வெள்ளி, 16 அக்டோபர், 2015

Left-hand இடதுகை

Left-hand இடதுகை
வலது கை, இடது கை என்று கைகளுக்கு பெயர் சூட்டிவிட்டோம். ஆங்கிலேயர்கள் இதை Right-hand, Left-hand என்று சொல்கிறார்கள். இதற்குறிய பெயர் காரணம் தெரியவில்லை. வலது, இடது என்பதற்கும் பெயர் காரணம் தெரியவில்லை. இந்த வலது, இடது பெயர்கள் பெரும்பாலோரை குழப்பிவிடும். எது வலது, எது இடது என்று தெரியாமல் தவிப்பர். இவர்களுக்கென்றே ஒரு புதுமொழி உள்ளது. வலதுகையை “சோற்றுக்கை அல்லது சோத்துக்கை” என்றும் இடதுகையை “பீச்சாங்கை” என்றும் வழக்குமொழியில் கூறிக் கொள்வர். பொதுவாக நம் உடம்பில் உள்ள இரட்டை உறுப்புக்கள் எல்லாம் ஒரே மாதிரி உருவ அமைப்பிலும், செயல்பாட்டிலும் இருக்கிறது. ஆனால் இந்த இரண்டு கைகளின் செயல்பாட்டில் பெருத்த மாறுபாடு தெரிகிறது. வலது கை ஏதோ ஹீரோ மாதிரியும், இந்த இடது கை ஏதோ வில்லன் மாதிரியும் செயல்பாட்டில் இருக்கிறது. எல்லா நல்ல வேலைகளையும் வலதுகை செய்கிறது. மற்ற துணை வேலைகளை இடதுகை செய்கிறது. அதிலும் குறிப்பாக, வலது கைக்கு வலிமை அதிகம் இருப்பது போலவும் தெரிகிறது.

பிறந்த குழந்தைக்கு எந்த பயிற்சியும் கொடுக்காமலேயே அது தனது வலது கையைக் கொண்டே ஆரம்ப வேலைகளை செய்கிறதே! அதன் காரணம் என்ன? பிறவியிலேயே வலது கைக்குக்கும் மூளைக்கும் ஏதேனும் தனித் தொடர்பு இருக்குமா? பயிற்சி எடுத்தால், நாம்கூட இடது கையால் எழுதலாம் என்கிறார்கள் வல்லுனர்கள். பயிற்சி எடுத்துத்தானே எழுதிப் பழக வேண்டும். அவசரத்துக்கு வலதுகை தானே முன்னாடி வருகிறது.

இடது கை பழக்கமுள்ளவர்கள் வெகு சிலரே! இவர்களுக்கு மட்டும் எப்படி இந்த இடது கைப் பழக்கம் பிறவியிலேயே வந்து இருக்கும்! ஒருவேளை மூளையில் உள்ள இந்த மூளைப்பகுதி இடம் மாறி இருக்குமோ! இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் அதி புத்திசாலிகளாகவும் இருப்பது நம்மை சிலநேரங்களில் ஆச்சரியப்படுத்துகிறது. உலகின் மிகப் பிரபலமான பலர் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள்தான். இதன்படி பார்த்தால், மூளையின் இடதுகைப்பகுதி மூளை இடம் மாறி உள்ளவர்கள் பிரபலமானவர்களாக இருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.


கையில் உள்ள ரேகைகளிலும் இந்த வல-இட வேறுபாடுகள் அதிகம் உள்ளன. ஆண்களுக்கு வலது கை ரேகையை பார்த்து ரேகை சாஸ்திரம் கணிக்க வேண்டும். பெண்களுக்கு இடது கை ரேகையைப் பார்த்து கணிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக, கையின் கட்டை விரலில் உள்ள ரேகைக்கு ஏதோ ஒரு முக்கியத்துவம் இருப்பதுபோலவே தோன்றுகிறது. அந்த ரேகையில் பல விஷயங்கள் இருப்பதாக தெரியவருகிறது. ஓலைச்சுவடி சாஸ்திரம் இப்போது மிகப்பிரபலமாக இருக்கிறது. அந்த ஓலைச் சுவடிகளை பார்ப்பதற்கு, ஆண்களுக்கு அவர்களின் வலது கட்டைவிரலின் ரேகையை பார்த்து அவரவர் சுவடியைக் கண்டுபிடிக்கிறார்கள். பெண்களுக்கு இடது கட்டைவிரல் ரேகை தேவை. நம் வாழ்வின் மொத்த விஷயத்தின் ப்ளூ-பிரிண்ட் Blue-Print இந்த கட்டைவிரலில்தான் உள்ளதோ என்று ஆச்சரியப்பட வைக்கிறது. என்னதான் விஞ்ஞானம், விஞ்ஞானம் என்று கத்தினாலும் அந்த கட்டை விரலிலும் அந்த விஞ்ஞானம் எங்கோ ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக