சனி, 17 அக்டோபர், 2015

Wilson Doctrine

வில்சன் கோட்பாடு Wilson Doctrine
இங்கிலாந்து பார்லிமெண்டில் இந்த வில்சன் கோட்பாடு பின்பற்றப்படுகிறுது. இங்கிலாந்து பார்லிமெண்டில் பேசும் எம்.பி.யின் பேச்சை வைத்து அவரை வேவு பார்க்க கூடாது என்பதே இந்த வில்சன் கோட்பாடு. எம்.பி-க்கு எங்கிருந்தாவது ஒரு தகவல் வரும். அதைக் கொண்டு, அந்த எம்.பி., பார்லிமெண்டில் அந்த தகவலைத் தெரிவிப்பார். அதற்காக, அவரின் டெலிபோனை கண்காணித்து அவர் யாரிடம், எங்கிருந்து, எந்த முறையில், அந்த தகவலைப் பெற்றார் அல்லது பெறுகிறார் என வேவு பார்க்க கூடாதாம்.
இந்த வில்சன் கோட்பாடானது, Harold Wilson ஹரால்டு வில்சன் அவர்கள் இங்கிலாந்தில் 1966-ல் பிரதம மந்திரியாக இருந்தபோது, கொண்டுவரப்பட்ட கொள்கை என்பதால், அவர் பெயரை வைத்தே வில்சன் கொள்கை அல்லது வில்சன் கோட்பாடு Wilson Doctrine என்று அழைக்க ஆரம்பித்தனராம்.
அப்போது (1966ல்) இருந்த எம்.பி.க்கள் ஒரு புகாரை செய்தனர். “நாங்கள் பேசும் விபரங்களை சேகரிக்க, எங்களின் டெலிபோனை, அரசின் ரகசியப் பிரிவு ஒட்டுக்கேட்க ஆரம்பித்து விட்டது” என்று புகார். ஆனால், அப்போதைய பிரதமர் ஹரால்டு வில்சன், “அப்படிபட்ட விபரங்களை சேகரிக்கக் கூடாது” என்று இரகசிய போலிஸுக்கு உத்தரவு பிறப்பிக்கிறார். அதுமுதல் இதற்கு “வில்சன் கோட்பாடு” என்று பெயர்.

இப்போது இந்த பிரச்சனை வேறு உருவத்தில் வருகிறது. 2104 முதல் இதைப்பற்றி கருத்துக்கள் பறிமாறிக் கொள்ளப்படுகின்றன. வில்சன் கொள்கை என்பது 100% தடுக்கப்பட்ட கொள்கை அல்ல என்றும், ஒரு அளவுக்கு மட்டுமே அதை கடைப்பிடிக்க முடியும் என்றும் அரசு கூறுகிறது. இதற்கு எந்த சட்டமும் அங்கீகாரம் அளிக்கவில்லை என்கிறது அரசு. எனவே இதற்கு ஒரு தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் என அரசு நினைக்கிறது. 

மூலாதாரம்

முதுகெலும்பை வளைக்காமல் நேராக நிமிர்ந்திருக்க வேண்டியதன் அவசியம் எதற்கென்றால், சுவாசம் மூலாதாரத்தின்று புறப்பட்டு முதுகெலும்பை ஒட்டி மேலே ஓடும். பாதை நேராக இருக்கும்போது நீரும் காற்றும் விரைவாக ஓடும் இயல்பு கொண்டவை. வளைவாய் இருந்தால் வளைவுகளில் சற்றுநேரம் தடைப்பட்டு அதன்பின்னர் ஓடும். எனவேதான் முதுகெலும்பை நேராக வைத்திருக்க வேண்டும்.
வாயைத் திறக்காமல், நாக்கை உபயோகிக்காமல், உள்ளுக்குள் இருந்து வரும் சுவாசமானது "ஹம்" என்னும் ஓசையுடன் வெளியே போக வேண்டும். அவ்விதமே வெளியிலிருந்து உள்ளே செல்லும் சுவாசமானது "ஸா" என்னும் ஓசையுடன் போக வேண்டும். அவ்விதம் தினமும் பழகி வந்தால், சில தினங்களில்"ஹம்ஸா" என்ற ஓசை காதுகளில் கேட்கும். ஹம்ஸா என்னும் வார்த்தையே முன் பின் மாற்றப்படும்போது "ஸாஹம்" என வரும். இதுவே "ஸோஹம்" எனவும் "சிவோசம்" எனவும் உச்சரிக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் இரண்டு கண்களையும் மூக்கு நுனியைப் பார்க்கபண்ணி, படிபடியாய், பார்வையை உள்ளே செலுத்தி ஈற்றில் முழுப்பார்வையையும் லலாட இடத்தைப் பார்க்க வேண்டுமாம். (லலாட = மூக்கு முடிவில் இரண்டு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடம்).
பார்வை இருக்கும் இடத்தில் மனம் சென்று அடையும். அப்போது சலனமில்லாத மனநிலை ஏற்படும்.
மூலாதாரம் தொடங்கி, லலாட இடம் வரை உடம்பின் பகுதிகளில், ஜீவதாதுக்கள் அடங்கிய முக்கியமான இடம் ஆறு உண்டு. அந்த ஆறையும் ஆதாரமாகக் கொண்டு அதற்கு வேறு வேறு பெயர்கள் சூட்டி உள்ளார்கள். அந்த ஆறு இடங்களிலும் சுவாசம் முக்கிய தொழிலைச் செய்கிறதாம்.
இயல்பாக, சுவாசமானது, மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு, மேலே ஓடி, நாசி வழியாக வெளியே போகிறது. வெளியே இருந்து உள்ளுக்குச் செல்லும் காற்றும் மூலாதாரத்துக்குப் போய் மீள்கிறது.
யோகிகள் படிப்படியாக காற்றை மூலாதாரத்துக்குப் போகவிடாது தடுத்து, அதற்கு மேலே உள்ள ஆதாரத்தில் நிறுத்தி, அதை மறுபடியும் அதினின்றும் திருப்பப் பண்ணுகிறார்கள். அதுமாதிரி, மேலே உள்ள ஒவ்வொரு ஆதாரத்திலும் தடுத்து, அதிலிருந்து திருப்புகிறார்கள். இப்படியாக, நாசிக்குக் கீழே உள்ள ஆதாரங்களுக்கும் போகவும், மீளவும் செய்யும் காலத்தில் சுவாசம் நாசிவழியாக போக்கு வரத்து செய்யும். நாசிக்கு மேலே போய் அந்த இடத்தில் தங்கிவிட்டால், வெளியில் இருந்து காற்று உள்ளுக்குப் போவதுமில்லை. உள்ளுக்குள் இருந்து வெளியே வருவதும் இல்லை.
உள்ளுக்குள் இருக்கும் சுவாசம் பிரம மந்திரத்துக்குப் போய் அதன் வாயிலில் மோதி திரும்புவதுண்டு. அவ்விதமான காலங்களில் அதை பழக்கி வைத்திருப்பவர்களின் நாசிகளில் சோதித்துப் பார்த்தால், சுவாசம் காணப்பட மாட்டாது. மூச்சு என்ற பேச்சே பேசப்படாது. இந்த விபரம் தெரியாதவர்கள், அவர் இறந்துவிட்டார் என்று நினைப்பர். ஆனாலும் ஜீவ நாடிகள் தளராது. உடல் உறுப்புகள் ஏதும் பழுது அடையாது. உடல் சூடு காணப்படும். இப்படி வெகு நாட்கள் இருப்பர். அவர்களை துரியாதீத நிலையில் இருப்பவர் என்பர். சிலர் இதில் வருடக்கணக்கில் இருப்பர். இப்படி இருப்பவர்களுக்கு இந்த உலகில் நடக்கும் விஷயங்கள் ஏதும் தெரியாது.

ஆனாலும், இந்த பழக்கங்களை ஒரு தேர்ந்த குருவின் முன்னிலையில், அவரின் யோசனைப்படியே செய்ய வேண்டும். புத்தகங்களைப் படித்து விட்டு இதை செய்யக் கூடாது. மூச்சு விடமுடியாமல் சிரமப்படவும் நேரிடும். 

கிரேக்க மொழி வளம்

பழைய ரோமானிய அரசு நிலைகுலைகிறது. கிபி 4ம் நூற்றாண்டில் ரோம அரசின்மீது பல படையெடுப்புகள். என்னசெய்யும் பாவம் இந்த ரோம அரசு. சரிந்தேவிட்டது. பின்னர் இரண்டு பலம்பெறும் அரசுகள் தோன்றின. 1) மேற்கு ஐரோப்பாவில் உருவாகிறது. 2) மற்றது கிழக்கு ஐரோப்பாவில் உருவாகிறது. 1) மேற்கு ஐரோப்பாவுக்கு மிலன் முக்கிய நகராகவும், 2) கிழக்கு ஐரோப்பாவுக்கு கான்ஸ்டான்டைன் நோபிள் முக்கிய இடமாகவும் அமைகிறது. 1) மேற்கு ஐரோப்பாவுக்கு போப் தலைமை தாங்குகிறார், 2) கிழக்கு ஐரோப்பாவுக்கு வேறு ஒரு மதகுரு தலைமை தாங்குகிறார். 1) மேற்கு ஐரோப்பாவில் லத்தீன் மொழியும், 2) கிழக்கு ஐரோப்பாவில் கிரேக்க மொழியும் வேரூண்டுகின்றன.
கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டது. மக்கள் இந்த தேவாலயங்கள் மூலம் பாவத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு மோட்ச வழியை அடையலாம் என்று வெகுவாக நம்பினர். அதற்காக, கிறிஸ்துவின் பிரதிநிதியாக போப் இருப்பதாகவும், எனவே அவரே அதற்கு தலைமையும் தாங்கினார். அவருக்குக் கீழே, ஆர்ச்பிசப், பிசப், குரு என்பவர்கள் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு செய்ததால், மக்களும் ஒரே தேவாலயம், ஒரு சமயம் என்று ஒன்றுபட்டனர். மேற்கு ஐரோப்பாவில், ஜெருசலேமை இஸ்லாமியிரிடமிருந்து கைப்பற்ற சிலுவைப் போர்கள் நடந்தன. அதே நேரத்தில், இங்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பானியா போன்ற புதிய அரசுகள் தோன்றிவிட்டன. கான்ஸ்டான்டைன் நோபிளை 1453ல் துருக்கியர் கைப்பற்றினர். எனவே அங்கிருந்த கிரேக்கர்கள் , கிரேக்க பண்டிதர்கள் அனைவரும் குடிபெயர்ந்து மேற்கு நோக்கி சென்றனர். அவர்கள் அவ்வாறு சென்றபோதுதான், தங்களிடமுள்ள பல கிரேக்க, லத்தின் மொழி நூல்களையும் கொண்டு சென்றனர். அப்படிச் சென்றுதான், இத்தாலியில் கல்வியை பரப்பினர். அந்த நூல்களையும் பரப்பினர். இந்த நூல்கள்தான், மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதாம். இந்த உலக வாழ்க்கையில் விருப்பத்தையும், மறு உலக நம்பிக்கையையும், உண்மையை ஆராயும் அறிவையும் கொடுத்ததாம். இந்த நூல்கள்தான், அங்குள்ள மக்களை அறியாமை என்னும் இருளில் இருந்து அறிவு என்னும் ஒளியைக் காண்பித்துக் கொடுத்ததாம். இப்படித்தான், எங்கெங்கோ உள்ள மாணவர்கள், இந்த கிரேக்க பண்டிதர்களை சூழ்ந்து கொண்டனர்.


NJAC என்.ஜே.ஏ.சி.

NJAC என்.ஜே.ஏ.சி.
இந்திய சுப்ரீம் கோர்ட்டுக்கும், மாநிலங்களில் உள்ள ஐகோர்ட்டுக்கும் நீதிபதிகளை நியமிக்கும் முறையில் மாற்றத்தை எதிர்பார்த்து, இந்த என்ஜேஏசி கமிஷனை சட்டமாகக் கொண்டு வந்தது. ஆனால் அது சட்டப்படி செல்லாது என்றும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக உள்ளதாகவும் நேற்று சுப்ரீம்கோர்ட் தனது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.
கொலீஜியம் என்ற நடைமுறை கடந்த 22 வருடங்களாக இருந்து வந்திருக்கிறது. அதற்கு முன் வேறு ஒரு முறை இருந்து வந்திருக்கிறது. கொலீஜியம் என்றால், சுப்ரீம்கோர்ட் நீதிபதிகளைக் கொண்ட உயர்மட்ட குழுவே நீதிபதிகளை (சுப்ரீம் கோர்ட், மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளை) நியமிக்கும் அதிகாரத்தை கொண்டதாக இருக்கிறது. இதை மாற்றி, நீதிபதிகளுடன் மத்திய அரசையும் சேர்த்த ஒரு குழுவை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு நினைத்து இந்த என்ஜேஏசி என்ற அமைப்பை ஏற்படுத்தி, இந்திய அரசிலயமைப்புச் சட்டத்தில் ஒரு திருத்த சட்டமாக அதாவது 99வது திருத்த சட்டமாக கொண்டு வந்தது. அதை எதிர்த்துத்தான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு வந்தது. இந்த வழக்கை, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளான Justice JS Khehar, Justice J.Chellameswar, Justice Madan B.Lokur, Justice Kurian Jospeh, and Justice Adarsh Kumar Goel ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்து தீர்ப்பை வழங்கி விட்டது. கொலீஜியமே தொடரட்டும், புதிய அமைப்பான என்ஜிஏசி வேண்டாம் என்று தெளிவாக சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பைச் சொல்லிவிட்டது.
இதில் சில சிறப்பு அம்சங்கள்:
1.   ஜஸ்டிஸ் செல்லமேஸ்வர் அவர்கள் மட்டும், மற்ற நான்கு நீதிபதிகளின் முடிவுக்கு மாறாக, ஒரு மாறுபட்ட தீர்ப்பை இதில் கொடுத்திருக்கிறாராம். (என்ஜிஏசி மூலம்தான் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்ற மாறுபட்ட தீர்ப்பு).
2.   1993 லிருந்து கொலிஜியம் முறைதான் இருந்து வருகிறது. இப்போதும் அதுவே தொடர வேண்டும் என்று நான்கு நீதிபதிகளின் தீர்ப்பு. (இது 5ல் 4 தீர்ப்பாகும்).
3.   இந்திய அட்டார்னி ஜெனரல் திரு. முகுல் ரோகாத்கி அவர்களின் வாதம் என்னவென்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்லிமெண்ட் ஒரு சட்டத்தை கொண்டு வருகிறது. மத்திய அரசும், நீதிபதிகள் நியமனத்தில் கலந்து கொண்டால் வெளிப்படைத் தன்மை இருக்கும் என்றும் எனவே என்ஜிஏசி –தான் சரியான முறையாக இருக்கும் என்றும் அழுத்தமாக வாதிட்டார். ஆனால் அவர் வாதத்தை சுப்ரீம்கோர்ட் ஏற்றுக் கொள்ளவில்லை.

**

Apple iphone 6S & Plus

 ஆப்பிள் ஐபோன் 6S & Plus
ஒரு மாதத்துக்கு முன்னரே ஆப்பிள் ஐபோன் 6S அமெரிக்காவில் அறிமுகம் ஆகிவிட்டது. இப்போது நேற்று 16ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிட்டது.
16 ஜபி போன் ரூ.62,000/- க்கும், அதன் அடுத்து அடுத்த மாடல்கள் ரூ.10,000 அதிகமாகவும் விற்பனைக்கு வந்துவிட்டாதாம். 6S Plus போன் 128GB கொண்டது ரூ.92,000 விலை.
ஐபோன்6S போன் 4.7 இன்ச் திரை கொண்டதாம். ஐபோன் 6S Plus போனின் திரை 5.5 இன்ச்.
இந்த புதிய ஐபோன்கள் 2GB RAM கொண்டது. A9  புராச்சர் வேலை.  70% வேகமாகச் செயல்படுமாம்.
அனைவருக்கும் புதிய ஆப்பிள் போன் கிடைக்க வாழ்த்துக்கள்!


வெள்ளி, 16 அக்டோபர், 2015

Perennial - பெரெனியல்

Perennial = பெரெனியல் = வருடமெல்லாம் நிகழும் ஒரு செயலை பெரெனியல் என்று சொல்கிறார்கள் ஆங்கிலேயர்கள். வருடமெல்லாம் பலன் கொடுக்கும் பயிர்கள், மரங்கள் இவைகள் பெரெனியல் பயிர்கள், மரங்கள் என்கிறார்கள். Per என்றால் throughout என்றும் annus என்றால் year என்றும் பொருள் இருப்பதால், இதை பெரெனியல் என்று பெயர்க்காரணத்துடன் சொல்கிறார்கள். மனிதர்களின் இறப்பும் தொடர்ந்து நடப்பதால் இதையும் பெரினியல் என்ற அர்த்தத்திலேயே <death is a perennial> என்றே சொல்கிறார்கள்.
வருடமெல்லாம் தொடர்வதை பெரெனியல் என்று சொல்வதால், இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தொடர்வதை <biennial> பையனியல் என்கின்றனர். <bi> என்றால் இரண்டு <annus> என்பது வருடம்; எனவே இரண்டாண்டுக்கு ஒரு முறை நடக்கும் எந்தச் செயலையும் பையனியல் <biennial> என்று சொல்லிக் கொள்ளலாம். சில பயிர்கள், மரங்கள் இரண்டாண்டுக்கு ஒருமுறை பலன் தரும். இவைகள் இந்தப் பெயரில் அழைத்துக் கொள்ளலாம்.
ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வை <quinquennial> குன்-குயினியல் என்கின்றனர். Quinque என்றால் ஐந்து. Annus என்றால் வருடம். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வெளிவரும் பத்திரிக்கைகளை Quinquennial Digest என்பர்.

சென்டம் என்றால் நூறு. <Centennial> என்பது நூற்றாண்டு. அதேபோல, 500 வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் நிகழ்வைக் குறிக்க <Quincentennial> குயின்-சென்டேனியல் என்கின்றனர். <quinque> என்றால் லத்தீன் மொழியில் ஐந்து என்றும்; <centennial> சென்டெனியல் என்றால் ஆங்கிலத்தில் நூறு என்றும் பொருள். 

French word “De”

French word “De”
இந்த பிரெஞ்ச் வார்த்தையான “டி” தான், பிரெஞ்ச் மொழியிலேயே மிக அதிகமாக உபயோகப்படுத்தும் வார்த்தையாம். ஆச்சரியமாகவும் இருக்கிறது. பல அர்த்தங்களைக் கொண்ட வார்த்தையும் இதுதானாம்.
Le chien de Paul = Paul’s dog. 
La femme due Boulanger = the baker’s wife. 
Le jour de Noel = Christmas Day. 
De + le = du (du salon) 
De + les = des (des villes) 
The city of Paris இதை பிரெஞ்ச் மொழியில் la ville de Paris என்கிறார்கள்.
La vieille ville என்பது “the old town” என்று பொருள்.
ஆங்கிலத்துக்கு அடுத்த இந்த பிரெஞ்ச் மொழிதான் உலகில் அதிகம் பேசப்படும் மொழியாம். 80 மில்லியன் பிரெஞ்ச் மக்கள் பேசும் மொழியாகவும், வேற்று மொழிக்கார்களால் சுமார் 190 மில்லியன் மக்களால் பேசப்படுகிறதாம்.
விளையாட்டாக, பிரென்ஞ் மொழியை தினமும் பயின்று வரலாம்.


Left-hand இடதுகை

Left-hand இடதுகை
வலது கை, இடது கை என்று கைகளுக்கு பெயர் சூட்டிவிட்டோம். ஆங்கிலேயர்கள் இதை Right-hand, Left-hand என்று சொல்கிறார்கள். இதற்குறிய பெயர் காரணம் தெரியவில்லை. வலது, இடது என்பதற்கும் பெயர் காரணம் தெரியவில்லை. இந்த வலது, இடது பெயர்கள் பெரும்பாலோரை குழப்பிவிடும். எது வலது, எது இடது என்று தெரியாமல் தவிப்பர். இவர்களுக்கென்றே ஒரு புதுமொழி உள்ளது. வலதுகையை “சோற்றுக்கை அல்லது சோத்துக்கை” என்றும் இடதுகையை “பீச்சாங்கை” என்றும் வழக்குமொழியில் கூறிக் கொள்வர். பொதுவாக நம் உடம்பில் உள்ள இரட்டை உறுப்புக்கள் எல்லாம் ஒரே மாதிரி உருவ அமைப்பிலும், செயல்பாட்டிலும் இருக்கிறது. ஆனால் இந்த இரண்டு கைகளின் செயல்பாட்டில் பெருத்த மாறுபாடு தெரிகிறது. வலது கை ஏதோ ஹீரோ மாதிரியும், இந்த இடது கை ஏதோ வில்லன் மாதிரியும் செயல்பாட்டில் இருக்கிறது. எல்லா நல்ல வேலைகளையும் வலதுகை செய்கிறது. மற்ற துணை வேலைகளை இடதுகை செய்கிறது. அதிலும் குறிப்பாக, வலது கைக்கு வலிமை அதிகம் இருப்பது போலவும் தெரிகிறது.

பிறந்த குழந்தைக்கு எந்த பயிற்சியும் கொடுக்காமலேயே அது தனது வலது கையைக் கொண்டே ஆரம்ப வேலைகளை செய்கிறதே! அதன் காரணம் என்ன? பிறவியிலேயே வலது கைக்குக்கும் மூளைக்கும் ஏதேனும் தனித் தொடர்பு இருக்குமா? பயிற்சி எடுத்தால், நாம்கூட இடது கையால் எழுதலாம் என்கிறார்கள் வல்லுனர்கள். பயிற்சி எடுத்துத்தானே எழுதிப் பழக வேண்டும். அவசரத்துக்கு வலதுகை தானே முன்னாடி வருகிறது.

இடது கை பழக்கமுள்ளவர்கள் வெகு சிலரே! இவர்களுக்கு மட்டும் எப்படி இந்த இடது கைப் பழக்கம் பிறவியிலேயே வந்து இருக்கும்! ஒருவேளை மூளையில் உள்ள இந்த மூளைப்பகுதி இடம் மாறி இருக்குமோ! இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் அதி புத்திசாலிகளாகவும் இருப்பது நம்மை சிலநேரங்களில் ஆச்சரியப்படுத்துகிறது. உலகின் மிகப் பிரபலமான பலர் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள்தான். இதன்படி பார்த்தால், மூளையின் இடதுகைப்பகுதி மூளை இடம் மாறி உள்ளவர்கள் பிரபலமானவர்களாக இருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.


கையில் உள்ள ரேகைகளிலும் இந்த வல-இட வேறுபாடுகள் அதிகம் உள்ளன. ஆண்களுக்கு வலது கை ரேகையை பார்த்து ரேகை சாஸ்திரம் கணிக்க வேண்டும். பெண்களுக்கு இடது கை ரேகையைப் பார்த்து கணிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக, கையின் கட்டை விரலில் உள்ள ரேகைக்கு ஏதோ ஒரு முக்கியத்துவம் இருப்பதுபோலவே தோன்றுகிறது. அந்த ரேகையில் பல விஷயங்கள் இருப்பதாக தெரியவருகிறது. ஓலைச்சுவடி சாஸ்திரம் இப்போது மிகப்பிரபலமாக இருக்கிறது. அந்த ஓலைச் சுவடிகளை பார்ப்பதற்கு, ஆண்களுக்கு அவர்களின் வலது கட்டைவிரலின் ரேகையை பார்த்து அவரவர் சுவடியைக் கண்டுபிடிக்கிறார்கள். பெண்களுக்கு இடது கட்டைவிரல் ரேகை தேவை. நம் வாழ்வின் மொத்த விஷயத்தின் ப்ளூ-பிரிண்ட் Blue-Print இந்த கட்டைவிரலில்தான் உள்ளதோ என்று ஆச்சரியப்பட வைக்கிறது. என்னதான் விஞ்ஞானம், விஞ்ஞானம் என்று கத்தினாலும் அந்த கட்டை விரலிலும் அந்த விஞ்ஞானம் எங்கோ ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. 

எனக்குச் சொர்க்க வாசல் திறக்குமா?

எனக்குச் சொர்க்க வாசல் திறக்குமா?

வாயில்திற வுண்டிட மலர்ந்தவ னசம்போல் 
நேயன்வ தனந்திகழ நேயமொடு நோக்கி 
ஆயென வெதிர்தனையெ னையவிவண் செய்ய 
தீயன்வர வொல்வதுகொல் யாதுனது சித்தம்.


சொர்க்கத்தின் வாயில் கதவு திறக்கப்பட்டதும்; மலர்ந்த வனசம் போல் (மலர்ந்த தாமரை மலரைப் போல); நேயன் வதனந் திகழ (சொர்க்கத்துக்கு பிரயாணம் செய்யும் விருப்பதுடன் உள்ள); நேயமொடு நோக்கி (சொர்க்கதின் வாயிற் காவலனை அன்புடன் நோக்கி); ஆயென எதிர்ந்தனை (என் தாயைப் போல என் முன் தோன்றி); இவண் வெய்ய தீயன் வர ஒல்வது கொல் (இந்தக் கொடிய பாவி இங்கு வர தகுமா? உன் விருப்பம் என்ன? என்று சொர்க்கத்தின் வாயில் காவலனைக் கேட்கிறான்.

சொர்க்கத்தின் கதவு

சொர்க்க கதவைத் திறப்பது:

இன்னவித மாகவுரை யாடியெழி லாரும் 
வன்னமணி வாயில்செறி மாண்கதவு தட்டி 
உன்னிநனி யோலமிட வுள்ளுருகி யுள்ளா 
மன்னுகடை காவலன் மருங்குற வணைந்தே.

இன்ன விதமாக (இந்தவிதமாக) உரையாடி, எழில் ஆரும் (அழகு நிறைந்த) வன்ன மணிவாயில் (பல வண்ண மணிகள் அமைந்த வாயில்) உள்ள கதவைத் தொட்டு; உன்னி நனி ஒலம் இட (இறைவனை நினைத்து மிகவும் உரத்த குரலில் முறையிட; உள்ளாமன்னு (உள்ளே உள்ள) கடைகாவலன் (வாயில் காவலன்), உள்உருகி (உள்ளம் இரங்கி), மருங்கு உற அணைத்து (தேவனின் கட்டளையை நினைத்து),


செவ்வாய், 13 அக்டோபர், 2015

ஸ்டால்யன்

//Stallion (stal-yen) “ஸ்டால்-யன்” குதிரை. காயடிக்காத குதிரை. மாடுகளில் உழவுக்கான காளை மாடுகள் உள்ளன. காயடிக்காத காளை “பொலி காளை”. இனவிருத்தி செய்யப்படுவதற்காக வளர்க்கப்படும் காளைகள். இப்படிப்பட்ட பொலிகாளைமாடு போன்றதே “பொலி குதிரை”. அதன் பெயர் ஸ்டால்-யன். ஆடுகளில் கூட இப்படி பொலி ஆடுகள் உள்ளன. அவைகள் Stud (sted) “ஸ்டடு”. குதிரைக்கு சமஸ்கிருத மொழியில் “அஸ்வ” என்று பெயர். Steed ஸ்டீட், இது போருக்கு போகும் குதிரை. வீரக் குதிரை. குதிரைவீரன் அமர்ந்த செல்லும் குதிரை. குதிரை வீரனுக்கு “நைட்” என்ற பெயர் knight. இதை பட்டமாக கொடுப்பார்களாம். கூட்டமாக போர்வீரர்கள் குதிரை மேல் அமர்ந்து சென்றால் கேவல்ரி cavalry (cav-al-ry). பெண் குதிரைகளுக்கு mare  மேர் என்று பெயர். பொதுவாக horse என்றால் அது ஆண் குதிரைதான். பெண் குதிரையை mare என்றே சொல்ல வேண்டும். Horse என்றால் ஆணோ, பெண்ணோ பொதுவில் குதிரைதான். ஆனால் ஒரு வழக்கில் இதை வைத்து ஒரு வேடிக்கை தீர்ப்பு வருகிறது. மதராஸ் பிரசிடென்சியில் பிரிட்டீஸ் ஆட்சி காலத்தில், நான்கு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டி ஓடிக் கொண்டிருந்த்து. திடீரென்று ஒருநாள், நான்கு குதிரைகள் பூட்டி வண்டிகளை ரோட்டில் ஓட்டக் கூடாது என்று சட்டம் வருகிறதாம். ஒரு பெரிய மனிதர் இந்த நான்கு குதிரைபூட்டிய வண்டியில் பயணம் போகிறார். அவர் மீது வழக்கு. அந்தப் பெரிய மனிதருக்காக, மதராஸில் பிரபலமான கிரிமினல் வக்கீல் ஆஜராகிறார். நான்கு குதிரைகள் பூட்டிய வண்டியில் வந்தது தவறுதானே என்று நீதிபதி கேட்கிறார். பதில்: அந்த நான்கு குதிரைகளில் ஒன்று mare  (பெண் குதிரை) என்கிறார் வக்கீல். Horse குதிரை என்றால் ஆண் குதிரையை மட்டுமே குறிக்கும். Mare என்றால் பெண் குதிரை. சட்டத்தில் horse  என்னும் ஆண் குதிரையில்தான் வரக்கூடாது என்று உள்ளது. Mare என்னும் பெண் குதிரையில் வந்தால் சட்டப்படி தவறில்லை என்று சொன்னாராம். பெரிய மனிதர் தப்பிவிட்டார். // 
// hamlet (ham-let) ஹாம்லெட். சின்ன கிராமத்துக்குப் பெயர் ஹாம்லெட். குக்கிராமம். இங்கிலாந்து நாட்டில் ஒரு கிராமத்தில் 100 பேருக்கு கீழ் வாழ்ந்தால், அந்த கிராமம் hamlet. தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் 1000 பேருக்கு கீழ் மக்கள் தொகை இருந்தால், அந்த கிராமம் ஹாம்லெட் கிராமம் அல்லது குக்கிராமம். அந்த குக்கிராமத்தின் பெயரை எல்லா இடங்களிலும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம், ஆனால், வருவாய்த்துறை ஆவணங்களில் அந்த குக்கிராமத்துக்கு பக்கத்தில் உள்ள பெரிய கிராமத்துடன் இணைத்து அந்த பெரிய கிராமத்தின் பெயரையே இதற்கும் வைத்து விடுவார்கள். ஆனால் அந்த பெரிய கிராமத்தின் பெயருடன் “B”  என்ற எழுத்தை சேர்த்து விடுவார்கள். அப்படியென்றால் அது ஒரு குக்கிராமம் hamlet  என்றும், தனிகிராமம் separate Revenue Village   இல்லை என்றும் அர்த்தமாகுமாம். //

ஜூபிடர்

Jupiter ஜூபிடர் என்றால் குரு அல்லது வியாழன். தமிழில் வியாழன். மற்ற எல்லா இந்திய மொழிகளிலும் இவர் பெயர் குரு. Mars என்றால் செவ்வாய். இந்த இரண்டும் சில நேரங்களில் குழப்பிவிடும். Sun, Moon, Mercury, Venus, Saturn, இவைகளை அடையாளம் கண்டுகொள்வதில் பிரச்சனை ஏதும் இல்லை. Jupiter என்று பெரிதாக பெயர் இருந்தால் குரு என்று சிறிதாக இருக்கும். Mars  என்று சிறிய பெயரில் இருந்தால் செவ்வாய் என்று பெரிதாக இருக்கும். சும்மா இப்படி அடையாளம் வைத்துக் கொள்ள வேண்டியதுதான்! ஜூபிடர் என்பது ரோமன் மக்களின் ஆகாயக் கடவுளாம். இவர்தான் தலைமை கடவுளும் கூட. இவர் மனைவி பெயர் Juno. இந்த ஜூனோ சொர்க்கத்தின் ராணியாம், Queen of heaven. (heaven என்றால் சொர்க்கம் தானே?) இவர் ஜூபிடர் கடவுளுக்கு மனைவியாக, ராணியாக இருந்தாலும், இவருக்கும் தனி department இருக்கிறதாம். இவர் ஒளி, பிறப்பு, பெண், திருமணம் இவைகளுக்குறிய பெண் கடவுளாம், Goddess. ரோமானியர்களுக்கு இவர்கள்தான் தலைமை கடவுள். Jupiter & Juno.  நம்ம ஊரில் சிவபெருமான்-பார்வதி மாதிரி. இதேபோல, கிரேக்கர்களுக்கும் தலைமை கடவுளும் அவர் மனைவியும் உள்ளனர். உலகம் பூராவும், சாமி இல்லாமல் வாழவே மாட்டார்கள் போல. கிரேக்க சாமிக்குப் பெயர் Zeus. இவரை ஜூஸ் என்றும் ஜீயஸ் என்றும் பலவாறு உச்சரித்துக் கொள்கின்றனர். என் காதில் கேட்டவரை இவரை ‘Zus’ ஜ்(உ)ஸ் என்றுதான் உச்சரிக்கிறார்கள். இந்த கிரேக்க சிவபெருமானின் பெண்டாட்டி சாமி பெயர் Hera. (hir-e) ஹிரே என்று பெயர். இந்த ஜூஸ் சாமிக்கு இந்த ஹிரே மனைவியாக இருந்தாலும், உண்மையில் இவர்கள் இருவரும் அண்ணன்-தங்கை. இவர்கள் மனிதர்களில் முதல் தோற்றம் என்பதால் இந்தக் குளறுபடிகள் உண்டு. அதற்குப்பின் இந்த குழப்பம் எல்லாம் இல்லை. ஆரம்பகால ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறு வழியில்லையே! மன்னித்துவிடுவோம். Hera, the consort of Zeus.  இராஜா நாட்டை ஆள்வார். இராஜாதான் அதிகாரம் மிக்கவர். அவரின் மனைவி துணைக்கு இருப்பார். இராஜாங்கத்தில் பக்கத்தில் இருப்பார். அவருக்கு இந்த அரசாங்க அதிகாரம் ஏதும் தனியே கிடையாது. இராஜாவின் மனைவி ராணி என்ற அந்தஸ்து மட்டுமே. இப்படிப்பட்ட ராணிகளை Queen Consort என்று சொல்வர். இராஜாவின் மனைவி ராணி, அவ்வளவே. இது இல்லாமல், ராணியாகவே அதிகாரத்தில் இருந்து நாட்டை ஆளும் ராணியும் இருக்கிறார். இப்போது உள்ள பிரிட்டீஸ் எலிசபத் மகாராணி மாதிரி. அவரே நேரடியாக நாட்டை ஆள்வார். அவரின் கணவருக்கு ஆட்சி அதிகாரம் ஏதும் கிடையாது. ராணியின் கணவர் அவ்வளவே. இப்படிப்பட்ட ராணிகளை, நேரடியாக ஆட்சி செய்யும் ராணிகளை Queen Regnant என்பர். ஒரு சில நேரங்களில் மன்னர் சின்ன பையனாக இருப்பார். அப்போதும் இந்த இளவரசரின் தாயார் Queen Regnant ஆக இருந்து ஆட்சி செய்வார். குயின் ரெக்னன்ட். நேரடி ஆட்சி செய்யும் ராணி. Regnum ரெக்னம் என்றால் kingdom என்று லத்தீன் மொழியில். கடவுளின் கட்டளைப்படி ஆட்சி செய்வரை kingship என்று அழைப்பார்களாம். // 

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

சர் வின்ஸன் சர்சில் Sir Winston Churchill

சர் வின்ஸன் சர்சில் Sir Winston Churchill
இவர் இங்கிலாந்தின் (The United Kingdom) பிரதமராக 1951 லிருந்து 1955 வரை இருந்த பிரபலமான பிரதமர்.

இவரைப் பற்றி வேடிக்கையாக ஒரு கதையும் உண்டு. (அது உண்மைதானாம்).

இவர் பிரதமர் பதவியில் இருக்கும்போது, இவருக்கு ஒரு உதவியாளர் இருந்தார். சர்ச்சில் ஆங்கிலப் புலமை மிகுந்தவர். வார்த்தை ஜாலத்துடன் எழுதுவார். இவரைப் போலவே ஆங்கில அறிவு படைத்தவர் இவரின் உதவியாளரும். சர்சிலின் கடிதங்களை தயார் செய்து சரிபார்த்து சர்சிலின் கையெழுத்துக்கு அனுப்புவாராம். சர்ச்சில் அந்த கடிதங்களில் உள்ள சிறு குறைகளை சரி செய்து, பின்னர் தன் கையெழுத்தை போட்டு அனுப்புவாராம். எப்போது கடிதத்தை அனுப்பினாலும், அதில் ஏதாவது ஒரு திருத்தம் செய்து பின்னரே கையெழுத்து போடுவாராம் சர்சில். இது அவரின் உதவியாளருக்கு மிகுந்த வருத்தத்தை அளித்ததாம். எவ்வளவு உன்னிப்பாக படித்து திருத்தி அனுப்பிய கடிதமாக இருந்தாலும், அதிலும் ஒரு குறை கண்டுபிடித்து ஒரு எழுத்தையாவது மாற்றி பின்னர் கையெழுத்துப் போடுவாராம்.

ஒருநாள், ஒரு சிறு கடிதம் தயாரிக்க வேண்டி இருந்தது. இரண்டே வரிகள் கொண்ட கடிதம். மிகக் கவனமாக ஆங்கில வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்த, எந்த இலக்கணப் பிழையும் இல்லாமல், தயாரித்து, அதை சர்ச்சிலின் கையெழுத்துக்கு அனுப்புகிறார் அவரின் உதவியாளர்.
அதைப் பார்த்த சர்சில், ஒரே ஒரு வார்த்தையை மட்டும் மாற்றி எழுதி, தன் கையெழுத்தைப் போட்டு அனுப்புகிறார் சர்ச்சில்.

வந்ததே கோபம் அவரின் உதவியாளருக்கு. நேராக சர்ச்சிலின் அறைக்குப் போகிறார். அந்தக் கடிதத்தைக் காண்பித்து, நான் எழுதிய வார்த்தையில் எந்தக் குறையும் இல்லை, எந்த இலக்கணப் பிழையும் இல்லை. சரியாகத்தானே எழுதி இருந்தேன். இதை ஏன் திருத்தினீர்கள் என்று சற்று கோபமாகவே கேட்கிறார்.

அதற்கு, சிரித்துக் கொண்டே சர்ச்சில் பதில் சொல்கிறார்.
“நீ எழுதிய கடிதத்தில் ஒரு பிழையும் இல்லை; இதுவரை எனக்கு அனுப்பிய எந்தக் கடிதத்திலும் ஒரு பிழையைக் கூட காணமுடியாது. நீ என்னைக் காட்டிலும் ஆங்கிலப் புலமை உள்ளவன் என்று எனக்குத் தெரியும். ஆனாலும், இந்த என் கையெழுத்து உள்ள கடிதங்களை பார்க்கும் நபர்கள், ஏதோ, இந்த சர்ச்சில் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்து இடுகிறார். நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்துப் போட்டுவிடுவார். கையெழுத்துப் போடுவதைத் தவிர, அதில் உள்ள வாசகங்களை சர்ச்சில் படிக்க மாட்டார் என்று ஊரார் நினைத்து விடக்கூடாது என்பதற்காவே, நான் வேண்டுமென்றே நல்ல எழுதியுள்ள வார்த்தைகளில் ஒரு சில திருத்தங்களை வேண்டுமென்றே என் பேனாவினால் அடித்து எழுதிப் பின்னர் கையொப்பம் இடுகிறேன். அப்படி என் திருத்தங்களைப் பார்ப்பவர்கள், நான் ஏதோ முழுவதும் படித்துவிட்டுத் தான் கையெழுத்தை போட்டேன் என்று நினைத்துக் கொள்வார்கள். அதனால்தான் அப்படிச் செய்தேன். உன்னிடம் நான் எந்த் குறையையும் காணவில்லை” என்று கூறி உள்ளார்.

சிலருக்கு தப்பை கண்டுபிடிப்பதே வேலையாக இருக்கும். அதில் சேர்ந்தவர்போல இந்த சர்ச்சிலும். வேடிக்கையான மனிதர்தான்.
**


புதன், 7 அக்டோபர், 2015

மாயை

"மாயை"

நாரதர், நாராயணனிடம் மாயை பற்றிய விளக்கம் கேட்டார். 

நாராயணன்;- "அதோ அந்த ஆற்றில் நீர் முகந்து வருக, தாக சாந்தி செய்துவிட்டு, மாயை பற்றிப் பேசுவோம்"

நாரதர் ஆற்றங்கரைக்குப் போய், முதலில் அவர் தாக சாந்தி செய்து கொண்டு, பின்னர், கமண்டலத்தில் நீர் முகந்து கொண்டு வரும்போது, ஆற்றங்கரை மணலில் சற்றே தங்கி விட்டுச் செல்லலாம் என்று ஆசையாக இருந்திருக்கிறது. அதை ரசித்துக் கொண்டு இருக்கும்போது, தூக்கம் கண்களை கட்டி சொருகி விட்டது, அயர்ந்து தூங்கிவிட்டார்.

தூக்கத்தில் ஒரு கனவு:-
"திருமணம் செய்து பிள்ளைகளைப் பெற்று பெரிய குடும்ஸ்தனாக ஆகிவிட்டார் நாரதர். ஏராளமான மாடு கன்றுகள் அவரிடம் உள்ளன. வீட்டில் வளர்க்கும் பிரிய பூனைகள் ஏராளம். நாய்கள் ஏராளம். இப்படி வாழ்ந்து கொண்டிருக்கும்போது, ஒருநாள், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. எல்லாம் அழிந்துவிடும் போல இருக்கிறது. நாரதருக்கு துக்கம் அதிகமாகிவிட்டது. மணலில் விழுந்து புரண்டு அழ ஆரம்பிக்கிறார். கை கால்களை உதறிக் கத்தி கூக்குரல் இடுகிறார்"

கனவும் முடிகிறது. திடுக்கிட்டு எழுகிறார். 

இவர்  செய்த அமளியில், கமண்டலத்தில் இருந்த நீரைக் கைதட்டிக் கொட்டிவிட்டார். 
மறுபடியும் கமண்டலத்தை எடுத்து நீர் மொண்டுவர செல்கிறார். நீரை எடுத்துக் கொண்டு ஒடுகிறார். ஐயோ! நாராயணனுக்கு தாகம் என்று சொன்னாரே. இப்படி காலதாமதம் செய்துவிட்டேனே! புலம்பல்! 

நாராயணன் இதைப் பார்த்த உரத்த குரலில் சிரிக்கிறார்.

"நாரதரரே! மாயை பற்றி உமக்கு விளங்கி விட்டதா?" என்று கேட்கிறார். 

"ஆம்! நாராயணா! தெரிந்துகொண்டேன் என்று கூறிவிட்டு, இந்த உலகத்தைப் பார்த்து சிரித்தவாறே செல்கிறார் மேல் உலகை நோக்கி.

இந்த நனவும் ஒருநாள் கனவு ஆகும். நனவு, கனவாய் பழங்கதையாய் மறையும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

சனி, 3 அக்டோபர், 2015

நாய் நமதென நரி நமதென

"நாய் நமதென நரி நமதெனப்  பிதா
தாய் நமதென நமன்றன தெனப் பிணி
பேய் நமதென மனமதிக்கும் பெற்றிபோ
லாய்நமதெனப்படும் யாக்கை யாரதே."

உறவுகள் யாரும் இல்லாமல் நோய்வாய்ப்பட்டு தனியாக காட்டில் வழியற்ற நிலை வந்து கிடக்கும் காலத்தில், இந்த உடல் யாருக்கு சொந்தமாகும்?

இந்த உடல் வீட்டில் இருந்தால், தாய் தந்தை தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடுவர்;
இந்த உடல் காட்டில் கிடந்தால், நாயும் நரியும் தங்களுக்குச் சொந்தம் என்று சொந்தம் கொண்டாடும்;
இந்த உடல் இருட்டில் கிடந்தால், பேய் தனக்குச் சொந்தம் என்று கொண்டாடும்;
இப்படியாக, அவரவர் வாய்க்கு வந்தபடி, இந்த உடலை சொந்தம் கொண்டாடிக் கொள்வர்.
இந்த உடலானது, பிறர் துன்பத்தில் வருந்துவதைப் பார்த்து அவருக்கு உதவி செய்யவே படைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து, இந்த உடலை அதற்காகவே பயன்படுத்துவேன் என்று கருதவேண்டுமாம்;