ஜெப்ரி சாசரின் கான்டர்பரி
கதைகளில் ஒன்றுதான் இந்த "சாமியாரின் கதை."
இது 1385ல் எழுதப்பட்ட கதை (சுமார் 600 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட பொக்கிஷம்);
லூசிபர் விடிவெள்ளி சொர்க்கதிலிருந்து
கீழே விழுந்த சோகம்;
ஆதாம் என்னும் முதல் மனிதன், மனைவி பேச்சை கேட்டு கடவுளின் சாபத்துக்கு ஆளான பரிதாபக் கதை;
சாம்சன் வீரன், தன் மனைவியிடம் ரகசியத்தைச் சொன்னதால் அவன் வீரம் பறிபோன சோகக் கதை;
அடுத்து இந்த ஹெர்குலிஸ்
வீரனின் கதையை கேட்கும்படி அந்த கதை சொல்லும் சாமியார் ஆரம்பிக்கிறார்......
Hercules
ஹெர்குலிஸ்
கதை சொல்கிறேன் என்று சாமியார் தொடர்கிறார்; லத்தீன்
மொழியில் ஹெர்குலிஸ்; ரோமானிய இதிகாசத்தில் ஜூபிடர் என்னும்
குரு(வியாழன்) கடவுளின் மகன் தான் இந்த ஹெர்குலிஸ்;
கிரேக்க இதிகாசத்தில்
இவரின் பெயர் ஹிராகிள்ஸ் Heracles; கிரேக்க கடவுள்
ஜீயஸின் மகன்களில் ஒருவர்தான் இந்த ஹிராக்கிள் என்னும் ஹெர்குலிஸ்;
கிரேக்கர்கள் என்னும்
நீண்டமுடி அகியன்கள் (Achaeans) இந்த கதாநாயகனை ஹெராகிள்ஸ்
என்றே அழைக்கிறார்கள்; ஹெர்குலிஸின் திறமை கடவுள் கொடுத்தது;
ஹெர்குலிஸ் பிறந்த கதையே
வேடிக்கையும் ஆச்சரியமுமானதுதான்; ஜீயஸ் கடவுள் ஒருநாள் நினைக்கிறார்,
"கடவுள் என்பவர் இறப்பு அற்றவர்; மனிதன் என்பவன்
இறப்புக்கு உட்பட்ட உடலைக் கொண்டவன்; ஏன், இறப்பற்ற கடவுள் உடலுக்கும், இறக்கும் மனிதன் உடலுக்கும்
பிறக்கும் ஒரு குழந்தையை தேர்ந்தெடுக்கக் கூடாது; அது எப்படி
இருக்கும்; கடவுளின் குணங்களும், மனிதனின்
குணங்களும் சேர்ந்தே இருக்கும்தானே?" செயல்படுத்துகிறார்;
ஆம்பிடிரியன் Amphitryon
என்று ஒரு மன்னன்; அவன் மனைவி அல்க்மினி Alcmene.
தன் சகோதரர்களை கொன்றவர்களை கொன்றுவிட்டு வரும்படி இவள் தன் கணவனை ஏவுகிறாள்.
அவனும் போருக்குச் சென்று விட்டான்; இவள் தனியாக இருக்கிறாள்;
ஜீயஸ் கடவுள் இவளை அடைய ஒரு திட்டம் தீட்டி, அதன்படி,
அன்னப்பறவை வேடமிட்டு அதை ஒரு கழுகு துரத்துவதுபோல பாசாங்கு செய்து,
பயந்துகொண்டு, நந்தவனத்தில் இருந்த இந்த அல்கிமினி
மடியில் வந்து தொப்பென்று விழுகிறார்; அவளும் பரிதாபப்பட்டு,
அதை எடுத்துக் கொஞ்சுகிறாள்; கொஞ்சல் அதிகமாகி
காதலாகி, இருவரும் கலக்கிறார்கள்; ஜீயஸ்
கடவுளின் கரு இவள் வயிற்றில் சென்றுவிட்டது; போருக்குபோன கணவன்
அன்றே நாடு திரும்புகிறான்; உடனே மனைவியைப் பார்க்கிறான்;
அவனும் உறவாடுகிறான்; மறுபடியும் ஒரு கரு அவள்
வயிற்றில் உருவாகிறது; ஒரு கரு ஜீயஸ் கடவுளுடையது; மற்றொன்று கணவனுடையது; ஒன்று கடவுள்; மற்றொன்று மனிதன்; கடவுளுக்கும் மனிதனுக்கும் ஒரு கரு;
மனிதனுக்கும் மனிதனுக்கும் மற்றொரு கரு; இரட்டை
குழந்தைகள்; ஜீயஸ் கடவுளுக்குப் பிறந்த குழந்தைதான் இந்த ஹெர்குலிஸ்.
மன்னனுக்குப் பிறந்த குழந்தை இபிக்லிஸ்; ஹெர்குலிஸ் தான் இந்த
உலகத்தை ஆளும் குழந்தை என ஜீயஸ் கடவுளே அறிவிக்கிறார்;
ஜீயஸ் கடவுளின் மனைவியான
ஹெராவுக்கு பொறாமை; அவள் சதி செய்து, இரண்டு பாம்புகளை அந்த இரட்டைக் குழந்தைகளை கடிக்கும்படி அனுப்புகிறாள்;
அதை பார்த்து பயந்த இபிகிலிஸ் கத்துகிறான்; ஆனால்
ஹீரோ ஹெர்குலிஸ் அந்தப் பாம்புகளை அனாவசியமாக தூக்கி ஒவ்வொரு கையிலும் ஒரு பாம்பைப்
பிடித்து நசுக்குகிறான்; இதைத் தெரிந்த மன்னன், இது என்ன அதிசயப் பிறவியாக இருக்கிறதே என்று அரண்மனை ஜோசியரை கேட்கிறார்;
அவர் உண்மையை உடைக்கிறார்; ஹெர்குலிஸ் கடவுள் ஜீயஸின்
மகன் எனத் தெரிந்து வளர்க்கிறார் மன்னர்; வளர்ந்தவுடன் கித்தாரோன்
மலையில் இருக்கும் சிங்கத்தை கொல்ல இவனை அனுப்புகின்றனர்; அவன்
அதன் தோலை உரித்து வருகிறான்; ஒருமுறை போர் நடக்கிறது;
அதில் ஹெர்குலிஸ் வீரமாக போரிட்டு எல்லோரையும் அழிக்கிறான்; தேபஸ் மன்னர் தன் மகள் மெஹாராவை ஹெர்குலஸிக்கு மணம் முடிக்க விரும்புகிறார்;
இளைய மகளை, இரட்டையரில் மற்றொருவரான இபிகிலிஸிக்கு
திருமணம் செய்ய சம்மதிக்கிறார்; யூரேட்டஸ் என்னும் மன்னர் இந்த
ஹெர்குலிஸை வளைத்துப்போட நினைக்கிறார்; அவரின் குதிரைகள் காணமல்
போகின்றன; அதை திருடியவர் ஹெர்குலிஸ்தான் என நினைக்கிறார்;
ஆனால் உண்மையில் அதை திருடியவன், அதை கொண்டுவந்து
ஹெர்குலிஸிடம் விற்றுவிட்டு போயிருக்கிறான்; அதை நம்பாத மன்னின்
மகனை விருந்துக்கு அழைத்து கொல்கிறான் இந்த ஹெர்குலிஸ்;
பின்னர், பைதோனிஸ் என்ற பெண்ணை பார்க்க போகிறான்; அவள் பயந்து
கொண்டு அப்போலோ கடவுளை கூப்பிடுகிறாள்; அப்போலோவுக்கும் ஹெர்குலிஸூக்கும்
சண்டை நடக்கிறது; இருவருமே ஜீயஸ் கடவுளின் மகன்கள்; எனவே ஜீயஸ் கடவுள் இடி மின்னலை வரவைத்து சண்டையை விலக்கி விடுகிறார்;
ஹெர்குலிஸ் மறு திருமணம்
செய்ய முடிவு; டெயானிரா; ஒரு மன்னனின்
மகள்; திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்கிறார்கள்; ஒருநாள் தவறுதலாக ஒரு அதிகாரியை கொன்று விடுகிறார்; எனவே
பயந்து ஹெர்குலிஸூம் அவர் மனைவியும் தப்பி வேறு நாட்டுக்கு ஓடுகிறார்கள்; வழியில் ஒரு பெரிய நதியை கடந்து செல்ல வேண்டி உள்ளது; ஹெர்குலிஸ் பலசாலி; தன் மனைவியை தூக்கிக் கொண்டே நீந்துகிறான்;
அப்படியும் அவள் நனைத்து விட்டாள்; கோபித்துக்
கொள்கிறாள்; இதை ஒரு சென்டூர் (பாதி குதிரை-பாதி மனித உருவம்)
கொண்ட மனிதன் பார்த்துக் கொண்டு அருகில் வந்து, நான் வேண்டுமானால்
உன் மனைவி டையனேரியாவை நனையாமல் தூக்கிச் செல்லட்டுமா என்று கேட்கிறது; சரி என ஹெர்குலிஸ் ஒப்புக்கொள்கிறான்; டையனேரியாவை சென்டூர்
குதிரை தன் முதுகில் ஏற்றிக் கொண்டது; ஹெர்குலிஸ் தனியே நீந்துகிறான்;
கண்மூடித் திறப்பதற்குள் குதிரை அவளை ஏற்றிக் கொண்டு மறைந்து விட்டது;
கடத்திக் கொண்டுதான் போயிருக்க வேண்டும்; அவளைக் கற்பழிக்கும் எண்ணமாகவும் இருக்கலாம்! கரையேறியவுடன் அந்த குதிரைக் கண்டான்; அதன்
இதயத்தை நோக்கி ஒரு உதை; இறக்கும் நிலைக்கு போய்விட்டது அந்தக் குதிரை;
அப்போது அருகில் இருந்த டைனேரியாவிடம் ஒரு ரகசியத்தை சொன்னது அந்தக் குதிரை
மனிதன்; "நீ என் இரத்தத்தையும், இந்திரியத்தையும்
எடுத்து வைத்துக் கொள்; என்றோ ஒருநாள், உன் கணவன் ஹெர்குலிஸ் உன் விரும்பாமல் போவான்; அப்போது
உனக்கு இது தேவைப்படும்," என்றது; எனவே அதை ஒரு பாட்டிலில் வைத்து, ஹெர்குலிஸ் சட்டையில் தெளித்தே விடுவாள்; அது இருக்கும்வரை
அவன் அவளை வெறுக்க மாட்டான்;
மற்றொரு நாட்டுடன் ஹெர்குலிஸ்
போருக்கு போகிறான்; அங்கு எல்லோரையும் கொல்கிறான்;
இளவரசியைத் தவிர; ஏனென்றால், அவளை இவன் மனைவியாக ஏற்றுக் கொள்வேன் என்று எப்போதோ வாக்குறுதி கொடுத்தானாம்;
எதுவும் சொல்லாமல், அவளை தன் மனைவி டையனிராவிடம்
அனுப்புகிறான்; தனக்கு வேறு சட்டை அனுப்பும்படி கேட்கிறான்;
மனைவிக்கு சந்தேகம்; அவள் வேறு சட்டையில் அந்த
மனிதக் குதிரையின் ரத்தத்தை தெளித்தே அனுப்புகிறாள்; அது அவனின்
அம்பு முனையில் ஒட்டிக் கொள்கிறது; அது ஒரு ஐந்துதலை நாகத்தின்
ரத்தத்துடன் கலந்து விஷமாகிறது; அதை அவன் அணிந்தவுடன் உடல் எல்லாம்
நெருப்பாக எரிகிறது;
கதை சொல்லும்
சாமியார் சொல்கிறார், “இவ்வளவு பெரிய வீரனின் வீரம் ஒரு பெண்ணால் நிலை குலைகிறது என்பது
சோகம்தானே!’
**
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக