ஞாயிறு, 17 ஜூலை, 2016

நையாயிகர்


நையாயிகர் (சித்தும் சடமும்)
இவர்கள் கௌதம மதவாதிகள்; இவர்களின் தத்துவம் மற்ற மதங்களின் தத்துவங்களிலிருந்து விலகி சொல்லப்பட்டுள்ளது;
இவர்களின் மதக் கொள்கைப்படி --
சித்தும், சடமும் ஆகிய இரண்டும் நித்தியப் பொருள் (அழியாத நிரந்தரப் பொருள்) என்ற கொள்கை உடையவர்கள்;
சடமாகிய இந்த உலகம் பீஜத்தினிலிருந்து தோற்றுவிக்கப்பட்டது என்றும், அதை தோற்றுவித்தது சித்துப் பொருள் என்றும், அவ்வாறு இந்த உலகம் தோன்றும் போது, பீஜம் ஒரே அணுவாகவே (ஏக அணுவாகவே) இருந்தது என்றும், பின்னர் அது இரண்டாக உடைந்து துவி அணுவாக (இரண்டு அணுவாக) பிளந்தது என்றும், பின்னர், அது திரி அணுவாக (மூன்று அணுக்களாக) பிரிந்து ஒரு வடிவம் கொண்ட பொருளாக ஆகி விட்டது என்றும் கூறுகின்றனர்;
இந்த உலகம், மறுபடியும், ஒடுங்கும் காலத்தில், அதேபோல, திரி அணுக்கள், துவி அணுக்களாகி, துவி அணுக்கள், ஏக அணுவாகி, ஒடுங்கி, பீஜமாய் நிற்கும் என்பர்;
எனவே அது அழியாத் தன்மை கொண்டது என்றும், நித்தியமாய் இருக்கிறது என்றும், வடிவம் கொண்டது என்றும், எனவே சித்தும் சடமும்  நித்தியம் என்றும், சித்தின்றி, சடம் காரியப் படாது என்றும், ஆன்மகோடிகள் என்னும் இந்த உலக உயிர்கள் எல்லாம் அந்த சித்துப் பொருளின் அம்சமே என்றும், இந்த சித்து சிறிய உயிர்களில் நிலைப்பதால், சிறிய அறிவும், சிறு தொழிலும் கொண்டு இயங்குகின்றன என்றும் கூறுகின்றனர்;
அதேபால், ஜகத்காரணமாகிய பெரிய சித்து முற்றான அறிவு கொண்டது என்றும், முற்றான தொழிலைச் செய்கிறது என்றும், கூறுகின்றனர்;
ஆன்மாக்கள், சரீரத்தோடு (உடலோடு) கூடி இருக்கும்போது, அஞ்ஞானம் உடையதாய் இருக்கிறது (ஞானம் இல்லாமல் இருக்கிறது) என்கின்றனர்; ஆனால் இந்த ஆன்மாக்கள், தன் இடையறாத முயற்சியால் ஞானத்தை அடையும்போது, அத்தகைய ஆன்மாக்கள், முழுமுதல் சித்தோடு சேர்ந்து, பேரானந்தத்தை அனுபவிக்கத் தொடங்கிறது என்றும் கூறுகின்றனர்;
(இதுதான் நையாயியர்களின் மதக் கொள்கை)
**


நீலி


பழையனூர் நீலி:
பழையனூர் என்று ஒரு ஊர்; அங்கு ஒரு வணிகர் இருக்கிறார்; அவருக்கு திருமணம் ஆகி மனைவியுடன் வாழ்ந்து வந்தார்; அந்த மனைவி சிலகாலம் வாழ்ந்து இறந்து விட்டார்; தான் இறந்தவுடன், தன் கணவர் மறுமணம் செய்ய மாட்டார் என்று நினைத்தாள்; ஆனால் அதற்கு மாறாக அந்த வணிகனோ மறுமணம் செய்து கொண்டு, அந்த இரண்டாவது மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான்;
இறந்த முதல் மனைவி, பேயாக அலைந்து பூமியில் திரிகிறாள்; அவளுக்குத் தன் கணவர் மீது கொடும் கோபம்! இறந்தவள், பேயாக திருவாலங்காட்டு பகுதியில் திரிகிறாள்;
ஒருநாள், அந்த வணிகன், வியாபார நோக்கமாக, அந்த காட்டுவழியில் வருகிறான்; அதை அந்த முதல் மனைவி பேய் தெரிந்து கொண்டு, ஒரு பெரிய நாடகத்தை நடத்தி வைக்கிறது;
அந்த முதல் மனைவி என்னும் பேய், அவள் கணவனின் இரண்டாவது மனைவியைப் போல வேடம் அணிந்து கொண்டு, அவனிடம் வருகிறது; அவ்வாறு வரும்போது, அவள் புடவையில், ஒரு கள்ளிக் கட்டையைப் பிள்ளையைப் போல சுருட்டி எடுத்துக் கொண்டு வருகிறது;
அந்த வணிகன், இரண்டாம் திருமணம் செய்யும்போது, ஜோதிடம் பார்த்திருக்கிறார்; அப்போதே, ஜோதிடர் சொல்லி உள்ளார், "உன் முதல் மனைவி இன்னும் மேல் உலகம் செல்லவில்லை; இங்கு பேயாகத் தான் அலைகிறாள்; அவளிடம் நீ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்று எச்சரித்துள்ளார்;
இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்தக் காட்டுவழியில், தன் இரண்டாம் மனைவி வருவதற்கு வழியே இல்லை; அப்படி இருக்கும்போது, தன் இரண்டாம் மனைவி எப்படி இங்கு வருவார் என்று சந்தேகம்! இந்தப் பெண் தன் முதல் மனைவிதான் என்றும், அவளே பேயாக வந்துள்ளார் என்றும் இவனுக்கு தெளிவாகத் தெரிந்து விட்டது;
அந்தப் பேயும், அவனுடன் பேசிக் கொண்டே வருகிறது; "என்னை ஏன் இப்படி காட்டில் விட்டுவிட்டுப் போகிறீர்கள்; இது நியாயமா' என்னை ஏன் ஒதுக்கி வைத்தீர்கள்; நான் உங்களின் இரண்டாம் மனைவி தானே! என்னை நீங்கள் ஆசையாகத் தானே திருமணம் செய்தீர்கள்; நமக்கு குழந்தையும் இருக்கிறதே! என்னையும் குழந்தையையும் ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று முறையிட்டுக் கொண்டே காட்டு வழியில் வருகிறது; இவனும் ஒப்புக்கு பேச்சுக் கொடுத்துக் கொண்டே வருகிறான்; காட்டைத் தாண்டி விட்டார்கள்; ஒருவழியாக காஞ்சிபுரம் வந்து விட்டது; இனிக் கவலையில்லை என அவன் நினைக்கிறான்;
காஞ்சீபுரத்தின் தெருவில் ஆலமரத்தடியில் கூடியிருந்த அம்பலத்தை நெருங்கி விட்டனர் இருவரும்; அவள் நேராக அங்கு அமர்ந்திருந்த பஞ்சாயத்து பெரியவர்களான வேளாளர்களிடம் முறையிடுகிறாள்;
அம்பலத்தில் இருந்த வேளாளர்கள், "பெண்ணே, நீ சொல்வதற்கு சாட்சி இருக்கிறதா?" என்று கேட்கின்றனர்;
"ஓ! இருக்கிறதே! என் இடுப்பில் உள்ள எங்கள் பிள்ளையை இறக்கி விடுகிறேன் பாருங்கள்! அது நேராக அவரிடம் செல்லும்! அதைக் கொண்டே நீங்கள் நம்பலாம்! நாங்கள் இருவரும் கணவன் மனைவி தான் என்றும், இந்த குழந்தை எங்கள் குழந்தைதான் என்பதையும்" என்று மிகப் பொருத்தமாக அந்தப் பேய்-பெண் கூறினாள்;
அவள், தன் இடுப்பில் இருந்து பிள்ளையை இறக்கி விடுகிறாள்; அதுவும், அவனை அப்பா என்று கூப்பிட்டுக் கொண்டு அவன்மீது பாய்கிறது;
அம்பலத்து வேளாளர்கள் இதை முழுவதும் நம்பி விட்டார்கள்; ஏதோ, கணவன் மனைவி சண்டையால், இந்த கணவன் இப்படி கோபமாகக் கூறுகிறான்; இவள், இவனின் மனைவிதான் என்று நம்புகிறார்கள்;
அவள், "என் மீது இவருக்கு இன்னும் கோபம் தீரவில்லை; இவருடன் இந்த பக்கத்து வீட்டின் அறைக்குள் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தால், இவர் சமாதானம் ஆகிவிடுவார்: எனவே அதற்கு அனுமதி வேண்டும்" என மிகப் பொருத்தமாக அந்த பேய் பெண் கேட்கிறாள்;
ஆனால், கணவனோ, இவள் ஒரு பேய்! இவளுடன் அந்த அறைக்குப் போனால் என்னைக் கொன்று விடுவாள்; இவள் சொல்வதை நீங்கள் நம்பாதீர்கள் என்று கெஞ்சுகிறான்;
ஆனாலும், அம்பலத்து வேளாளர்கள் "ஐயா, நாங்கள் உன் உயிருக்கு பிணையாக இருக்கிறோம்! நீ பயப்பட வேண்டாம்; அவளுடன் சென்று சமாதானமாக பேசி வா" என்று கட்டாயப் படுத்தி அனுப்பி விடுகிறார்கள்; ஜோதிடர் சொன்னபடி, அவன் கையில் எப்போது ஒரு மடக்கு கத்தி வைத்திருப்பான்; அவன் அதையும் தன்னுடன் எடுத்துச் செல்கிறான்;
ஆனால், அந்தப் பேய் பெண், "ஐயா, இவர் கத்தி வைத்திருக்கிறார்; அதை வாங்கி வைத்திக் கொள்ளுங்கள்; உங்கள் முன்பாகவே இவ்வளவு கோபமாகப் பேசுபவர்; தனியே அறைக்குள் போனால், இன்னும் அவருக்கு கோபம் அதிகமாகி, கத்தியைக் கொண்டு என்னை கொலையும் செய்வார்" என்று புலம்பினாள்;
அதையும் நம்பிய, அம்பலத்து வேளாளர்கள், அவனிடமிருந்து கத்தியை கட்டாயப்படுத்தி பறித்துக் கொண்டனர்;
இருவரும், அந்த தனிவீட்டின் அறைக்குள் செல்கின்றனர்;
வெகுநேரமாகியும் இருவரும் வரவில்லை; அம்பலத்து வேளாளர்கள் "இருவரும் சமாதானம் ஆகிவிட்டனர் போலும்! எனவே சிறிது நேரம் சந்தோஷமாக இருந்துவிட்டு வரட்டும் என விட்டு விட்டனர்;
அந்த பெண் பேய், வீட்டுக்குள் வந்தவுடன், கதவைச் சாத்தி விட்டது; அவன் கழுத்தை கடித்து ரத்தத்தை குடித்து அவன் உயிரைப் போக்கிவிட்டு மறைந்து விட்டது;
வெகுநேரமாகியும் கதவு திறக்காததால், சந்தேகமடைந்த வேளாளர்கள், கதவை உடைத்துப் பார்த்தனர்; அங்கு கணவன் ரத்த வெள்ளத்தில்; மனைவியைக் காணவில்லை;
வேளாளர்கள் மனம் பதறி விட்டது; நாம் எழுபது பேரும், அவன் உயிருக்கு பிணையாக இருந்திருக்கிறோம்; ஆனாலும் அவன் உயிர் போய்விட்டது; சொன்ன சொல் காப்பாற்ற முடியவில்லை; எனவே நாம் அனைவரும் தீக்குளித்து இறப்போம் எனக் கூறி தீ வளர்த்து அதில் புகுந்தனர்;
சத்தியத்தை காப்பாற்ற தீக்குளித்தனர்;
இந்தக் கதை, தொண்டை மண்டல சதகத்திலும், சேக்கிழார் புராணத்திலும் சொல்லப்பட்டுள்ளது;
**



நரகன் என்னும் நகராசுரன்

நரகன் என்னும் நகராசுரன்:
விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒரு அவதாரம் வராக அவதாரம்; இது விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமாகும்; வராகம் என்றால் பன்றி; பூமியைக் கடலுக்கு அடியில் எடுத்துச் சென்ற அசுரனான இரணியட்சனுடன், இந்த பன்றி வேடத்தில் கடலுக்கு அடியில் சென்று ஆயிரம் வருடம் போராடி அவனைக் கொன்று, பூமியை விஷ்ணு மீட்டார் என்பது ஐதீகம்;
விஷ்ணுவின் இந்த வராக அவதாரத்தில், விஷ்ணுவுக்கு பூமியில் பிறந்தவனே நரகன் என்னும் இந்த அசுரன்; இவன் ஆண்ட பகுதிக்குப் பெயர் பிராக்சோதிஷம்; இந்த நரகனின் வாகனம் சுப்பிரதீகம் என்னும் யானை; இவனின் புத்திரன் பகதத்தன்;
இந்த அரசுனான நரகன், மிகக் கொடுமைகள் செய்துள்ளான்; அதிதி என்பவனது கர்ண குண்டலங்களை பறித்துக் கொண்டான்; வருணனின் சத்திரத்தையும் கவர்ந்து கொண்டான்; இவைகளுடன் இந்திரன் இருக்கும் தேவலோகம் சென்று அவனின் சிம்மாசனத்தையும் அபகரித்துக் கொண்டான்;
இந்திரன் பயந்து ஓடி விஷ்ணுவிடம் முறையிடுகிறார்;
விஷ்ணு, இந்த அசுரன் நரகனையும், அவன் தமையன் முராசுரனையும் கொன்று விடுகிறார்; இந்த நரகன், ஏற்கனவே 16,000 கன்னியரை தேவலோகத்திலிருந்து சிறைப்பிடித்து அடைத்து வைத்துள்ளான்; அவர்கள் அனைவரையும் விஷ்ணு மீட்கிறார்; அவர்கள் கேட்டுக் கொண்டதால், அத்தனை கன்னியரையும் விஷ்ணுவே திருமணம் செய்து கொள்கிறார்;
இவ்வாறு நரகன் என்னும் நரக அசுரனைக் கொன்ற தினமே நரக சதூர்த்தி தினம் எனப்படும்;
**


பெண்ணே, ஆண் வேடமிட்டுத் திருமணம்!

நடிகர் வடிவேலு படத்தின் சினிமாக் கதை போலவே, இந்தோனேசியாவில் நடந்துள்ளது;
ஆணாக வேடமிட்டு திருமணம், ஒரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளார்; அந்தப் பெண், தன் பெயரை ஆண் பெயராக மாற்றிக் கொண்டு, திருமணம் செய்துள்ளார்;
ஒருமாதம் ஆகியும், அவர் அந்த மணப் பெண்ணுடன் உடலுறவுக்கு ஒப்புக் கொள்ளாமல் ஏமாற்றி வந்திருக்கிறார்; எனவே அந்த மணப் பெண் சந்தேகப்பட்டு, போலீஸில் புகார் கொடுத்துள்ளார்; குட்டு அம்பலமாகி விட்டது;
ஏன் இப்படிச் செய்தார் என்று தெரியவில்லை; ஆள்மாறாட்டம் செய்து ஒரு பெண்ணே, மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்வதால் இவருக்கு என்ன லாபம்? விளங்கவில்லையே!
நடிகர் வடிவேலுவின் சினிமாக் கதையில், ஒரு ஆண், பெண்ணாக வேடமிட்டு ஒரு பெண்ணைத் திருமணம் செய்வார்; அதில் ஒரு லாஜிக் இருந்தது!
**

வயது குறைந்த முதல்வர்

வயது குறைந்த முதல்வர்
இந்தியாவில் இப்போதுள்ள முதலமைச்சர்களில் மிகவும் இளமையான முதலமைச்சர் அருணாசல பிரதேச மாநிலத்தின் முதல்வர் “பெம கந்து” Pema Khandu. இவரின் இப்போதைய வயது 37; இவர் 2011-ல் சட்டமன்றத்துக்கு எம்எல்ஏ-வாகத் தேர்வானவர்; இவரின் தகப்பனார் இறந்ததால், அந்த இடத்துக்கு இவர் எம்எல்ஏ-வாக தேர்வானார்;
ஆனால் ஏற்கனவே இந்தியாவில், மிகக் குறைந்த வயதில் ஒரு முதல்வர் இருந்துள்ளார்; அவர் பாண்டிச்சேரியில் இருந்த ஹாசன் பரூக்; இவர் முதல்வராக வந்தபோது இவரின் வயது வெறும் 29 தான்; இவர் 1967ல் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்;
ஆக பாண்டிச்சேரியின் முன்னாள் முதல்வர் ஹாசன் பரூக் என்பவர்தான் மிக குறைந்த வயது முதல்வர்;
**

புதன், 6 ஜூலை, 2016

சர் மோனிர் வில்லியம்ஸ் (Sir Monier Williams)

சர் மோனிர் வில்லியம்ஸ் (Sir Monier Williams);
ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி (Oxford  University); இது இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு நகரில் உள்ளது; மிகப் பழைமையான யுனிவர்சிட்டிகளில் இதுவும் ஒன்று;
இந்த ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் சமஸ்கிருத புரபசராக இருந்தவர் சர் மோனிர் வில்லியம்ஸ் (Sir Monier Williams);
இவர் பம்பாயில்தான் பிறந்தவர்; இவரின் தந்தை, பாம்பே பிரசிடென்சியில் சர்வேயர்-ஜெனரலாக வேலையில் இருந்தார்; எனவே மோனிர் வில்லியம்ஸ் பம்பாயில்தான் பிறந்தார்; பள்ளி படிப்புக்காக இங்கிலாந்து சென்று படித்தவர்; அங்கு பள்ளி படிப்புகளை முடித்து, பின்னர் ஆக்ஸ்போர்டில் படித்தார்; இவருக்கு திருமணம் ஆகி ஏழு குழந்தைகள் இருந்தனர்;
ஆக்ஸ்போர்டில் அப்போது மேக்ஸ் முல்லர் இருக்கிறார்; இந்தியாவைப் பற்றியும் இந்து கலாச்சாரத்தை பற்றியும், சமஸ்கிருத காவியங்களைப் பற்றியும், இந்த மோனிர் வில்லியம்ஸ்க்கு அவ்வளவாக தெரியாது என்று அவரை புரபசராக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்தார்; ஆனால் மேக்ஸ் முல்லர் தான் இந்தியாவுக்கே வந்ததில்லையாம்; மோனிர் வில்லியம்ஸ் இங்கு பம்பாயில்தான் பிறந்தவர், வாழ்ந்தவர்; ஆனாலும், ஒருவழியாக மோனிர் வில்லியம்ஸை சமஸ்கிருத புரபசராக ஆக்ஸ்போர்டு பல்கலை நியமித்து விட்டது;
மோனிர் வில்லியம்ஸ் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து (1875 களில்) இந்தியாவிலிருந்து மன்னர்களை சந்தித்து நிதி உதவியும் பெற்று சமஸ்கிருத ஆராய்ச்சிக்கு இந்த யுனிவர்சிட்டியை பயன்படுத்தினார்; இந்தியன் சிவில் சர்வீஸ் பயிற்சியும் இங்குதான் நடந்ததாம்; இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 வரை இந்த ஆராய்ச்சி தொடர்ந்ததாம்;
மோனிர் வில்லியம்ஸ் இந்து மத தத்துவத்தை தெளிவாக அறிந்தவர்; அத்வைத வேதாந்தமே சிறந்தது எனக் கருதினார்;
இவர் சமஸ்கிருத-ஆங்கில அகராதியை எழுதியவர்; அதை 1872ல் வெளியிட்டவர்;
இவர் மகாகவி காளிதாசனின் “விக்கிரமோர்வசி” சம்ஸ்கிருத நூலையும், “சாகுந்தலா” சம்ஸ்கிருத நூலையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டவர்; (1853ல்); இன்னும் பல பல இந்து தத்துவார்த்த நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகறிய அளித்தவர்;
ஒரு வரியில் சொல்வதென்றால் இந்தியராக வாழ்ந்திருக்கிறார்....


Song of the Lord


பகவத் கீதை
பகவானின் கீதம் (Song of the Lord).
இந்த கீதம் 700 சுலோகங்களால் ஆனது;
சுலோகம் என்பது பல வரிகள் கொண்ட ஒரு பாடல் தொகுப்பு;
இது மகாபாரதக் கதைக்குள் சொல்லப்பட்டுள்ளது;
இதை இடைச் செருகல் என்றும் சொல்வர்;
இடைச் செருகலோ, ஆதி உருவாக்கமோ, அதிலுள்ள விஷயமே முக்கியம் என்பதால், எப்போது சொல்லி இருந்தால் என்ன?
மகாபாரதக் கதை சுமார் 5000 வருடங்களுக்கு முந்தியது; அது கிட்டத்தட்ட துவாபர யுகம் முடிந்து கலியுகம் தோன்றிய போது, வரப்போகும் அல்லது வந்துவிட்ட, இந்த பொல்லாத கலியுகத்தில் எப்படி மனிதன் வாழ வேண்டும் அல்லது வாழ்வை ஏற்றுக் கொள்ள வேண்டும் என பகவான் ஸ்ரீகிருஷ்ணன் சொன்ன கீதமே இந்த பகவத் கீதை.
மகா பாரதக் கதையில் அத்தியாயம் 25 லிருந்து 42 வரை உள்ள அத்தியாயங்கள் இந்த பகவத் கீதை;
கீதையில் தர்மத்தையும், ஞானத்தையும், பக்தியையும், யோகத்தையும், கர்மத்தையும், கொண்டு மனிதன் மோட்சத்தை அடையும் வழியைக் கூறுகிறார் ஸ்ரீகிருஷ்ணன்;
இந்த மனித உடலுக்குள் வாழும் ஆத்மா என்ற விஷயத்துக்கும், இந்த பிரபஞ்சம் முழுமையும் ஆட்கொண்ட பிரம்மம் என்ற விஷயத்துக்கும் இடையே உள்ள தொடர்பே வாழ்வு;
இந்த மனித ஆத்மா, வாழ்ந்து தெளிவு பெற்று, பேராத்மா என்னும் பிரம்மத்தை, இறைநிலையை அடைய தவிக்கும்; அதை நோக்கிய பயணமே இந்த பிரபஞ்ச நகர்வும் வாழ்வும்; இதை அடைவதைத்தான். பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பல வழிகளில் அடைய முடியும் என்பதை கீதை மூலம் உணர்த்துகிறான்; மகா பாரதக் கதையும், கதையின் பாத்திரங்களும், அவைகளின் குணங்களும், சந்தேகங்களும், தெளிவுகளும், அவரவர் கர்மாக்களும், பக்திகளும், ஞானமும், தர்மமும் இத்தகைய செயல்களின் விளைவுகளும் என்று ஏகப்பட்ட விஷயங்களுடன் இந்த மானிட ஆத்மா, இறைநிலையின் உள்ள பிரம்மத்தை அடைய வழி சொல்லப்படுகிறது;