பளிச்சென்று
அடிக்கும் வெயிலைப் பார்த்தால் ஒரு நாளில் நான்கில் ஒரு பங்கு நகர்ந்து விட்டது
தெரிகிறது; ஏப்ரல் மாதத்தின் 18 வது நாள் இது;
மே மாதம் வருவதற்கு தூது சொல்லவந்ததோ இந்த ஏப்ரல் மாதம்! ஒவ்வொரு
மரத்தின் நிழலும், அந்த மரம் வளர்ந்திருக்கிற அளவுக்கே அதன்
நிழலின் நீளமும் இருக்கிறது; இதை வைத்துப் பார்த்தால்,
பளிச்சென்று கிளம்பியுள்ள சூரியன் 45 டிகிரி உயரத்தில் இருக்கிறது;
அப்படியென்றால், மணிக்கணக்குப்படி இப்போது 10
மணி இருக்கும்; இந்தச் சூரியனைப் பார்த்துக்கொண்டே
வந்திருப்பவன், தன் குதிரையை விட்டு இறங்கி சேணத்தை
அவிழ்க்கிறான்;
இறங்கியவன்,
"மைலார்ட்! ஏற்கனவே ஒருநாளில் கால் பங்கு பொழுது கடந்துவிட்டது;
போன பொழுது கடவுளுக்கும் செயிண்ட் ஜானுக்கும் போனதாகவே புண்ணியமாகவே
இருக்கட்டும்; மைலார்ட்! இனிவரும் பகலையும் இரவையையும்
வீணாக்க வேண்டாம்; அவைகள், தூக்கத்தில்
நம்மிடம் கொள்ளை அடிப்பவர்களைப் போல, காலத்தை நம்மிடமிருந்து
கொள்ளை அடித்துச் சென்றுவிடும்; கண்ணைத் திறந்து முழித்துக்
கொண்டிருக்கும்போதே, நம்முடைய அஜாக்கிரதையால், காலம் நம்மைக் கடந்து சென்றுவிடும்! அது ஆற்று வெள்ளம் போல! போகும்,
திரும்பி வராது; நதி வெள்ளம் மலை
உச்சியிலிருந்து வேகமாக இறங்கி மலையில் அடியிலுள்ள சமதரைக்கு வருவதுபோல
கீழ்நோக்கித்தான் வரும்; காலம் கடந்து செல்வது, சொத்துக்களை இழந்து அழுவதைப்போல! பொருள்கள் போய்விட்டால், சம்பாதித்துக் கொள்ளலாம்; காலம் போய்விட்டால்
திரும்பப் பெறமுடியாது; மறுபடியும் அது வரவே வராது; பிரிட்டீஸ் மால்கின் பெண்மணியின் சிக்குப்பிடித்த கூந்தலைப் போல! ஒன்று
சேர்க்கவே முடியாது! நம்முடைய சோம்பேறித்தனத்தால் புளித்துப்போக விடக்கூடாது;
வக்கீல் பெருந்தகையே!
கடவுள் நமக்கு அளவில்லா மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறான்; நீங்கள் ஒரு கதையை சொல்லுங்கள்; சொல்வதாக ஏற்கனவே
ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள்; நீங்கள் ஒப்புக்கொண்டபடி
கதையைச் சொன்னால், நான் எதிர்ப்பு தெரிவிக்காமல் அதிலுள்ள
நீதியை கண்டு கொள்வேன்; ஒப்புக் கொண்டால், உங்களை விடுவிப்பேன்; அதன்பின் நீங்கள் உங்கள்
வேலையைத் தொடரலாம்;
உன்னை நம்பிக்கை
இழக்கச் செய்யமாட்டேன்; கதையை சொல்கிறேன்; ஏமாற்றுவது எனக்குப் பிடிக்காத செயல்; ஒப்புக்கொள்வது
என்பதே ஒரு கடன் மாதிரிதான்; அதை திரும்பக் கொடுத்தே ஆக
வேண்டும்; நான் உன்னிடம் என்ன ஒப்புக் கொண்டேனோ அதை
திரும்பக் கொடுத்துவிடுகிறேன்; வேறு என்ன நான் சொல்ல!
உறுதிமொழியே கடன்தானே! ஒரு கதையென்ன, பல கதைகள் என்னிடம்
உள்ளன;சாசர் என்பவர் கதைகள் பல சொல்லி உள்ளார்; அவர் கதைகளில் காதலையே அதிகம் சொல்கிறார்; ஏதோ ஓல்ட்
டெஸ்டமெண்டில் உள்ளதுபோல பழமையாக இருக்கிறது; உனக்கு அதையே,
நான் ஏன் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டும்; சின்ன
வயதாக இருக்கும்போது, செயக்ஸ் மற்றும் அல்சையோன் (Ceyx
and Alcyone) கதை படித்திருக்கிறேன்; (கிரேக்க
இதிகாசத்தில், அல்சையோன் என்ற பெண், செயக்ஸ்
என்பவனை மணக்கிறாள்; இவன்தான் விடியற்காலையில் வானத்தில்
வரும் விடிவெள்ளி; இவர்கள் ஜியஸ்-ஹெரா என்ற
சிவனும்-பார்வதியும்போல வாழ்கிறார்கள் என்று ஊரார் பேசிக் கொள்கிறார்களாம்;
நம்மை உதாரணமாக வைக்கிறானே என்று ஜியஸ் கடவுள் கோபம் கொண்டு செயக்ஸை
கடலில் தூக்கி போட்டுவிடுகிறார்; கடலில் அவன் செல்லும்
கப்பலில் இடியை போடுகிறார்; கனவுக் கடவுளான மார்பஸ், செயக்ஸ் போல மாறுவேடம் பூண்டு, அதாவது இந்திரன்,
மாறு வேடத்தில் வந்து முனிவரின் மனைவி அகலிகையை அடைவதைப்போல,
செயக்ஸ் மனைவி அல்சயோனிடம் வந்து பேசுகிறான்; அவளுக்கு
தெரிந்து, நொந்துபோய் இவளும் கடலில் விழுகிறாள்; கடவுள் இறக்கப்பட்டு கணவன் மனைவி இருவரையும் காப்பாற்றி ஹால்சயான்
பறவைகளாக, அதாவது நம்மூர் மரங்கொத்திப் பறவை மாதிரி
மாற்றிவிடுகிறார்;-- இது கிரேக்க இதிகாசம்; கடவுளோடு மனிதன் போட்டி போடக்கூடாதுபோல!); அந்த கிரேக்க
இதிகாசக் கதை காலத்திலிருந்தே அதைப் படிப்பவர்கள், எல்லாக்
கணவன்-மனைவி, காதலர்கள் இவர்கள் இந்த இருவரைப்போல என்று
சொல்லிக் கொள்கிறார்களாம்;
இதுமாதிரியே 'லிசண்ட் ஆப் குபிக் செயிண்ட்' கதையும் (The
Legend of Cupic's Saint); குபிட் என்றால்
ஆசைக்கடவுள்; ஒரு ராஜா-ராணி; அவர்களுக்கு
மூன்று பெண்கள்; மூவருமே அழகிகள்; இளையவள்
பேரழகி; சைக்கி என்று பெயர்; இவளைப்
பார்த்தவர்கள் யாரும் 'காதல் கடவுளான வீனஸை' வணங்குவதில்லையாம்; வீனஸூக்கு கோபம் வருகிறது;
சைக்கிதான் அடுத்த வீனஸ் கடவுள் என்று நாட்டில் பேச்சு வருகிறது;
வீனஸ் தேவதை, தன் மகன் குபிட்டை அழைத்து
பேரழகி சைக்கி உடம்பில் காயம் உண்டாக்கும்படி உத்தரவு இடுகிறாள்; ஆனால், சைக்கியை பார்த்த குபிட் அவள் அழகில் மயங்கி
காதல் வயப்படுகிறான்; சைக்கியின் மற்ற இரண்டு மூத்த
சகோதரிகளுக்கும் திருமணம் ஆகி விடுகிறது; ஆனால் சைக்கிக்கு
திருமணம் ஆக தடையாகிறது. அவளின் தகப்பனார், ஏதோ சாமி குத்தம்
என்று சந்தேகிக்கிறார்; இப்படி போகிறது இந்தக் கதை.....
இப்படி பல கதைகள்
உள்ளன.....
இந்த கதைகள் எதையும்
நான் உனக்கு சொல்லப்போவதில்லை;
வித்தியாசமான வேறு
கதையைச் சொல்கிறேன் கேள்!.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக