ஷாங்காய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஷாங்காய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 ஜனவரி, 2015

நாகரிகத் தடுமாற்றம்!

ஷாங்காய் நகரின் புதுவருட கொண்டாட்டத்தில்  36 பேர் பலியாம்.
சீனா, உழைப்புக்குப் பேர்போன நாடு; புதுவருடக் கொண்டாடத்தை அவ்வளவு விமரிசையாகக் கொண்டாட மாட்டார்கள்; ஏனோ தெரியவில்லை, இவர்களும் ஐரோப்பிய நாடுகளின் கலாச்சாரத்துக்கு மயங்கி விட்டார்கள் போலும்! எந்த நாடுகள் பொருளாதாரத்தில் மற்ற உலக நாடுகளை வெற்றி கொள்கிறதோ, அதன் நாட்டின் கலாச்சாரமே மற்றநாடுகளில் மேலோங்கும்! இது இயல்பு. அந்த வகையில் சீனநாடு ஐரோப்பிய கலாச்சாரத்துக்கு மாறியதில் வியப்பில்லைதான் போலும்!

சீனாவின் கிழக்குப் பகுதியில் வளமான ‘க்யான்ஜி’ நதிக்கரையில் உள்ள இந்த ஷாங்காய் பெருநகரம்தான் உலகிலேயே மக்கள்தொகை அதிகம் வாழும் பெருநகரம். இங்கு இரண்டரைக் கோடி மக்கள் வசிக்கிறார்கள். (சென்னையைக் காட்டிலும் மூன்று மடங்கு பெரியது). ஷாங்காய் என்ற சீன வார்த்தைக்கு ‘கடலுக்கு மேலே’ என்று பொருளாம். ஐரோப்பியர்கள் இந்த ஷாங்காய் நகரை ‘கீழை நாட்டின் பவளம்’ என்றும், ‘கீழைநாட்டின் பாரிஸ்’ என்றும் செல்லமாகச் சொல்வார்களாம். அந்த அளவுக்கு இந்த நகரம் உலக நாகரிகத்தின் உச்சியில் இருக்கிறது. அப்படி இருப்பதால்தானோ என்னவோ, புதுவருடக் கொண்டாட்டமும் உலக நாகரிகத்தை ஒட்டி நடந்துவருகிறது. அங்கு நடந்த நிகழ்வாக யூகமாகச் சொல்லப்படுவது என்னவென்றால், ‘அடுக்குமாடிக் கட்டிடத்தில் கூட்டம் நிரம்பி வழியும்போது, டாலர் நோட்டுக்களை அள்ளி எறிந்ததாகவும், அதை எடுக்க முனைந்தவர்கள் கூட்டத்தில் நெரிசலில் மாட்டி சிக்குண்டார்கள்’ என்றும் சொல்லப்படுகிறது.

எவ்வளவு நாகரிகம் வளர்ந்திருந்தாலும் ‘ஓசி’க்கு அலைபவர்களே இந்த உலகில் அதிகம் போலும்! மனக்கட்டுப்பாடு இல்லாத வாழ்வுமுறை, தடுமாற்றமானதே! மனித வாழ்வில், எங்கும் எப்போதும் சுயகட்டுப்பாடு அவசியமான அவசியம்!
தன்மானம் இல்லாதவரின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் நாகரிகத் தடுமாற்றம்!!!

**