அதிஷ்டம் எப்போதுமே
கைகொடுத்துக் கொண்டிருக்காது என்பதை நாம் உணர்ந்து நடக்கவேண்டும் என்பதற்கு
எத்தனையோ கதைகளை சாமியார் சொல்லிக் கொண்டிருக்கிறார்;
அந்த வரிசையில், மற்றொரு கதையான, "ஷெனோபியா ராணி" - Zenobia,
the Queen of the Palmyrene Empire in Syria.
சிரியா நாடு; 3-ம் நூற்றாண்டு காலம்; ஷெனோபியா ராணி; இவரே பால்மிரேனி சாம்ராஜ்ஜியத்தின் மகாராணி; இவர்
சிரியா நாட்டு செல்வக் குடும்பத்தில் பிறக்கிறாள்; இவள்,
எகிப்த்தியப் பேரழகி கிளியோபாட்ரா வாரிசு வழியில் வந்தவள் என்றும்
சொல்லிக் கொள்கிறாள்;
இவள் கருமைநிறம்; கருத்த ஒளிவீசம் கண்கள்; வெள்ளைவெளேரென்ற பற்கள்;
புத்திசாலி, அழகு தேவதையும் கூட; இவளே சொல்லிக் கொள்வாளாம், "நான்
கிளியோபாட்ராவைவிட ஒரு படி அழகு அதிகம்தான்." கிளியோபாட்ரா வெறும் அழகு
மட்டும்தான்; ஆனால் அவள் கற்பில் களங்கமுள்ளவள்; ஆனால் நானோ அப்படியில்லை! அழகிலும் அவளை மிஞ்சி இருக்கிறேன்;
கற்பில், என் காலடி தூசுக்குக் கூட அவள்
எனக்குச் சமமாக மாட்டாள்" என்று பீற்றிக் கொள்கிறாள்; நியாயம்தானே?
ஆண்மகனைப் போலவே வளர்க்கப்பட்டவள்; குதிரைச்சவாரி,
வேட்டை, தன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில்
இருக்கும்போது மட்டும் கொஞ்சம் தண்ணி! அதிக கறாரான பேர்வழி! யாரும் நெருங்கிவிட முடியாது!
அவ்வளவுதான் தொலைந்தார்கள்! நல்ல படிப்பு! கிரேக்க மொழி, அராமிக்
மொழி, எகிப்திய மொழியில் சரளமாகப் பேச எழுத படிக்கும்
திறமைகள்! இது இல்லாமல் லத்தீன் மொழியும் அத்துபடி! லத்தீனில் கவிதைகூட
எழுதுவாளாமே! இவளைச் சுற்றி எப்போதும் புலவர்களும், தத்துவ
மேதைகளும் குழுமி இருப்பார்களாம்! அறிவுக் களஞ்சியமாம்!
இவ்வளவு அறிவோடு
இருப்பவளுக்கு எப்படி மாப்பிள்ளை கிடைக்கும். இவள் திருமணமே வேண்டாம் என்று
இருக்கிறாள்; யார் சொன்னாலும் கேட்பதாக இல்லை; தகுதியானவன் கிடைப்பானா என்ற கவலையா, அல்லது எதுக்கு
எவனுக்கோ அடிமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணமோ தெரியவில்லை!!! "எங்காவது ஒரு
இடத்தில், இவளுக்குறிய மாப்பிள்ளை பிறந்திருக்காமலேயா
போய்விடுவான்?" (ஒரு குழந்தை, அது
கருவில் இருக்கும்போதே, அதன் மூன்றாவது மாதத்திலேயே, அதன் துணையை, கடவுள் வேறு எங்கோ ஏற்படுத்தி வைத்து
விடுவானாம், இது கடவுள் இரகசியம்);
சிரியாவில் ஒரு
இடத்தில் ஒருவன் பிறக்கிறான்; அவன் பெயர் லூசியஸ்
ஒடெனாத்தஸ் (Lucius Odenathus): இவனும் மன்னர் பரம்பரைதான்;
இவனுக்கு ஏற்கனவே ஒரு திருமணம் நடந்து அந்த மனைவி மூலம் ஒரு மகன்
உள்ளான். அவன் பெயர் ஹெய்ரான்; இந்த லூசியஸூக்கு இரண்டாவது
மனைவியாக அழகி ஷெனோபியா வருகிறாள்;
யார் யாரோ கட்டாயப்
படுத்தி இவளை இரண்டாவது மனைவியாக போகும்படி நிர்பந்திக்கிறார்கள்; கடவுளின் வேலையாகத்தான் இருக்கும்! இவளுக்கும் ஒரு மகன் பிறக்கிறான்;
அவன் பெயர் வாபல்லதஸ்; கணவனும், மூத்த மனைவியின் மகனும் ஒரு போரில் கொல்லப்படுகிறார்கள்; இராஜ்ஜியம் வாரிசுப்படி இவளின் மகனுக்கு வரவேண்டும்; இவளின் மகன் வாபல்லதஸூக்கு ஒருவருடக் குழந்தையாக இருக்கிறான்; எனவே தாய், கார்டியனாக பதவி ஏற்கிறார் தன் மகனுக்காக;
அந்த மகனின் முடிசூட்டு பெயர் அகாஸ்தஸ் என்று வைத்துக்
கொள்கிறார்கள்; இவள் போருக்கு போகிறாள்; நாடு பிடிக்கிறாள்; ரோமானிய சாம்ராஜ்ஜியத்தின்
கிழக்குப் பகுதியை வெற்றி கொண்டு அதையும் தன் நாட்டுடன் சேர்த்து பெரிய பேரரசாக
ஆட்சி செய்கிறாள்; ஒருமுறை, எகிப்து
மீது படையெடுத்து அதை கைப்பற்றி விட்டாள்; அந்த நாட்டுக்கு,
தானே "வெற்றி ராணி" என்றும் முடிசூட்டிக் கொண்டாள்;
கடவுள் எப்போதுமே
வெற்றியைக் கொடுத்துக் கொண்டிருக்க மாட்டானாம்! அதை நாம் தெரிந்து வைத்துக்
கொள்ளவேண்டுமாம்!
அங்காரா நாட்டுக்கு
படையெடுக்கும் போது, சருக்கல்! இவளின் தளபதியை
கொன்றுவிட்டனர்; இவளும், இவள் மகனும்
ஒரு ஒட்டகத்தில் ஏறி தப்பிக்கின்றனர்; ரோமில் தஞ்சம்! என்னே
கொடுமை, வழியிலேயே மகன் வாபல்லதஸ் இறந்துவிட்டான்; ரோம மன்னன் ஆரேலியன் ஏற்கனவே கடுப்பில் இருந்திருப்பான் போலும்! ஷெனோபியாவை
தங்கச் சங்கிலியில் கட்டி தெருவில் ரோமானிய வீரர்கள் இழுத்துச் செல்கிறார்கள்;
வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள்! அழகி, கற்புக்கரசி,
அறிவாளி, பன்மொழிபுலவி, வீராங்கனை,
ராணி, மாகாராணி, ....... அத்தனை இருந்தும், தெருவில் சங்கிலியில் கட்டி
இழுத்துச் செல்கின்றனர். தங்கச் சங்கிலியாம்! மானம் போகும்போது, அது தங்கத்தில் போனாலென்ன, தகரத்தில் போனாலென்ன?
முடிவு
தெரியவில்லை.........
ஆனால் பின்னர் வந்த
சரித்திர ஆசிரியர்கள், இவளை இப்படியே விட்டுச் செல்ல
மனமில்லாமல் பல கிளைமாக்ஸை சொல்லி வைத்துள்ளனர்.
1. இவள், ரோம் நகருக்கு வருவதற்குள்,
இறந்துவிட்டாள்;
2. இவள், பட்டினி கிடந்து, ரோஷமாக இறந்து விட்டாள்;
3. இவளின் அழகைப்
பாராட்டிய ரோம் மன்னர் இவளை மன்னித்து விட்டுவிட்டான்;
4. இவள், ரோம் நகரத்துக்கு வந்து சிறை தண்டனை முடிந்து அங்குள்ள கவர்னரை திருமணம்
செய்து வாழ்ந்தாள்;
5. இவள் தத்துவ ஞானியாகி ரோம் நகரில் வாழ்ந்தாள்;
6. ரோம் மன்னர், இவளுக்கு பெரிய வில்லா கட்டிக் கொடுத்து அங்கு தங்க வைத்தார்;
பறிபோன மானம், போனதுதானே! திரும்பி வரவா போகிறது.
அதிஷ்டத்துடன் கடவுள்
விளையாடும் இந்த விளையாட்டைத்தான், சாமியார்
கதையாகச் சொல்லியுள்ளார். (கான்டர்பரி கதைகள்).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக