வெள்ளி, 15 மே, 2015

"இனி உன்னை எங்கும் அனுப்பமாட்டேன் மகளே!"

மன்னர் ஆலா போர்முனையிலிருந்து திரும்பி நாட்டுக்கு வந்துவிட்டார். தன் கோட்டைக்கு வருகிறார். தன் மனைவியையும் புதிதாகப் பிறந்த மகனையும் தேடுகிறார். எங்கே அவர்கள்? இதைக்கேட்ட பாதுகாவலன் இதயம் உறைகிறது! இவன் உடனே மன்னர் எழுதியிருந்த கடிதத்தை காண்பிக்கிறான். "பிரபுவே! நீங்கள் கடிதத்தில் ஆணையிட்டிருந்தபடி நான் அவர்களை கொன்றுவிட்டேன்." என்று கூறுகிறான்.

கடித்தை எடுத்துச் சென்ற வீரனிடம் முழுமையான விசாரனை.... என்ன நடந்தது என்று தெரிந்துவிட்டது மன்னருக்கு. தன் தாயே தவறு செய்திருக்கிறாள். தாயே ஆனாலும் இராஜதுரோகத்துக்கு மரண தண்டனையே தீர்ப்பு. தீர்ப்பு நிறைவேற்றப்பட்டது. தாய் ட்னகில்டு கதை முடிந்தது.

மன்னர் சோகத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். யாரும்அவருக்கு ஆறுதல் சொல்ல முடியாத சோகம்! எந்த நாவும் விளக்க முடியாத சோகமும் அதுவே! No tongue may describe the grief that King Alla felt for his wife and child. மனைவியையும் ஆசை மகனையும் நினைத்து நினைத்து உருகுகிறார் மன்னர்.

மனைவி கான்டன்ஸ் உப்புக்கடலில் மிதந்து . .. .  மிதந்து . .. ..  ஒரு கரையில் ஒதுங்கிவிட்டாள். அங்கு ஒரு அரண்மனை கோட்டை. எந்த ஊர் எந்த நாடு என்று பெயர் தெரியவில்லை. காற்று அடித்து சேர்த்த இடம். அவளும் மகனும் படகை விட்டு மணலில் இறங்குகிறார்கள். ஓ! கடவுளே! மறுபடியும் காட்டுவாசிகள் ஊரா? அக்கம் பக்கத்தில் உள்ள அனைவரும் வந்து சேர்ந்து விட்டார்கள். வேடிக்கை பார்க்கிறார்கள். பெண்ணும் குழந்தையும் தனியே படகில்! ஆச்சரியம்! பொழுது இருட்டி விட்டது! பண்ணைவீட்டு கணக்கப்பிள்ளை வருகிறார். அவனுடன் துரதிஷ்டமும் சேர்ந்தே வருகிறது. அதிகாரத்துடன் வந்தவன் விசாரனை என்ற பெயரில் படகில் ஏறிக் கொள்கிறான். சோதனை செய்ய வேண்டுமாம். இருட்டை பயன்படுத்தி அவளை நெருங்குகிறான். குழந்தை அழுகிறது. தப்பித்தாள். அவள் அழுகிறாள்..... மேரி மாதா! உதவியை அனுப்புகிறாள் மேரி மாதா! கணக்கப்பிள்ளை இருட்டில் படகிலிருந்து தட்டுத்தடுமாறி தவறி தண்ணீரில் விழுந்து விட்டான்.

மறுபடியும் படகு உப்புக்கடலில் மிதக்கிறது. வடக்கு காற்று வீசுகிறது. படகு வடக்கே போகிறது. மேற்கே காற்று. இப்போது மேற்கே பயணம். சிலநேரம் கிழக்கே காற்று.... கிழக்கே .... எந்த திசை போகவில்லை? எல்லாத் திசையும் போகிறது..... ஏசு கிறிஸ்துவின் தாய் மேரி மாதா எது சரியான இடம் என நினைக்கிறாரோ அங்கு கொண்டு செலுத்துகிறார் படகை. காற்று வெறும் திசைமாற்றி மட்டுமே!
**
இளவரசி கான்டன்ஸ், தான் பிறந்த ரோம் நகரில் அவளின் தந்தை ரோமானியச் சக்கரவர்த்தி. தன் மகளை ஆசையுடன் சிரியா மன்னரான சுல்தானுக்கு மனைவியாக அனுப்பி வைத்தார். என்னவாயிற்று மகளுக்கு? தேடுவார்தானே! சிரியாவுக்கும் ரோமுக்கும் கடிதங்களை பறந்து கொண்டிருந்தன. ரோமானிய கப்பல் சென்ற சிரியா நாட்டில், எல்லா ரோமானிய கிறிஸ்தவர்களும் வெட்டிக் கொல்லப்பட்டனர் என்றும், தன் மகளுக்கு சுல்தானின் தாய் வஞ்சகம் செய்துவிட்டார் என்றும் கடிதங்கள் கூறுகின்றன. பலிவாங்க, ரோமானிய சக்கரவர்த்தி தன் வீரர்களை சிரியாவுக்கு அனுப்பிவிட்டார். சென்றவர்கள் சிரியா நாட்டை துவச்சம் செய்துவிட்டனர். சக்கரவர்த்திக்கு துரோகமா? ம்.....

இளவரசி கான்டன்ஸ் உடைந்த படகில் உப்புக் கடலில் மகனுடன். அவள் ரோம் நாட்டைவிட்டுப் பிரிந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டனவாம். அவளை அந்தப் பகுதி கவர்னர் பார்க்கிறார். அந்த பெண் யார் என்றே தெரியவில்லை. எதற்காக இந்த படகில் இவ்வளவு கஷ்டத்தில் இருக்கிறார் என்றும் தெரியவில்லை. அவளிடம் கேட்டால், அவள் பெயரைக்கூட சொல்ல மறுக்கிறாள். வேறு வழி தெரியாத கவர்னர் அவளையும் அவளின் மகனையும் அழைத்துக் கொண்டு தன் வீட்டுக்கு வருகிறார். அங்கு தன் மனைவியிடம் விஷயத்தை சொல்லி ஒப்படைக்கிறார். அவரின் மனைவி கான்ஸ்டன்ஸை அன்புடம் பார்த்துக் கொள்கிறார். அந்த வீட்டிலேயே அவளும் வேலை செய்து வருகிறாள்.
ரோமானியச் சக்கரவர்த்தியின் மகளான இளவரசி, இப்போது வீட்டுவேலைக்காரி..... காலத்தின் கொடுமை.

மன்னர் ஆலா, மனம் உடைந்து, மனைவியையும் மகனையும் காணாது தவித்துத் திரிகிறார். மனைவியின் நினைவாக ரோம் நாட்டுக்குச் சென்று போப் ஆண்டவரைப் பார்த்து மனம்விட்டு பாவ மன்னிப்பு கேட்டு, ஏசுகிறிஸ்துவின் பூரண மன்னிப்பை பெற வேண்டும் என நினைக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. ரோம் நாட்டுக்கு ஆலா மன்னர் வருகை அறிவிக்கப்படுகிறது. ரோம் நாட்டில் அங்குள்ள கவர்னர் இந்த ஏற்பாட்டை முன்னின்று நடத்தும்படி ரோமானிய சக்கரவர்த்தி உத்தரவு. இந்த கவர்னர்தான் அந்த வேலையை செய்ய வேண்டும். மற்றொரு நாட்டு மன்னர் வரும்போது இதெல்லாம் பாரம்பரிய பழக்க வழக்கமாம். ஆலா மன்னரை வரவேற்று மதிப்பளித்து தங்க வைக்கிறார்.  இரண்டு மூன்று நாட்கள் செல்கின்றன. ஆலா மன்னருக்கும் ரோம் கவர்னருக்கும் நட்பு ஏற்படுகிறது. ஆலா மன்னர், தான் ஒரு விருந்து கொடுப்பதாகவும் அதில் கவர்னரும் அவரின் உறவுகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.

மன்னர் ஆலாவின் விருந்து நடக்கிறது. அதற்கு கவர்னர் தன் மனைவி மக்களுடன், தன் வீட்டில் வேலைபார்க்கும் இந்த இளவரசி கான்டன்ஸின் இளம் மகனையும் அழைத்துச் செல்கிறார்.

விருந்து நடக்கிறது. மன்னர் ஆலா இந்த சிறுவனையே வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். கவர்னரிடம் கேட்கிறார், "யார் இந்தச் சிறுவன்? இவ்வளவு அழகாக இருக்கிறானே? என் மனம் அவனிடமே செல்கிறதே?" என்று கேட்கிறார். கவர்னரோ, "இவன் என் வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மகன். வேறு விபரம் எனக்குத் தெரியவில்லை மன்னரே! இவனுக்கு தாய் இருக்கிறாள்; ஆனால் எனக்குத் தெரிந்து, இவனுக்கு தகப்பன் யார் என்று தெரியவில்லை" என்று கூறுகிறார். அந்தச் சிறுவனோ அவனின் தாயைப் போலவே முகஜாடையில் இருக்கிறான். ஆலா மன்னர் இவனை பார்க்கிறார். ஏதோ மனம் சொல்கிறது. அமைதியாகிறார். சாப்பாட்டு மேஜையை விட்டு எழுந்துவிட்டார். வரண்டாவுக்கு வருகிறார். யோசனை.... யோசனை......  மண்டைக்குள் பாதாளக் குழி . .. . . இல்லையில்லை என் மனைவி உப்புக்கடலில் மூழ்கி இருப்பாள்! . . .. ... ..  இல்லையில்லை . .. . .. அவள் தப்பிப் பிழைத்திருப்பாள். . . .. . . ஒருவேளை இந்த நாட்டுக்கு கரை ஒதுங்கி இருந்திருந்தால் . . .. .. . .

விருந்து முடிகிறது....ஆலா மன்னர், கவர்னருடன் கவர்னரின் வீட்டுக்குச் செல்கிறார்.
மன்னர் ஆலா தன் வீட்டுக்கு வருகிறார் என்றதும், கவர்னர் பறபறக்கிறார்! வரவேற்பு நடைபெறுகிறது. அந்த வரவேற்பில் இளவரசி கான்டன்ஸூம் இருக்கிறார். மன்னர், கான்டன்ஸைப் பார்த்து விட்டார். ஓ! என் மனைவி கான்டன்ஸ் உயிருடன் இருக்கிறார்! மன்னரின் கன்னத்திலிருந்து கண்ணீர் வழிகிறது. அவளுக்கு பல சந்தேகம்! தன்னை விரட்டி விட்ட கணவன், இப்போது எப்படி அழமுடியும்? அவன் அன்பை ஏற்றுக் கொள்வதா, வேண்டாமா? தர்மசங்கடம்! மன்னருக்கே நிலைகொள்ளாநிலை! மயக்கியே விழும் நிலைக்கு போய்விட்டார். அழுதுகொண்டே தன் பழைய நிலையை எடுத்துச் சொல்கிறார். "எல்லாக் கடவுளும், தேவைகளும் என்மீது இரக்கம் கொள்வீர்களாக! நான் தவறு செய்யவில்லை! நான் உன்னை தவிக்கவிடவில்லை! அந்த எண்ணம் எனக்கு எப்போதும் வந்ததுமில்லை! நான் அவ்வாறு தவறு செய்திருந்தால், இப்போதே என்னை  நரகத்தில் போடட்டும்! கதறுகிறார்!
அவளுக்கும் இரக்கம் வந்துவிட்டது! மன்னரின் கண்ணீரில் உண்மை இருக்கத்தான் செய்யும்! அவள் போராட்டத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை! இந்த சோகத்தை எழுத்தில் எழுதமுடியாது!
முடிவாக, அவள் தன் கணவனை மன்னித்து ஏற்றுக் கொண்டாள். இருவரும் முத்தமிட்டுக் கொண்டார்கள். இந்த பூமி உருவானதிலிருந்து இதுவரை எவருமே இப்படி ஒரு அன்பை பொழிந்திருக்க முடியாது; அதுபோலவே இனி இந்த பூமி முடிவுக்கு வரும்வரை யாரும் இப்படியொரு அன்பை பகிர்ந்திருக்க போவதுமில்லை! Joy of heaven!

கான்டன்ஸ், தன் தகப்பன்தான் இந்த நாட்டின் மகாசக்கரவர்த்தி. ரோமானிய சக்கரவர்த்தியிடம் நீங்கள் மருமகனாக வந்து விருந்தில் கலந்து கொள்ள விருப்பமா என்று கேட்கிறாள். கணவனும் சம்மதிக்கிறான். தன் மகனையும் அழைத்து செல்கிறார்.
விருந்துக்குப் போகும்வரை, ரோமானிய சக்கரவர்த்திக்கு, ஆலா மன்னரின் மனைவிதான் தன் மகள் என்று தெரியாது. இளவரசி கான்டன்ஸ் தன் தகப்பனாரான ரோமானிய சக்கரவர்த்தியை நேருக்கு நேர் பார்க்கிறாள். தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை! சக்கரவர்த்தியின் மகள், இப்படி அவள் வாழ்வில் இழுப்பட்டிருக்கு தேவையில்லை! விதி! கடவுளின் செயல்! எல்லாத் துயரமும் மனதில் தோன்றி மறைகிறது. அவளால் பொறுக்க முடியவில்லை! அப்பா!!!!! தந்தையின் காலில் விழுந்து கதறுகிறாள். "தந்தையே! நான்தான் உங்களின் சின்னஞ்சிறிய மகள் கான்ட்னஸ்.  "Father!' she cried. 'You have forgotten your young child Constance! I am your daughter whom you sent to Syria. It is I, who was put in the salt sea and left to die! Mercy, father! I beg you, please do not send me to any more heathen lands, but thank my lord here, instead, for his kindness.'
கணவருடன் இங்கிலாந்து சென்று அங்கு கணவன் , மகன் இவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறாள். சில வருடங்களில் கணவர் இறந்து விடுகிறார். ஆம். காலதேவன் தன் வசூலைச் செய்து கொண்டான்.
மறுபடியும் கான்டன்ஸ், தன் தந்தையின் ரோம் நாட்டுக்கே திரும்புகிறாள். தன் தந்தையின் காலில் விழுகிறாள். தந்தை ஆறுதல் சொல்லி தன்னுடனே வைத்துக் கொள்கிறார்.

"இனி உன்னை எங்கும் அனுப்பமாட்டேன் மகளே!"

புயலுக்குப்பின்னே அமைதி! சோகங்களுக்குப் பின்னும் மகிழ்ச்சி இருக்கத்தான் செய்யும். அவள் தன் இளமைகால சிநேகிதிகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறாள். இனி அவள் இந்த பூமியில் இருக்கும்வரை, கடவுள் அவளுக்கு துன்பத்தை கொடுக்க மாட்டான் என்றே நம்புவோம். ஆமென்!


 **

புதன், 13 மே, 2015

"போய்வருகிறேன், இரக்கமில்லாத கணவனே!"


இளவரசி கான்ஸ்டன்ஸின் அடுத்த திருமணம் . . .

நார்தம்பர்லாண்ட் காட்டுவாசி நாட்டின் மன்னர் ஆலாவுக்கும் இளவரசி என்று யாருக்கும் தெரியாத கான்ஸ்டன்ஸூக்கும் திருமணம்!

மன்னனின் தாய் "டன்கில்டு." இவளுக்கு மட்டும் பொறாமையாம்! அவளுக்கு இதயமே இரண்டாக வெடித்துவிடும் அளவுக்கு இருந்ததாம். ஏன்? யாரோ ஒரு அனாதைப் பெண்ணை, தன் மகனான மன்னன், இவ்வாறு திடீரென்று திருமணம் செய்து அவளை ராணியாக்குவது எந்தத் தாய்க்குத்தான் சம்மதமாக இருக்கும்?
அவர்களின் திருமணம் நடக்கிறது. இதைப் பற்றி ஆச்சரியமாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. மன்னர் வீட்டுக் கல்யாணம். "ஒரு ஊரில் ஒரு ராஜா" என்ற கதை போலத்தான் இந்த திருமணம் எல்லாவித சிறப்புகளுடனும் நடந்தது என்று சொன்னாலே போதுமானதுதான்.

திருமணத்துக்குப்பின் என்ன நடந்திருக்கும்? எல்லோரையும் போலத்தான்! அவர்கள் விருந்து சாப்பிட்டார்கள்; குடித்தார்கள்; டான்ஸ் ஆடினார்கள்; சந்தோசத்தின் உச்சிக்குப் போனார்கள்; எல்லோரையும் போலவே, இருவரும் படுக்கை அறைக்குப் போனார்கள்; மனைவிகள் எப்போதும் தேவதைகளே! இரவில் சத்தமில்லாமல், எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் படுத்துக் கிடக்க வேண்டும்; தேவைகளை விருப்பதுடன் பூர்த்திசெய்யும் கடமையும் உள்ளது அவளுக்கு; ஏனென்றால் அவன் மோதிரம் மாற்றிக் கொண்ட (தாலி கட்டிய) கணவனாம்!

மன்னர் வாரிசாக ஒரு குழந்தையை கொடுத்துவிட்டார். ஆம் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள்! ஆனாலும் அவளை ஒருவித பாதுகாப்பிலேயே வைத்திருக்கிறார். மன்னர், அவரின் எதிரியான ஸ்காட்லாண்ட் நாட்டுடன் சண்டைக்குப் போகவேண்டி உள்ளது. எனவே தன் மனைவியை ஒரு பிஷப் மற்றும் ஒரு போர்வீரனின் தனிப் பாதுகாப்பில் விட்டுச் செல்கிறார். அவளோ நிறைமாதக் கர்ப்பிணி! எப்போது வேண்டுமானாலும் பிரசவம் நடக்கலாம்!

நேரம் வந்துவிட்டது. மகனும் பிறந்துவிட்டான். அவனுக்கு "மாரைஸ்" என்று பெயர் சூட்டியும் விட்டாள். துணைக்கு காவலுக்கு இருந்த போர்வீரன், மன்னருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்த இந்தச் செய்தியை கடிதமாக எழுதி ஆள் மூலம் அனுப்புகிறான். மகிழ்ச்சியான செய்திதானே! அந்த கடிதத்தை எடுத்துச் செல்பவன், அதை மன்னரின் தாயிடம் கூறிவிட்டுப் பின்னர் பிரயாணத்தை தொடரலாமே என்று எண்ணி அந்த அரண்மனைக்குச் செல்கிறான். ஏதும் பரிசு கிடைக்கும் என நினைத்திருப்பானோ என்னவோ! அப்பத்தாவுக்கு வசதியாகப் போய்விட்டது. ஏற்கனவே மருமகள்மீது வேப்பங்காயாக இருப்பவள்! கடிதம் கொண்டு வந்தவனுக்கு ஒயின் என்னும் மதுவைக் கொடுத்து உபசரித்தாள். அவனும் போதையில் அயர்ந்து தூங்கிவிட்டான். அந்த நேரத்தைப் பயன்படுத்தி, அவன் கொண்டுவந்த கடிதத்தை எடுத்து வைத்துக் கொண்டு, இவள் வேறு ஒரு கடிதத்தை அவன் சட்டைப் பைக்குள் திணித்துவிட்டாள். எழுந்தவன், அந்தக் கடிதத்தை கொண்டு வந்து, போர் முனையில் இருக்கும் மன்னர் ஆலாவுக்கு கொடுக்கிறான்.

மன்னர் கடிதத்தை வாங்கிப் படிக்கிறார். முகம் இறுகிவிட்டது. பக்கத்தில் இருந்தவர்களுக்கு தெரியக் கூடாது என்று தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டார். இவர் கைப்பட ஒரு பதில் கடிதத்தை தயாரிக்கிறார். அதே வேலைக்காரனிடம் கொடுத்து அனுப்புகிறார்.

வந்த கடித்ததில் இருந்தது இதுதான், "மன்னரான உங்களுக்கு உங்கள் மனைவி மூலம், ஒரு கொடுரமான அரக்கன் குழந்தையாகப் பிறந்துள்ளது. அது எங்களுக்கெல்லாம் வருத்தமாகவே இருக்கிறது. அந்த குழந்தையை நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கடிதம்.
மன்னரின் பதில் கடிதமோ, "கடவுள் கொடுத்ததை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். எனவே நல்லவிதமாகப் பார்த்துக் கொள்ளவும், நான் விரைவில் வருகிறேன்." இது பதில் கடிதம்.

ஆனால், பதில் கடிதத்தை மன்னரிடமிருந்து பெற்றுச் சென்றவன், நேராக மன்னரின் தாயின் அரண்மனைக்குப் போய் சேர்கிறான். ஒயின் குடிக்க ஆசை! அதேபோல்  மது போதையில் கிடக்கும்போது, அவள் அந்த பதில் கடிதத்தை எடுத்துக் கொண்டு, வேறு ஒரு கடிதத்தை வைத்து விடுகிறாள்.  அதில், "இந்த பேய்க் குழந்தையும், அவளின் தாயும், நான் வரும்வரை அங்கு இருக்கக் கூடாது. அவர்கள் இருவரையும் கொன்றுவிடு; இல்லையென்றால் நான் வந்து உன்னைக் கொல்வேன். இது என் முடிவான உத்தரவு." இப்படி ஒரு கடிதத்தை மன்னரின் தாய் தயாரித்து வீரன் மடியில் கட்டிவிட்டாள். ஓ! சூனியக்காரியே! உன் உடல் மட்டுமே இந்த பூமியில் நடமாடுகிறது, ஆனால் உன் ஆன்மாவோ எப்போதும் நரகத்தின் சிந்தனையாகவே இருக்கிறதே? வெட்கக்கேடு!
போன கடிதமும், வந்த கடிதமும் திருடப்பட்டு போலியான வேறு ஒரு கடிதம் நுழைக்கப்பட்டது! இளவரசியின் பாதுகாவலன் மன்னரின் கடிதத்தைப் படிக்கிறான்."என் மனைவியையும் மகனையும் கொல்லவில்லை என்றால், உன்னைக் கொல்வேன்" என்று எழுதப்பட்டுள்ளது. காவலாளியே ஆனாலும் அவன் மனம் இரக்கம் கொண்டதே! மனித மனதுக்கு பதவி தேவையில்லை! நல்ல இதயம் மட்டுமே போதுமே! இளவரசியையும் அவளின் அழகிய மகனையும் இன்னும் மூன்று நாட்களில் இங்கிருந்து வெளியேற்றி விடுவது என்று தீர்மானித்தான். கொன்றுவிட்டதாக மன்னரிடம் பொய் சொல்லி விடலாம். ஒரு படகை ஏற்பாடு செய்தான். அது அவள் இந்த தீவுக்கு வந்தபோது இருந்த பழைய படகுதான். அதில் இருவரையும் ஏற்றிவிட்டான். "மறுபடியும் இந்தப் பக்கம் வந்துவிடாதீர்கள்" என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.

ஓ! கான்டன்ஸ் இளவரசியே! உன் கனவுகள் எல்லாம் ஏக்கங்களாகவே உள்ளனவே! உன் முயற்சிகள் எல்லாம் பயங்கரத்திலேயே முடிகிறதே! கிறிஸ்து தேவனே! கடவுளே! என்று பாதுகாவலன் வேண்டுகிறான். "மன்னர் ஏன் அப்படி ஒரு பதில் கடிதத்தை எழுத வேண்டும்? நீங்களும் உங்கள் குழந்தையும் அப்படி என்ன பாவம் செய்தீர்கள்? உங்களுக்கு ஏன் இப்படி ஒரு இக்கட்டை கொடுக்கிறான் கடவுள்? ஒன்றும் அறியாதவர்களுக்கு துன்பத்தையும், மோசமானவர்களுக்கு மகிழ்ச்சியையும் வளமான வாழ்வையும் கொடுப்பது எதனால்? ஏன் அப்படிச் செய்கிறாய் கடவுளே! உன் செய்கையை புரிந்து கொள்ள முடியவில்லையே! 
தாயும் மகனும் தனியே அழுகிறார்கள்! 
மன்னரின் பதில் கடிதத்தை நினைத்து நினைத்து பாதுகாவலன் அழுகிறான். "எனக்கு வாழ்வு கிடைத்தாலும், இறப்பு வந்தாலும் கவலையில்லை இளவரசியே! எப்படியும் உங்களைக் காப்பாற்றியே தீருவேன்."

படகு உப்புக் கடலில் மிதக்கிறது. நான்கு நாட்கள் ஓடிவிட்டன. தாயும் மகனும் கடவுளின் விருப்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். அவளுக்கு இரத்தம் சுண்டிவிட்டது. கடவுளிடம் மண்டியிடுகிறாள். "கடவுளே உங்கள் விருப்பம் எதுவோ அதை ஏற்கிறோம். மன்னரே விரும்பி என்னை ஏற்றார். இப்போது அவரே என்னை வெறுத்து விரட்டி விட்டார். இப்பொது இந்த உப்புக்கடலில். எதற்காக இது நடத்தப்படுகிறது என்பது மட்டும் எனக்குத் தெரியவில்லை கடவுளே!"

கைக்குழந்தை அழுகிறது."மகனே! நான் உனக்கு துன்பம் செய்யமாட்டேன், துரோகமும் செய்யமாட்டேன்."  தன் தலையில் கட்டியிருந்த துணியை அவிழ்த்து, மகனின் முகத்தை துடைக்கிறாள். சோகத்தின் உச்சம். மகனுக்கு தாலாட்டுப் பாடுகிறாள்......... அவளின் கண்கள் பனித்து மேல்நோக்கி சொர்க்கத்தை பார்த்துக் கொண்டே இருக்கிறது.

"தாயே! மேரி அன்னையே! ஆம் ஒரு பெண்ணின் தவறால்தான் இந்த மனிதவர்க்கம் அழிகிறது. அந்த மனித வர்க்கத்துக்காகத்தான் உன் மகன் ஏசு கிறிஸ்து சிலுவையில் ஆணியால் அடிக்கப்பட்டு பிராயசித்தம் தேடினார். நீ, உன் மகன் இறக்கும்போது நேரில் அதைப் பார்த்துக் கொண்டு தானே இருந்தாய்? அது உனக்கு எவ்வளவு துன்பத்தையும் வலியையும் கொடுத்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை! அந்த வலியை எப்படி உன் மகன் பொறுத்துக் கொண்டிருந்தார்? நானும் என் குழந்தையும் ஒரு நம்பிக்கையில்தான் வாழ்கிறோம். என் குழந்தை இந்த வயதில் என்ன தவறு செய்திருக்கமுடியும்?"
தன் பிஞ்சு மகனைப் பார்த்து "ஒரு தவறும் செய்திருக்கவே முடியாத உன்னை, உன் தகப்பன் கொல்ல நினைத்த காரணம் என்ன?"  புலம்புகிறாள்.........

உப்புக் கடலில் மிதந்து வந்த வழியை திரும்பி பார்க்கிறாள். 
வாழ்ந்த நிலம் மறைகிறது....... 
"போய்வருகிறேன், இரக்கமில்லாத கணவனே!"


**

செவ்வாய், 12 மே, 2015

இளவரசி கான்ட்ஸ்டன்ஸ் - ஏசியான் கடலில்...

இளவரசி கான்ட்ஸ்டன்ஸ் - ஏசியான் கடலில்...

Days and years passed. Years and days! இளவரசி கான்ட்ஸ்டன்ஸ் ஏசியான் கடலில் கப்பலில் மிதந்து கொண்டிருக்கிறார். ஒருநாள் அல்ல, இரண்டு நாள் அல்ல! நாட்களாக.... வருடங்களாக.... கரை தெரியாப் பயணம்! மரணம் துரத்தும் பயணம்... அவளுக்கே தெரியவில்லை ... அவள் பிழைப்பாளா மாட்டாளா என்று! . .. . சந்தேகமே!

உங்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கும். ஏன் அந்த சிரியா நாட்டு பெரும் விருந்தில் இவளைக் கொல்லவில்லை என்று நீங்கள் கேட்கலாம். யார் இவளைக் காப்பாற்றி இருப்பார்கள்? பல கேள்விகள் உங்கள் மனதில் எழும். பதில் தெரியவில்லை. யார் சிங்கத்தின் வாயிலிருந்து டேனியலைக் காப்பாற்றினார் என்று உங்களுக்குத் தெரியுமா? அதுபோலத்தான் இதுவும்.
(அது என்ன டேனியலும் சிங்கமும்? இது பைபிளில் உள்ள கதை. பெர்சியா நாட்டை ஆண்ட சக்கரவர்த்தியான டேரியஸ், ஒருநாள் நாட்டு மக்களுக்கு ஒரு பெரிய உத்தரவு போட்டார். " இன்று முதல் முப்பது நாட்களுக்கு யாரும் கடவுளையோ, மனிதனையோ வணங்கக் கூடாது; இந்த உத்தரவை மீறினால் தூக்குத் தண்டனை." எல்லோரும் அமைதியாக எந்தவித வழிபாடும் இல்லாமல் இருந்தனர்; ஆனால் கடவுளை தினந்தோறும் வழிபட்டுவரும் டேனியலால் அவ்வாறு சும்மா இருக்க முடியவில்லை; தண்டனை எப்படிப்பட்டது என்று தெரிந்தும், அவர் எப்போதும்போல கடவுளை வழிபட்டு வந்தார்; இது சக்கரவர்த்திக்கு தெரியவருகிறதுடேனியலை கூப்பிட்டு வரச் செய்கிறார்; தண்டனையாக சிங்கத்தின் குகைக்குள் போடும்படி உத்தரவு கொடுக்கிறார்; டேனியல் தினமும் ஜாவே என்ற கடவுளை ஒரு நாளில் மூன்று முறை பூஜை செய்து வணங்கும் பழக்கம் உள்ளவர்; சிங்கத்தின் குகையில் என்ன செய்வார்! டேனியலைத் தூக்கி சிங்கத்தின் குகைக்குள் போடுகிறார்கள்; மன்னர்  கோபமாக "உன் கடவுள் உன்னை வந்து காப்பாறுவாரா பார்க்கலாம்" என்று சவால் விடுகிறார்; "May your God, whom you serve continually, rescue you!" இதுபோதாதென்று, பெரிய கருங்கல்லை வைத்து குகையின் வாசலையும் மூடிவிட்டனர்; தப்பிக்கவும் முடியாது; மன்னருக்கு அன்று இரவு உறக்கமும் இல்லை; சாப்பாடும் இல்லை; கவலை தொற்றிக் கொள்கிறது; விடிந்தும் விடியாததுமாக மன்னர், சிங்கத்தின் குகையை நோக்கி ஓடி, அங்கு சத்தமான குரலில் டேனியல்! என்று கத்துகிறார்; உன்னை உன் கடவுள் இந்தச் சிங்கங்களிலிருந்து காப்பாற்றி விட்டாரா என்றும் சத்தமாக கேட்கிறார்; உள்ளே இருந்த டேனியல், "மன்னரே வாழ்க! நேற்று என் கடவுள் அவரின் தேவதையை அனுப்பி சிங்கங்களின் வாயைக் கட்டிப்போட்டுவிட்டார்; அதனால் நானும் தப்பித்தேன்" என்று கூறுகிறார்; உடனடியாக டேனியல் மீட்கப் பட்டார்; அவர் உடலில் ஒரு காயமும் இல்லை; இவரை காட்டிக் கொடுத்தவரை அதே குகைக்குள் தூக்கிப் போடுகிறார்கள்; சிறு நேரத்தில் எலும்புகள் மட்டுமே மிஞ்சுகிறது; மன்னர் அப்போது ஒரு உத்தரவு போடுகிறார்; இனி நாட்டு மக்கள் எல்லோரும் டேனியலின் கடவுளை வணங்க வேண்டும்" என்று உத்தரவு. எல்லோருக்கும் சந்தேகம் டேனியல் சிங்கத்தின் வாயிலிலிருந்து எப்படி தப்பித்தார்; உண்மையில் கடவுளின் தேவதை வந்து காப்பாற்றி இருக்குமா? இன்னும் இதற்கு விடை கிடைக்கவில்லை.)

எந்தக் கடவுள் டேனியலை சிங்கத்தின் வாயிலிருந்து காப்பாற்றினாரோ, அவரே இந்த இளவரசி கான்ஸ்டான்ஸையும் காப்பாற்றினார் இவ்வளவு நாளும்!

சரி! சிரியா நாட்டு விருந்தில் இவள் கொலை செய்யப்படாமல் யாரோ ஒருவர் காப்பாற்றினார் என்றே வைத்துக் கொண்டாலும், இந்த உப்புக்கடலில் மூழ்காமல் யார் இவளை காப்பாற்றிக் கொண்டு வருவது? "திமிங்கிலத்தின் வாயிலிருந்து ஜோனாஸை காப்பாற்றியவரே, இவளையும் இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றி இருப்பார்!

(கடவுள் பேச்சை கேட்காமல் கடலில் போன ஜோனாவை, பெரும் புயலை ஏற்படுத்தி கப்பலைக் கவிழ்த்து, கடலில் மூழ்க இருந்த ஜோனாவை மட்டும் ஒரு பெரிய மீன் வந்து விழுங்கிச் சென்று மறுநாள் கரையில் துப்பியது; கடவுள் போகச் சொன்ன இடம் அதுதான்.)

இந்த மூன்று வருடங்களாக கான்டான்ஸுக்கு யார் உணவு கொடுத்திருப்பார்கள்? மூன்று வருடங்களாக..... யார் கொடுத்திருப்பர்; கடவுள்தான் கொடுத்திருக்க முடியும்! ஐந்து ரொட்டித் துண்டுகளையும் இரண்ட் மீன் துண்டுகளையும் வைத்துக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தவர் எவரோ அவரே இவளுக்கும் உணவளித்திருக்க முடியும்!  கடலிலேயே மிதந்து, அலைகள் அடித்து அடித்து நார்தம்பர்லாண்டுக்கு வந்துவிட்டாள். அங்கு கோட்டை கொத்தளங்கள் இருக்கின்றன; அதன் காவல் அதிகாரி இந்தக் கப்பலை கண்டுவிட்டான்; உடைந்த கப்பல்; அதில் நைந்துபோன பெண்; கருணை காட்டும்படி கெஞ்சுகிறாள்; ஆனால் அவள் மொழியில் அந்த கெஞ்சல் உள்ளது; தன்னை ஒன்றும் செய்துவிட வேண்டாம் என் கேட்டுக் கொள்கிறாள்; இவள் பேசுவது லத்தீன் மொழி; அவன் கப்பலை சுற்றி சோதனை இடுகிறான்; பிரயாணத்தில் வழி தவறி விட்டதாகச் சொல்கிறாள்; தான் யார் என்பது நினைவில்லை என்கிறாள்; கிளம்பும்போது இருந்த நினைவு இப்போது இல்லை என்றும்; என்ன நடந்த்து என்றும் தெரியவில்லை என்றும் சொல்லிச் சமாளிக்கிறாள்; காவல் அதிகாரி அவளை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான்; தன் மனைவியின் பொறுப்பில் விடுகிறான்; இவள் மீது இருவருமே இரக்கம் கொள்கிறார்கள்; காவல் அதிகாரியின் மனைவி அழுதே விடுகிறாள்; அங்கு தங்க வைக்கப் படுகிறாள்; எங்குள்ள எல்லோருக்கும் இவளைப் பிடித்து விடுகிறது; இந்த பகுதி ஒரு காட்டுவாசிப் பகுதி; கான்ஸ்டான்ஸ் பக்திப் பாடல்களை பாடிக் கொண்டு பொழுதை கழித்து உழைக்கிறாள்; இங்கிருந்த பல கிறிஸ்தவர்களை இந்த நாடு விரட்டி விட்டது; அவர்கள் வேல்ஸ் நாட்டுக்கு ஓடிப் போய்விட்டார்கள்; கடவுளை வழிபடாத காட்டுவாசிகள் இவர்கள்; காவல் அதிகாரியின் மனைவியோ கான்ஸ்டான்ஸின் கடவுள் பக்தியை கண்டு அதிசயித்து அவளைப் போலவே இவளும் கடவுள் பக்தியில் இறங்கி விட்டாள்; கணவனுக்குத் தெரியாது; கான்ஸ்டான்ஸ், ஒரு கண் தெரியாதவருக்கு கடவுளிடம் வேண்டி கண்பார்வை கொடுத்திருக்கிறாள்; ஆனால் எப்போதும் சாத்தான் தன் தருணத்துக்காக காத்துக் கொண்டே இருக்குமாம்; ஒரு போர்வீரனை தேர்வு செய்து இந்த வேலையை சாத்தான் செய்கிறது; அவன் இந்த கான்ஸ்டான்ஸ் மீது அளவில்லா காதல் கொள்கிறான்; அவள் விரைவில் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் இறப்பதற்கும் தயாராக இருப்பான் போல! ஆனால் அவளோ இந்த பாவத்தை செய்ய விரும்பவில்லை; ஒருநாள் யாருக்கும் தெரியாமல், அந்த போர்வீரன், காவல் அதிகாரியின் மனைவியின் படுக்கையில் படுத்துவிடுகிறான்; அதே அறையில்தான் இந்த கான்ஸ்டான்ஸும் படுத்துக் கிடக்கிறாள்; மெதுவாக காவல் அதிகாரியின் மனைவியின் கழுத்தை அறுத்து விடுகிறான்; அந்த ரத்தம் படிந்த கத்தியை கான்ஸ்டான்ஸின் பக்கத்தில் வைத்துவிட்டு ஓடிவிடுகிறான்; காவல் அதிகாரி கொலையுண்ட மனைவியைப் பார்த்து கதறுகிறார்; கத்தி கான்ஸ்டான்ஸிக்கு அருகிலேயே கிடக்கிறது; அவளால் பேச முடியாமல் பேச்சு நின்றுவிட்டது; மன்னருக்கு தகவல் தெரிகிறது; வெட்டுவதற்கு ஆட்டை இழுத்துச் செல்வது போல, கான்ஸ்டான்ஸை மன்னரிடம் இழுத்துச் செல்கின்றனர்; எப்படி இவள் இந்த கொலையை செய்திருக்க முடியும்? எல்லோருக்கும் ஆச்சரியம்தான்! எல்லோரும் சாட்சி சொல்கிறார்கள்; இந்த பெண்ணும் காவல் அதிகாரியின் மனைவியின் ஒருவருக்கொருவர் பிரியமானவர்கள்; நிச்சயமாக இந்தப் பெண் இந்த கொலையைச் செய்திருக்க வாய்பே இல்லை என்று அடித்துச் சொல்கிறார்கள்; மன்னருக்கு குழப்பம்; இன்னும் விசாரனை வட்டத்தை அதிகப் படுத்தினார்; கான்ஸ்டான்ஸ் மகளே! கடவுள் உன்னை காப்பாற்றினால் அன்றி, உன்னை தூக்கில் இட்டுவிடுவார்கள்; "கடவுளே! நீதான் கெட்டவனிடமிருந்து சூசன்னாவை காப்பாற்றினாய்; மேரித் தாயே! நான் எந்தக் குற்றமும் செய்யாதவள்; என்னைக் காப்பாற்று; இல்லையென்றால் என்னை இப்போதே கொன்றுவிடு." கெஞ்சுகிறாள்;

கொலைக் குற்றம் சுமத்தி தூக்கில் இடுவதற்காக யாரையாவது மக்கள் கூட்டத்தின் நடுவே இழுத்துக் கொண்டு போகும்போது அவர் முகத்தை யாராவது பார்த்திருக்கிறீர்களா? அப்படி முகம் இருண்டுவிட்டது இந்த கான்ஸ்டான்ஸ் பெண்ணுக்கு; மன்னருக்கே சிறிது இரக்கம் வந்துவிட்டது; அவரின் கண்களிலிருந்து ஒருசொட்டு கண்ணீர் கன்னங்களில் வழிந்து ஓடியது; உடனடியாக மன்னர் ஆணையிடுகிறார், "அந்த போர்வீரனைக் கூப்பிடுங்கள்; அந்த புத்தகத்தை கொண்டு வாருங்கள்; இதன்மீது அவன் கைவைத்து சத்தியம் செய்யட்டும், இந்தப் பெண்தான் காவல்அதிகாரியின் மனைவியைக் கொன்றவன் என்று; பின்னர் நாம் தண்டனை கொடுப்போம்;" என்கிறார்; அதில் கைவைத்து அவள்தான் அந்த பெண்ணைக் கொன்றாள் என்று கூசாமல் பொய் கூறுகிறான்உடனே எங்கிருந்தோ ஒரு கை அவன் தலையில் அடிக்கிறது, கீழே விழுகிறான்; உணர்வு இல்லை; கண்கள் துருத்திக் கொண்டன; ஒரு அசரிரி கேட்கிறது, "இந்த அப்பாவிப் பெண்ணை பழிசுமத்துகிறாய்; நீ வாழ தகுதி இல்லாதவன்." இதைக் கண்ட அனைவருக்கும் ஆச்சரியம்; கான்ஸ்டான்ஸ் பெண்ணின் வழிபாட்டால்தான் இப்படி அதிசயம் நடந்தது என்று நினைக்கின்றனர்; மன்னரும் மக்களும் இவள் மதத்துக்கு மாறி விட்டனர்; பின்னர் வெகுநாள் கழித்து, இவளது நல்ல குணத்தை கண்டு, மன்னர் இவளை திருமணம் செய்ய நினைக்கிறார்.

இங்கும் மன்னரின் தாய் சகுனியாகிறாள்;

 *

வியாழன், 7 மே, 2015

இளவரசி கான்ஸ்டான்ஸ் சிரியா நோக்கி

part-2 (The Man of Law's Tale)
கப்பல் ஏறிய இளவரசி கான்ஸ்டான்ஸ், நல்ல மனதுடன் இருக்க எல்லா முயற்சிகளும் எடுத்துக் கொள்கிறாள்; ரோமிலிருந்து கப்பல் சிரியா நோக்கி போகிறது;
சுல்தானின் சிரியா நாடு;
சுல்தானின் தாயார் -- கெட்டதற்காகவே பிறந்திருப்பார் போல! பெற்ற தாய்  எப்படி இவ்வளவு வில்லியாக இருக்க முடியும்? தன் மகன் சுல்தான், கிறிஸ்தவனா? என்ன அநியாயம் இது? என்ன அக்கிரமம் இது? மன்னன் என்றால், கேட்க ஆள் இல்லை என்று நினைத்துக் கொண்டானா? தனக்கு நம்பிக்கையான ஆட்களையும் முக்கியமானவர்களையும் இரகசியமாக கூப்பிட்டு அனுப்புகிறாள்; எல்லோரும் பதறிக் கொண்டு இவளிடம் ஓடி வருகிறார்கள்; "நீதிமான்களே! எல்லாம்வல்ல அல்லாவின் தூதரான முகமது நபிகளின் புனித சட்டங்களை என் மகன் மீறிவிட்டான்; ஆனால், நான் ஒரே ஒரு வரத்தை மட்டும் நம் அல்லாவிடம் கேட்டுக் கொள்கிறேன்என் உயிர் என் உடம்பை விட்டுப் பிரிவதற்குள் முகமது நபிகளின் சட்டம் இங்கு நடைபெறுவதை என் இதயம் கேட்க வேண்டும்" என்று கேட்கிறாள்; இந்த புதிய மதம் நமக்கு என்ன கொடுத்துவிடப் போகிறதாம்? அடிமைத்தனத்தையும் பாவமன்னிப்பையும் தவிர வேறு எதைக் கொடுக்குமாம்? நாம் நம் நம்பிக்கைகளை விட்டதற்காக, இறப்புக்கு பிந்திய காலத்தில் நம்மை நகரத்தில் தள்ளும்! எனவே சீமான்களே நான் சொல்வதை நீங்கள் கேட்டால் நாம் எல்லோரும் பாதுகாப்பாகவே இருப்போம்எல்லோரும் ஒரே குரலில் சத்தியம் செய்கிறார்கள்; Yes! உங்களுக்குத் துணையாக இருப்போம்; வாழ்வானலும் சரி, சாவானாலும் சரி; come life or death; நாங்கள் மட்டுமல்ல எங்களின் நண்பர்கள் உறவினர்களையும் இதில் சேர்த்துக் கொள்வோம்;
இது போதும்; இப்போது நான் சொல்வதை கேளுங்கள்; முதலில் -- நாம் அனைவரும் கிறிஸ்தவர்களாக மாறி விட்டதுபோல நடிப்போம்; நெற்றியில் ஏதோ பச்சைதண்ணியை ஊற்றுவார்கள் அது நம்மை ஒன்றும் செய்துவிடாது; நான் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடும் செய்துவிடுகிறேன்; சுல்தானின் மனைவியாமே அவளை மலைகளில் அழையவிடுவோம், அந்த பச்சைதண்ணி அவளுக்கு தேவைப்படும்;
ஓ! சுல்தானியப் பெண்ணே! Oh Sultaness! அக்கிரமங்களின் ஆணிவேரே! Root of all iniquity! நரகத்தில் உழன்று கொண்டிருக்கும் நல்லபாம்பே! Like the serpant bound in hell. Oh deceitful woman! ஓ வஞ்சகக்காரியே! எல்லாவித கேடுகெட்ட ஒழுக்கமும் உன்னிடமிருந்துதான் முளைத்து வளர்கிறதோ? சாத்தான் வசிக்கும் கூடு நீதானோ!  ஓ சாத்தானே! பெண்ணுக்கு அவளின் பழைய பழக்கத்தை சொல்லிக் கொடுக்கிறாயா?
நீதானே, ஏவாளுக்கு கெட்ட புத்தியைக் கொடுத்து அதனால் மனிதவர்க்கத்தை தீராக சாபத்துக்கு உள்ளாக்கி, அவனை மண்ணைக் கிண்டி சோறு தின்ன வைத்தவன் ஆயிற்றே! இப்போது இங்கு வந்து, இந்த கிறஸ்தவ திருமணத்தை கெடுப்பதற்காக வந்திருக்கிறாய் தானே? எப்போதும் நீ, பெண்களை உனது கையாளாக வைத்துக் கொண்டு உன் ஏமாற்று வேலைகளை செய்து முடிப்பாய்!
ஏன் நான் இந்த சுல்தானியச்சியை திட்டவும் சாபம் கொடுக்கவும் செய்கிறேன் என்றால், அவள் செயல் அப்படிப்பட்டது; அவள் தன் ஆலோசகர்களை சத்தமில்லாமல் வெளியேற்றி விட்டாள்; நேராக தன் மகன் சுல்தானிடம் சென்று, "மகனே நான் இஸ்லாத்தை விட்டுவிட்டேன்; கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொண்டேன்; இதுவரை கிறிஸ்தவராக மாறாமல் இருந்ததற்காக விமோசனம் தேடுகிறேன்; அதற்கு பிராயசித்தமாக, என் பொறுப்பிலேயே ஒரு பெரிய விருந்தை கிறிஸ்தவர்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்; அதற்கு உன் அனுமதியும் வேண்டும்" என்று மகனை வேண்டுகிறாள்; எவ்வளவுக்கு அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டுமோ அவ்வளவுக்கு இந்த விருந்து இருக்க வேண்டும்;
**
ரோமாபுரியிலிருந்து கப்பலில் வந்த கிறிஸ்தவர்கள் எல்லோரும் வந்துவிட்டார்கள்; சிரியா அவர்களை எதிர்கொள்கிறது; பெருத்த ஆடம்பரமும் பகட்டுமாக இருந்தது; with much pomp and splendour; சுல்தான் சந்தோஷத்தில் மிதந்தார்; முதலில் தன் தாய்க்கு சொல்லி அனுப்பினார்; பின்னர் பிரபுக்களுக்கும், பெரிய மனிதர்களுக்கும் தகவலைச் சொல்லச் சொன்னார்; "என் மனைவி வந்துவிட்டாள்; எனக்காகவும், என் மனைவிக்காகவும், நீங்கள் அனைவரும் நேரில் சென்று எதிர் சேவை செய்து வரவேற்று அழைத்து வாருங்கள்." 
அழகழகாக உடுத்திய பெண்களும், கனவான்களும் ஒன்று கலந்து நிற்கிறார்கள்; ரோமன்களும் சிரியன்களும் கலந்து விட்டார்கள்; தன் மகளை வரவேற்பதைப் போன்றே முகத்தை வைத்துக் கொண்டு சுல்தானின் தாயும் தன் மருமகள் கான்ஸ்டன்ஸை சந்தோஷ முகத்துடன் வரவேற்று அவளை நகருக்குள் மெதுவாகவும் சம்பிரதாயமாகவும் அழைத்து வருகிறாள்; ரோமானிய மாவீரன் ஜூலியஸ் சீசரின் வெற்றியை அந்நாடு வெகு விமரிசையாக கொண்டாடியதாக, ரோமானியக் கவிஞன் லூக்கன் வர்ணித்திருப்பதை நான் நம்ப மாட்டேன்; அதைவிட இந்த வரவேற்பு மிக மிகப் பெரியது என்றே சொல்வேன்;
சுல்தானும் மிக ஆடம்பரமாக நேரிலேயே வந்துவிட்டார்; மனைவியைப் பார்த்து ஆச்சரியத்திலும் ஆச்சரியமாகிவிட்டார்; வாயெல்லாம் பல்லாக, முகமெல்லாம் சிரிப்பாக, உடம்பெல்லாம் குதூகுலமாக மனைவியை வரவேற்கிறார்; ஒருவரையொருவர் பார்த்து ரசிக்கட்டும் என்று நாம் ஒதுங்கிவிடுவோம்;
**
மாலை நேரம்; சுல்தானின் தாயார் புது மருமகளுக்குக் கொடுக்கும் பெரும் விருந்து; ரோமானிய கிறிஸ்தவர்கள் எல்லோரும் விருந்துக்கு வந்துவிட்டனர்; பரிமாறப்பட்ட உணவுகள் ஒன்றா இரண்டா! அவைகளின் பெயர்கூட எனக்குத் தெரியாதே! தெரிந்தால்தானே அது என்னவென்று சொல்ல! இதுவரை பார்த்திராத, ருசித்திடாத உணவுகள்; ஆனால், அதை தின்று முடித்து எழுவதற்குள் அதற்குறிய "விலையை" கொடுத்தே ஆகவேண்டும் என்பது விதிபோலும்! ஓ! என்ன சோகம்! எல்லா மகிழ்ச்சிக்கும் அடுத்து இந்த துயரம் வரிசையில் நிற்கத்தான் செய்யும்போல! இந்த தத்துவத்தை எப்போதும் நாம் மனதில் கொள்ளத்தான் வேண்டும்; அங்கு விருந்தில் இருந்த அனைவரையும் வெட்டிச் சாய்க்கின்றனர்; கழுத்தும் துண்டமுமாக எல்லாம்; ஆனால், இளவரசி கான்ஸ்டான்ஸை மட்டும் ஒன்றும் செய்யாமல் விடுகின்றனர்; உடனடியாக கான்ஸ்டான்ஸை அந்த இடத்தை விட்டு வெளியேற்றுகிறார்கள்; அங்கு கடலில் நின்று கொண்டிருந்து கப்பலில் ஏற்றி விடுகிறார்கள்; அந்தக் கப்பலுக்கு சுக்கான் (rudder) இல்லை; உடனடியாக அவளுக்கு கப்பலை இயக்குவது எப்படி என்று சொல்லித் தந்து, இதைக்கொண்டு இத்தாலிக்கே தப்பிச் செல்லும்படி சொல்லிவிடுகிறார்கள்; அவளுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை; கையிலிருந்து பணமும், துணிமணியுடன் உப்புக்கடலில் பிரயாணத்தை தொடர்கிறாள்;
ஓ! கான்ஸ்டான்ஸ்! சக்கரவர்த்தியின் மகளே! நல்லொழுக்கத்தின் பிம்பமே! அதிர்ஷடத்தின் கடவுள்தான் இனி உன்னை வழிகாட்ட வேண்டும்!
**
இந்தக் கதையானது The Man of Law's Tale ன் ஒரு பகுதி மட்டுமே இது...
இதை சுமார் 800 வருடங்களுக்கு முன் ஜான் பெய்னி John Payne என்பவர் எழுதியுள்ளார். இது பெரிய கதைத் தொகுப்பு; இதை கான்டர்பரி கதைகள் என்பர் The Canterbury Tales. அறிவு பூர்வமானதாகவும் உணர்வு பூர்வமானதாகவும் வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டதாகவும் இருக்கும்.
நன்றி; கான்டர்பரி கதைகள் தொகுப்பு.

ஞாயிறு, 3 மே, 2015

இளவரசி கான்ஸ்டான்ஸ் விடை பெறுகிறாள்

The Man of Law's Tale:
சிரியா நாடு; ஒருகாலத்தில் பெரும் பணக்கார வியாபாரிகள் வசித்த நாடு; அங்குள்ள பொருள்களையும் விலையுயர்ந்த துணிகளையும் உலகின் மற்ற நாடுகளுக்கு கப்பல்மூலம் அனுப்பி செல்வச் செழிப்பில் சிரியா நாடு கொழித்தது. சிரியா நாட்டின் பல வியாபாரிகள் வியாபாரத்தை விரிவாக்க ரோம் நாட்டுக்குச் செல்ல முடிவு செய்தனர்; ரோம் நாட்டுக்கு வியாபாரத்தை பெருக்க போகிறார்களோ அல்லது மகிழ்ச்சியாக இருக்கப் போகிறார்களோ தெரியவில்லை; வியாபாரிகள் ஆர்வமாக ஆயத்தமானர்கள்;

ரோம் நாடு சென்ற சிரியா நாட்டு வியாபாரிகள் சுற்றித் திரிந்தார்கள்; அங்குள்ள பேரரசரின் மகள் ஒன்று இருப்பதாக பேசிக் கொண்டார்கள்; அவள் மிக அழகாம்; இந்த உலகம் உருவான காலத்திலிருந்து இதுவரை யாருமே அப்படிப்பட்ட அழகை பார்த்திருக்கவே முடியாதாம்! எல்லாருடைய ஏகோபித்த முடிவும் அதுதானாம். This was the considered judgment of all. அழகாகவும் இருந்து, அமைதியாகவும் இருப்பவள்; இளமையாகவும் இருந்து அறிவு முதிர்ச்சியாகவும் இருப்பவள்; இப்படி பொருத்தமாக இருப்பதே அரிதாம்; மற்றவர்களின் பேச்சை காதுகொடுத்து பொறுமையாக கேட்பவளாகவும் இருக்கிறாள்; அது இதைவிட அரிது; கண்ணியத்தை பிரதிபிம்பமாக வைத்திருப்பவள்; இவ்வளவு பெருமைகளை உடையவளை கடவுளே நீயே காப்பாற்றி வைக்க வேண்டும் என்று ரோம் நாட்டு மக்கள் தினமும் வேண்டிக் கொள்கின்றனராம்; May God keep her and protect her!" they all cried. இவையெல்லாம் சத்தியமான உண்மைகளே!

ரோம் நகர் போன வியாபாரிகள் சரக்குகளை வாங்கி கப்பலில் ஏற்றிவிட்டனர்; கப்பல் நிறைந்து விட்டது; கப்பல் சிரியா நாடு நோக்கி மிதக்கிறது; இந்த சிரியா நாட்டு வியாபாரிகள் பெரும் பணக்காரர்கள்; எனவே எப்போது வெளிநாட்டுக்கு வியாபாரத்துக்குச் சென்றாலும் சிரியா மன்னரான சுல்தானிடம் சொல்லிவிட்டே செல்வர்; அதேபோல, நாடு திரும்பியவுடன் மன்னர் சுல்தானைப் பார்த்து அந்த நாட்டு சிறப்புகளையும், வியாபாரம், அந்நாட்டு விபரங்களையும் மன்னரிடம் சொல்வர். சுல்தானும் மிகவும் ஆர்வமாக வெளிநாட்டுக் கதையை கேட்பார்; வியாபாரிகள் சிரியா நாடு திரும்பியவுடன் சுல்தானை சென்று பார்க்கிறார்கள்; அரண்மனையில் பெரிய விருந்து நடக்கிறது; அப்போது நடந்த பேச்சில் ரோம் நகரத்து பேரழகி "கான்ஸ்டான்ஸ்" (Constance) பற்றி மெதுவாக சுல்தானிடம் தெரிவிக்கிறார்கள்; அவள் அழகை வர்ணிக்கிறார்கள்; அவள் குணத்தை வர்ணிக்கிறார்கள்; அவள் பண்பை வர்ணிக்கிறார்கள்; சுல்தானுக்கோ ஆசை உச்சத்துக்கே போகிறது; எப்படியும் அந்த இளவரசியை தான் அடைந்துவிடவேண்டும்; காதலுக்காகவே சுல்தான் இறப்பதற்குகூட தயாராவார் போல! Sultan would die through love.

சுல்தான் தயாராகிவிட்டார்; தனது மந்திரிகளை ரோமுக்கு அனுப்பினார்; "எங்கள் சுல்தான், உங்கள் இளவரசி மீது தீராத காதல் கொண்டுவிட்டார்; அவர் காதல் தீயை அணைக்கவில்லை என்றால், அவர் அந்த தீயிலேயே உயிரை விடுவார் போலத் தெரிகிறது; எனவே இளவரசியை எப்படியாகவது எங்கள் சுல்தானுக்கு மணமகளாகக்  கொடுங்கள்" என்று மந்திரிகள் கெஞ்சுகிறார்கள்;

ரோம் நாட்டு சக்கரவர்த்தியோ கிறிஸ்தவர்; சிரியா நாட்டு மன்னரோ முஸ்லீம்; எப்படி சாத்தியப்படும்? எப்படி, கிறிஸ்தவப் பெண்ணை ஒரு முஸ்லீம் மன்னருக்கு கொடுப்பது? நடக்கிற காரியமா? மணமகன் வீட்டு வழக்கப்படிதானே திருமணமும் நடக்கும்; அப்படியென்றால், எங்கள் வீட்டு கிறிஸ்தவ பெண்ணை, முஸ்லீம் முறைப்படி சுல்தான் மணப்பாரே?

"என்னால், இவ்வளவு பேரழகுள்ள இளவரசியை மணக்காமல் இருக்க முடியாது; அதற்காக எதையும் துறக்க தயார்; என்ன, மதம் தானே பிரச்சனை? முஸ்லீமான நானே கிறிஸ்தவனாகிறேன்; பிரச்சனை தீர்த்துவிடும் அல்லவா?" சுல்தான் முடிவுக்கே வந்துவிட்டார்; "Rather than lose all hope of gaining Constance as my wife, I shall be christened. I must have her! I have no other choice!" எவ்வளவு உறுதியான வார்த்தைகள்!

உடனடி நடவடிக்கைகள் ஆரம்பமாயின; மந்திரிகள் பறந்தார்கள்; போப் சமரசம் ஆனார்; சுல்தான் முஸ்லமான் அல்ல, கிறிஸ்தவர் ஆனார்; அதுமட்டுமா, மொத்த சிரியா நாட்டையே கிறிஸ்தவ நாடு என்று உத்தரவு போட்டு விட்டார்; அப்பாடி! ஏன், சுல்தானுக்காக நாட்டு மக்கள் மாறக்கூடாதா? இனி சிரியாவும் கிறிஸ்தவ நாடுதான்;
பேரழகி கான்ஸ்டான்ஸ் இனி எனக்குத்தான்! தங்ககட்டிகளை ரோம் நாட்டுக்கு அனுப்பிவிட்டார் சுல்தான்; நிச்சயதார்தம் முடிந்து விட்டது; Now, fair Constance - may God guide you!

ரோமாபுரி விழாக்கோலம் பூண்டுவிட்டது; மகளை சிரியா நாட்டுக்கு மணமகளாக அனுப்பப் போகிறார்; வார்த்தைகளில் சொல்ல முடியாது; நாடே விழாக்கோலம் போங்கள்! இளவரசி பிரயாணத்துக்கு கப்பல் தயாராகி விட்டது; துணைக்கு செல்வோர் தயாராகின்றனர்; பிஷப்புகள் தயாராகின்றனர்; தோழிப் பெண்கள், வேலைக்காரிகள், தளபதி, பாதுகாப்பு வீரர்கள், சமையல்காரர்கள், கப்பல் வேலையாட்கள், மொத்தமும் தயார்; கப்பல் சைரன் ஒலிக்கிறது; நாட்டு மக்களே குவிந்து விட்டனர்; மொத்த ரோமாபுரி மக்களும் ஜீசஸ் கிறிஸ்துவிடம் மனமார வேண்டும்படி கேட்டுக் கொள்கிறார்கள். "எங்கள் இளவரசியின் திருமணம் நல்லபடியாக நடக்கவும், பிரயாணம் பாதுகாப்பாக இருக்கவும் அருள்புரிய வேண்டும் இறைவனே!" என்று எல்லோர் மனமும் வேண்டுகிறது; Everybody in Rome was asked to pray to Christ that he should look favourably upon this marriage and give his blessing to the voyage.

கப்பல் நகருகிறது; இளவரசி வெளிநாட்டுக்கு மணமகளாகப் போவதால் அழுவாரோ? தாய், தந்தை, நட்புகள் இவற்றை பிரிவதால் வருந்துவாரோ? எங்களுக்காக (மக்களுக்காக) எங்களின் பாவத்துக்காக சிலுவையில் உயிர் நீத்த எங்களின் பிதாவே எங்கள் இளவரசியின் கண்ணீரை போக்கும்! பெண்களே, ஆண்களுக்கு சேவை செய்யதற்காகவே படைத்தீரோ? எப்போதும் ஆண்களின் ஆளுமையிலேயே பெண்களை வைத்திருக்கிறீரே?

ஆனால், இளவரசி கான்ஸ்டான்ஸ் முகத்தில் எந்த வருத்தமும் இல்லை; அழுகையும் இல்லை; அவள் அழுதாலும், சிரித்தாலும் சிரியாவுக்கு சென்றே ஆகவேண்டும் என்று அவளுக்குத் தெரியும்போல! எல்லா கணவர்மார்களும் நல்லவர்களே; நல்லவர்களாகவே எப்போதும் இருப்பார்கள்; அப்படித்தான் எல்லா மனைவிகளும் நினைத்து வருகிறார்கள்; அதற்குமேல் எனக்குச் சொல்லத் தெரியவில்லை; All husbands are good and always have been, as every wife knows! I shall say no more.

"அப்பா!..... அம்மா! ......  நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். ஜீசஸ் கிறிஸ்து என்னை காப்பாற்றுவார்; உங்கள் மகள் கான்ஸ்டான்ஸ்க்கு உங்களின் ஆசீர்வாதத்தை அளியுங்கள்; நான் சீக்கிரம் சிரியா நாடு சென்று விடுவேன்; மறுபடியும் உங்களை எப்போது பார்ப்பேன் என்றே எனக்குத் தெரியவில்லை; நமக்காக உயிர் தியாகம் செய்த ஜீசஸ் கிறிஸ்து எனக்காகவும் ஆசிவழங்குவார்; நான் பரிதாபத்துக்குறிய ஒரு பெண்தானே! 
இதுவரை கேட்காத அழுகைகள்...........

புத்திகெட்ட ரோமானிய சக்கரவர்த்தியே! கடவுளே! ஒரு ஜோதிடன் கூட இந்த ரோமாபுரியில் இல்லாமலா போய்விட்டான்? அவள் வாழ்வைக் கணித்துச் சொல்ல! கிழக்கிலிருந்து மேற்காக மறுபடியும் மறுபடியும் சுத்திக் கொண்டிருக்கும் கிரகங்களே உங்களுக்குக் கூடத் தெரியாதா, நல்ல நேரம் எதுவென்று? எல்லா நேரமும் நல்ல நேரமாகவே இருந்துவிட முடியாதே? கடவுளே! நாங்கள் எல்லோருமே இவ்வளவு அப்பாவிகளாகவும் முட்டாள்களாகவும் இருந்திருக்கிறோமே?

இளவரசி கான்ஸ்டான்ஸ் விடை பெறுகிறாள்; "எப்போதும் கடவுள் உங்களுக்கு அருள்புரிவாராக! போய்வருகிறேன் என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் எனக்குச் சொல்லத் தோன்றவில்லை" என்று விடைபெறுகிறாள்; "போய்வா அழகிய மகளே;" ஆராவாரம்!

இந்தக் கதையானது The Man of Law's Tale ன் ஒரு பகுதி மட்டுமே இது...
இதை சுமார் 800 வருடங்களுக்கு முன் ஜான் பெய்னி John Payne என்பவர் எழுதியுள்ளார். இது பெரிய கதைத் தொகுப்பு; இதை கான்டர்பரி கதைகள் என்பர் The Canterbury Tales. அறிவு பூர்வமானதாகவும் உணர்வு பூர்வமானதாகவும் வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டதாகவும் இருக்கும்.

நன்றி; கான்டர்பரி கதைகள் தொகுப்பு.