தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 14 ஜனவரி, 2015

தமிழ் தாத்தா

தமிழ்தாத்தா எனச் செல்லமாக அழைக்கப்பட்ட உ.வே.சா. என்னும் உ.வே.சாமிநாத அய்யர் மறைந்து (1948 ஏப்ரல் 28) 66 வருடங்கள் ஓடிவிட்டன. தமிழில் இருந்த இலக்கிய ஓலைச் சுவடிகளைத் தேடித்தேடி நாடுமுழுவதும் அலைந்து, திரிந்து, தேடிக் கொடுத்த மகான். சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்தாராம். பின் கும்பகோணம் கலைக் கல்லூரியில் ஆசிரியர். பின்னர், மீனாட்சி தமிழ் கல்லூரியில் முதல்வரானாராம். தமிழ் இலக்கியங்கள் இன்று நம்மிடம் உள்ளதற்கு இவரே முழுமுதற்காரணம்.

பொதுவாக, எல்லா நாட்டு இலக்கியங்களுமே கவிதை வடிவிலேயே உள்ளன. காரணம், எழுத்துக்கள் இல்லாத காலம். அறிந்தவற்றை நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. எனவே கவிதை வடிவில் இருந்தால், நினைவில் நன்கு நிற்கும். கற்கவும், கற்பிக்கவும் சிறந்த முறை இதுதான் என எல்லா இலக்கியங்களும் இப்படி செய்திருக்கின்றன, செய்யப்பட்டிருக்கின்றன.

தமிழ் இலக்கியமும் இப்படிக் கவிதையாகவே இருந்ததில் ஆச்சரியமில்லை. ஆனால், இவைகள் எழுதப்பட்ட காலத்தில் இருந்த தமிழ் வார்த்தைகள் இன்று இல்லை எனலாம் அல்லது அவைகளுக்கு இன்று அர்த்தம் தெரிந்த தமிழன் அதிகமாக இல்லை எனலாம். இதுவே தமிழ் மொழிமீது தமிழ் மக்களுக்கு ஈர்ப்பு குறைந்ததற்கு முழுமையான காரணம். 

எந்த ஒரு மொழியுமே அதன் இன்றைய தலைமுறையின் மொழிவளத்தில் இருக்க வேண்டும். இலக்கியமொழி பெருமையாக இருந்தாலும், அதை உபயோகிக்க முடியாமல் போனால் அது காணாமல் போய்விடும். இந்த நிலை தமிழ்மொழிக்கும் உள்ளது. ஒருசில புலவர்களைத் தவிர வேறு யாருக்கும் மொழிப்புலமை இல்லை. மொழி ஆளுமை இல்லை. மொழி உபயோகிப்பும் இல்லை. எல்லா மொழிகளிலுமே பயன்பாட்டு மொழி என்றும் பேச்சு மொழி(வழக்குமொழி) என்றும் உள்ளது. அதில் தமிழ், தனது பயன்பாட்டுத் தன்மையை இழந்து வந்திருக்கிறது. இன்றைய தலைமுறை தமிழர்கள் பலர் தமிழைப் பயன்பாட்டு மொழியாக உபயோகிக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம், எந்த மொழியையும் வாழ்வின் அவசியமாக, தொழிலின் அவசியமாகக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அது வளரும். இங்கு தமிழ் படித்த எவரும் அதை வாழ்வின் உயர்வுக்கும், வாழ்க்கைக்கும் பயன்படுத்த முடியாத சூழ்நிலையே உள்ளது. அந்த இடத்தை ஆங்கிலம் ஏற்கனவே பிடித்துக் கொண்டு விட்டது. ஆண்ட, ஆளும் அரசுகள் இந்த தவறை வெகுகாலம் செய்து வந்திருக்கின்றன.




வியாழன், 1 ஜனவரி, 2015

ஆங்கிலம் அன்னியமொழியில்லை!

ஆங்கிலம் இனி நம் அன்னியமொழியில்லை!
எந்த மொழியும்  பேசுவது எளிதுதான். ஆனால் இந்தியாவில் இங்கிலீஷ் மொழியை எழுதத் கற்றுக் கொடுத்த அளவுக்கு பேசச் சொல்லித் தரவில்லை. ஏனென்றால் இங்கு அந்த பேச்சு நடை தெரிந்த ஆசிரியர்கள் குறைவே. அதிலும் கிராமப்புறங்களில் பள்ளிக்கூடங்கள் வரை உள்ள ஆசிரியர்கள் இந்தக் கலை கைவராமலேயே ஆங்கிலப் பாடங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அரசும் எந்த அக்கறையும் எடுக்கவில்லை. எந்த மொழியையும் அந்த மொழியைத் தாய்மொழியாக் கொண்டவர் பாடம் சொல்லிக் கொடுத்தால் எளிதில் புரியும்.

இந்தியாவின் முன்னால் பிரதம மந்திரியான ஜவஹர்லால் நேருவிடம், நீங்கள் எப்படி ஆங்கிலத்தை இவ்வளவு எளியையாகப் பேசுகிறீர்கள் என்று கேட்டபோது, 'நான் சிறுவயது முதலே ஆங்கிலப்பள்ளிக் கூடத்தில், ஆங்கில மொழி வழியாகவே கல்வியைக் கற்றேன்; அத்துடன் அது எனது தாய்மொழியைப் போலாகி, நான் பேசவதற்கு முன் ஏற்படும் எனது சிந்தனையும் அதே ஆங்கிலத்திலேயே ஏற்படுகிறது' என்று கூறி உள்ளார். உண்மைதான். இளம்வயதில் எந்த மொழிப் பயிற்சி அதிகம் உள்ளதோ, அதே மொழியில்தான் சிந்தனையும் இருக்கும். பொதுவாக எல்லோருக்கும் அவரவர் தாய் மொழியிலேயே சிந்தனை இருக்கும்.

ஒரு மொழியை சரளமாகப் பேசத் தெரிந்தால்தான் அந்த மொழியிலேயே நம் கருத்தை, எண்ணத்தை சொல்ல முடியும். இல்லையென்றால், நாம் இரண்டு வேலை பார்க்க வேண்டும். சிந்தனையை தமிழில் நமது மூளை சிந்திக்கும்; பின்னர் அது அதை மொழிபெயர்க்கும். அப்போது நிறைய தடுமாற்றம் அடையும். பின்னர் ஒருவழியாக ஒரளவுக்கு மொழிபெயர்த்த  ஆங்கிலத்தை நமக்கு அனுப்பி வைக்கும். அது வாய்க்கு வரும்போது, வாய் அந்த மொழிவளத்தை சொல்லத் தெரியாமல்  தடுமாறும். இப்படித்தான் பலபேரின் வாழ்க்கை ஒடிக் கொண்டிருக்கிறது. ஒருசிலர் பேச்சுமொழியை எங்கோ கற்று, அல்லது பிறருடன் பழகி அறிந்து, நன்றாகப் பேசி வருகிறார்கள். பல உயர்பதவி அதிகாரிகள் கூட இதற்கு விதிவிலக்கல்ல! டாக்டர்கள், என்ஜினியர்கள், வக்கீல்கள், நீதிபதிகள், கம்யூட்டர் வல்லுனர்கள், அரசின் உயர் அதிகாரிகள் இவர்களில் பலருக்கு இந்தச் சிக்கல் உள்ளது. ஏதோ அவரவர் தொழில்சார்ந்த மொழிவார்த்தைகளைக் கொண்டு சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருமே அறிவானவர்கள்தான், ஆனால் மொழி ஆளுமை இல்லை; பேச்சு வரமாட்டேன்  என்கிறது; அவர் என்னசெய்வார்; இந்தக் குறையைத் தீர்க்கத்தான் பல நிறுவனங்கள் 'ஆங்கிலம் கற்றுத் தருகிறோம்' என்று சொல்லி மறுபடியும் தமிழிலிருந்தே ஆரம்பிக்கிறார்கள்.

தமிழன், Passenger என்ற சொல்லை சரியாக உச்சரிக்க மாட்டான். பேசன்சர்  என்றுதான் சொல்வான். அவனுக்கு பெ(எ)சன்சர் என்று சொல்லித் தரவில்லை. பெ-க்கு பே-என்று அதிக அழுத்தம் கொடுப்பான்.
அதுபோல, மலையாளிக்கு College, Coffee, இவைகளை கோலேஜ், கோப்பி என்ற ஊர்முழுக்க சொல்லிக் கொடுத்து (கெடுத்து) வைத்திருக்கின்றனர்.
இதுபோல, தெலுங்கர்கள் , Girl  க்(ஏ)ல் என்பதை கர்ர்ல் என்றே சொல்வார். ஆர் எழுத்தை அவ்வளவு நீளமாக அழுத்துவார்கள்.
மும்பாய் மராட்டிகள்  Education என்பதை எடுகேஷன் என்று வேறு ஒரு உச்சரிப்பு முறையில் சொல்வர். கிட்டத்தட்ட எல்லா  -tion ஒட்டு வார்த்தைகளையும் -shun என்றே உச்சரிப்பர்.

ஆக இந்தியாவில் ஆங்கிலம் அயல்மொழியாக இருந்தாலும், அதுவே கிட்டத்தட்ட இணைப்பு மொழி . தொடர்புமொழி. இதை இனி இந்தியாவை விட்டு விரட்ட முடியாது. ஒருவேளை அது மற்ற மாநில மொழிகளை பேச்சு மொழியாக/வீட்டுமொழியாக மட்டுமே ஆக்கிவிடும் காலம் வெகுதொலைவில் இல்லை. ஆங்கிலம் உலகத் தொடர்பு மொழியாகும் என்றே சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.

ஆங்கிலம் தொடர்பு மொழியாக தொடருமானால், அதை நாம் நமது பேச்சு மொழியாக ஆக்கிக் கொள்ள வேண்டும். நமக்கு  பிரிகேஜி-யிலிருந்து ஏ,பி,சி,டி யை மட்டுமே சத்தமாகச் சொல்லித் தருகின்றனர். அடுத்து, வார்த்தைகளை உச்சரிக்க சொல்லித் தருகிறன்றனர். அத்துடன் பள்ளிக்கூடம் தன் வேலையை முடித்துக் கொண்டு, மனப்பாடம் செய்யவும், ட்யூஷன் படிக்கவும் விட்டுவிடுகிறது. இதில், ஆரம்பத்திலிருந்தே ஆங்கில மொழிவழியில் இவ்வாறு படித்து தேறியவர்கள் ஒருவாறு வேலைக்கு போகலாம். மேல்படிப்புக்கும் போகலாம். ஆனால் அவர்களால் தனியாக ஒரு தொடர் பேச்சை ஆங்கிலத்தில் ஆரம்பிக்க முடியாது. கட்டுரை எழுதுவார்கள்; அது யோசித்து செய்வது. தானாகவே வரவேண்டிய பேச்சு, வராது. இதற்கு சிலர் தனி பயிற்சி வகுப்புகளுக்கு போய் தன்னை தயார் படுத்திக் கொள்கிறார்கள், தேவை இருப்பவர்கள். மற்றவர்கள் அதே நிலையில் தான் உள்ளனர்.

ஆங்கிலத்தில் எழுத்து மொழி வேறு, பேச்சு மொழி வேறு:
ஆங்கிலத்தில் எழுத 26 எழுத்துக்கள் போதும். ஆனால் பேசுவதற்கு மொத்தம் குறைந்த பட்சம் 40 உச்சரிப்புகள் தேவை. தமிழில் உயிர் எழுத்துக்கள் 12ம் மெய் எழுத்துக்கள் 18ம் ஆக 30 எழுத்துக்கள் உண்டு (ஆயுதத்தை விட்டுவிடுவோம்). உயிரும் மெய்யும் கலந்து உருவாக்குவது வேறு எழுத்துக்கள்.
தமிழில் 30 உச்சரிப்புகள் என்றால், ஆங்கிலத்தில்  அது 40 உச்சரிப்புகள். இந்த 40 உச்சரிப்புகளும் தெரிந்தால் மட்டுமே ஆங்கிலம் பேச முடியும்.  இந்த 40 ஆங்கில உச்சரிப்புகளில், 15 உயிர் உச்சரிப்பும், 25 மெய் உச்சரிப்பும் உண்டு.
40 உச்சரிப்புக்கும் தனித்தனி எழுத்து அடையாளங்கள் உள்ளன.  நல்ல ஆங்கில அகராதியில் இது சொல்லப்பட்டிருக்கும்.
ஆங்கிலத்தில் எங்கே 15 உயிரெழுத்துக்கள் உள்ளன என்று குழம்ப வேண்டாம். 
,, இ,,,,,,,,,,அவ்,ஆய்,யு, என்று 15 அடையாளங்கள் உள்ளன.
அ – father, bra, ல் இது உள்ளது;
ஆ – lot, John ல் இது உள்ளது
இ – kit, lid,
ஈ – feel, fleece,,
உ – foot good, full,
ஊ- goose, fool,
எ – dress, bet, fell,
ஏ – face, made, fail, vein,
ஐ – price, ride, file, fine,
ஒ – goat,
ஓ – goal,
ஔ – thought,
அவ் – mouth, loud, foul,
ஆய் – choice, void, foil,
யு – cued, cute, mule, queue,
ஆங்கிலத்தில் உள்ள மெய் எழுத்துக்கள்;
B (buy), d (dye), th (breathe), jd (jam), f (fan), g (bag), h (high), j (yes), k (sky), l (lie), m (my), n (nigh), ng (sang), th (thigh), p (pie), r (rye), s (sigh), sh (shy), tsh (china), v (vie), w (swine), hw (why), z (zoo, has), zh (pleasure, vision).

இவைகளைத் தெரிந்து கொண்டு பழகிய பின்னர், வார்த்தைகளை Syllable ஆகப் பிரித்து படிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும்.
பின்னர், ஒரு ஒரு வாக்கியத்தை மூச்சு விடாமல் (மெதுவாகத்தான்) பேசி பேசி பழக வேண்டும். ஆங்கிலம் பேச வந்துவிடும்.
ஆங்கிலத்தின் சில உச்சரிப்பை நுனிநாக்கில் உச்சரிக்க வேண்டும்; சில உச்சரிப்பை பாம்பு சீறுவதுபோல “ஷ்” உச்சரிப்பில் உச்சரிக்க வேண்டும்; சிலவற்றை விசில் அடிப்பது போல “ஸ்” உச்சரிப்பில் உச்சரிக்க வேண்டும். செந்தமிழ் மொழிக்கும் இதற்கும், உச்சரிப்பில் வெகுதூரம்.

**