சனி, 3 ஜனவரி, 2015

கட்டப்பொம்மனின் வீரம் நிலைக்கட்டும்!

கட்டபொம்மனின் பிறந்தநாள் இன்று
கட்டபொம்மு 1760ல் ஜனவரி 3ல் பிறந்தாராம். இவர் 16 அக்டோபர் 1799ல் பிரிட்டீஸ் அரசால் தூத்துக்குடியில் உள்ள கயத்தாறு என்ற ஊரில் ஒரு புளியமரத்தில் தூக்கிலிடப் பட்டார். இவரது வீரம் இன்றும் வெகுவாகப் பேசப்படுவது, வேறு யாருக்கும் கிடைக்காத தனிப்பெருமை!

தென்பகுதி இந்தியா பல பாளையங்களாகப் பிரிந்து பல பாளையக்காரர்களால் ஆட்சி செய்யப் பட்டபோது, கட்டப்பொம்மு பாஞ்சாலங்குறிச்சியை (இப்போதுள்ள தூத்துக்குடி மாவட்டத்தை) அரசு புரிந்தவர். விஜயநகர பேரரசு பலமுடன் இருந்த காலத்தில், பல பாளையங்கள் உருவாகினவாம்.  இதில் ஒரு பாளையத்தை அரசாண்டவர் இந்த கட்டப்பொம்மு. கட்டப் பொம்முவின் பூர்வீகம் ஆந்திராவில் உள்ள பிரகாசம் மாவட்டம் என்கின்றனர் சரித்திர வல்லுனர்கள். இவர் நாயக்கர் வழியைச் சேர்ந்தவராம்.

இவரின் மனைவி வீரசக்கம்மாள். வருத்தமான விஷயம், இவர்களுக்கு குழந்தைப் பேறு இல்லையாம். இவருக்கு ஊமைத்துரை, துரைசிங்கம் என்று இரு சகோதரர்கள்  உடன் இருந்தனராம்.

கட்டபொம்முவிடம் வரிகேட்டு பிரிட்டீஸ் அரசின் கலெக்டர் இவரை பலவாறு அலைகழித்து அவமானமும் படுத்தினராம். இராமநாதபுரத்தில் வைத்து கட்டப்பொம்முவை கைது செய்யலாம் என்று கருதி அவர்கள் முயற்சித்தபோது, அதில் இவர் தப்பிவிட்டார். இதன் பின் இவரது கோட்டை தாக்கப்பட்டது. இதில் இவர் தூக்கிலிடப்பட்டார். பின்னர், தம்பி ஊமைத்துரையையும் தூக்கிலிட்டனர்.

எல்லா பாளையக்காரர்களும் பிரிட்டீஸ் அரசுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து வரி செலுத்தினர். ஆனால், கட்டப் பொம்மு தொடர்ந்து அதை செலுத்த மறுத்தார். தன்மானம் மிக்கவர். ஆனாலும் விளைவுகளைச் சந்திக்க வேண்டியதாயிற்று. மற்ற பாளையக்காரர்கள் மக்களை கசக்கி பிழிந்து வரி வசூல் செய்து பிரிட்டீஸ் அரசுக்குச் செலுத்தும் போது, இவர்மட்டும் மக்களிடம் வசூலிக்க மனமில்லாமல் பிரிட்டீஸ் அரசிடம் முறையிடுகிறார். அவர்கள் மறுக்கும்போது, அவமானப் படுத்தும்போது, இவர் கர்ஜிக்கிறார். இந்த ஒரு நெகிழ்வான தருணமே, இவரின் வீரத்தின் அடையாளம். இதை மிகச் சரியாகக்  கையாண்டு வெளிவந்த சினிமா படமே "வீரபாண்டிய கட்டப்பொம்மன்." வீரத்திற்கு அடையாளமாக அது இன்றும் எல்லோர் நெஞ்சிலும் நிறைந்திருக்கிறது. அதை தனது நடிப்பாற்றலால் மிக மிகச் சிறப்பாக வெளிக்காட்டியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இந்த திரைப்படம் வெளிவரவில்லையென்றால், கட்டபொம்முவின் புகழ் தமிழ் உலகுக்கு தெரியமாலேயே போயிருக்கும்.
வாழ்க கட்டப்பொம்மனின் துணிவு!

**

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக