புதன், 13 மே, 2015

"போய்வருகிறேன், இரக்கமில்லாத கணவனே!"


இளவரசி கான்ஸ்டன்ஸின் அடுத்த திருமணம் . . .

நார்தம்பர்லாண்ட் காட்டுவாசி நாட்டின் மன்னர் ஆலாவுக்கும் இளவரசி என்று யாருக்கும் தெரியாத கான்ஸ்டன்ஸூக்கும் திருமணம்!

மன்னனின் தாய் "டன்கில்டு." இவளுக்கு மட்டும் பொறாமையாம்! அவளுக்கு இதயமே இரண்டாக வெடித்துவிடும் அளவுக்கு இருந்ததாம். ஏன்? யாரோ ஒரு அனாதைப் பெண்ணை, தன் மகனான மன்னன், இவ்வாறு திடீரென்று திருமணம் செய்து அவளை ராணியாக்குவது எந்தத் தாய்க்குத்தான் சம்மதமாக இருக்கும்?
அவர்களின் திருமணம் நடக்கிறது. இதைப் பற்றி ஆச்சரியமாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. மன்னர் வீட்டுக் கல்யாணம். "ஒரு ஊரில் ஒரு ராஜா" என்ற கதை போலத்தான் இந்த திருமணம் எல்லாவித சிறப்புகளுடனும் நடந்தது என்று சொன்னாலே போதுமானதுதான்.

திருமணத்துக்குப்பின் என்ன நடந்திருக்கும்? எல்லோரையும் போலத்தான்! அவர்கள் விருந்து சாப்பிட்டார்கள்; குடித்தார்கள்; டான்ஸ் ஆடினார்கள்; சந்தோசத்தின் உச்சிக்குப் போனார்கள்; எல்லோரையும் போலவே, இருவரும் படுக்கை அறைக்குப் போனார்கள்; மனைவிகள் எப்போதும் தேவதைகளே! இரவில் சத்தமில்லாமல், எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் படுத்துக் கிடக்க வேண்டும்; தேவைகளை விருப்பதுடன் பூர்த்திசெய்யும் கடமையும் உள்ளது அவளுக்கு; ஏனென்றால் அவன் மோதிரம் மாற்றிக் கொண்ட (தாலி கட்டிய) கணவனாம்!

மன்னர் வாரிசாக ஒரு குழந்தையை கொடுத்துவிட்டார். ஆம் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள்! ஆனாலும் அவளை ஒருவித பாதுகாப்பிலேயே வைத்திருக்கிறார். மன்னர், அவரின் எதிரியான ஸ்காட்லாண்ட் நாட்டுடன் சண்டைக்குப் போகவேண்டி உள்ளது. எனவே தன் மனைவியை ஒரு பிஷப் மற்றும் ஒரு போர்வீரனின் தனிப் பாதுகாப்பில் விட்டுச் செல்கிறார். அவளோ நிறைமாதக் கர்ப்பிணி! எப்போது வேண்டுமானாலும் பிரசவம் நடக்கலாம்!

நேரம் வந்துவிட்டது. மகனும் பிறந்துவிட்டான். அவனுக்கு "மாரைஸ்" என்று பெயர் சூட்டியும் விட்டாள். துணைக்கு காவலுக்கு இருந்த போர்வீரன், மன்னருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்த இந்தச் செய்தியை கடிதமாக எழுதி ஆள் மூலம் அனுப்புகிறான். மகிழ்ச்சியான செய்திதானே! அந்த கடிதத்தை எடுத்துச் செல்பவன், அதை மன்னரின் தாயிடம் கூறிவிட்டுப் பின்னர் பிரயாணத்தை தொடரலாமே என்று எண்ணி அந்த அரண்மனைக்குச் செல்கிறான். ஏதும் பரிசு கிடைக்கும் என நினைத்திருப்பானோ என்னவோ! அப்பத்தாவுக்கு வசதியாகப் போய்விட்டது. ஏற்கனவே மருமகள்மீது வேப்பங்காயாக இருப்பவள்! கடிதம் கொண்டு வந்தவனுக்கு ஒயின் என்னும் மதுவைக் கொடுத்து உபசரித்தாள். அவனும் போதையில் அயர்ந்து தூங்கிவிட்டான். அந்த நேரத்தைப் பயன்படுத்தி, அவன் கொண்டுவந்த கடிதத்தை எடுத்து வைத்துக் கொண்டு, இவள் வேறு ஒரு கடிதத்தை அவன் சட்டைப் பைக்குள் திணித்துவிட்டாள். எழுந்தவன், அந்தக் கடிதத்தை கொண்டு வந்து, போர் முனையில் இருக்கும் மன்னர் ஆலாவுக்கு கொடுக்கிறான்.

மன்னர் கடிதத்தை வாங்கிப் படிக்கிறார். முகம் இறுகிவிட்டது. பக்கத்தில் இருந்தவர்களுக்கு தெரியக் கூடாது என்று தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டார். இவர் கைப்பட ஒரு பதில் கடிதத்தை தயாரிக்கிறார். அதே வேலைக்காரனிடம் கொடுத்து அனுப்புகிறார்.

வந்த கடித்ததில் இருந்தது இதுதான், "மன்னரான உங்களுக்கு உங்கள் மனைவி மூலம், ஒரு கொடுரமான அரக்கன் குழந்தையாகப் பிறந்துள்ளது. அது எங்களுக்கெல்லாம் வருத்தமாகவே இருக்கிறது. அந்த குழந்தையை நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கடிதம்.
மன்னரின் பதில் கடிதமோ, "கடவுள் கொடுத்ததை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். எனவே நல்லவிதமாகப் பார்த்துக் கொள்ளவும், நான் விரைவில் வருகிறேன்." இது பதில் கடிதம்.

ஆனால், பதில் கடிதத்தை மன்னரிடமிருந்து பெற்றுச் சென்றவன், நேராக மன்னரின் தாயின் அரண்மனைக்குப் போய் சேர்கிறான். ஒயின் குடிக்க ஆசை! அதேபோல்  மது போதையில் கிடக்கும்போது, அவள் அந்த பதில் கடிதத்தை எடுத்துக் கொண்டு, வேறு ஒரு கடிதத்தை வைத்து விடுகிறாள்.  அதில், "இந்த பேய்க் குழந்தையும், அவளின் தாயும், நான் வரும்வரை அங்கு இருக்கக் கூடாது. அவர்கள் இருவரையும் கொன்றுவிடு; இல்லையென்றால் நான் வந்து உன்னைக் கொல்வேன். இது என் முடிவான உத்தரவு." இப்படி ஒரு கடிதத்தை மன்னரின் தாய் தயாரித்து வீரன் மடியில் கட்டிவிட்டாள். ஓ! சூனியக்காரியே! உன் உடல் மட்டுமே இந்த பூமியில் நடமாடுகிறது, ஆனால் உன் ஆன்மாவோ எப்போதும் நரகத்தின் சிந்தனையாகவே இருக்கிறதே? வெட்கக்கேடு!
போன கடிதமும், வந்த கடிதமும் திருடப்பட்டு போலியான வேறு ஒரு கடிதம் நுழைக்கப்பட்டது! இளவரசியின் பாதுகாவலன் மன்னரின் கடிதத்தைப் படிக்கிறான்."என் மனைவியையும் மகனையும் கொல்லவில்லை என்றால், உன்னைக் கொல்வேன்" என்று எழுதப்பட்டுள்ளது. காவலாளியே ஆனாலும் அவன் மனம் இரக்கம் கொண்டதே! மனித மனதுக்கு பதவி தேவையில்லை! நல்ல இதயம் மட்டுமே போதுமே! இளவரசியையும் அவளின் அழகிய மகனையும் இன்னும் மூன்று நாட்களில் இங்கிருந்து வெளியேற்றி விடுவது என்று தீர்மானித்தான். கொன்றுவிட்டதாக மன்னரிடம் பொய் சொல்லி விடலாம். ஒரு படகை ஏற்பாடு செய்தான். அது அவள் இந்த தீவுக்கு வந்தபோது இருந்த பழைய படகுதான். அதில் இருவரையும் ஏற்றிவிட்டான். "மறுபடியும் இந்தப் பக்கம் வந்துவிடாதீர்கள்" என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.

ஓ! கான்டன்ஸ் இளவரசியே! உன் கனவுகள் எல்லாம் ஏக்கங்களாகவே உள்ளனவே! உன் முயற்சிகள் எல்லாம் பயங்கரத்திலேயே முடிகிறதே! கிறிஸ்து தேவனே! கடவுளே! என்று பாதுகாவலன் வேண்டுகிறான். "மன்னர் ஏன் அப்படி ஒரு பதில் கடிதத்தை எழுத வேண்டும்? நீங்களும் உங்கள் குழந்தையும் அப்படி என்ன பாவம் செய்தீர்கள்? உங்களுக்கு ஏன் இப்படி ஒரு இக்கட்டை கொடுக்கிறான் கடவுள்? ஒன்றும் அறியாதவர்களுக்கு துன்பத்தையும், மோசமானவர்களுக்கு மகிழ்ச்சியையும் வளமான வாழ்வையும் கொடுப்பது எதனால்? ஏன் அப்படிச் செய்கிறாய் கடவுளே! உன் செய்கையை புரிந்து கொள்ள முடியவில்லையே! 
தாயும் மகனும் தனியே அழுகிறார்கள்! 
மன்னரின் பதில் கடிதத்தை நினைத்து நினைத்து பாதுகாவலன் அழுகிறான். "எனக்கு வாழ்வு கிடைத்தாலும், இறப்பு வந்தாலும் கவலையில்லை இளவரசியே! எப்படியும் உங்களைக் காப்பாற்றியே தீருவேன்."

படகு உப்புக் கடலில் மிதக்கிறது. நான்கு நாட்கள் ஓடிவிட்டன. தாயும் மகனும் கடவுளின் விருப்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். அவளுக்கு இரத்தம் சுண்டிவிட்டது. கடவுளிடம் மண்டியிடுகிறாள். "கடவுளே உங்கள் விருப்பம் எதுவோ அதை ஏற்கிறோம். மன்னரே விரும்பி என்னை ஏற்றார். இப்போது அவரே என்னை வெறுத்து விரட்டி விட்டார். இப்பொது இந்த உப்புக்கடலில். எதற்காக இது நடத்தப்படுகிறது என்பது மட்டும் எனக்குத் தெரியவில்லை கடவுளே!"

கைக்குழந்தை அழுகிறது."மகனே! நான் உனக்கு துன்பம் செய்யமாட்டேன், துரோகமும் செய்யமாட்டேன்."  தன் தலையில் கட்டியிருந்த துணியை அவிழ்த்து, மகனின் முகத்தை துடைக்கிறாள். சோகத்தின் உச்சம். மகனுக்கு தாலாட்டுப் பாடுகிறாள்......... அவளின் கண்கள் பனித்து மேல்நோக்கி சொர்க்கத்தை பார்த்துக் கொண்டே இருக்கிறது.

"தாயே! மேரி அன்னையே! ஆம் ஒரு பெண்ணின் தவறால்தான் இந்த மனிதவர்க்கம் அழிகிறது. அந்த மனித வர்க்கத்துக்காகத்தான் உன் மகன் ஏசு கிறிஸ்து சிலுவையில் ஆணியால் அடிக்கப்பட்டு பிராயசித்தம் தேடினார். நீ, உன் மகன் இறக்கும்போது நேரில் அதைப் பார்த்துக் கொண்டு தானே இருந்தாய்? அது உனக்கு எவ்வளவு துன்பத்தையும் வலியையும் கொடுத்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை! அந்த வலியை எப்படி உன் மகன் பொறுத்துக் கொண்டிருந்தார்? நானும் என் குழந்தையும் ஒரு நம்பிக்கையில்தான் வாழ்கிறோம். என் குழந்தை இந்த வயதில் என்ன தவறு செய்திருக்கமுடியும்?"
தன் பிஞ்சு மகனைப் பார்த்து "ஒரு தவறும் செய்திருக்கவே முடியாத உன்னை, உன் தகப்பன் கொல்ல நினைத்த காரணம் என்ன?"  புலம்புகிறாள்.........

உப்புக் கடலில் மிதந்து வந்த வழியை திரும்பி பார்க்கிறாள். 
வாழ்ந்த நிலம் மறைகிறது....... 
"போய்வருகிறேன், இரக்கமில்லாத கணவனே!"


**

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக