சனி, 17 அக்டோபர், 2015

கிரேக்க மொழி வளம்

பழைய ரோமானிய அரசு நிலைகுலைகிறது. கிபி 4ம் நூற்றாண்டில் ரோம அரசின்மீது பல படையெடுப்புகள். என்னசெய்யும் பாவம் இந்த ரோம அரசு. சரிந்தேவிட்டது. பின்னர் இரண்டு பலம்பெறும் அரசுகள் தோன்றின. 1) மேற்கு ஐரோப்பாவில் உருவாகிறது. 2) மற்றது கிழக்கு ஐரோப்பாவில் உருவாகிறது. 1) மேற்கு ஐரோப்பாவுக்கு மிலன் முக்கிய நகராகவும், 2) கிழக்கு ஐரோப்பாவுக்கு கான்ஸ்டான்டைன் நோபிள் முக்கிய இடமாகவும் அமைகிறது. 1) மேற்கு ஐரோப்பாவுக்கு போப் தலைமை தாங்குகிறார், 2) கிழக்கு ஐரோப்பாவுக்கு வேறு ஒரு மதகுரு தலைமை தாங்குகிறார். 1) மேற்கு ஐரோப்பாவில் லத்தீன் மொழியும், 2) கிழக்கு ஐரோப்பாவில் கிரேக்க மொழியும் வேரூண்டுகின்றன.
கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டது. மக்கள் இந்த தேவாலயங்கள் மூலம் பாவத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு மோட்ச வழியை அடையலாம் என்று வெகுவாக நம்பினர். அதற்காக, கிறிஸ்துவின் பிரதிநிதியாக போப் இருப்பதாகவும், எனவே அவரே அதற்கு தலைமையும் தாங்கினார். அவருக்குக் கீழே, ஆர்ச்பிசப், பிசப், குரு என்பவர்கள் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு செய்ததால், மக்களும் ஒரே தேவாலயம், ஒரு சமயம் என்று ஒன்றுபட்டனர். மேற்கு ஐரோப்பாவில், ஜெருசலேமை இஸ்லாமியிரிடமிருந்து கைப்பற்ற சிலுவைப் போர்கள் நடந்தன. அதே நேரத்தில், இங்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பானியா போன்ற புதிய அரசுகள் தோன்றிவிட்டன. கான்ஸ்டான்டைன் நோபிளை 1453ல் துருக்கியர் கைப்பற்றினர். எனவே அங்கிருந்த கிரேக்கர்கள் , கிரேக்க பண்டிதர்கள் அனைவரும் குடிபெயர்ந்து மேற்கு நோக்கி சென்றனர். அவர்கள் அவ்வாறு சென்றபோதுதான், தங்களிடமுள்ள பல கிரேக்க, லத்தின் மொழி நூல்களையும் கொண்டு சென்றனர். அப்படிச் சென்றுதான், இத்தாலியில் கல்வியை பரப்பினர். அந்த நூல்களையும் பரப்பினர். இந்த நூல்கள்தான், மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதாம். இந்த உலக வாழ்க்கையில் விருப்பத்தையும், மறு உலக நம்பிக்கையையும், உண்மையை ஆராயும் அறிவையும் கொடுத்ததாம். இந்த நூல்கள்தான், அங்குள்ள மக்களை அறியாமை என்னும் இருளில் இருந்து அறிவு என்னும் ஒளியைக் காண்பித்துக் கொடுத்ததாம். இப்படித்தான், எங்கெங்கோ உள்ள மாணவர்கள், இந்த கிரேக்க பண்டிதர்களை சூழ்ந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக