிழ் இலக்கியமும் இப்படிக் கவிதையாகவே இருந்ததில் ஆச்சரியமில்லை. ஆனால், இவைகள் எழுதப்பட்ட காலத்தில் இருந்த தமிழ் வார்த்தைகள் இன்று இல்லை எனலாம் அல்லது அவைகளுக்கு இன்று அர்த்தம் தெரிந்த தமிழன் அதிகமாக இல்லை எனலாம். இதுவே தமிழ் மொழிமீது தமிழ் மக்களுக்கு ஈர்ப்பு குறைந்ததற்கு முழுமையான காரணம். 

எந்த ஒரு மொழியுமே அதன் இன்றைய தலைமுறையின் மொழிவளத்தில் இருக்க வேண்டும். இலக்கியமொழி பெருமையாக இருந்தாலும், அதை உபயோகிக்க முடியாமல் போனால் அது காணாமல் போய்விடும். இந்த நிலை தமிழ்மொழிக்கும் உள்ளது. ஒருசில புலவர்களைத் தவிர வேறு யாருக்கும் மொழிப்புலமை இல்லை. மொழி ஆளுமை இல்லை. மொழி உபயோகிப்பும் இல்லை. எல்லா மொழிகளிலுமே பயன்பாட்டு மொழி என்றும் பேச்சு மொழி(வழக்குமொழி) என்றும் உள்ளது. அதில் தமிழ், தனது பயன்பாட்டுத் தன்மையை இழந்து வந்திருக்கிறது. இன்றைய தலைமுறை தமிழர்கள் பலர் தமிழைப் பயன்பாட்டு மொழியாக உபயோகிக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம், எந்த மொழியையும் வாழ்வின் அவசியமாக, தொழிலின் அவசியமாகக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அது வளரும். இங்கு தமிழ் படித்த எவரும் அதை வாழ்வின் உயர்வுக்கும், வாழ்க்கைக்கும் பயன்படுத்த முடியாத சூழ்நிலையே உள்ளது. அந்த இடத்தை ஆங்கிலம் ஏற்கனவே பிடித்துக் கொண்டு விட்டது. ஆண்ட, ஆளும் அரசுகள் இந்த தவறை வெகுகாலம் செய்து வந்திருக்கின்றன.




செவ்வாய், 13 ஜனவரி, 2015

இரு நகரங்களின் கதை (A Tale of Two Cities)

“ய டேல் ஆப் டூ சிட்டீஸ்” (A Tale of Two Cities).
“இரண்டு நகரங்களின் கதை.” லண்டனையும், பாரிஸையும் வைத்து பின்னப்பட்ட கதை இது.

இந்த கதையை 1859ல் பிரபல எழுத்தாளர் சார்ல்ஸ் டிக்கன்ஸ் எழுதியுள்ளார். லண்டன், பாரிஸ் ஆகிய இரு நகரங்களை கொண்டு எழுதப்பட்ட கதை. சார்ல்ஸ் டானி (Charles Darnay) மற்றும் சிட்னி கார்டன் (Sydney Carton) என்ற இரண்டு நபர்களின் கதைகளாகச் சொல்லப் பட்டுள்ளது. இவர்கள் இருவரும் முகபாவனையில் ஒரேமாதிரி இருப்பவர்கள்; ஆனால் பழக்க வழக்கத்தில் வேறுபாடு கொண்டவர்கள்.

It was the best of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness, it was the epoch of belief, it was the epoch of incredibility, it was the season of Light, it was the season of Darkness, it was the spring of hope, it was the winter of despair, we had everything before us, we had nothing before us, we were all going direct to Heaven, we were all going direct the other way – in short, the period was so far like the present period, that some of its noisiest authorities insisted on its being received, for good or for evil, in the superlative degree of comparison only.
நிறைவான காலமாகவும் இருந்தது; மோசமான காலமாகவும் இருந்தது; அறிவான பருவமாகவும் இருந்தது; முட்டாள்தனமான பருவமாகவும் இருந்தது; நம்பிக்கை கொடுக்கும் காலமாகவும் இருந்தது; நம்பிக்கையே இல்லாத காலமாகவும் இருந்தது; நம்பிக்கை ஒளி தெரிந்த காலமாகவும் இருந்தது; இருள்நிறைந்த காலமாகவும் இருந்தது; எதிர்பார்ப்பு பொங்கிவரும் வசந்த காலமாகவும் இருந்தது; நம்பிக்கையில்லாத கடுங்குளிர் காலமாகவும் இருந்தது; இவை எல்லாமுமே சேர்ந்து நம் முன்னே இருந்தது; இவை எதுவுமே நம்மிடம் இல்லாமலும் இருந்தது; நாம் எல்லோரும் சொர்க்கத்துக்கே சென்றதுபோல இருந்தது; அங்கில்லாமல் வேறு எங்கோ செல்வது போல இருந்தது; சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இப்போது நாம் இருக்கும் காலத்தைவிட வேறு வகையில் இருக்கிறது; அதிகாரமிக்கவர்களின் சத்தம் அதிகமாகி, நல்லவைகளுக்கும், கெட்டவைகளுக்கும் உச்சத்தையே அடையாளமாகக் கொண்டிருந்தன.


சார்ல்ஸ் டிக்கின்ஸ் (எழுத்துலக ஜாம்பவான்)

சார்ல்ஸ் டிக்கின்ஸ் – இவரின் முழுப்பெயர் சார்ல்ஸ் ஜான் ஹப்பம் டிக்கின்ஸ். 1812 பிப்ரவரி 7ல் பிறந்து, 58 வயதுவரை வாழ்ந்து, 1870 ஜூன் 9ல் மறைந்த எழுத்தாளர். இங்கிலாந்தில் ஹம்ஸ்பர் என்ற இடத்தில் வாழ்ந்தவர். மிகப் பிரபலமான பல நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதி உள்ளார். இவருக்கு 12 பிள்ளைகள் உண்டு. 

விக்டோரியா மகாராணி காலத்தில் வாழ்ந்தவர் என்ற பெருமைக்குரியவர். அதாவது மகாராணி விக்டோரியா வாழ்ந்த காலம் 1837 முதல் 1901 வரை; இதைத்தான் சுருக்கமாக ‘விக்டோரியா காலம்’ (Victorian Era) என்பர்.  விக்டோரியா மகாராணிக்கு முந்தைய காலத்தை ‘ஜியார்ஜியன் காலம்’ என்றும், விக்டோரியா மகாராணிக்கு பிந்தைய காலத்தை ‘எட்வர்ட்டியன் காலம்’ என்றும் ஒரு கால அடையாளத்துக்காக குறிப்பிட்டுக் கொள்வர்.


இவரின் அப்பா, கடன் கட்ட முடியாமல் சிறைக்கு போனபோது, இவர் பள்ளிப் படிப்பை தொடர முடியாமல் 12 வயதில் ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு போக நேர்ந்தது. அவரின் தகப்பனார், ஒருசில மாதங்கள்தான் சிறையில் இருந்தார். அந்தக் காலத்தில் கணவனுடன் மனைவியும், பிஞ்சுக் குழந்தைகளும் சிறையில் இருக்க வேண்டுமாம். வளர்ந்த பிள்ளைகள் சிறைக்குச் செல்லத் தேவையில்லையாம். எனவே சார்ல்ஸ் டிக்கின்ஸ், 12 வயது என்பதால் சிறை செல்லவில்லை. சார்ல்ஸ் டிக்கின்ஸின் தகப்பனார் ஜான் டிக்கின்ஸ் கடனுக்காக சிறையில் இருக்கும்போது, அவரின் அப்பத்தா (ஜானின் அப்பாவின் தாயார்) எலிசபத் டிக்கின்ஸ், ஒரு உயில் எழுதிவைத்துவிட்டு இறந்துள்ளார். அந்த உயில்படி, ஜான் டிக்கின்ஸிக்கு 450 டாலர் கொடுக்கச் சொல்லி உள்ளார். அந்த பணம் கிடைக்கும் என்பதால், ஜான் டிக்கின்ஸை, பின்னர் விடுதலை செய்து விட்டனர். 

இந்த காலக்கட்டத்தில், சார்ல்ஸ் டிக்கின்ஸ் ஒரு வயதான பெண்மணியின் வீட்டில் தங்கி இருந்தார். தனது சிறு வயதில், சார்ல்ஸ் டிக்கின்ஸ், ஷூ கம்பெனியில் வேலை செய்தார். பின்னர் ஒரு வாரப் பத்திரிக்கையில் 20 வருடமாக எடிட்டிங் என்னும் திருத்தல் வேலையைச் செய்து வந்தார்.

இவரின் நாவல்கள், குறுநாவல்கள்(novella), சிறுகதைகள், கட்டுரைகள், கடிதங்கள் உலக அளவில் பிரபலமானவை. சிறுவர்களின் கல்வி, அவர்களின் உரிமை, மற்றும் சமுதாய முன்னேற்றத்துக்கு பாடுபட்டவர். இவர் முதன் முதலில் எழுதிய தொடர் ‘தி பிக்விக் பேப்பர்ஸ்.’ இதுதான் இவரை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியது. இவர் இதை தொடர்கதையாக எழுதினார். அடுத்த தொடர் வருவதற்கு இவரின் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனராம். அந்த அளவுக்கு எழுத்தில் சுவை கூட்டியவர். படிக்கத் தெரியாதவர்கள்கூட, இவரின் கதையை வேறு ஒருவரைக் கொண்டு படிக்கச் சொல்லிக் கேட்டு மகிழ்வார்களாம். 

இவர் இந்த முதல் நாவலை 1832-ல் எழுதியபோது இவருக்கு 20 வயதுதான் ஆகிறது. இவரை ‘எழுத்துலக ஜாம்பவான்’ (Literary Colossus) என்றே கருதினர். 1943-ல் “கிறிஸ்மஸ் கரோல்” என்ற குறுநாவலை எழுதினார். இதில் எபினேசர் என்னும் ஒரு கஞ்சனின் கதையை (miserly person as Scrooge) அருமையாகச் சொல்லியுள்ளார். இதில் அந்தக்காலத்தின் (விக்டோரியன் காலம்) பிறந்த மண்ணின் நினைவுகளையும், புதிய மாறுதல்களையும் அழகாகக் காண்பித்துள்ளார். ஏனென்றால், அப்போது இருந்த விக்டோரியா ராணியின் கணவர் ஜெர்மனில் பிறந்தவர். அங்கு கிறிஸ்மஸ் தினத்தில் ‘கிறிஸ்மஸ் மரம்’ வைத்து கொண்டாடுவது வழக்கம். அதை இங்கு மனைவியின் நாடான பிரிட்டனில் அறிமுகப்படுத்திய காலக்கட்டம். அதேபோல, அந்தக் காலக்கட்டத்தில்தான் ‘கிறிஸ்மஸ் கார்டு என்னும் வாழ்த்து அட்டை’ அறிமுகமும் ஆனது. 

எல்லாக் காலத்திலும் ரசிக்கப்பட்ட மற்றொரு நாவல் “ய டேல் ஆப் டூ சிட்டீஸ்” (A Tale of Two Cities). “இரண்டு நகரங்களின் கதை.” லண்டனையும், பாரிஸையும் வைத்து பின்னப்பட்ட கதை இது. இதை 1859ல் எழுதி பிரபலப்படுத்தினார்.
(நன்றி: விக்கிபீடியா - தகவல்கள் விக்கிபீடியா மூலம்)


சனி, 10 ஜனவரி, 2015

ஏதங்களறுத்து எமை யாண்டருள் புரியும்

"ஏதங்களறுத்து எமை யாண்டருள் புரியும்"
பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்|
போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்|
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்|
கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்|
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!|
சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து|
ஏதங்களறுத்து எமை யாண்டருள் புரியும்|

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
(திருப்பள்ளியெழுச்சி)

பஞ்சபூதங்களில் இருக்கிறான்;
பிறப்பு இறப்பு என்ற வருவதும் போவதும் இல்லாதவன்;
உனது இருப்பை பக்தர்களின் பாடல், ஆடல்களில்தான் பார்க்கிறோம்;
உன்னை யாரும் கண்ணால் கண்டதில்லை;
சிந்தனைக்கும் அப்பாற்பட்டவனே! திருப்பெருந்துறை ஆள்பவனே;
எங்களின் ஏதங்கள் (பாவங்கள்) அறுத்து எங்களை ஆட்கொண்டு ஆண்டருள் புரியவேண்டும்; அதற்காக நீ துயில் நீங்கி எழவேண்டும்;


சனி, 3 ஜனவரி, 2015

கட்டப்பொம்மனின் வீரம் நிலைக்கட்டும்!

கட்டபொம்மனின் பிறந்தநாள் இன்று
கட்டபொம்மு 1760ல் ஜனவரி 3ல் பிறந்தாராம். இவர் 16 அக்டோபர் 1799ல் பிரிட்டீஸ் அரசால் தூத்துக்குடியில் உள்ள கயத்தாறு என்ற ஊரில் ஒரு புளியமரத்தில் தூக்கிலிடப் பட்டார். இவரது வீரம் இன்றும் வெகுவாகப் பேசப்படுவது, வேறு யாருக்கும் கிடைக்காத தனிப்பெருமை!

தென்பகுதி இந்தியா பல பாளையங்களாகப் பிரிந்து பல பாளையக்காரர்களால் ஆட்சி செய்யப் பட்டபோது, கட்டப்பொம்மு பாஞ்சாலங்குறிச்சியை (இப்போதுள்ள தூத்துக்குடி மாவட்டத்தை) அரசு புரிந்தவர். விஜயநகர பேரரசு பலமுடன் இருந்த காலத்தில், பல பாளையங்கள் உருவாகினவாம்.  இதில் ஒரு பாளையத்தை அரசாண்டவர் இந்த கட்டப்பொம்மு. கட்டப் பொம்முவின் பூர்வீகம் ஆந்திராவில் உள்ள பிரகாசம் மாவட்டம் என்கின்றனர் சரித்திர வல்லுனர்கள். இவர் நாயக்கர் வழியைச் சேர்ந்தவராம்.

இவரின் மனைவி வீரசக்கம்மாள். வருத்தமான விஷயம், இவர்களுக்கு குழந்தைப் பேறு இல்லையாம். இவருக்கு ஊமைத்துரை, துரைசிங்கம் என்று இரு சகோதரர்கள்  உடன் இருந்தனராம்.

கட்டபொம்முவிடம் வரிகேட்டு பிரிட்டீஸ் அரசின் கலெக்டர் இவரை பலவாறு அலைகழித்து அவமானமும் படுத்தினராம். இராமநாதபுரத்தில் வைத்து கட்டப்பொம்முவை கைது செய்யலாம் என்று கருதி அவர்கள் முயற்சித்தபோது, அதில் இவர் தப்பிவிட்டார். இதன் பின் இவரது கோட்டை தாக்கப்பட்டது. இதில் இவர் தூக்கிலிடப்பட்டார். பின்னர், தம்பி ஊமைத்துரையையும் தூக்கிலிட்டனர்.

எல்லா பாளையக்காரர்களும் பிரிட்டீஸ் அரசுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து வரி செலுத்தினர். ஆனால், கட்டப் பொம்மு தொடர்ந்து அதை செலுத்த மறுத்தார். தன்மானம் மிக்கவர். ஆனாலும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியதாயிற்று. மற்ற பாளையக்காரர்கள் மக்களை கசக்கி பிழிந்து வரி வசூல் செய்து பிரிட்டீஸ் அரசுக்குச் செலுத்தும் போது, இவர்மட்டும் மக்களிடம் வசூலிக்க மனமில்லாமல் பிரிட்டீஸ் அரசிடம் முறையிடுகிறார். அவர்கள் மறுக்கும்போது, அவமானப் படுத்தும்போது, இவர் கர்ஜிக்கிறார். இந்த ஒரு நெகிழ்வான தருணமே, இவரின் வீரத்தின் அடையாளம். இதை மிகச் சரியாகக்  கையாண்டு வெளிவந்த சினிமா படமே "வீரபாண்டிய கட்டப்பொம்மன்." வீரத்திற்கு அடையாளமாக அது இன்றும் எல்லோர் நெஞ்சிலும் நிறைந்திருக்கிறது. அதை தனது நடிப்பாற்றலால் மிக மிகச் சிறப்பாக வெளிக்காட்டியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இந்த திரைப்படம் வெளிவரவில்லையென்றால், கட்டபொம்முவின் புகழ் தமிழ் உலகுக்கு தெரியமாலேயே போயிருக்கும்.
வாழ்க கட்டப்பொம்மனின் துணிவு!

**

வியாழன், 1 ஜனவரி, 2015

படைத்தவனின் பங்காளிசண்டை

சகோதர சண்டை இறைவன் படைத்ததே!
மனித ஆன்மாவில் அதிகமாக ஊட்டி அனுப்பப்பட்டதே இந்தப் பொறாமைதான்!

மனிதன் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று ஆசைப்படுவதாகத் தெரியவில்லை. மண்ணை ஆளவேண்டும் என்று வெறியுடனே இருக்கிறான். இன்றுள்ள மனிதன் மட்டுமல்ல; இதிகாசம் ஆரம்பிக்கும் காலத்திலிருந்த மனிதனுக்கும் இந்த ஆசையே மேலோங்கி இருந்துள்ளது. மண்ணாளும் ஆசை ஏன் வந்தது என்று தெரியவில்லை. மண்ணை ஆளுதல் என்பது மக்களை ஆளுதல். ஒருவேளை, மனித சமுதாயத்தில் நிகரற்றவன் என்ற மமதை அவனுக்கு தேவைப்படுகிறதோ? நிகரற்றவன் என்பதால் எதையும் அடையலாம் என்ற பேராசையா? இதிகாச காலத்திலிருந்து இன்றுவரை அப்படியேதான் இருக்கிறான் மனிதன். உடையில் வேண்டுமானால் மாற்றமிருக்கலாம். உணவில், வாழ்க்கைமுறையில் வேண்டுமானால் மாற்ற-மிருக்கலாம். மனதளவில் அவன் மாறவேயில்லை என்று அடித்துச் சொல்லலாம். 

கிரேக்க இதிகாசத்திலும் இப்படியே. குரோனஸ்(Cronus) என்பவருக்கு பிறந்த மகன்கள் ஜீஸ்(Zeus), பொஷிடான்(Poseidon), ஹேடிஸ்(Hades) என்ற மூன்று சகோதரர்களுக்கும், தந்தையின் வாரிசு யார் என்று சண்டை. தந்தையை கொன்றவரே இந்த மூத்த மகன் ஜீஸ்தான். அப்போதும் திருவுளர் சீட்டைக் குலுக்கிப் போட்டு யாருக்கு அரச பதவி என்று முடிவாகிறது. இதில் ஜீஸ் என்ற மூத்த மகனுக்கே வெற்றி. அதன்படி இந்த பிரபஞ்சத்தை (மூவுலகமான இந்த பூமியும் அதன் மேலுலகான ஆகாயம், கடல் உலகம், பாதள உலகமான எமன் உலகு) மூன்றாக பிரித்துக் கொண்டு, அதில் இந்த ஆகாயமும் பூமியும் ஜீஸ்க்கு கிடைக்கிறது. அந்த Zeus-ஜீஸ்தான் மற்ற கடவுள்களுக்கு எல்லாம் பெரிய கடவுள். இவர்தான் ஜூபிடர்; இடி, மின்னல்களை உருவாக்குபவர்; காளைமாடு வேடத்தில் வந்து ஐரோப்பா என்ற அழகிய மாட்டுக்காரப் பெண்ணை கடத்திக் கொண்டுபோய் திருமணம் செய்தவர். 2-வது சகோதர் பொஷிடானுக்கு கடல் உலகம் கிடைக்கிறது. மூன்றாவது சகோதரர் ஹேடிஸ்க்கு எமன் உலகம் கிடைக்கிறது.

பொஷிடான்(Poseidon) 
கடல் உலகின் கடவுள். சகோதரர்களுக்குள் உலகங்களைப் பங்கு பிரித்துக் கொள்ளும்போது இவருக்கு இந்த கடல் உலகம் கிடைக்கிறது. இவரைத்தான் கடலில் பிரயாணம் செய்பவர்கள் வழிபடுவர். இவர் ஆம்பிட்ரைட்(Amphitrite) என்ற பெண்ணை திருமணம் செய்கிறார். ஆனாலும் இவருக்கு விவசாய தேவதை டிமிட்டர் மீது ஆசை. இவரின் சகோதரிதான் அவர். இதை தெரிந்து கொண்ட டிமிட்டர், இதுவரை இல்லாத அழகான ஒரு விலங்கைப் புதிதாக உருவாக்கிக் காட்டும்படி பொஷிடானுக்கு வேண்டுகோள் விடுக்கிறாள். பல முயற்சிகளுக்குப் பின்னர் ஒரு விலங்கை படைத்தே விட்டார். அதன் பெயர்தான் குதிரை. ஆனால் இந்த குதிரையை படைக்க வெகுகாலம் ஆகிவிட்டது. அதற்குள் அவனுக்கு டிமிட்டர் மீது இருந்த ஆசை போயே போய்விட்டது. பொஷிடானின் ஆயுதம் சூலாயுதம். சிவன் வைத்திருக்கும் ஆயுதம்தான். பொஷிடான் இந்த சூலாயுதத்தை வைத்துக் கொண்டு ஒரு ஆட்டு ஆட்டினால் இந்த பூமி கிடுகிடுக்கும். அதுதான் பூகம்பம். கடவுள்களில் ஜீஸ் என்ற தலைமை கடவுளுக்கு அடுத்த அதிகாரம் உடைய கடவுள் இந்த பொஷிடான்தான். இந்த பொஷிடான் கடவுள் பொறமைக்கு பெயர் போனவர். மற்ற கடவுள்களிடம் அடிக்கடி சண்டையும் போட்டுக் கொள்வார்.

ஹேடிஸ்(Hades). பாதள உலகின் கடவுள். ஜீஸ், பொஷிடான், ஹேடிஸ் ஆகிய மூன்று சகோதரர்களுக்குள் சீட்டுக் குலுக்கிப் போட்டு, தந்தையின் உலகங்களைப் பங்கு பிரிக்கும்போது, பாதாள உலகம் இவருக்கு வந்தது. இறந்தவர்கள் இந்த பாதாள உலகத்திற்கே கொண்டு செல்லப்படுவர். கிரேக்க இதிகாசமாக இருந்தாலும், கிரேக்கர்கள் இவர் பெயரைச் சொல்லவே மாட்டார்கள். அவ்வளவு பயம். எமன் பெயரைச் சொல்ல பயமாகத்தானே இருக்கும்! இவர் அந்த உலகத்தின் கடவுள். இவர் மனித உயிரை நேராகப் போய் எடுக்க மாட்டார். அதற்கு தனியே ஆட்கள் வைத்துள்ளார். இவர் பெயரைச் சொல்லப் பயந்து இவருக்கு வேறு ஒரு பெயரும் வைத்துள்ளனர். அந்தப் பெயர் ப்ளவ்ட்டன்(Plouton). கிரேக்க மொழியில் ப்ளவ்ட்டன் என்றால் பணக்காரன், செல்வந்தன் என்று பெயர். (எமதர்ம ராஜா!). இவர் பூமியின் நிலத்துக்கடியில் உள்ள விலைமதிப்புள்ள நவரத்தின கற்களை எடுத்து வைத்துள்ளராம். இவர் பொதுவாக இவரின் பாதாள உலகை விட்டு வெளியே அவ்வளவாக வரவே மாட்டார். இவரின் ஆயுதம் நீண்ட கொக்கி அருவாள்(pitchfork). (ஆட்டுக்கு கிளை ஒடிக்கப் பயன்படும் ஆட்டுக்காரின் கொக்கிக் கொம்பு). இதை அசைத்தாலும் பூமியில் பூகம்பம் வருமாம். இவர்தான் இவரின் சகோதரி டிமிட்டரின் (விவசாய தேவதையின்) மகளான பெர்செபொனி என்னும் பெண்ணை கடத்திக் கொண்டு சென்று அவரின் பாதாள உலகில் திருமணம் செய்தவர்.

**

பெட்ரோலும் குதிரைவண்டியும்...

பெட்ரோலும் குதிரைவண்டியும்!!
பெட்ரோல் வாகனங்கள் 1980க்கு பின்னரே எல்லா மக்களுக்கும் கிடைத்தன. அதற்குமுன் அது ஒரு ஆடம்பரப் பொருளே. ஆடம்பர பொருள்கள் எல்லாவற்றிலுமே அதை வைத்திருப்பவரின் கௌரவம் அதில் அடங்கி இருக்கும். கௌரவத்திற்கு வைத்திருப்பது வேறு, உபயோகத்திற்கு வைத்திருப்பது வேறு. உபயோகத்தில் இரண்டுவகை. அவசிய உபயோகம். அநாவசிய உபயோகம். இப்போது நாம் வைத்திருக்கும் வாகனங்கள் பலவும் நம்மால் அநாவசியத்திற்கு அதிகமாக உபயோகிக்கப் படுகிறது. 1-ம் நம்பர் வீட்டிலிருந்து 2-ம் நம்பர் வீட்டிற்கு பைக்கில் போவது, அதுபோல், 1-ம்நம்பர் தெருவிலிருந்து 2-ம்நம்பர் தெருவுக்கு காரில் போவது. பெட்ரோல் அதிகம் வாங்கும் நாடுகளின் வரிசையில் இந்தியா 2ம்இடத்தில் உள்ளது. வறுமையான நாடு என்பதால் 2-ம்இடம். இல்லையென்றால் முதலிடத்தில் இருந்திருக்கும். 

இந்தியர்களின் மனநிலையில் உள்ள கோளாறே இந்த பெட்ரோல் செலவு என ஐரோப்பியர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். இந்தியர்கள் கௌரவத்திற்காக கோவணத்தைக்கூட கழற்றி எறிவார்கள் என்று ஜோதிடமே கூறுகிறார்கள் இந்த ஐரோப்பியர்கள். பெட்ரோல் அதிகமாக விற்பனையாவதும், தனிமனிதன் வட்டிக்கு அதிகமாக கடன் வாங்குவதும் இந்தியாவில்தான் அதிகமாம். 

எல்லோருடைய மனநிலையும் சீராகி, குதிரைவண்டியிலும் போகலாம், அதிலொன்றும் கௌரவம் கழன்று விழுந்துவிடாது என்று நினைக்கும் காலத்தில் இந்தியா பொருளாதாரத்தில் வலுவடையும் என்கின்றனர். ஆம், உண்மைதான். பெட்ரோல் இல்லாத வாகனங்களை உபயோகிக்க மறுபடியும் பழகலாம். நேரம் வீணாகும் என்ற கவலை தேவையில்லை. பல வேலைகளுக்கு நேரமே தேவையில்லை. 5மணிக்கு எழுந்தால் 8மணிக்கு போய்ச் சேரலாம் என்ற நிலையில் உள்ள இடங்களுக்கு, இப்போதெல்லாம் 7.30க்கு எழுந்து 8மணிக்கு பைக்கில் அவசரமாகச் செல்வது ஒன்றும் அவசரவேலை என்ற வகையில் சேராது. அறிவுள்ளவர்கள் கலாச்சார மாற்றத்தை கொண்டுவர முடியும். இளையதலைமுறையினரிடம் மனமாற்றம் தேவை!
Courtesy: Google Images
**

ஆங்கிலம் அன்னியமொழியில்லை!

ஆங்கிலம் இனி நம் அன்னியமொழியில்லை!
எந்த மொழியும்  பேசுவது எளிதுதான். ஆனால் இந்தியாவில் இங்கிலீஷ் மொழியை எழுதத் கற்றுக் கொடுத்த அளவுக்கு பேசச் சொல்லித் தரவில்லை. ஏனென்றால் இங்கு அந்த பேச்சு நடை தெரிந்த ஆசிரியர்கள் குறைவே. அதிலும் கிராமப்புறங்களில் பள்ளிக்கூடங்கள் வரை உள்ள ஆசிரியர்கள் இந்தக் கலை கைவராமலேயே ஆங்கிலப் பாடங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அரசும் எந்த அக்கறையும் எடுக்கவில்லை. எந்த மொழியையும் அந்த மொழியைத் தாய்மொழியாக் கொண்டவர் பாடம் சொல்லிக் கொடுத்தால் எளிதில் புரியும்.

இந்தியாவின் முன்னால் பிரதம மந்திரியான ஜவஹர்லால் நேருவிடம், நீங்கள் எப்படி ஆங்கிலத்தை இவ்வளவு எளியையாகப் பேசுகிறீர்கள் என்று கேட்டபோது, 'நான் சிறுவயது முதலே ஆங்கிலப்பள்ளிக் கூடத்தில், ஆங்கில மொழி வழியாகவே கல்வியைக் கற்றேன்; அத்துடன் அது எனது தாய்மொழியைப் போலாகி, நான் பேசவதற்கு முன் ஏற்படும் எனது சிந்தனையும் அதே ஆங்கிலத்திலேயே ஏற்படுகிறது' என்று கூறி உள்ளார். உண்மைதான். இளம்வயதில் எந்த மொழிப் பயிற்சி அதிகம் உள்ளதோ, அதே மொழியில்தான் சிந்தனையும் இருக்கும். பொதுவாக எல்லோருக்கும் அவரவர் தாய் மொழியிலேயே சிந்தனை இருக்கும்.

ஒரு மொழியை சரளமாகப் பேசத் தெரிந்தால்தான் அந்த மொழியிலேயே நம் கருத்தை, எண்ணத்தை சொல்ல முடியும். இல்லையென்றால், நாம் இரண்டு வேலை பார்க்க வேண்டும். சிந்தனையை தமிழில் நமது மூளை சிந்திக்கும்; பின்னர் அது அதை மொழிபெயர்க்கும். அப்போது நிறைய தடுமாற்றம் அடையும். பின்னர் ஒருவழியாக ஒரளவுக்கு மொழிபெயர்த்த  ஆங்கிலத்தை நமக்கு அனுப்பி வைக்கும். அது வாய்க்கு வரும்போது, வாய் அந்த மொழிவளத்தை சொல்லத் தெரியாமல்  தடுமாறும். இப்படித்தான் பலபேரின் வாழ்க்கை ஒடிக் கொண்டிருக்கிறது. ஒருசிலர் பேச்சுமொழியை எங்கோ கற்று, அல்லது பிறருடன் பழகி அறிந்து, நன்றாகப் பேசி வருகிறார்கள். பல உயர்பதவி அதிகாரிகள் கூட இதற்கு விதிவிலக்கல்ல! டாக்டர்கள், என்ஜினியர்கள், வக்கீல்கள், நீதிபதிகள், கம்யூட்டர் வல்லுனர்கள், அரசின் உயர் அதிகாரிகள் இவர்களில் பலருக்கு இந்தச் சிக்கல் உள்ளது. ஏதோ அவரவர் தொழில்சார்ந்த மொழிவார்த்தைகளைக் கொண்டு சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருமே அறிவானவர்கள்தான், ஆனால் மொழி ஆளுமை இல்லை; பேச்சு வரமாட்டேன்  என்கிறது; அவர் என்னசெய்வார்; இந்தக் குறையைத் தீர்க்கத்தான் பல நிறுவனங்கள் 'ஆங்கிலம் கற்றுத் தருகிறோம்' என்று சொல்லி மறுபடியும் தமிழிலிருந்தே ஆரம்பிக்கிறார்கள்.

தமிழன், Passenger என்ற சொல்லை சரியாக உச்சரிக்க மாட்டான். பேசன்சர்  என்றுதான் சொல்வான். அவனுக்கு பெ(எ)சன்சர் என்று சொல்லித் தரவில்லை. பெ-க்கு பே-என்று அதிக அழுத்தம் கொடுப்பான்.
அதுபோல, மலையாளிக்கு College, Coffee, இவைகளை கோலேஜ், கோப்பி என்ற ஊர்முழுக்க சொல்லிக் கொடுத்து (கெடுத்து) வைத்திருக்கின்றனர்.
இதுபோல, தெலுங்கர்கள் , Girl  க்(ஏ)ல் என்பதை கர்ர்ல் என்றே சொல்வார். ஆர் எழுத்தை அவ்வளவு நீளமாக அழுத்துவார்கள்.
மும்பாய் மராட்டிகள்  Education என்பதை எடுகேஷன் என்று வேறு ஒரு உச்சரிப்பு முறையில் சொல்வர். கிட்டத்தட்ட எல்லா  -tion ஒட்டு வார்த்தைகளையும் -shun என்றே உச்சரிப்பர்.

ஆக இந்தியாவில் ஆங்கிலம் அயல்மொழியாக இருந்தாலும், அதுவே கிட்டத்தட்ட இணைப்பு மொழி . தொடர்புமொழி. இதை இனி இந்தியாவை விட்டு விரட்ட முடியாது. ஒருவேளை அது மற்ற மாநில மொழிகளை பேச்சு மொழியாக/வீட்டுமொழியாக மட்டுமே ஆக்கிவிடும் காலம் வெகுதொலைவில் இல்லை. ஆங்கிலம் உலகத் தொடர்பு மொழியாகும் என்றே சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.

ஆங்கிலம் தொடர்பு மொழியாக தொடருமானால், அதை நாம் நமது பேச்சு மொழியாக ஆக்கிக் கொள்ள வேண்டும். நமக்கு  பிரிகேஜி-யிலிருந்து ஏ,பி,சி,டி யை மட்டுமே சத்தமாகச் சொல்லித் தருகின்றனர். அடுத்து, வார்த்தைகளை உச்சரிக்க சொல்லித் தருகிறன்றனர். அத்துடன் பள்ளிக்கூடம் தன் வேலையை முடித்துக் கொண்டு, மனப்பாடம் செய்யவும், ட்யூஷன் படிக்கவும் விட்டுவிடுகிறது. இதில், ஆரம்பத்திலிருந்தே ஆங்கில மொழிவழியில் இவ்வாறு படித்து தேறியவர்கள் ஒருவாறு வேலைக்கு போகலாம். மேல்படிப்புக்கும் போகலாம். ஆனால் அவர்களால் தனியாக ஒரு தொடர் பேச்சை ஆங்கிலத்தில் ஆரம்பிக்க முடியாது. கட்டுரை எழுதுவார்கள்; அது யோசித்து செய்வது. தானாகவே வரவேண்டிய பேச்சு, வராது. இதற்கு சிலர் தனி பயிற்சி வகுப்புகளுக்கு போய் தன்னை தயார் படுத்திக் கொள்கிறார்கள், தேவை இருப்பவர்கள். மற்றவர்கள் அதே நிலையில் தான் உள்ளனர்.

ஆங்கிலத்தில் எழுத்து மொழி வேறு, பேச்சு மொழி வேறு:
ஆங்கிலத்தில் எழுத 26 எழுத்துக்கள் போதும். ஆனால் பேசுவதற்கு மொத்தம் குறைந்த பட்சம் 40 உச்சரிப்புகள் தேவை. தமிழில் உயிர் எழுத்துக்கள் 12ம் மெய் எழுத்துக்கள் 18ம் ஆக 30 எழுத்துக்கள் உண்டு (ஆயுதத்தை விட்டுவிடுவோம்). உயிரும் மெய்யும் கலந்து உருவாக்குவது வேறு எழுத்துக்கள்.
தமிழில் 30 உச்சரிப்புகள் என்றால், ஆங்கிலத்தில்  அது 40 உச்சரிப்புகள். இந்த 40 உச்சரிப்புகளும் தெரிந்தால் மட்டுமே ஆங்கிலம் பேச முடியும்.  இந்த 40 ஆங்கில உச்சரிப்புகளில், 15 உயிர் உச்சரிப்பும், 25 மெய் உச்சரிப்பும் உண்டு.
40 உச்சரிப்புக்கும் தனித்தனி எழுத்து அடையாளங்கள் உள்ளன.  நல்ல ஆங்கில அகராதியில் இது சொல்லப்பட்டிருக்கும்.
ஆங்கிலத்தில் எங்கே 15 உயிரெழுத்துக்கள் உள்ளன என்று குழம்ப வேண்டாம். 
,, இ,,,,,,,,,,அவ்,ஆய்,யு, என்று 15 அடையாளங்கள் உள்ளன.
அ – father, bra, ல் இது உள்ளது;
ஆ – lot, John ல் இது உள்ளது
இ – kit, lid,
ஈ – feel, fleece,,
உ – foot good, full,
ஊ- goose, fool,
எ – dress, bet, fell,
ஏ – face, made, fail, vein,
ஐ – price, ride, file, fine,
ஒ – goat,
ஓ – goal,
ஔ – thought,
அவ் – mouth, loud, foul,
ஆய் – choice, void, foil,
யு – cued, cute, mule, queue,
ஆங்கிலத்தில் உள்ள மெய் எழுத்துக்கள்;
B (buy), d (dye), th (breathe), jd (jam), f (fan), g (bag), h (high), j (yes), k (sky), l (lie), m (my), n (nigh), ng (sang), th (thigh), p (pie), r (rye), s (sigh), sh (shy), tsh (china), v (vie), w (swine), hw (why), z (zoo, has), zh (pleasure, vision).

இவைகளைத் தெரிந்து கொண்டு பழகிய பின்னர், வார்த்தைகளை Syllable ஆகப் பிரித்து படிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும்.
பின்னர், ஒரு ஒரு வாக்கியத்தை மூச்சு விடாமல் (மெதுவாகத்தான்) பேசி பேசி பழக வேண்டும். ஆங்கிலம் பேச வந்துவிடும்.
ஆங்கிலத்தின் சில உச்சரிப்பை நுனிநாக்கில் உச்சரிக்க வேண்டும்; சில உச்சரிப்பை பாம்பு சீறுவதுபோல “ஷ்” உச்சரிப்பில் உச்சரிக்க வேண்டும்; சிலவற்றை விசில் அடிப்பது போல “ஸ்” உச்சரிப்பில் உச்சரிக்க வேண்டும். செந்தமிழ் மொழிக்கும் இதற்கும், உச்சரிப்பில் வெகுதூரம்.

**

நாகரிகத் தடுமாற்றம்!

ஷாங்காய் நகரின் புதுவருட கொண்டாட்டத்தில்  36 பேர் பலியாம்.
சீனா, உழைப்புக்குப் பேர்போன நாடு; புதுவருடக் கொண்டாடத்தை அவ்வளவு விமரிசையாகக் கொண்டாட மாட்டார்கள்; ஏனோ தெரியவில்லை, இவர்களும் ஐரோப்பிய நாடுகளின் கலாச்சாரத்துக்கு மயங்கி விட்டார்கள் போலும்! எந்த நாடுகள் பொருளாதாரத்தில் மற்ற உலக நாடுகளை வெற்றி கொள்கிறதோ, அதன் நாட்டின் கலாச்சாரமே மற்றநாடுகளில் மேலோங்கும்! இது இயல்பு. அந்த வகையில் சீனநாடு ஐரோப்பிய கலாச்சாரத்துக்கு மாறியதில் வியப்பில்லைதான் போலும்!

சீனாவின் கிழக்குப் பகுதியில் வளமான ‘க்யான்ஜி’ நதிக்கரையில் உள்ள இந்த ஷாங்காய் பெருநகரம்தான் உலகிலேயே மக்கள்தொகை அதிகம் வாழும் பெருநகரம். இங்கு இரண்டரைக் கோடி மக்கள் வசிக்கிறார்கள். (சென்னையைக் காட்டிலும் மூன்று மடங்கு பெரியது). ஷாங்காய் என்ற சீன வார்த்தைக்கு ‘கடலுக்கு மேலே’ என்று பொருளாம். ஐரோப்பியர்கள் இந்த ஷாங்காய் நகரை ‘கீழை நாட்டின் பவளம்’ என்றும், ‘கீழைநாட்டின் பாரிஸ்’ என்றும் செல்லமாகச் சொல்வார்களாம். அந்த அளவுக்கு இந்த நகரம் உலக நாகரிகத்தின் உச்சியில் இருக்கிறது. அப்படி இருப்பதால்தானோ என்னவோ, புதுவருடக் கொண்டாட்டமும் உலக நாகரிகத்தை ஒட்டி நடந்துவருகிறது. அங்கு நடந்த நிகழ்வாக யூகமாகச் சொல்லப்படுவது என்னவென்றால், ‘அடுக்குமாடிக் கட்டிடத்தில் கூட்டம் நிரம்பி வழியும்போது, டாலர் நோட்டுக்களை அள்ளி எறிந்ததாகவும், அதை எடுக்க முனைந்தவர்கள் கூட்டத்தில் நெரிசலில் மாட்டி சிக்குண்டார்கள்’ என்றும் சொல்லப்படுகிறது.

எவ்வளவு நாகரிகம் வளர்ந்திருந்தாலும் ‘ஓசி’க்கு அலைபவர்களே இந்த உலகில் அதிகம் போலும்! மனக்கட்டுப்பாடு இல்லாத வாழ்வுமுறை, தடுமாற்றமானதே! மனித வாழ்வில், எங்கும் எப்போதும் சுயகட்டுப்பாடு அவசியமான அவசியம்!
தன்மானம் இல்லாதவரின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் நாகரிகத் தடுமாற்றம்!!!

**