அரேபிய அழகி ஷெகராஷட்
(Sheherazade
or Sheharazad) அந்நாட்டு மன்னருக்கு கதை சொல்ல ஆரம்பிக்கிறாள்.
இதுவே அவளின் முதல் இரவின் முதல் கதை; ஆயிரத்து ஒரு
இரவுகளில் இதுவே முதல் இரவு;
மன்னரின் முன்னாள்
மனைவி இவருக்கு துரோகம் செய்து விட்டாள்; அவளைக்
கொன்று விட்டார்; அதிலிருந்து மன்னருக்கு, எந்தப் பெண்ணின்மீதும் சந்தேகம்தான்; எல்லாப்
பெண்களுமே மோசமானவர்கள் என்று நினைக்கிறார்; இவர்களை
பழிவாங்க வேண்டும் என்றும் வெறி; மந்திரியிடம் சொல்லி,
தினமும் ஒரு பெண்ணை அந்தப்புரத்துக்கு வரவழைப்பார்; உல்லாசமாக இருப்பார்; விடியற்காலையில் அவளைக்
கொன்றுவிடுவார்; மறுநாள் வேறு ஒரு பெண்ணை வரவழைப்பார்;
உல்லாசம், கொலை; இப்படியாகத்
தினமும் நடந்து கொண்டிருக்கிறது; எத்தனை நாளைக்குத்தான்
மந்திரி இளம் பெண்களை அழைத்துவருவார்? அங்கு பெண்களே
கிடைக்கவில்லை; கவலையில் இருக்கிறார். அவரின் மகள் ஷெகராஷட்
பேரழகி, இளம் பெண், மிகச்சிறந்த
அறிவாளி, தெய்வபக்தி மிகுந்தவள்; உலக
அறிவு, தத்துவம் தெரிந்தவள்; தன்
தந்தையிடம், இன்று இரவு அந்தப்புரத்துக்கு தானே செல்வதாகச்
சொல்கிறாள்; மந்திரி, தன் மகளை அனுப்ப
சம்மதிக்கவில்லை; ஒருவழியாக தந்தையை சமாதானம் செய்து அரசனின்
அந்தப்புரம் செல்கிறாள்;
அந்த இரவில், ஷெகராஷட், தன் புத்திசாலித்தனத்தால், மன்னரை தன்னிடம் நெருங்க விடாமல், தான் ஒரு கதை
சொல்வதாகவும் அதை கேட்டுவிட்டு காதல் கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்கிறாள்;
மன்னரும், விடியற்காலையில்தானே அவளை கொல்லப்
போகிறோம் என நினைத்துக் கொண்டு, கதையைச் சொல் கேட்கிறேன்
என்கிறார்; அவளும் தன் முதல் கதையை முதல் இரவில்
ஆரம்பிக்கிறாள்;
"மகிழ்ச்சிக்குறிய
மன்னரே கேளும்! ஒரு வியாபாரி பணத்தில் கொழித்துக் கொண்டிருந்தான்; எல்லா நாடுகளிலும் அவனின் வியாபாரம் உண்டு; ஒருமுறை,
தன் குதிரைமீதேறி பக்கத்து நாடுக்கு செல்கிறான்; அவனின் வியாபார பாக்கியை வசூலிக்கச் செல்கிறான்; போகும்வழியில்
கொளுத்தும் வெயில்; ஒரு தோட்டத்தில் உள்ள மரத்தில் இளைப்பாறுகிறான்;
பசிக்கு, தன்னிடமிருந்த ரொட்டியையும்
பேரீச்சம்பழத்தையும் சாப்பிடுகிறான்; பேரீச்சம்பழத்தின்
கொட்டையை தூக்கி எறிகிறான்; அப்போது ஒரு 'அதிபயங்கர பேய் மனிதன்' மிகப்பெரிய உருவத்தில் வந்து
முன்னே நிற்கிறான்; ஒரு
பெரிய வாளைக் கையில் வைத்திருக்கிறான்; 'எழுந்திரு, நீதானே என் மகனைக் கொன்றவன்; நான் உன்னைக்
கொல்லப்போகிறேன்' என்றது; 'ஐயோ! நான்
எப்படி உன் மகனைக் கொல்ல முடியும்?' என்று பயந்து கொண்டே
கேட்கிறான் வியாபாரி; "நீ தின்றுவிட்டு எறிந்தாயே ஒரு
பேரிச்சம்பழக் கொட்டையை, அது என் மகனின் நெஞ்சில் டமால்
என்று விழுந்து அந்த வேகத்தில் என மகன் உன்னால் இறந்துவிட்டான், அவனின் சாவை நீயே முடிவு செய்தாய்" என்று கர்சித்தது அந்த
பேய்மனிதன். "ஐயோ! எனக்கு அவ்வளவு சக்தியை கடவுள் கொடுக்கவில்லையே! அப்படியே
நான் வீசியதால் இறந்திருந்தாலும் அது நான் வேண்டுமேன்றே செய்யவும் இல்லையே!
நீங்கள் என்னை மன்னித்துவிடுங்கள்; ஜின்னி என்ற அந்த
பேய்மனிதன், "சாவு எல்லோருக்கும் வருவதுதான்; ஆனால் நீ என் மகனை கொன்றுவிட்டாய்" என்று கத்திக் கொண்டு அவனை
இழுத்து எறிந்து கத்தியை அவன்மேல் ஓங்கியது; அவன் அலறிக்
கொண்டு கடவுளே! என்று கத்தி இப்படி கதறுகிறான்;
"காலம் இரண்டு
வகை,
ஒன்று பிரகாசமானது, மற்றொன்று இருளானது:
வாழ்க்கை இரண்டு வகை, ஒன்று வசதியும் பாதுகாப்புமானது, மற்றொன்று பயம்;
வாழ்க்கையில் வசதிகள்
வருவதை யார் தடுக்க முடியும்? பரம ஏழையாக்கி வேடிக்கை
பார்ப்பதையும் யார் தடுத்துவிட முடியும்?
கடலில் முத்துக்கள்
அடி ஆழத்தில் கிடைக்கும்; ஆனால் செத்த பிணம் மேலே
மிதக்கும்;
காலம் நம்மிடம்
விளையாடுகிறது; துரதிஷ்டமானது நீண்ட நேரம் நம்மை
முத்தமிட்டுக் கொண்டே இருக்கிறது;
வானத்தில் உள்ள
நட்சத்திரங்களை எண்ண முடியாது; ஆனால் இவை எதுவும்
சூரியனையோ சந்திரனையோ மறைத்து கிரகணத்தை உண்டாக்க முடியாது;
இந்த பூமியில் எத்தனை
எத்தனை பசுமையான மரங்கள் காய்ந்துபோன மரங்கள் உள்ளன; இவைகள்
கல்லால் அடித்து பழம் பழுக்க வைக்க முடியாது;
நல்ல காலத்தில்
நல்லது நடக்கும்; துரதிஷ்டமான நேரத்தில்
கெட்டவைகள் நடப்பது என்பது நம் தலையெழுத்தே!' என்று புலம்புகிறான்;
"நீ
சொன்னதுபோலவேதான், உனக்கு இப்போது என் கையால்
சாவும் வருகிறது" என்று ஜின்னி
முரடன் சொன்னான்;
"முரடனே! நான்
கொடுக்க வேண்டிய கடன் பாக்கிகள் உள்ளன; எனக்கு
நிறைய சொத்துக்களும் உள்ளன; மனைவி, குழந்தைகளும்
உள்ளனர்; வேறு பலரின் சொத்துக்களும் என்னிடம் அடமானமாக உள்ளன;
எனவே என்னை இப்போது விட்டுவிட்டால், நான் என்
ஊருக்குச் சென்று, கொடுக்க வேண்டியவர்களின் பொருள்களை
எல்லாம் அவரவர்களிடம் ஒப்படைத்துவிடுவேன்; பின்னர் உன்னிடமே
திரும்பி வந்துவிடுவேன்; அப்போது நீ என்னை என்ன
வேண்டுமானாலும் செய்துகொள்; கடவுளை இதற்கு சாட்சியாக
வைக்கிறேன்; இதைக் கேட்ட ஜின்னி முரடன், ஒருவருடம் கால அவகாசம் கொடுத்து வியாபாரியை அவன் ஊருக்கு அனுப்பி
வைக்கிறான்;
வியாபாரி தன் ஊருக்கு
வருகிறான்; தன் மனைவி மக்களிடம் நடந்ததை கூறுகிறான்;
அவரவர் பொருள்களை அவரவர்களிடம் ஒப்படைக்கிறான்; வீட்டில் உள்ளவர்கள் அழுகிறார்கள்; தன்
குழந்தைகளுக்கு கார்டியனை நியமிக்கிறான்; அந்த ஒருவருட காலம்
வரை வசிக்கிறான்; கடைசி நாளில், தன்
கடைசி துணியை கக்கத்தில் இடுக்கிக் கொண்டு செல்கிறான்; எல்லோரும்
அவனையே அழுகையுடன் பார்க்கிறார்கள்; நேராக இந்த ஜின்னி
முரடனைச் சந்தித்த அந்த தோட்டத்துக்கு வருகிறான்; ஒருவருடம்
முடிந்து அடுத்த வருடத்தின் துவக்க நாள் அது; தனக்கு இப்படி
ஒரு முடிவு வந்ததையும், கழுத்தில் காலன் கயிறு போட்டு
இழுப்பதையும் நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான்; ஒரு
மதகுரு கவரிமானுடன் அங்கு வந்து அவன் முன்னே நின்று, "நீ,
நீடூழி வாழ்க! ஏன் இங்கு அழுது கொண்டிருக்கிறாய்? இது
ஜின்னியின் இடமாயிற்றே! இங்கு உனக்கென்ன வேலை? என்று
கேட்கிறார்; அவனும் நடந்ததை சொல்கிறான்; "அல்லா நம்பிக்கைக்கு உகந்தவன்; உன்னுடனே நானும்
இங்கேயே இருப்பேன்; என்ன நடக்கிறதென்று பார்க்கலாம்"
என்கிறார்; வியாபாரிக்கு நேரம் ஆக ஆக பயம் எடுக்கிறது;
அப்போது மற்றொரு மதகுரு அங்கு வருகிறார்; அவருடன்
இரண்டு வைட்டை நாய்களை கூட்டிக் கொண்டு வருகிறார்; அவரும்
என்ன நடந்தது என கேட்கிறார்; இவர்களும் சொல்கிறார்கள்;
அடுத்த மூன்றாவது மதகுரு வருகிறார்; அவர்
குதிரை மாதிரியும் கழுதை மாதிரியும் இருக்கும் கழுதை-குதிரையை கூட்டி வருகிறார்;
அவரும் அதேபோல் நடந்ததைக் கேட்டு அங்கேயே உட்கார்ந்து கொள்கிறார்;
இப்பொழுது, ஒரே தூசு புகையாக வருகிறது; பெரிய தூண் அசைந்து
வருகிறத்து; அதுதான் ஜின்னி முரடன்; கையில்
பெரிய வாள்; கண்களில் நெருப்பு; வந்தவுடன்
வியாபாரியை இழுக்கிறான்; வியாபாரி அழுகிறான்; அதை பார்த்து மூன்று பேரும் அழுகிறார்கள்; முதல்
குரு எழுந்து முரடனின் கையை முத்தமிடுகிறார்; "என் கதை
இன்னும் ஆச்சரியமாக இருக்கும் கேள், அது இந்த வியாபாரியின்
சோகக் கதையை காட்டிலும் ஆச்சரியமிக்கதாக இருக்கும்; நானும் இந்த மானும் ரத்த உறவு"
என்கிறார்;
பேரழகி ஷெகராசெட்
இந்தக் கதையை சொல்லிக் கொண்டிருக்கும்போது விடிந்து விட்டது; மன்னன், அந்த புதுக்கதை என்ன என்று கேட்பதற்காக
மறுநாள் இரவு வரை காத்திருக்க வேண்டும்; எனவே அழகி
ஷெகராசெட்டை மறுநாள் இரவு வந்து கதையை தொடரும்படி கேட்டுக் கொள்கிறார் மன்னர்.
இரண்டாம் இரவு கதை
தொடர்கிறது........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக