ஞாயிறு, 24 மே, 2015

மெகர் பாபா

Meher Baba
மெகர் பாபா:
1894ல் பூனாவில் பிறந்தவர்; பார்சி பெற்றோருக்கு 2-வது மகனாகப் பிறந்தார்; தனது 19 வயது வரை எல்லோரையும் போலவே இயல்பான சிறுவனாகவே கல்வி கற்று வந்தார்; ஒருநாள், பாபாஜான் என்ற முஸ்லீம் பெண்மணியை சந்தித்தார்; அவர் ஒரு பெண் சாமியார்; திடீரென்று இந்த சிறுவனை அருகில் அழைத்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள்; அப்போதிலிருந்து இந்த சிறுவனுக்கு ஏதோ இனம்புரியாத எண்ண ஓட்டங்கள்; தொடர்ந்து ஐந்து சத்திய குருமார்களான, தாஷூதீன் பாபா, நாராயண் மகராஜ், ஸ்ரீடி சாய்பாபா, உபஷ்னி மகராஜ் ஆகியவர்களின் இடங்களைச் சென்று தரிசித்து ஆசி பெற்றார்; அதுமுதல் "மெகர் பாபா" என்று அவரின் பக்தர்களால் அழைக்கப்பட்டார்; சில வருடங்கள் கழித்து பேசுவதையே தவிர்த்து விட்டார்; எழுதிக் கொடுப்பது, கை சைகை மூலமே தனது எண்ணத்தை தெரிவித்தார்; எல்லா மொழிப் புலமையும் பெற்றவர்; கவிதைகள் சொல்லுவதிலும் வல்லவர்; ஹபீஸ், ஷேக்ஸ்பியர், ஷெல்லி இவர்களின் கவிதைகள்  அத்துபடி;

நானே கடவுளின் அவதாரம் என்று சொல்லிக் கொண்டார்; வெளிநாடுகளுக்கு சென்று இவரின் கொள்கைகளைப் பரப்பினார்; அமெரிக்காவில் நியூயார்க் நகரில் "Message to Ameriaca" என்ற பிரசங்கத்தை 1000 வார்த்தைகளில் வெளிப்படுத்தினாராம்; மகாத்மா காந்தியை அரசியலிலிருந்து ஒதுங்கிவிடும்படி கேட்டுக் கொண்டதாக அவரின் சிஷ்யர்கள் சொல்லிக் கொள்வார்கள்; காந்தியும் இந்த மகர்பாபாவும் ஒரே கப்பலில் (1931-ல்) பிரயாணம் செய்தார்கள்; இருவரும் கப்பலிலேயே சந்தித்து பேசிக் கொண்டனராம்;


FRS பட்டம்

Fellow of the Royal Society (FRS):

இங்கிலாந்து மன்னர் 2-ம் சார்லஸ், 1660ல் இந்த சொசைட்டியை உருவாக்கினார்; விஞ்ஞான அறிவாளிகள், எஞ்சினியர்கள், இதில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவர்; இந்த உறுப்பினர்களுக்குப் பெயர்தான் 'பெலோ' 'Fellow"  இது ஒரு கௌரவ பட்டம் போல கொடுக்கப்படும்; இங்கிலாந்து, காமன்வெல்த் நாடுகள் இவைகளிலிருந்து தேர்தெடுத்து இந்தப் பட்டத்தைக் கொடுப்பர்; இந்த உலக்குக்கு உபயோகப்படும் விஞ்ஞான செயல்களை செய்திருப்பவர்களுக்கு கொடுக்கப்படும்;ஒவ்வொரு வருடமும் 52 பேர்கள் இவ்வாறு புதிய பெல்லாக்களாக தேர்ந்தெடுக்கப்படுவர்; இப்போதுவரை மொத்தம் 145- பெல்லோக்கள் இதில் இருக்கிறார்கள்;


இதில், பெல்லோ பட்டம் பெற்ற முதல் இந்தியர் Ardaseer Cursetjee (Wadia): இவர் பார்சி; இவர் இந்திய கப்பல் கட்டும் எஞ்சினியர் ஆவார்; இவரின் 22 வது வயதில் இவரின் தகப்பனாரின் கம்பெனியில், இவருடைய மேற்பார்வையில் 60 டன் எடை கொண்ட கப்பலை தயாரித்து கடலில் மிதக்கவிட்டவர்இது நடந்தது 1822-ல் பம்பாயில்; பல கண்டுபிடிப்புகளை கண்டவர்; 1841ல் இவருக்கு பெல்லோ பட்டம் FRS வழங்கி கௌரவிக்கப்பட்டதாம்;

Philately

Philately 'பிலாட்டலி'
இது ஸ்டாம்புகளை சேகரித்து வைக்கும் பழக்கம் அல்ல; அதற்குமாறாக, ஸ்டாம்புகளைப் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் அறிந்து வைத்துக் கொள்வது; philo என்னும் கிரேக்க வார்த்தைக்கு பொதுவாக "ஆசை" "ஒரு பொருளின் மீதான ஆசை" என்று பொருளாம்; இது ஸ்டாம்பு சேகரிப்பு என்னும் Stamp Collections போல இல்லாமல், அதைப் பற்றிய நுணுக்கமான விபரங்களை தெரிந்து வைத்துக் கொள்வது; எந்த நாட்டைச் சேர்ந்தது, எந்த வருடத்தில் அச்சடிக்கப்பட்டது, எதற்காக அது அச்சடிக்கப்ட்டது, அதன் வடிவம், அமைப்பு, எந்த படம் அதில் இடம் பெறுகிறது, அது எதனால், அந்த ஸ்டாம்பை சுற்றி பெர்போரேஷன் ஓட்டைகள் எப்படி இருக்கின்றன, அதன் ஒட்டும்தன்மை என்ன என்பன போன்ற பல்வேறு விஷயங்களைச் சொல்லும்;

இது பெரிய படிப்பு மாதிரி; இது, சிறுவர்கள் ஸ்டாம்பு சேர்ப்பது போல அல்ல;

இந்த ஸ்டாம்புகளை ஒட்டி கடிதங்கள் எழுதுவது 1837ல் தான் வந்ததாம்; அதற்கு முன், கடிதம் எழுதி அனுப்புவார்கள், அதை வாங்குபவர் அதற்குறிய செலவை பணமாக கொடுத்துவிடுவார்களாம்; பின்னரே, ஸ்டாம்புக்கு பின்னே பசையை தடவி, தானே ஒட்டிக் கொள்ளும் முறையை அறிமுகப்படுத்தினராம்; ஸ்டாம்புக்கு பின்னே பசை தடவி இருக்கும் ஸ்டாம்புக்குப் பெயர் Penny Black. இது பிரிட்டனில் அறிமுகம்; 1840ல், குயின் விக்டோரியா படத்தை அச்சடித்து கறுப்பாக ஸ்டாம்பு பிரிண்ட் செய்யப்பட்டு, பின்னே காய்ந்த பசை தடவி இருக்கும்; ஒரு பென்னி பணத்துக்கு விற்கப்பட்டதால் அது பென்னி பிளாக் ஸ்டாம்பு; லண்டனில் உள்ள பிரிட்டீஸ் மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாம்;

வெள்ளி, 22 மே, 2015

Cinderella சின்ட்ரெல்லா


Cinderella or The Little Glass Slipper:

சின்ட்ரெல்லா (அல்லது) சிறு கண்ணாடிச் செருப்பு:

இந்தக் கதை 1697ல் எழுதப்பட்டதாம்; மிகப் பழைய கதை; இத்தாலி நாட்டின் ஒரு பகுதியில் நடந்த கதையாகச் சொல்லப்பட்டுள்ளது;

ஒரு பணக்காரனுக்கு ஒரு மனைவியும், ஒரு சிறுவயது மகளும் உள்ளனர்; அந்த மனைவி நோய்வாய்ப்பட்டு இறக்கும்தருவாயில், தன் மகளைக் கூப்பிட்டு தன் பக்கத்தில் உட்கார வைத்து, "சின்டரல்லா! நான் இறந்து விடுவது உறுதி என்றும், நீ, எல்லோரிடமும் அன்பாகவும், நல்லநடத்தையுடனும் இருக்க வேண்டும்" என்றும் கேட்டுக் கொள்கிறாள்; தாயும் இறக்கிறாள்; தாய் கேட்டுக் கொண்டபடியே மகளும் வளர்கிறாள்; எல்லோரிடமும் அன்பாக இருக்கிறாள்; கோபமே வராது; யார் என்ன வேலை சொன்னாலும் முகம் சுளிக்காமல் செய்வாள்;

அவளின் பணக்காரத் தகப்பனார் வேறு ஒரு மனைவியை திருமணம் செய்து கொண்டார்; அவள் ஒரு ராட்சசி; இந்த மூத்த மனைவியின் மகளை சுத்தமாகப் பிடிக்காது; இந்த இரண்டாவது மனைவிக்கு இரண்டு மகள்கள் பிறக்கிறார்கள்; அந்த இரண்டு மகள்களுமே பிடிவாதக்காரிகள்தான்; தாயைப் போலவே பிள்ளைகளும்;

சின்டரெல்லாவை சித்தியும், சித்தி மகள்களும் வேலை ஏவிக் கொண்டே இருப்பார்கள்; இவளும் பொறுமையாச் செய்வாள்; இதைப் பார்த்து ஊர் மக்கள் இவள்மீது இரக்கம் கொள்வர்; அதுபோலவே சின்டரல்லா மீது தேவதையும் இரக்கம் கொண்டது; இவள் தனியே இருக்கும்போது தேவதை இவள் முன் தோன்றி, "நான் சொல்வதை நீ செய்ய வேண்டும்; உனக்கு நான் நல்ல வாழ்வை அளிப்பேன்" என்று உறுதி கூறியது; தோட்டத்தில் உள்ள பூசணிக்காயை பறித்து வரச் சொன்னது; அதன் உள்ளிருக்கும் விதைகளை வெளியே எடுத்துவிட்டு, அதை ஒரு சட்டிபோல ஆக்கிக் கொண்டது; அதை தனது மந்திரக் கோலால் தொட்டது அந்த தேவதை! என்ன ஆச்சரியம்! அவை ஒரு  பளபளக்கும் சாரட்டாக மாறியது! தோட்டத்தில் இருக்கும் சுண்டலிகளை பிடித்து வரச் சொன்னது; அவைகளை சாரட்டுடன் செல்லும் வேலையாட்களாக மாற்றியது; பெரிய எலிகளைப் பிடித்து அதேபோல சாரட் வண்டியை இழுக்கும் குதிரைகளாக மாற்றியது; அப்படியே மந்திரக் கோலை, சின்டரல்லா உடம்பின் மீது தடவியது அந்த தேவதை; பழைய அழுக்கு உடையில் இருந்த சின்டரல்லா ஒரு இளவரசி போல மாறிவிட்டார்; செருப்பே இல்லாதவள் காலில், இரண்டு பட்டுப்போன்ற கண்ணாடி இழைகளைக் கொண்ட சிலிப்பர்கள் இவளுக்கு அணிவித்து எல்லோர் கண்களும் இவளையே பார்க்கும்படி அழகாக்கியது அந்த தேவதை;

அன்று, அந்த நாட்டின் மன்னர், எல்லோரையும் நடன நிகழ்ச்சிக்கும் விருந்தும் கூப்பிட்டிருந்தார்; சித்தியின் இரண்டு பெண்கள் மட்டும் அரண்மனை விருந்துக்குப் போனார்கள்; சின்டரல்லாவை வீட்டிலேயே விட்டுவிட்டுப் போனார்கள்; ஆனாலும், தேவதை, சின்டரல்லாவை அந்த சாரட்டு வண்டியில் ஏற்றி, அந்த விருந்துக்கு அனுப்பி வைத்தது; ஒரு நிபந்தனை மட்டும், "இரவு மணி 12 அடிக்கும்போது, கண்டிப்பாக இங்கு வந்துவிடவேண்டும்; வேறு எங்கும் இருக்கக்கூடாது;"

யாரும்க்கும் தெரியாமல் அரண்மனை விருந்துக்க்கு சென்றாள் சின்ட்ரல்லா! இளவரசன் இவளைப் பார்த்து விட்டான்; இவள் பின்னாலேயே திரிந்தான்; எல்லோரும் இவளையே பார்த்து வியந்து கொண்டிருந்தனர்; மன்னரும், ராணியும் கூட இவள் அழகில் மயங்கித்தான் இருந்தார்கள்; மணி இரவு 12 அடிப்பதற்கு இன்னும் 15 நிமிடங்கள் உள்ளன; தேவதை சொன்னது ஞாபகம் வருகிறது; வீட்டுக்குத் திரும்பி விட்டாள்; இளவரசனோ, இவளை நாளைக்கு நடக்கும் நடன விருந்துக்கும் வரும்படி கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்;

அதேபோல், தேவதை, சின்ட்ரல்லாவை அலங்கரித்து, மறுநாள் அனுப்பி வைக்கிறது; 12 மணியையும் ஞாபகப்படுத்துகிறது; விருந்தில் மதிமயங்கி இருந்துவிட்டாள்; மணி 12 அடிக்கப் போகிறது; அலறிப் புடைத்துக் கொண்டு வெளியே ஓடி வருகிறாள்; அதற்குள் மணி இரவு 12; வெளியில் நின்று கொண்டிருந்து சாரட் வண்டி பழையமாதிரி பூசணிக்காயாக மாறி விட்டது; குதிரைகள் எலியாக மாறிவிட்டன; அவள் ஓடி வரும்போது ஒரு செருப்பு கால் இடறி அரண்மனை வாசலிலேயே விழுந்து விட்டது. அது 12 மணிக்கு முன்னர் நடந்தது; இவள் வீட்டுக்கு ஓடி வந்து விட்டாள்; இளவரசன் அந்த ஒற்றை செருப்பை எடுத்து வைத்துக் கொண்டு, இவள் யார் என்று கண்டுபிடித்துவிட திட்டம் வகுக்கிறான்; மறுநாள் காலையில் ஒரு அறிவிப்பு செய்கிறான்; அதன்படி இந்த ஒற்றைச் செருப்பு யார் காலுக்கு பொருந்துகிறதோ அவருக்கு பெரும் பரிசு உண்டு என்று அறிவிக்கிறான்; எல்லோரும் போய் அந்த செருப்பை அணிகிறார்கள்; யார் காலுக்கும் பொருந்தவில்லை; இவளின் சித்தியின் பெண்களும் ஆசைப்பட்டு அணிகிறார்கள்; சேரவில்லை; அவர்களுடன் சின்ட்ரல்லாவும் துணைக்கு போயிருந்தாள்; ஆனால் இவளை அதை அணியச் சொல்லவில்லை; இவளாகவே அங்குள்ளவர்களிடம் இந்த சிலிப்பர் எனது காலுக்கு சரியாக பொருந்தும் பாருங்களேன் என்று சொல்லி அணிகிறாள்; மிகச் சரியாக இருக்கிறது; அவளின் சட்டைப் பையில் வைத்திருந்த மற்றொரு செருப்பை எடுத்து சேர்த்துப் போட்டுக் கொள்கிறாள்;

எல்லோருக்கும் ஆச்சரியம்!! இளவரசருக்கு செய்தி போகிறது; இவள்தான் அந்த அழகி என்று கண்டு இவளை நாடே வியக்கும்படி திருமணம் செய்து கொண்டான் இளவரசன்;

இந்த நிகழ்வைப் பார்த்து, பயந்தபோன, சித்தியின் இரண்டு பெண்களும் அவளிடம் கெஞ்சி, அவர்களை மன்னித்துவிடும்படி வேண்டுகிறார்கள்;

"நல்ல குணத்துக்கு கடவுள் துணையாக இருப்பார்" என்பதே கதையின் கருத்தாக இருக்கலாம்!
இந்த கதை மிகமிக பிரபலமான உலகக் கதைகளில் ஒன்று; 1950 களில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது;



வியாழன், 21 மே, 2015

இன்டர்நெட் ஆர்கைவ் - Internet Archive

இன்டர்நெட் ஆர்கைவ் - Internet Archive
<archive.org>
இது ஒரு டிஜிட்டல் லைப்ரரி;
இங்கு இல்லாத புத்தகங்களே இல்லை எனலாம்; அவ்வளவு புத்தகங்கள்; சுமார் மூன்று மில்லியன் புத்தகங்கள் இதில் ஏற்றப்பட்டுள்ளன. பழங்காலப் புத்தகங்கள் முதல் இன்றைய புத்தகங்கள் வரை; படிக்கத்தான் நமக்கு நேரம் இருக்க வேண்டும்; அவ்வளவும் ஓசியாக டவுன்லோடு செய்து படித்துக் கொள்ளலாம்; காப்பி செய்தும் கொள்ளலாம்; யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்; எல்லாமே நம்முடைய லைப்ரரி புத்தகங்களைப் போல; இந்த டிஜிட்டல் லைப்ரரியானது கலிபோர்னியாவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரிலிருந்து இன்டெர்நெட் மூலம் இயங்குகிறது; உலகில் உள்ள எல்லா பல்கலைகழகங்களும் தங்களிடமுள்ள புத்தகங்களை கொடுத்து உதவியிருக்கின்றன;

விருப்பமுள்ளவர்கள் <archive.org>க்கு செல்லலாம்.
உங்களுடைய ஈ-மெயில் முகவரியை தெரிவித்து உங்கள் கணக்கையும் ஓசியாகவே ஏற்படுத்திக் கொள்ளலாம்; புத்தகங்கள் மட்டுமில்லை; இசை, மூவி, சரித்திர நிகழ்வுகள், இன்னும் எத்தனை எத்தனையோ...... 

செவ்வாய், 19 மே, 2015

ஷெனோபியா ராணி (Zenobia, The Queen)

அதிஷ்டம் எப்போதுமே கைகொடுத்துக் கொண்டிருக்காது என்பதை நாம் உணர்ந்து நடக்கவேண்டும் என்பதற்கு எத்தனையோ கதைகளை சாமியார் சொல்லிக் கொண்டிருக்கிறார்;
அந்த வரிசையில், மற்றொரு கதையான, "ஷெனோபியா ராணி" - Zenobia, the Queen of the Palmyrene Empire in Syria.
சிரியா நாடு; 3-ம் நூற்றாண்டு காலம்; ஷெனோபியா ராணி; இவரே பால்மிரேனி சாம்ராஜ்ஜியத்தின் மகாராணி; இவர் சிரியா நாட்டு செல்வக் குடும்பத்தில் பிறக்கிறாள்; இவள், எகிப்த்தியப் பேரழகி கிளியோபாட்ரா வாரிசு வழியில் வந்தவள் என்றும் சொல்லிக் கொள்கிறாள்;
இவள் கருமைநிறம்; கருத்த ஒளிவீசம் கண்கள்; வெள்ளைவெளேரென்ற பற்கள்; புத்திசாலி, அழகு தேவதையும் கூட; இவளே சொல்லிக் கொள்வாளாம், "நான் கிளியோபாட்ராவைவிட ஒரு படி அழகு அதிகம்தான்." கிளியோபாட்ரா வெறும் அழகு மட்டும்தான்; ஆனால் அவள் கற்பில் களங்கமுள்ளவள்; ஆனால் நானோ அப்படியில்லை! அழகிலும் அவளை மிஞ்சி இருக்கிறேன்; கற்பில், என் காலடி தூசுக்குக் கூட அவள் எனக்குச் சமமாக மாட்டாள்" என்று பீற்றிக் கொள்கிறாள்; நியாயம்தானே? ஆண்மகனைப் போலவே வளர்க்கப்பட்டவள்; குதிரைச்சவாரி, வேட்டை, தன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் இருக்கும்போது மட்டும் கொஞ்சம் தண்ணி! அதிக கறாரான பேர்வழி! யாரும் நெருங்கிவிட முடியாது! அவ்வளவுதான் தொலைந்தார்கள்! நல்ல படிப்பு! கிரேக்க மொழி, அராமிக் மொழி, எகிப்திய மொழியில் சரளமாகப் பேச எழுத படிக்கும் திறமைகள்! இது இல்லாமல் லத்தீன் மொழியும் அத்துபடி! லத்தீனில் கவிதைகூட எழுதுவாளாமே! இவளைச் சுற்றி எப்போதும் புலவர்களும், தத்துவ மேதைகளும் குழுமி இருப்பார்களாம்! அறிவுக் களஞ்சியமாம்!
இவ்வளவு அறிவோடு இருப்பவளுக்கு எப்படி மாப்பிள்ளை கிடைக்கும். இவள் திருமணமே வேண்டாம் என்று இருக்கிறாள்; யார் சொன்னாலும் கேட்பதாக இல்லை; தகுதியானவன் கிடைப்பானா என்ற கவலையா, அல்லது எதுக்கு எவனுக்கோ அடிமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணமோ தெரியவில்லை!!! "எங்காவது ஒரு இடத்தில், இவளுக்குறிய மாப்பிள்ளை பிறந்திருக்காமலேயா போய்விடுவான்?" (ஒரு குழந்தை, அது கருவில் இருக்கும்போதே, அதன் மூன்றாவது மாதத்திலேயே, அதன் துணையை, கடவுள் வேறு எங்கோ ஏற்படுத்தி வைத்து விடுவானாம், இது கடவுள் இரகசியம்);
சிரியாவில் ஒரு இடத்தில் ஒருவன் பிறக்கிறான்; அவன் பெயர் லூசியஸ் ஒடெனாத்தஸ் (Lucius Odenathus): இவனும் மன்னர் பரம்பரைதான்; இவனுக்கு ஏற்கனவே ஒரு திருமணம் நடந்து அந்த மனைவி மூலம் ஒரு மகன் உள்ளான். அவன் பெயர் ஹெய்ரான்; இந்த லூசியஸூக்கு இரண்டாவது மனைவியாக அழகி ஷெனோபியா வருகிறாள்;
யார் யாரோ கட்டாயப் படுத்தி இவளை இரண்டாவது மனைவியாக போகும்படி நிர்பந்திக்கிறார்கள்; கடவுளின் வேலையாகத்தான் இருக்கும்! இவளுக்கும் ஒரு மகன் பிறக்கிறான்; அவன் பெயர் வாபல்லதஸ்; கணவனும், மூத்த மனைவியின் மகனும் ஒரு போரில் கொல்லப்படுகிறார்கள்; இராஜ்ஜியம் வாரிசுப்படி இவளின் மகனுக்கு வரவேண்டும்; இவளின் மகன் வாபல்லதஸூக்கு ஒருவருடக் குழந்தையாக இருக்கிறான்; எனவே தாய், கார்டியனாக பதவி ஏற்கிறார் தன் மகனுக்காக; அந்த மகனின் முடிசூட்டு பெயர் அகாஸ்தஸ் என்று வைத்துக் கொள்கிறார்கள்; இவள் போருக்கு போகிறாள்; நாடு பிடிக்கிறாள்; ரோமானிய சாம்ராஜ்ஜியத்தின் கிழக்குப் பகுதியை வெற்றி கொண்டு அதையும் தன் நாட்டுடன் சேர்த்து பெரிய பேரரசாக ஆட்சி செய்கிறாள்; ஒருமுறை, எகிப்து மீது படையெடுத்து அதை கைப்பற்றி விட்டாள்; அந்த நாட்டுக்கு, தானே "வெற்றி ராணி" என்றும் முடிசூட்டிக் கொண்டாள்;
கடவுள் எப்போதுமே வெற்றியைக் கொடுத்துக் கொண்டிருக்க மாட்டானாம்! அதை நாம் தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டுமாம்!
அங்காரா நாட்டுக்கு படையெடுக்கும் போது, சருக்கல்! இவளின் தளபதியை கொன்றுவிட்டனர்; இவளும், இவள் மகனும் ஒரு ஒட்டகத்தில் ஏறி தப்பிக்கின்றனர்; ரோமில் தஞ்சம்! என்னே கொடுமை, வழியிலேயே மகன் வாபல்லதஸ் இறந்துவிட்டான்; ரோம மன்னன் ஆரேலியன் ஏற்கனவே கடுப்பில் இருந்திருப்பான் போலும்! ஷெனோபியாவை தங்கச் சங்கிலியில் கட்டி தெருவில் ரோமானிய வீரர்கள் இழுத்துச் செல்கிறார்கள்; வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள்! அழகி, கற்புக்கரசி, அறிவாளி, பன்மொழிபுலவி, வீராங்கனை, ராணி, மாகாராணி, ....... அத்தனை இருந்தும், தெருவில் சங்கிலியில் கட்டி இழுத்துச் செல்கின்றனர். தங்கச் சங்கிலியாம்! மானம் போகும்போது, அது தங்கத்தில் போனாலென்ன, தகரத்தில் போனாலென்ன?
முடிவு தெரியவில்லை.........
ஆனால் பின்னர் வந்த சரித்திர ஆசிரியர்கள், இவளை இப்படியே விட்டுச் செல்ல மனமில்லாமல் பல கிளைமாக்ஸை சொல்லி வைத்துள்ளனர்.
1. இவள், ரோம் நகருக்கு வருவதற்குள்இறந்துவிட்டாள்;
2. இவள், பட்டினி கிடந்து, ரோஷமாக இறந்து விட்டாள்;
3. இவளின் அழகைப் பாராட்டிய ரோம் மன்னர் இவளை மன்னித்து விட்டுவிட்டான்;
4. இவள், ரோம் நகரத்துக்கு வந்து சிறை தண்டனை முடிந்து அங்குள்ள கவர்னரை திருமணம் செய்து வாழ்ந்தாள்;
5. இவள் தத்துவ  ஞானியாகி ரோம் நகரில் வாழ்ந்தாள்;
6. ரோம் மன்னர், இவளுக்கு பெரிய வில்லா கட்டிக் கொடுத்து அங்கு தங்க வைத்தார்;
பறிபோன மானம், போனதுதானே! திரும்பி வரவா போகிறது.
அதிஷ்டத்துடன் கடவுள் விளையாடும் இந்த விளையாட்டைத்தான், சாமியார் கதையாகச் சொல்லியுள்ளார். (கான்டர்பரி கதைகள்).


திங்கள், 18 மே, 2015

உன் கடவுள் உன்னை காப்பாற்றுவாரா?

"The Monk's Tale" is one of The Canterbury Tales by it author Geoffrey Chaucer: ஜெப்ரி சாசரின் கான்டர்பரி கதைகளில் ஒன்றுதான் இந்த "சாமியாரின் கதை." இது 1385ல் எழுதப்பட்ட கதை (சுமார் 600 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட பொக்கிஷம்);

சாமியார் சொல்கிறார், "யாருமே கண்ணை மூடிக்கொண்டு அதிர்ஷ்டத்தை நம்பிக் கொண்டிருக்க கூடாது; அதிர்ஷ்டம் என்பதே நிலையற்றதுதான்; அது மாறிக்கொண்டே இருக்கக் கூடியதுதான் என்பதையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்" என்று சாமியார் சொல்கிறார். "Not to trust in blind prosperity but be aware that Fortune is fickle and ever-changing."
சாமியார் ஒவ்வொரு கதையாகச் சொல்லிக் கொண்டே செல்கிறார்;
அடுத்த கதையாக....
Nabugodonosor நபுகாடனேசர்:  
தான்தான் என்ற அகங்காரத்தில் அழிந்த மன்னர்;
இவர் பாபிலோனிய மன்னர்; இரண்டுமுறை இஸ்ரேலை போரில் தோற்கடித்தவர்; இவரின் கதையை அந்த சாமியார் சொல்கிறார்;
"தொங்கு தோட்டம்" என்னும் Hanging Gardens of Babylon இதை உருவாக்கியவர் இவர்தான்; (உலகத்தில் உள்ள ஏழு அதிசயங்களில் இதுவும் ஒன்று); இப்போது ஈராக் பகுதியில் உள்ளது; இவரின் ஆசைநாயகி அமிடிஸ் ராணிக்காக உருவாக்கப்பட்டதாம்! ஏனென்றால், அந்த ராணி, அவள் பிறந்து வளர்ந்த ஊரில் நிறைய தோட்டம் துரவுகளுடன் வாழ்ந்தவள்; இங்கு அப்படி ஒன்றுமே இல்லை என்று கவலைப்பட்டாளாம்; அதனால் மன்னர் இதை அவளுக்காக உருவாக்கியுள்ளார்;
நபுகடனேசர் என்றால் அந்த ஊர் மொழியில் "கடவுளே, என் முதல் குழந்தையை காப்பாற்று" என்று பொருளாம். இவரின் தகப்பனாருக்கு இவர்தான் மூத்த பிள்ளை; எனவே இந்தப் பெயரை இவருக்கு வைத்து விட்டார் இவரின் தந்தை; பக்கத்து நாடான சிரியாவையும் (அரமியா), எகிப்தையும் பிடிக்கும் ஆசையில் அடிக்கடி போர் தொடுப்பார்;
இவருக்கு அடிக்கடி பயங்கர கனவு வருமாம்! கனவில் ஏதேதோ வந்து தொலைக்குமாம்! காலையில் எழுந்தவுடன் அரண்மனை அமைச்சர்களை கூப்பிட்டு இந்த கனவுகளுக்கு என்ன அர்த்தம், எதை சொல்ல வருகிறது என்று கேள்வி கேட்டு துளைத்து எடுத்துவிடுவாராம்! திருப்தியான பதிலாக இல்லையென்றால் சிறை அல்லது தலை போய்விடும்!
ஒருநாள் கனவில், "ஒரு பெரிய சிலை; அதன் தலை முழுவதும் தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, களிமண் இருக்கிறது; ஒரு மலையிலிருந்து ஒரு பெரிய கல் பெயர்த்துக் கொண்டு வந்து இந்த சிலையை உடைத்து விட்டது; உடைந்த சிலையே பெரிய மலைபோல ஆகிவிட்டது; இதற்கு விளக்கம் கேட்டு தன் மதகுரு டேனியலிடம் கனவை சொல்கிறார்; அவரும் நம் கடவுளிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று சொல்லி, "அந்த பெரிய சிலை நான்கு தொடர்ச்சியான ராஜாங்கத்தை குறிக்கிறது; மன்னரான உங்களிலில் இருந்து இது ஆரம்பிக்கிறது; இவை எல்லாமே கடவுளின் இராஜாங்கத்தால் அடித்து தரை மட்டமாகிறது" என்கிறார்; இதை கேட்ட மன்னர், டேனியலை முதன்மை பதிவுக்கு உயர்த்துகிறார்; டேனியலுக்கு பெரிய பதவி கிடைத்தது அவருடன் இருப்பவர்களுக்கு பிடிக்கவில்லை; டேனியல் கடவுள் பக்தி மிக அதிகமாக உள்ளவர்; எப்போதும் சாமியை கும்பிட்டுக் கொண்டே இருப்பார்; எனவே தந்திரம் செய்து மன்னரை நம்பவைத்து ஒரு உத்தரவை மன்னராகவே பிறப்பிக்க வைக்கின்றனர்; அதாவது, "இன்றுமுதல் 30 நாட்களுக்கு நாட்டு மக்கள் யாரும் சாமியை கும்பிடக்கூடாது"  என்று அரசரின் உத்தரவு; ஆனால் டேனியலால் சாமி கும்பிடாமல் இருக்க முடியவில்லை; சாமி கும்பிடுவதை மன்னருக்கு சொல்லிவிட்டார்கள்; உடனே அவர் டேனியலை சிங்கத்தின் குகைக்குள் தூக்கி போடச் சொல்கிறார்; உன் கடவுள் உன்னை காப்பாறுவாரா பார்க்கலாம் என்கிறார்; மறுநாள் காலை வந்து பார்க்கிறார்; சிங்கம் டேனியலை ஒன்றும் செய்யவில்லை; எப்படி இது என்று மன்னர் கேட்கிறார்; நாம் வணங்கும் கடவுள், அந்த சிங்கத்தின் வாயைக் கட்டிப் போட்டுவிட்டார்; அதனால் நான் தப்பித்தேன் என்று டேனியல் கூறுகிறார்; அதை மன்னர் நம்புகிறார்;
மன்னர் நெபகாட்னேசர், ஒரு பெரிய கடவுள் சிலையை முழுக்க தங்கத்தால் செய்கிறார்கள்; அதை பொதுமக்களின் வழிபாட்டுக்கு வைக்கிறார்கள்; அங்கு மூன்று யூதர்கள் வருகிறார்கள்; அவர்களை அதை வணங்க மறுக்கிறார்கள்; மன்னர், கோபத்தில் அந்த மூன்று யூதர்களையும் எரியும் எண்ணெய் கொப்பரையில் போட கட்டளையிடுகிறார்; ஆனால் அவர்கள் எரியாமல் ஒரு புகைகூட இல்லாமல் வெளியே வருகிறார்கள்; மன்னர் உடனே "இவர்கள்தான் கடவுளின் மகன்கள்"  என்றும், இவர்களின் கடவுள்தான் உண்மையான கடவுள் என்றும், எல்லோரும் இவரையே வணங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அவர்களை கை கால்களை வெட்டிவிடுவேன் என்றும் உத்தரவு இடுகிறார்;
நெபுகாட்னேசருக்கு கனவு வருகிறது: அதில் வானளாவிய மரம்; இதை மந்திரியிடம் கேட்கிறார்; அதற்கு அவர், "மன்னரே தாங்கள் ஒரு ஏழு வருடத்திற்கு பைத்தியக்காரராக திரியப் போகிறீர்கள் என்பதை கனவு சொல்கிறது" என்று கூறுகிறார்;
கடவுளுக்காக எவ்வளவு செய்திருக்கிறேன், எனக்கு பைத்தியம் பிடிக்காது என்று இருக்கிறார்; நினைவை இழக்கிறார்; மிருகம்போல ஏழு வருடங்கள் பைத்தியமாக திரிகிறார்; ஒரு சிறையில் மிருகம் போல வாழ்கிறார்; பின்னர் பைத்தியம் தெளிகிறது; அகங்காரம் ஒழிந்து கடவுளை தன்னடக்கத்துடன் வழிபட்டு வருகிறார்;

**

ஞாயிறு, 17 மே, 2015

ஹெர்குலிஸ் கதை

ஜெப்ரி சாசரின் கான்டர்பரி கதைகளில் ஒன்றுதான் இந்த "சாமியாரின் கதை." இது 1385ல் எழுதப்பட்ட கதை (சுமார் 600 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட பொக்கிஷம்);
லூசிபர் விடிவெள்ளி சொர்க்கதிலிருந்து கீழே விழுந்த சோகம்;
ஆதாம் என்னும் முதல் மனிதன், மனைவி பேச்சை கேட்டு கடவுளின் சாபத்துக்கு ஆளான பரிதாபக் கதை;
சாம்சன் வீரன், தன் மனைவியிடம் ரகசியத்தைச் சொன்னதால் அவன் வீரம் பறிபோன சோகக் கதை;
அடுத்து இந்த ஹெர்குலிஸ் வீரனின் கதையை கேட்கும்படி அந்த கதை சொல்லும் சாமியார் ஆரம்பிக்கிறார்......
Hercules ஹெர்குலிஸ் கதை சொல்கிறேன் என்று சாமியார் தொடர்கிறார்; லத்தீன் மொழியில் ஹெர்குலிஸ்; ரோமானிய இதிகாசத்தில் ஜூபிடர் என்னும் குரு(வியாழன்) கடவுளின் மகன் தான் இந்த ஹெர்குலிஸ்;
கிரேக்க இதிகாசத்தில் இவரின் பெயர் ஹிராகிள்ஸ் Heracles; கிரேக்க கடவுள் ஜீயஸின் மகன்களில் ஒருவர்தான் இந்த ஹிராக்கிள் என்னும் ஹெர்குலிஸ்;
கிரேக்கர்கள் என்னும் நீண்டமுடி அகியன்கள் (Achaeans) இந்த கதாநாயகனை ஹெராகிள்ஸ் என்றே அழைக்கிறார்கள்; ஹெர்குலிஸின் திறமை கடவுள் கொடுத்தது;
ஹெர்குலிஸ் பிறந்த கதையே வேடிக்கையும் ஆச்சரியமுமானதுதான்; ஜீயஸ் கடவுள் ஒருநாள் நினைக்கிறார், "கடவுள் என்பவர் இறப்பு அற்றவர்; மனிதன் என்பவன் இறப்புக்கு உட்பட்ட உடலைக் கொண்டவன்; ஏன், இறப்பற்ற கடவுள் உடலுக்கும், இறக்கும் மனிதன் உடலுக்கும் பிறக்கும் ஒரு குழந்தையை தேர்ந்தெடுக்கக் கூடாது; அது எப்படி இருக்கும்; கடவுளின் குணங்களும், மனிதனின் குணங்களும் சேர்ந்தே இருக்கும்தானே?" செயல்படுத்துகிறார்;
ஆம்பிடிரியன் Amphitryon என்று ஒரு மன்னன்; அவன் மனைவி அல்க்மினி Alcmene. தன் சகோதரர்களை கொன்றவர்களை கொன்றுவிட்டு வரும்படி இவள் தன் கணவனை ஏவுகிறாள். அவனும் போருக்குச் சென்று விட்டான்; இவள் தனியாக இருக்கிறாள்; ஜீயஸ் கடவுள் இவளை அடைய ஒரு திட்டம் தீட்டி, அதன்படி, அன்னப்பறவை வேடமிட்டு அதை ஒரு கழுகு துரத்துவதுபோல பாசாங்கு செய்து, பயந்துகொண்டு, நந்தவனத்தில் இருந்த இந்த அல்கிமினி மடியில் வந்து தொப்பென்று விழுகிறார்; அவளும் பரிதாபப்பட்டு, அதை எடுத்துக் கொஞ்சுகிறாள்; கொஞ்சல் அதிகமாகி காதலாகி, இருவரும் கலக்கிறார்கள்; ஜீயஸ் கடவுளின் கரு இவள் வயிற்றில் சென்றுவிட்டது; போருக்குபோன கணவன் அன்றே நாடு திரும்புகிறான்; உடனே மனைவியைப் பார்க்கிறான்; அவனும் உறவாடுகிறான்; மறுபடியும் ஒரு கரு அவள் வயிற்றில் உருவாகிறது; ஒரு கரு ஜீயஸ் கடவுளுடையது; மற்றொன்று கணவனுடையது; ஒன்று கடவுள்; மற்றொன்று மனிதன்; கடவுளுக்கும் மனிதனுக்கும் ஒரு கரு; மனிதனுக்கும் மனிதனுக்கும் மற்றொரு கரு; இரட்டை குழந்தைகள்; ஜீயஸ் கடவுளுக்குப் பிறந்த குழந்தைதான் இந்த ஹெர்குலிஸ். மன்னனுக்குப் பிறந்த குழந்தை இபிக்லிஸ்; ஹெர்குலிஸ் தான் இந்த உலகத்தை ஆளும் குழந்தை என ஜீயஸ் கடவுளே அறிவிக்கிறார்;
ஜீயஸ் கடவுளின் மனைவியான ஹெராவுக்கு பொறாமை; அவள் சதி செய்து, இரண்டு பாம்புகளை அந்த இரட்டைக் குழந்தைகளை கடிக்கும்படி அனுப்புகிறாள்; அதை பார்த்து பயந்த இபிகிலிஸ் கத்துகிறான்; ஆனால் ஹீரோ ஹெர்குலிஸ் அந்தப் பாம்புகளை அனாவசியமாக தூக்கி ஒவ்வொரு கையிலும் ஒரு பாம்பைப் பிடித்து நசுக்குகிறான்; இதைத் தெரிந்த மன்னன், இது என்ன அதிசயப் பிறவியாக இருக்கிறதே என்று அரண்மனை ஜோசியரை கேட்கிறார்; அவர் உண்மையை உடைக்கிறார்; ஹெர்குலிஸ் கடவுள் ஜீயஸின் மகன் எனத் தெரிந்து வளர்க்கிறார் மன்னர்; வளர்ந்தவுடன் கித்தாரோன் மலையில் இருக்கும் சிங்கத்தை கொல்ல இவனை அனுப்புகின்றனர்; அவன் அதன் தோலை உரித்து வருகிறான்; ஒருமுறை போர் நடக்கிறது; அதில் ஹெர்குலிஸ் வீரமாக போரிட்டு எல்லோரையும் அழிக்கிறான்; தேபஸ் மன்னர் தன் மகள் மெஹாராவை ஹெர்குலஸிக்கு மணம் முடிக்க விரும்புகிறார்; இளைய மகளை, இரட்டையரில் மற்றொருவரான இபிகிலிஸிக்கு திருமணம் செய்ய சம்மதிக்கிறார்; யூரேட்டஸ் என்னும் மன்னர் இந்த ஹெர்குலிஸை வளைத்துப்போட நினைக்கிறார்; அவரின் குதிரைகள் காணமல் போகின்றன; அதை திருடியவர் ஹெர்குலிஸ்தான் என நினைக்கிறார்; ஆனால் உண்மையில் அதை திருடியவன், அதை கொண்டுவந்து ஹெர்குலிஸிடம் விற்றுவிட்டு போயிருக்கிறான்; அதை நம்பாத மன்னின் மகனை விருந்துக்கு அழைத்து கொல்கிறான் இந்த ஹெர்குலிஸ்;
பின்னர், பைதோனிஸ் என்ற பெண்ணை பார்க்க போகிறான்; அவள் பயந்து கொண்டு அப்போலோ கடவுளை கூப்பிடுகிறாள்; அப்போலோவுக்கும் ஹெர்குலிஸூக்கும் சண்டை நடக்கிறது; இருவருமே ஜீயஸ் கடவுளின் மகன்கள்; எனவே ஜீயஸ் கடவுள் இடி மின்னலை வரவைத்து சண்டையை விலக்கி விடுகிறார்;
ஹெர்குலிஸ் மறு திருமணம் செய்ய முடிவு; டெயானிரா; ஒரு மன்னனின் மகள்; திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்கிறார்கள்; ஒருநாள் தவறுதலாக ஒரு அதிகாரியை கொன்று விடுகிறார்; எனவே பயந்து ஹெர்குலிஸூம் அவர் மனைவியும் தப்பி வேறு நாட்டுக்கு ஓடுகிறார்கள்; வழியில் ஒரு பெரிய நதியை கடந்து செல்ல வேண்டி உள்ளது; ஹெர்குலிஸ் பலசாலி; தன் மனைவியை தூக்கிக் கொண்டே நீந்துகிறான்; அப்படியும் அவள் நனைத்து விட்டாள்; கோபித்துக் கொள்கிறாள்; இதை ஒரு சென்டூர் (பாதி குதிரை-பாதி மனித உருவம்) கொண்ட மனிதன் பார்த்துக் கொண்டு அருகில் வந்து, நான் வேண்டுமானால் உன் மனைவி டையனேரியாவை நனையாமல் தூக்கிச் செல்லட்டுமா என்று கேட்கிறது; சரி என ஹெர்குலிஸ் ஒப்புக்கொள்கிறான்; டையனேரியாவை சென்டூர் குதிரை தன் முதுகில் ஏற்றிக் கொண்டது; ஹெர்குலிஸ் தனியே நீந்துகிறான்; கண்மூடித் திறப்பதற்குள் குதிரை அவளை ஏற்றிக் கொண்டு மறைந்து விட்டது; கடத்திக் கொண்டுதான் போயிருக்க வேண்டும்; அவளைக் கற்பழிக்கும் எண்ணமாகவும் இருக்கலாம்! கரையேறியவுடன் அந்த குதிரைக் கண்டான்; அதன் இதயத்தை நோக்கி ஒரு உதை; இறக்கும் நிலைக்கு போய்விட்டது அந்தக் குதிரை; அப்போது அருகில் இருந்த டைனேரியாவிடம் ஒரு ரகசியத்தை சொன்னது அந்தக் குதிரை மனிதன்; "நீ என் இரத்தத்தையும், இந்திரியத்தையும் எடுத்து வைத்துக் கொள்; என்றோ ஒருநாள், உன் கணவன் ஹெர்குலிஸ் உன் விரும்பாமல் போவான்; அப்போது உனக்கு இது தேவைப்படும்,"  என்றது; எனவே அதை ஒரு பாட்டிலில் வைத்து, ஹெர்குலிஸ் சட்டையில் தெளித்தே விடுவாள்; அது இருக்கும்வரை அவன் அவளை வெறுக்க மாட்டான்;
மற்றொரு நாட்டுடன் ஹெர்குலிஸ் போருக்கு போகிறான்; அங்கு எல்லோரையும் கொல்கிறான்; இளவரசியைத் தவிர; ஏனென்றால், அவளை இவன் மனைவியாக ஏற்றுக் கொள்வேன் என்று எப்போதோ வாக்குறுதி கொடுத்தானாம்; எதுவும் சொல்லாமல், அவளை தன் மனைவி டையனிராவிடம் அனுப்புகிறான்; தனக்கு வேறு சட்டை அனுப்பும்படி கேட்கிறான்; மனைவிக்கு சந்தேகம்; அவள் வேறு சட்டையில் அந்த மனிதக் குதிரையின் ரத்தத்தை தெளித்தே அனுப்புகிறாள்; அது அவனின் அம்பு முனையில் ஒட்டிக் கொள்கிறது; அது ஒரு ஐந்துதலை நாகத்தின் ரத்தத்துடன் கலந்து விஷமாகிறது; அதை அவன் அணிந்தவுடன் உடல் எல்லாம் நெருப்பாக எரிகிறது;
கதை சொல்லும் சாமியார் சொல்கிறார், “இவ்வளவு பெரிய வீரனின் வீரம் ஒரு பெண்ணால் நிலை குலைகிறது என்பது சோகம்தானே!’
**

வீரனின் பலவீனம்

"The Monk's Tale" is one of The Canterbury Tales by it author Geoffrey Chaucer: ஜெப்ரி சாசரின் கான்டர்பரி கதைகளில் ஒன்றுதான் இந்த "சாமியாரின் கதை." இது 1385ல் எழுதப்பட்ட கதை (சுமார் 600 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட பொக்கிஷம்);
லூசிபர் விடிவெள்ளி ஆகாயத்திலிருந்து மண்ணில் விழுந்த சோகக் கதையை கேட்டீர்கள்;
கடவுளின் முதல் மனிதன் ஆதாம், கடவுள் சொன்ன சொல்லைக் கேட்காததால், இந்த மண்ணில் படும் அவஸ்தையை பார்த்திருப்பீர்கள்;
இனி, அடுத்த கதையாக, இரகசியத்தை காப்பாற்றி வைக்காமல் அதனால் உயிரிழந்த மாவீரன் Samson-சாம்சனின் சோகக் கதையை கேளுங்கள்;
சாம்சன் என்றால் கெப்ரூ மொழியில் "சூரியமனிதன்" என்று பொருள்; அவன் கடவுள் அருள் பெற்றவன்; ஒரு சிங்கக் கூட்டத்தையே தான் ஒருவனே சண்டையிட்டு அதன் தாடைகளைக் கிழித்துவிடுவான்; ஒரு போர்படையே வந்தாலும், தன் கையில் வைத்திருக்கும் கழுதையின் ஒரு தாடை எலும்பைக் கொண்டே எல்லோரையும் கதறக் கதற அடித்து விரட்டுவான்; ஆனால் அப்படிப்பட்ட வீராதி வீரனுக்கு இரண்டு விஷயங்கள் ஆகாது; ஒன்று, நம்பிக்கைக்கு உகந்தவள் அல்லாத பெண்களைப் பார்த்தால் மயங்கி விடுவான்; இரண்டு, இவன் மயிரைப் பிடுங்கி விட்டால் இவன் உயிரே போய்விடும்.
அந்தக் காலத்தில், பிலிஸ்டைன் மக்களிடம், இஸ்ரேல் மக்கள் அடிவாங்கி அவதிப் பட்டுக் கொண்டிருந்தார்கள்; அந்த இஸ்ரேல் மக்களை காப்பாற்றுவதற்காக, ஏஞ்சல் தேவதை தோன்றி அங்கு வசிக்கும் மோனவா என்பவனின் மனைவியிடம் பேசுகிறார். அந்த மோனவா மனைவிக்கோ வெகுகாலம் குழந்தை ஏதும் பிறக்கவில்லை; அந்தக் கவலையில் இருக்கிறாள்; தேவதை, "உனக்கு வீரமான மகன் பிறப்பான்; அவனே இந்த இஸ்ரேல் மக்களை, பிலிஸ்டைன் மக்களின் தொல்லைகளிலிருந்து காப்பாற்றுவான்" என்று கூறி மறைகிறது; அதை அவள் கணவன் வந்தவுடன் சொல்கிறாள்; அவனோ அதை நம்ப மறுக்கிறான்; "மறுபடியும் அந்த தேவதை வந்தால் என்னை நேரில் பாத்து சொல்லச் சொல்" என்று நம்பிக்கை இல்லாமல் சொல்கிறான்;
அந்த தேவதை ஏற்கனவே அவளிடம் சொல்லியுள்ளது, "பிறக்கும் உன் மகன் எந்தக் காரணத்தைக் கொண்டும், போதைதரும் மதுவை அருந்தக் கூடாது; எந்தக் காரணத்தைக் கொண்டும் அவனின் முடியை வெட்டிக் கொள்ளக்கூடாது" என்றும் ஆணை;
மகன் பிறந்தவுடன், மனோவா, மகனுக்கு மொட்டை போட கோயிலுக்கு போகிறான்; ஆனால் தேவதை ஆட்களை அனுப்பி தடுத்துவிடுகிறது; தேவதை ஆகாயத்தில் தோன்றி, "நான் வெறும் தேவதை என்று நினைத்துக் கொண்டாயா? நானே கடவுள்" என்று சொல்கிறது; அதைக் கேட்ட மனோவா பயப்படுகிறான்; "கடவுளைப் பார்த்த எவரும் உயிருடன் இருக்க முடியாதாமே! அப்படியென்றால், நான் இறந்துவிடுவேனா?" என்று பயப்படுகிறான்ஆனால், அவன் மனைவி ஆறுதலாகச் சொல்கிறாள்; "கடவுள் நம்முடனேயே தங்கி இருக்க போகிறார்; எனவே அவர் நம்மை ஒன்றும் செய்யமாட்டார்" என்று சமாதானம் செய்கிறாள்;
சிறுவன் சாம்சன் வளர்ந்து பெரியவனாகிறான்; இஸ்ரேலை விட்டு, பிலிஸ்டைன் நாட்டுக்குப் போகிறான்; அங்கு திம்னா என்ற பெண்ணைப் பார்த்து காதல் கொள்கிறான்; அவளையே திருமணம் செய்து கொள்ளலாம் என நினைக்கிறான்; கடவுளிடம் ஒரு வார்த்தை கேட்டுக் கொள்வோம் என பெற்றோர் சொல்வதை சாம்சன் கேட்கவில்லை; அந்த பெண்ணை தேடி அங்கு போகிறான்; வழியில் ஒரு பெரிய சிங்கம் எதிர்கொள்கிறது; அதை வெகு எளிதில் தூக்கி எறிகிறான்; அதன் வாயைப் பிளக்கிறான்; எலும்புகளை பிய்த்து எறிகிறான்; அவனுக்கு அந்த பலத்தை கடவுள் கொடுத்திருக்கிறார் எனத் தெரியும்; எனவே வேறு யாருக்கும் அந்த ரகசியத்தைச் சொல்லாமல் தன்னகத்தே இரகசியமாகவே வைத்துக் கொள்கிறான்; பிலிஸ்டனை நாட்டில் அந்த மணப்பெண்ணின் வீட்டுக்குப் போகிறான்; திருமணம் செய்து அவளை கூட்டிக் கொண்டு இஸ்ரேல் திரும்புகிறான்; வழியில், அவன் அடித்ததுப் போட்ட சிங்கத்தின் எலும்புக் கூடுகளில், தேனீக்கள் கூடுகட்டி தேனடை பெரிதாக இருக்கிறது; முழுவதும் தேன்; தானும் மனைவியும், புது மனைவியுடன் கூட வந்த பிலிஸ்டைன் நாட்டு சொந்தக்காரர்களும் தேனை வயிறு நிறைய குடிக்கிறார்கள்; வீட்டுக்கும் பெற்றோருக்கு எடுத்துக் கொண்டு வருகிறான்;
வீட்டுக்கு வருகிறான்; மாப்பிள்ளை விருந்து இரவில் நடக்கிறது; மணப்பெண்ணுடன் வந்திருந்த 30 பேர்களிடம் இவன் ஒரு விடுகதையை சொல்கிறான்; அதற்கு விடை சொல்ல வேண்டும் என்றும்; அவ்வாறு விடை சொல்லிவிட்டால், எல்லோருக்கும் தனித்தனியே பட்டாடைகளை பரிசாகத் தருவதாகவும், அவ்வாறு சொல்ல முடியாமல் தோற்றுவிட்டால், அவர்கள் அனைவரும் இவனுக்கு பட்டாடைகளைத் தர வேண்டும் என்றும்  கட்டளையிடுகிறான்;
விடுகதை இதுதான்:
"தேனைக் காட்டிலும் சுவையானது எது?"
 "சிங்கத்தைக் காட்டிலும் பலசாலி எது?"
"What is sweater than honey? and what is stronger than a lion?"
நீங்கள் அனைவரும் என்னுடைய நிலத்தில் என மாட்டைக் கொண்டு உழுதுவந்தால், இதற்காக விடை உங்களுக்குக் கிடைக்கும்" என்று சொல்கி அதுவரை வேலை செய்யச் சொல்கிறான்;
விருந்தாளிகள், விடையை கண்டுபிடிக்க முடியவில்லை; மெதுவாக மணப் பெண்ணிடம் வந்து கெஞ்சுகிறார்கள்; நீ உன் கணவனிடம் இரகசியமாகக் கேட்டு எங்களுக்குச் சொல்லிவிடு" என்று கேட்டுக் கொள்கிறார்கள்;
மறுநாள் இரவில் மனைவி இந்த ரகசியத்தை கணவனிடமிருந்து தெரிந்து கொண்டு, விருந்தாளிகளிடம் சொல்லி விடுகிறாள்; அவர்களும் விடையைச் சொல்லிவிட்டார்கள்; அது அவனுக்கு கோபத்தை உண்டாக்கியது; விருந்தாளிகளைக் கொன்றுவிட்டான்; மனைவியை கோபமாக இழுத்துக் கொண்டு மாமனார் வீட்டுக்குப் போய் விட்டுவிட்டான்; பின்னர் அவளை பார்க்க மாமனார் வீட்டுக்குப் போகிறான்ஆனால் அவளை வேறு ஒருவனுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள்; மாமனார் சொல்கிறார், "என் இரண்டாவது பெண் இருக்கிறாள்; அவளை வேண்டுமானால் திருமணம் செய்து கொள்ளுங்கள் மருமகனே" என்கிறார்; இவனுக்கோ பயங்கரக் கோபம்; எல்லா நரிகளையும் பிடிக்கிறான்; அதன் வாலில் தீப்பந்தங்களை ஏற்றி விரட்டி விடுகிறான்; அவைகள் ஊரையே சுற்றி வருகின்றன; ஊரே எரிந்துவிட்டது; பயிர்கள் எல்லாம் எரிந்து விட்டன; அதில் அவன் மனைவயும், அவன் மாமனாரும் எரிந்து போயினர்; "எனக்குத் துரோகம் செய்யவர்களுக்கு நான் துரோகம் செய்து விட்டேன்" என்று ஆறுதல் சொல்லிக் கொண்டான்;
"I have done to them what they did to me."
சாம்சன் ஓடிப் போய் மலைக் குகைக்குள் ஒழிந்து கொண்டான்; மன்னர், 3000 வீரர்களை அனுப்பி அவனை சிறைப்பிடித்து வரச் சொல்கிறார்; அவர்கள் இவனை பெரிய கயிறு கொண்டு கட்டினார்கள்; அவனை அதை சுலபமாக அறுத்து எரிந்தான்; கையில் வைத்திருந்த கழுதையின் தாடை எலும்பை மட்டுமே ஆயுதமாகக் கொண்டு ஒரு ஆயிரம் வீரர்களை கொன்று போட்டான்;
பின்னர் தப்பித்து கஜா நாட்டுக்குப் போனான்; அவன் மறுபடியும் வருவான் என்று பிலிஸ்டைன் நாட்டு வீரர்கள் காத்திருந்தனர்; அங்கு, கஜா நாட்டில் ஒரு பெண்ணைப் பார்த்து மயங்கி விட்டான்; (இரகசியம் காக்கமுடியாத பெண்களை கண்டாலே இவனுக்கு மயக்கம் வந்துவிடும் என்பது இவனது சபலம், பலவீனம், அதுவே இவனின் விதி); அவள் பெயர் "டெலிலா." இந்தச் செய்தி எதிரிகளான பிலிஸ்டைன் வீரர்களுக்கு தெரியவருகிறது. அவர்கள் இரகசியமாக இந்தப் பெண் டெலிலாவை அணுகி, அவளுக்கு 1100 வெள்ளிக்காசுகள் தருவதாகவும், அதற்குப் பதிலாக, அவனுக்கு எதில் பலவீனம் உள்ளது என்று தெரிந்து சொல்லும்படி கேட்டுக் கொள்கிறார்கள்; (மனைவி என்னும் பொறியை வைத்தே கணவனைப் பிடிக்கிறார்கள்; கணவனின் பலவீனம், மனைவியைத் தவிர வேறு யாருக்குமே தெரிய வாய்ப்பில்லை); சாம்சன் சல்லாபத்தில் ஈடுபடும்போதெல்லாம் மனைவி இந்த விஷயத்தை கேட்கிறாள்; அவன் சொல்லாமல் மழுப்புகிறான்; ஆனாலும் பொய்யாக சிலவற்றைச் சொல்கிறான்; "நான் தூங்கும்போது என்னை நீ, வில்லின் கயிற்றால் கட்டி விட்டால், அத்துடன் என்னால் எழுந்திருக்கவே முடியாது" என்று கூறுகிறான்; அப்படி கட்டிப்போட்டாள்; அவன் எழுந்து விட்டான்; அவள் பல வழிகளைக் கையாண்ட பின்னர், அவனே ஒருநாள் உண்மையைச் சொல்லிவிட்டான்: "என் முடியில் தான் என் உயிர் இருக்கிறது." 
சாம்சன் தலைமுடியை ஏழு பின்னல்களாகப் போட்டிருப்பான்; மனைவி டெலில்லா தன் வேலைக்காரனைக் கூப்பிட்டு அந்த ஏழு பின்னல்களையும் வெட்டிவிடச் சொல்கிறாள்; வெட்டிய முடியுடன் சான்சன்; தேவதையின் உத்தரவை மீறிவிட்டான்; உடனே தேவதை அவனைவிட்டுச் சென்றுவிட்டது;
தகவல் எதிரி பிலிஸ்டைன் வீரர்களுக்குப் போகிறது; வந்து கொத்தாக சாம்சனை கைது செய்து தூக்கிச் செல்கிறார்கள்; அவனின் கண்களை நோண்டி விட்டார்கள்; கண்தெரியவில்லை; கஸா சிறையில் அடைக்கிறார்கள்; கடினமாக மாவு அரைக்க விடுகிறார்கள்; பால் கடையும் செக்கை இழுக்க விடுகிறார்கள்;
பிலிஸ்டைனில் ஒரு கோயில் பண்டிகை; சாம்சனை காட்டிக் கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்லும் திருவிழா அது; சாம்சனையும் அங்கு இழுத்து வர வேண்டும்; அதை பார்ப்பதற்கு ஏகப்பட்ட கூட்டம்; கூரைகளில் ஏறி நிற்கிறார்கள்; அவன் கோயிலுக்குள் இழுத்தவரப்படுகிறான்; இவ்வளவு நாள் ஆகிவிட்டதால், அவனுக்கு மறுபடியும் மயிர் முளைத்துவிட்டது; ஒரு தூணில் கட்டுகிறார்கள்;
கடவுளின் சாம்சன் வேண்டுகிறான்; "கடவுளே என்னை மன்னித்துவிடு! என்மீது இரக்கம் காட்டு கடவுளே! இப்போது ஒரே ஒருமுறை மட்டும் அந்த பலமான சக்தியை எனக்குக் கொடு; அதைக் கொண்டு, எனது கண்களைப் பறித்துக் கொண்ட எனது எதிரிகளை துவச்சம் செய்து கொள்கிறேன்; அதற்குப்பின் எனக்கு எந்தப் பலமும் வேண்டும்;"
கோபக் கனலுடன், தான் கட்டியிருக்கும் தூணை இழுக்கிறான்; ஒவ்வொரு கையும் ஒரு தூணை இழுக்க அது பெயர்ந்து விழுகிறது;
"இந்த பிலிஸ்டைன் எதிரிகளுடன் சேர்ந்தே நானும் சாகிறேன்" கத்துகிறான்;
அவனும் இறந்து விட்டான்; அவன் உடலை அவனின் வீட்டார் எடுத்துக் கொண்டு வந்து அவனின் தகப்பன் மனோவாவின் கல்லறைக்கு அருகிலேயே புதைக்கிறார்கள்; டெல்சோரா மலையில் இந்த கல்லறைகள் உள்ளன;
எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும், கடவுளின், தேவதையின் துணை இருந்தாலும், தன் ரகசியத்தை தானே காப்பாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பிறரிடம் சொல்லக் கூடாது;
தான் பெரிய வீரன், தன்னை யாராலும் ஒன்றுமே செய்யமுடியாது என்று அகந்தையாகவும் இருக்கக் கூடாது; இருந்தால், இந்த சோகம்தான் நிகழும்;
(இராவணன் கதை மாதிரியே இருக்கிறதே! அவரும் பலசாலி, கடவுள் (சிவனின்) அருள் பெற்றவர்; யாராலும் தோற்கடிக்க முடியாத மாவீரன், மகாசக்கரவர்த்தி; ஆனாலும் ஒரேயொரு பலவீனம்; அவரின் பலவீனம் அவரின் கால் பெருவிரலில் இருக்கிறது; அதை தெரிந்து கொண்டுதானே அவரைப் போரிலே கொல்ல முடிந்தது; அவரின் ஆட்கள்தானே அதை காட்டிக் கொடுத்திருக்க முடியும்?)
வீரனே ஆனாலும் கர்வத்தில் தன் பலவீனம் வெளிப்பட்டே தீரும்!
**


சனி, 16 மே, 2015

ஆசைக்கு துணைபோவான்!

"The Monk's Tale" is one of The Canterbury Tales by it author Geoffrey Chaucer: ஜெப்ரி சாசரின் கான்டர்பரி கதைகளில் ஒன்றுதான் இந்த "சாமியாரின் கதை." இது 1385ல் எழுதப்பட்ட கதை (சுமார் 600 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட பொக்கிஷம்);
விடிவெள்ளியின் சோகக் கதையைச் சொல்லிமுடித்து, அடுத்த சோகக் கதைக்கு வருகிறார். . . .. . 
அடுத்து,ஆடம் என்னும் ஆதாம் (Adam) கதையை கேட்டிருப்பீர்கள்!
இந்த உலகம் உருவானபோது, எந்தப் பாவமும் செய்யாத ஒரே ஒருவன் இந்த ஆடம் (ஆதாம்) மட்டுமே!
கடவுள் இந்த உலகத்தை படைக்கிறார்; அங்கு ஒரு அழகான தோட்டத்தை படைக்கிறார்; அதுதான் ஏடன் தோட்டம் - Eden Garden. அதுதான் சொர்க்கம்; நிறைய மரங்கள்; நிறைய பூக்கள்; நிறைய பழங்கள்; இத்தனைக்கும் நடுவே ஒரேயொரு மரம் தனியே நிற்கிறது; அதுதான் மனிதனுக்கு "நல்லது எது, கெட்டது எது என்று காட்டிக்கொடுக்கும் குணத்தை தரும் பழங்களைக் கொண்ட மரம்; சிலர் ஆப்பிள் மரம் என்கின்றனர்; ஆதாமை தனியே கூப்பிட்ட கடவுள், "நீ, இங்குள்ள எல்லா மரத்தின் பழங்களையும் சாப்பிடலாம்; ஆனால் குறிப்பாக இந்த மரத்தின் பழத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும் சாப்பிடாதே; இது என் உத்தரவு" என்று கண்டிப்புடன் கூறுகிறார்;
"You may eat fruits from any tree you like, but not from the Tree of Knowledge. If you do not obey, you shall die."
கடவுள் சொல்வதை "முதல் மனிதன்" கேட்கவில்லை; விதி;
அந்த ஏடன் நந்தவனத்தில் பல விலங்குகள்; அதில் பாம்பும் ஒன்று; ஆதாமுக்கு பேச்சுத் துணைக்கு ஏவாள் என்ற பெண்ணை, அவன் எலும்பிலிருந்தே படைத்து துணைக்கு கொடுத்துவிட்டுப் போனார்; இருவருமே எந்த ஆசையும் இல்லாமல் சுற்றித் திரிகின்றனர்;
அந்தப் பாம்பு, ஏவாள் பெண்ணிடம் வந்து, இந்த மரத்தின் பழத்தை உண்டால், நீ புத்திசாலி ஆகிவிடுவாய்; கடவுளைப் போலவே புத்திசாலி; ஆசை மனிதனை விடுவதில்லை; ஆதாமை கட்டாயப்படுத்தி இருவரும் பழத்தை உண்கின்றனர்; கடவுள் திரும்பி வந்து பார்க்கிறார். இருவரும் மரத்தில் ஒழிந்து கொள்கின்றனர்; இருவரும் நிர்வாணமாக இருப்பதால், அறிவுவந்து, வெட்கப்பட்டுள்ளனர்;
கடவுளுக்கு கோபம்! மனிதன் எப்போதுமே சொன்ன பேச்சை கேட்கமாட்டான்; ஆசைக்கு துணைபோவான்; இவன் அழிவதும் இந்த ஆசையால்தான்;
கோபத்தில் கடவுள் சாபமிடுகிறார். பாரடைஸ் என்னும் சொர்க்க வாழ்கையிலிருந்து மனிதனைத் தூக்கி எறிகிறார்.
கடவுள், பிரியத்துடன் படைத்த ஆதாம் என்னும் மனிதன், அன்றுமுதல் துன்பத்துக்கு ஆளாகி உழல்கிறான்.
அவனின் சோகக்கதை இதுதான்!

**

புரியாதவன் புரிந்து கொள்ளட்டும்!

"The Monk's Tale" is one of The Canterbury Tales by it author Geoffrey Chaucer: ஜெப்ரி சாசரின் கான்டர்பரி கதைகளில் ஒன்றுதான் இந்த "சாமியாரின் கதை." இது 1385ல் எழுதப்பட்ட கதை (சுமார் 600 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட பொக்கிஷம்);

சாமியார் சொல்கிறார், "யாருமே கண்ணை மூடிக்கொண்டு அதிர்ஷ்டத்தை நம்பிக் கொண்டிருக்க கூடாது; அதிர்ஷ்டம் என்பதே நிலையற்றதுதான்; அது மாறிக்கொண்டே இருக்கக் கூடியதுதான் என்பதையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்" என்று சாமியார் சொல்கிறார். "Not to trust in blind prosperity but be aware that Fortune is fickle and ever-changing."

Lucifer லூசிபரின் சோகக் கதையை கேளுங்கள்; இவர் சொர்க்கத்திலிருந்து நேரடியாக நரகத்தில் பொத்தென்று விழுந்தவர்;
லூசிபர் என்றால் லத்தீன் மொழியில் "விடிவெள்ளி." ஆம் வானத்தில் விடியற்காலையில் பிரகாசமாக வரும் ஒளி-நட்சத்திரம் இவரே; (Planet Venus); 'Bringer of Dawn.' 'கோழிகூவும்' நேரம் இவர் பிரகாசிப்பார்; இவரே Morning Star. விடிவதற்காக வரும் வெள்ளி நட்சத்திரம்; அதனால்தான் இவரை விடிவெள்ளி என்கின்றனர்.   இரவில் நட்சத்திரங்கள் எரிந்து கீழே விழுவதையும் பார்க்கிறோம்.

"விடியலின் மகனே... விடிவெள்ளியே! நீ எப்படி வானத்திலிருந்து கீழே விழுந்தாய்? நீ வானத்தில், உச்சத்தில், சொர்க்கத்தில் இருப்பதாகச் சொல்லிக் கொள்வாயே! எப்படி இந்த மண்ணில் விழுந்தாய்? உன் விதி அவ்வளவுதானா? உயர உயரப் போவேன் என்று சொல்லி, பாதாளத்தில் விழுந்துவிட்டாயே!

நீதானே "அட்டார் கடவுள்" (Attar God); சுக்கிராச்சாரியார்; (சுக்கிரன் கிரகம்);நீ தேவர்களுக்கு கடவுளாக ஆசைப்பட்டும் அது முடியாமல் போகவே, பாதாள உலகில் அசுரர்களுக்கு குருவாக வந்துவிட்டாயே? ஆகாயத்துக்கு ஜூபிடர் (குரு, வியாழன்) கடவுள் ஆகி விட்டாரே!
நீ சொல்லிக்கொள்வாய், "நான் உயர உயர போய் சொர்க்கத்தை அடைவேன்; கடவுளின் இருப்பிடத்தையும் தாண்டி என் இராஜாங்க குடையை அமைத்துக் கொள்வேன்; அதற்கு மேலுள்ள "ஸேப்பான்" மலை உச்சியில் என் இராஜாங்கம் நடக்கும்; நானே எல்லோரையும் விட உயரத்தில் இருப்பவன் ஆவேன்; என்று பெரும் பெருமை அடித்துக் கொள்வாயே!

"I will ascend to heaven; I will raise my throne aove the stars of God; I will sit on the mount of assembly on the heights of Zaphon; I will ascend to the tops of the clouds; I will make myself like the Most High;"

நீ திடீரென்று கீழே விழுந்து, அசுரர்களின் வாத்தியார் ஆகிவிட்டாய்! அவர்களுக்கு கெட்ட புத்தி சொல்லிக் கொடுக்கும் வாத்தியார் நீதானா? நீ வானத்திலிருந்து எரி நட்சத்திரமாக கருகி விழுவதைப் பார்ப்பவர்களுக்கு ஒரு பாடம்! வாழ்வு எப்போதும் ஒரே மாதிரி நிலைத்திருக்க முடியாது என்பதே உண்மை! எத்தனையோ சக்கரவர்த்திகள் மண்ணைக் கவ்வி இருக்கிறார்கள்! எத்தனையோ பிரமாண்ட இராஜாங்கங்கள் மண்ணோடு மண்ணாகிப் போயின! பாபிலோனியாவை ஆண்ட மன்னர்களின் புகழ் எவ்வளவு புகழ் பெற்றது தெரியுமா! என்ன கதியானது?

அதிர்ஷ்டம் நிலையானது இல்லை என்பதை மனிதன் புரிந்து கொண்டிருப்பான்! புரியாதவன் புரிந்து கொள்ளட்டும்!
**