செவ்வாய், 13 ஜனவரி, 2015

சார்ல்ஸ் டிக்கின்ஸ் (எழுத்துலக ஜாம்பவான்)

சார்ல்ஸ் டிக்கின்ஸ் – இவரின் முழுப்பெயர் சார்ல்ஸ் ஜான் ஹப்பம் டிக்கின்ஸ். 1812 பிப்ரவரி 7ல் பிறந்து, 58 வயதுவரை வாழ்ந்து, 1870 ஜூன் 9ல் மறைந்த எழுத்தாளர். இங்கிலாந்தில் ஹம்ஸ்பர் என்ற இடத்தில் வாழ்ந்தவர். மிகப் பிரபலமான பல நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதி உள்ளார். இவருக்கு 12 பிள்ளைகள் உண்டு. 

விக்டோரியா மகாராணி காலத்தில் வாழ்ந்தவர் என்ற பெருமைக்குரியவர். அதாவது மகாராணி விக்டோரியா வாழ்ந்த காலம் 1837 முதல் 1901 வரை; இதைத்தான் சுருக்கமாக ‘விக்டோரியா காலம்’ (Victorian Era) என்பர்.  விக்டோரியா மகாராணிக்கு முந்தைய காலத்தை ‘ஜியார்ஜியன் காலம்’ என்றும், விக்டோரியா மகாராணிக்கு பிந்தைய காலத்தை ‘எட்வர்ட்டியன் காலம்’ என்றும் ஒரு கால அடையாளத்துக்காக குறிப்பிட்டுக் கொள்வர்.


இவரின் அப்பா, கடன் கட்ட முடியாமல் சிறைக்கு போனபோது, இவர் பள்ளிப் படிப்பை தொடர முடியாமல் 12 வயதில் ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு போக நேர்ந்தது. அவரின் தகப்பனார், ஒருசில மாதங்கள்தான் சிறையில் இருந்தார். அந்தக் காலத்தில் கணவனுடன் மனைவியும், பிஞ்சுக் குழந்தைகளும் சிறையில் இருக்க வேண்டுமாம். வளர்ந்த பிள்ளைகள் சிறைக்குச் செல்லத் தேவையில்லையாம். எனவே சார்ல்ஸ் டிக்கின்ஸ், 12 வயது என்பதால் சிறை செல்லவில்லை. சார்ல்ஸ் டிக்கின்ஸின் தகப்பனார் ஜான் டிக்கின்ஸ் கடனுக்காக சிறையில் இருக்கும்போது, அவரின் அப்பத்தா (ஜானின் அப்பாவின் தாயார்) எலிசபத் டிக்கின்ஸ், ஒரு உயில் எழுதிவைத்துவிட்டு இறந்துள்ளார். அந்த உயில்படி, ஜான் டிக்கின்ஸிக்கு 450 டாலர் கொடுக்கச் சொல்லி உள்ளார். அந்த பணம் கிடைக்கும் என்பதால், ஜான் டிக்கின்ஸை, பின்னர் விடுதலை செய்து விட்டனர். 

இந்த காலக்கட்டத்தில், சார்ல்ஸ் டிக்கின்ஸ் ஒரு வயதான பெண்மணியின் வீட்டில் தங்கி இருந்தார். தனது சிறு வயதில், சார்ல்ஸ் டிக்கின்ஸ், ஷூ கம்பெனியில் வேலை செய்தார். பின்னர் ஒரு வாரப் பத்திரிக்கையில் 20 வருடமாக எடிட்டிங் என்னும் திருத்தல் வேலையைச் செய்து வந்தார்.

இவரின் நாவல்கள், குறுநாவல்கள்(novella), சிறுகதைகள், கட்டுரைகள், கடிதங்கள் உலக அளவில் பிரபலமானவை. சிறுவர்களின் கல்வி, அவர்களின் உரிமை, மற்றும் சமுதாய முன்னேற்றத்துக்கு பாடுபட்டவர். இவர் முதன் முதலில் எழுதிய தொடர் ‘தி பிக்விக் பேப்பர்ஸ்.’ இதுதான் இவரை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியது. இவர் இதை தொடர்கதையாக எழுதினார். அடுத்த தொடர் வருவதற்கு இவரின் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனராம். அந்த அளவுக்கு எழுத்தில் சுவை கூட்டியவர். படிக்கத் தெரியாதவர்கள்கூட, இவரின் கதையை வேறு ஒருவரைக் கொண்டு படிக்கச் சொல்லிக் கேட்டு மகிழ்வார்களாம். 

இவர் இந்த முதல் நாவலை 1832-ல் எழுதியபோது இவருக்கு 20 வயதுதான் ஆகிறது. இவரை ‘எழுத்துலக ஜாம்பவான்’ (Literary Colossus) என்றே கருதினர். 1943-ல் “கிறிஸ்மஸ் கரோல்” என்ற குறுநாவலை எழுதினார். இதில் எபினேசர் என்னும் ஒரு கஞ்சனின் கதையை (miserly person as Scrooge) அருமையாகச் சொல்லியுள்ளார். இதில் அந்தக்காலத்தின் (விக்டோரியன் காலம்) பிறந்த மண்ணின் நினைவுகளையும், புதிய மாறுதல்களையும் அழகாகக் காண்பித்துள்ளார். ஏனென்றால், அப்போது இருந்த விக்டோரியா ராணியின் கணவர் ஜெர்மனில் பிறந்தவர். அங்கு கிறிஸ்மஸ் தினத்தில் ‘கிறிஸ்மஸ் மரம்’ வைத்து கொண்டாடுவது வழக்கம். அதை இங்கு மனைவியின் நாடான பிரிட்டனில் அறிமுகப்படுத்திய காலக்கட்டம். அதேபோல, அந்தக் காலக்கட்டத்தில்தான் ‘கிறிஸ்மஸ் கார்டு என்னும் வாழ்த்து அட்டை’ அறிமுகமும் ஆனது. 

எல்லாக் காலத்திலும் ரசிக்கப்பட்ட மற்றொரு நாவல் “ய டேல் ஆப் டூ சிட்டீஸ்” (A Tale of Two Cities). “இரண்டு நகரங்களின் கதை.” லண்டனையும், பாரிஸையும் வைத்து பின்னப்பட்ட கதை இது. இதை 1859ல் எழுதி பிரபலப்படுத்தினார்.
(நன்றி: விக்கிபீடியா - தகவல்கள் விக்கிபீடியா மூலம்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக