முதுகெலும்பை
வளைக்காமல் நேராக நிமிர்ந்திருக்க வேண்டியதன் அவசியம் எதற்கென்றால், சுவாசம் மூலாதாரத்தின்று புறப்பட்டு முதுகெலும்பை
ஒட்டி மேலே ஓடும். பாதை நேராக இருக்கும்போது நீரும் காற்றும் விரைவாக ஓடும் இயல்பு
கொண்டவை. வளைவாய் இருந்தால் வளைவுகளில் சற்றுநேரம் தடைப்பட்டு அதன்பின்னர் ஓடும்.
எனவேதான் முதுகெலும்பை நேராக வைத்திருக்க வேண்டும்.
வாயைத் திறக்காமல், நாக்கை உபயோகிக்காமல், உள்ளுக்குள்
இருந்து வரும் சுவாசமானது "ஹம்" என்னும் ஓசையுடன் வெளியே போக வேண்டும்.
அவ்விதமே வெளியிலிருந்து உள்ளே செல்லும் சுவாசமானது "ஸா" என்னும்
ஓசையுடன் போக வேண்டும். அவ்விதம் தினமும் பழகி வந்தால், சில
தினங்களில்"ஹம்ஸா" என்ற ஓசை காதுகளில் கேட்கும். ஹம்ஸா என்னும்
வார்த்தையே முன் பின் மாற்றப்படும்போது "ஸாஹம்" என வரும். இதுவே
"ஸோஹம்" எனவும் "சிவோசம்" எனவும் உச்சரிக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் இரண்டு
கண்களையும் மூக்கு நுனியைப் பார்க்கபண்ணி, படிபடியாய், பார்வையை உள்ளே செலுத்தி ஈற்றில் முழுப்பார்வையையும் லலாட இடத்தைப்
பார்க்க வேண்டுமாம். (லலாட = மூக்கு முடிவில் இரண்டு புருவங்களுக்கு மத்தியில்
உள்ள இடம்).
பார்வை இருக்கும்
இடத்தில் மனம் சென்று அடையும். அப்போது சலனமில்லாத மனநிலை ஏற்படும்.
மூலாதாரம் தொடங்கி, லலாட இடம் வரை உடம்பின் பகுதிகளில், ஜீவதாதுக்கள் அடங்கிய முக்கியமான இடம் ஆறு உண்டு. அந்த ஆறையும் ஆதாரமாகக்
கொண்டு அதற்கு வேறு வேறு பெயர்கள் சூட்டி உள்ளார்கள். அந்த ஆறு இடங்களிலும்
சுவாசம் முக்கிய தொழிலைச் செய்கிறதாம்.
இயல்பாக, சுவாசமானது, மூலாதாரத்திலிருந்து
புறப்பட்டு, மேலே ஓடி, நாசி வழியாக
வெளியே போகிறது. வெளியே இருந்து உள்ளுக்குச் செல்லும் காற்றும் மூலாதாரத்துக்குப்
போய் மீள்கிறது.
யோகிகள் படிப்படியாக
காற்றை மூலாதாரத்துக்குப் போகவிடாது தடுத்து, அதற்கு மேலே உள்ள
ஆதாரத்தில் நிறுத்தி, அதை மறுபடியும் அதினின்றும் திருப்பப்
பண்ணுகிறார்கள். அதுமாதிரி, மேலே உள்ள ஒவ்வொரு ஆதாரத்திலும்
தடுத்து, அதிலிருந்து திருப்புகிறார்கள். இப்படியாக, நாசிக்குக் கீழே உள்ள ஆதாரங்களுக்கும் போகவும், மீளவும்
செய்யும் காலத்தில் சுவாசம் நாசிவழியாக போக்கு வரத்து செய்யும். நாசிக்கு மேலே
போய் அந்த இடத்தில் தங்கிவிட்டால், வெளியில் இருந்து காற்று
உள்ளுக்குப் போவதுமில்லை. உள்ளுக்குள் இருந்து வெளியே வருவதும் இல்லை.
உள்ளுக்குள்
இருக்கும் சுவாசம் பிரம மந்திரத்துக்குப் போய் அதன் வாயிலில் மோதி
திரும்புவதுண்டு. அவ்விதமான காலங்களில் அதை பழக்கி வைத்திருப்பவர்களின் நாசிகளில்
சோதித்துப் பார்த்தால், சுவாசம் காணப்பட மாட்டாது.
மூச்சு என்ற பேச்சே பேசப்படாது. இந்த விபரம் தெரியாதவர்கள், அவர்
இறந்துவிட்டார் என்று நினைப்பர். ஆனாலும் ஜீவ நாடிகள் தளராது. உடல் உறுப்புகள்
ஏதும் பழுது அடையாது. உடல் சூடு காணப்படும். இப்படி வெகு நாட்கள் இருப்பர்.
அவர்களை துரியாதீத நிலையில் இருப்பவர் என்பர். சிலர் இதில் வருடக்கணக்கில்
இருப்பர். இப்படி இருப்பவர்களுக்கு இந்த உலகில் நடக்கும் விஷயங்கள் ஏதும்
தெரியாது.
ஆனாலும், இந்த பழக்கங்களை ஒரு தேர்ந்த குருவின் முன்னிலையில்,
அவரின் யோசனைப்படியே செய்ய வேண்டும். புத்தகங்களைப் படித்து விட்டு
இதை செய்யக் கூடாது. மூச்சு விடமுடியாமல் சிரமப்படவும் நேரிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக