சர் வின்ஸன் சர்சில் Sir Winston Churchill
இவர் இங்கிலாந்தின் (The United Kingdom)
பிரதமராக 1951 லிருந்து 1955 வரை இருந்த பிரபலமான பிரதமர்.
இவரைப் பற்றி வேடிக்கையாக ஒரு கதையும் உண்டு. (அது
உண்மைதானாம்).
இவர் பிரதமர் பதவியில் இருக்கும்போது, இவருக்கு ஒரு
உதவியாளர் இருந்தார். சர்ச்சில் ஆங்கிலப் புலமை மிகுந்தவர். வார்த்தை ஜாலத்துடன்
எழுதுவார். இவரைப் போலவே ஆங்கில அறிவு படைத்தவர் இவரின் உதவியாளரும். சர்சிலின்
கடிதங்களை தயார் செய்து சரிபார்த்து சர்சிலின் கையெழுத்துக்கு அனுப்புவாராம்.
சர்ச்சில் அந்த கடிதங்களில் உள்ள சிறு குறைகளை சரி செய்து, பின்னர் தன் கையெழுத்தை
போட்டு அனுப்புவாராம். எப்போது கடிதத்தை அனுப்பினாலும், அதில் ஏதாவது ஒரு
திருத்தம் செய்து பின்னரே கையெழுத்து போடுவாராம் சர்சில். இது அவரின்
உதவியாளருக்கு மிகுந்த வருத்தத்தை அளித்ததாம். எவ்வளவு உன்னிப்பாக படித்து
திருத்தி அனுப்பிய கடிதமாக இருந்தாலும், அதிலும் ஒரு குறை கண்டுபிடித்து ஒரு
எழுத்தையாவது மாற்றி பின்னர் கையெழுத்துப் போடுவாராம்.
ஒருநாள், ஒரு சிறு கடிதம் தயாரிக்க வேண்டி இருந்தது.
இரண்டே வரிகள் கொண்ட கடிதம். மிகக் கவனமாக ஆங்கில வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்த,
எந்த இலக்கணப் பிழையும் இல்லாமல், தயாரித்து, அதை சர்ச்சிலின் கையெழுத்துக்கு
அனுப்புகிறார் அவரின் உதவியாளர்.
அதைப் பார்த்த சர்சில், ஒரே ஒரு வார்த்தையை
மட்டும் மாற்றி எழுதி, தன் கையெழுத்தைப் போட்டு அனுப்புகிறார் சர்ச்சில்.
வந்ததே கோபம் அவரின் உதவியாளருக்கு. நேராக
சர்ச்சிலின் அறைக்குப் போகிறார். அந்தக் கடிதத்தைக் காண்பித்து, நான் எழுதிய
வார்த்தையில் எந்தக் குறையும் இல்லை, எந்த இலக்கணப் பிழையும் இல்லை. சரியாகத்தானே
எழுதி இருந்தேன். இதை ஏன் திருத்தினீர்கள் என்று சற்று கோபமாகவே கேட்கிறார்.
அதற்கு, சிரித்துக் கொண்டே சர்ச்சில் பதில்
சொல்கிறார்.
“நீ எழுதிய கடிதத்தில் ஒரு பிழையும் இல்லை; இதுவரை
எனக்கு அனுப்பிய எந்தக் கடிதத்திலும் ஒரு பிழையைக் கூட காணமுடியாது. நீ என்னைக்
காட்டிலும் ஆங்கிலப் புலமை உள்ளவன் என்று எனக்குத் தெரியும். ஆனாலும், இந்த என்
கையெழுத்து உள்ள கடிதங்களை பார்க்கும் நபர்கள், ஏதோ, இந்த சர்ச்சில் கண்ணை மூடிக்
கொண்டு கையெழுத்து இடுகிறார். நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்துப்
போட்டுவிடுவார். கையெழுத்துப் போடுவதைத் தவிர, அதில் உள்ள வாசகங்களை சர்ச்சில்
படிக்க மாட்டார் என்று ஊரார் நினைத்து விடக்கூடாது என்பதற்காவே, நான் வேண்டுமென்றே
நல்ல எழுதியுள்ள வார்த்தைகளில் ஒரு சில திருத்தங்களை வேண்டுமென்றே என் பேனாவினால்
அடித்து எழுதிப் பின்னர் கையொப்பம் இடுகிறேன். அப்படி என் திருத்தங்களைப்
பார்ப்பவர்கள், நான் ஏதோ முழுவதும் படித்துவிட்டுத் தான் கையெழுத்தை போட்டேன்
என்று நினைத்துக் கொள்வார்கள். அதனால்தான் அப்படிச் செய்தேன். உன்னிடம் நான் எந்த்
குறையையும் காணவில்லை” என்று கூறி உள்ளார்.
சிலருக்கு தப்பை கண்டுபிடிப்பதே வேலையாக
இருக்கும். அதில் சேர்ந்தவர்போல இந்த சர்ச்சிலும். வேடிக்கையான மனிதர்தான்.
**