வியாழன், 1 ஜனவரி, 2015

படைத்தவனின் பங்காளிசண்டை

சகோதர சண்டை இறைவன் படைத்ததே!
மனித ஆன்மாவில் அதிகமாக ஊட்டி அனுப்பப்பட்டதே இந்தப் பொறாமைதான்!

மனிதன் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று ஆசைப்படுவதாகத் தெரியவில்லை. மண்ணை ஆளவேண்டும் என்று வெறியுடனே இருக்கிறான். இன்றுள்ள மனிதன் மட்டுமல்ல; இதிகாசம் ஆரம்பிக்கும் காலத்திலிருந்த மனிதனுக்கும் இந்த ஆசையே மேலோங்கி இருந்துள்ளது. மண்ணாளும் ஆசை ஏன் வந்தது என்று தெரியவில்லை. மண்ணை ஆளுதல் என்பது மக்களை ஆளுதல். ஒருவேளை, மனித சமுதாயத்தில் நிகரற்றவன் என்ற மமதை அவனுக்கு தேவைப்படுகிறதோ? நிகரற்றவன் என்பதால் எதையும் அடையலாம் என்ற பேராசையா? இதிகாச காலத்திலிருந்து இன்றுவரை அப்படியேதான் இருக்கிறான் மனிதன். உடையில் வேண்டுமானால் மாற்றமிருக்கலாம். உணவில், வாழ்க்கைமுறையில் வேண்டுமானால் மாற்ற-மிருக்கலாம். மனதளவில் அவன் மாறவேயில்லை என்று அடித்துச் சொல்லலாம். 

கிரேக்க இதிகாசத்திலும் இப்படியே. குரோனஸ்(Cronus) என்பவருக்கு பிறந்த மகன்கள் ஜீஸ்(Zeus), பொஷிடான்(Poseidon), ஹேடிஸ்(Hades) என்ற மூன்று சகோதரர்களுக்கும், தந்தையின் வாரிசு யார் என்று சண்டை. தந்தையை கொன்றவரே இந்த மூத்த மகன் ஜீஸ்தான். அப்போதும் திருவுளர் சீட்டைக் குலுக்கிப் போட்டு யாருக்கு அரச பதவி என்று முடிவாகிறது. இதில் ஜீஸ் என்ற மூத்த மகனுக்கே வெற்றி. அதன்படி இந்த பிரபஞ்சத்தை (மூவுலகமான இந்த பூமியும் அதன் மேலுலகான ஆகாயம், கடல் உலகம், பாதள உலகமான எமன் உலகு) மூன்றாக பிரித்துக் கொண்டு, அதில் இந்த ஆகாயமும் பூமியும் ஜீஸ்க்கு கிடைக்கிறது. அந்த Zeus-ஜீஸ்தான் மற்ற கடவுள்களுக்கு எல்லாம் பெரிய கடவுள். இவர்தான் ஜூபிடர்; இடி, மின்னல்களை உருவாக்குபவர்; காளைமாடு வேடத்தில் வந்து ஐரோப்பா என்ற அழகிய மாட்டுக்காரப் பெண்ணை கடத்திக் கொண்டுபோய் திருமணம் செய்தவர். 2-வது சகோதர் பொஷிடானுக்கு கடல் உலகம் கிடைக்கிறது. மூன்றாவது சகோதரர் ஹேடிஸ்க்கு எமன் உலகம் கிடைக்கிறது.

பொஷிடான்(Poseidon) 
கடல் உலகின் கடவுள். சகோதரர்களுக்குள் உலகங்களைப் பங்கு பிரித்துக் கொள்ளும்போது இவருக்கு இந்த கடல் உலகம் கிடைக்கிறது. இவரைத்தான் கடலில் பிரயாணம் செய்பவர்கள் வழிபடுவர். இவர் ஆம்பிட்ரைட்(Amphitrite) என்ற பெண்ணை திருமணம் செய்கிறார். ஆனாலும் இவருக்கு விவசாய தேவதை டிமிட்டர் மீது ஆசை. இவரின் சகோதரிதான் அவர். இதை தெரிந்து கொண்ட டிமிட்டர், இதுவரை இல்லாத அழகான ஒரு விலங்கைப் புதிதாக உருவாக்கிக் காட்டும்படி பொஷிடானுக்கு வேண்டுகோள் விடுக்கிறாள். பல முயற்சிகளுக்குப் பின்னர் ஒரு விலங்கை படைத்தே விட்டார். அதன் பெயர்தான் குதிரை. ஆனால் இந்த குதிரையை படைக்க வெகுகாலம் ஆகிவிட்டது. அதற்குள் அவனுக்கு டிமிட்டர் மீது இருந்த ஆசை போயே போய்விட்டது. பொஷிடானின் ஆயுதம் சூலாயுதம். சிவன் வைத்திருக்கும் ஆயுதம்தான். பொஷிடான் இந்த சூலாயுதத்தை வைத்துக் கொண்டு ஒரு ஆட்டு ஆட்டினால் இந்த பூமி கிடுகிடுக்கும். அதுதான் பூகம்பம். கடவுள்களில் ஜீஸ் என்ற தலைமை கடவுளுக்கு அடுத்த அதிகாரம் உடைய கடவுள் இந்த பொஷிடான்தான். இந்த பொஷிடான் கடவுள் பொறமைக்கு பெயர் போனவர். மற்ற கடவுள்களிடம் அடிக்கடி சண்டையும் போட்டுக் கொள்வார்.

ஹேடிஸ்(Hades). பாதள உலகின் கடவுள். ஜீஸ், பொஷிடான், ஹேடிஸ் ஆகிய மூன்று சகோதரர்களுக்குள் சீட்டுக் குலுக்கிப் போட்டு, தந்தையின் உலகங்களைப் பங்கு பிரிக்கும்போது, பாதாள உலகம் இவருக்கு வந்தது. இறந்தவர்கள் இந்த பாதாள உலகத்திற்கே கொண்டு செல்லப்படுவர். கிரேக்க இதிகாசமாக இருந்தாலும், கிரேக்கர்கள் இவர் பெயரைச் சொல்லவே மாட்டார்கள். அவ்வளவு பயம். எமன் பெயரைச் சொல்ல பயமாகத்தானே இருக்கும்! இவர் அந்த உலகத்தின் கடவுள். இவர் மனித உயிரை நேராகப் போய் எடுக்க மாட்டார். அதற்கு தனியே ஆட்கள் வைத்துள்ளார். இவர் பெயரைச் சொல்லப் பயந்து இவருக்கு வேறு ஒரு பெயரும் வைத்துள்ளனர். அந்தப் பெயர் ப்ளவ்ட்டன்(Plouton). கிரேக்க மொழியில் ப்ளவ்ட்டன் என்றால் பணக்காரன், செல்வந்தன் என்று பெயர். (எமதர்ம ராஜா!). இவர் பூமியின் நிலத்துக்கடியில் உள்ள விலைமதிப்புள்ள நவரத்தின கற்களை எடுத்து வைத்துள்ளராம். இவர் பொதுவாக இவரின் பாதாள உலகை விட்டு வெளியே அவ்வளவாக வரவே மாட்டார். இவரின் ஆயுதம் நீண்ட கொக்கி அருவாள்(pitchfork). (ஆட்டுக்கு கிளை ஒடிக்கப் பயன்படும் ஆட்டுக்காரின் கொக்கிக் கொம்பு). இதை அசைத்தாலும் பூமியில் பூகம்பம் வருமாம். இவர்தான் இவரின் சகோதரி டிமிட்டரின் (விவசாய தேவதையின்) மகளான பெர்செபொனி என்னும் பெண்ணை கடத்திக் கொண்டு சென்று அவரின் பாதாள உலகில் திருமணம் செய்தவர்.

**

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக