ஞாயிறு, 17 ஜூலை, 2016

நையாயிகர்


நையாயிகர் (சித்தும் சடமும்)
இவர்கள் கௌதம மதவாதிகள்; இவர்களின் தத்துவம் மற்ற மதங்களின் தத்துவங்களிலிருந்து விலகி சொல்லப்பட்டுள்ளது;
இவர்களின் மதக் கொள்கைப்படி --
சித்தும், சடமும் ஆகிய இரண்டும் நித்தியப் பொருள் (அழியாத நிரந்தரப் பொருள்) என்ற கொள்கை உடையவர்கள்;
சடமாகிய இந்த உலகம் பீஜத்தினிலிருந்து தோற்றுவிக்கப்பட்டது என்றும், அதை தோற்றுவித்தது சித்துப் பொருள் என்றும், அவ்வாறு இந்த உலகம் தோன்றும் போது, பீஜம் ஒரே அணுவாகவே (ஏக அணுவாகவே) இருந்தது என்றும், பின்னர் அது இரண்டாக உடைந்து துவி அணுவாக (இரண்டு அணுவாக) பிளந்தது என்றும், பின்னர், அது திரி அணுவாக (மூன்று அணுக்களாக) பிரிந்து ஒரு வடிவம் கொண்ட பொருளாக ஆகி விட்டது என்றும் கூறுகின்றனர்;
இந்த உலகம், மறுபடியும், ஒடுங்கும் காலத்தில், அதேபோல, திரி அணுக்கள், துவி அணுக்களாகி, துவி அணுக்கள், ஏக அணுவாகி, ஒடுங்கி, பீஜமாய் நிற்கும் என்பர்;
எனவே அது அழியாத் தன்மை கொண்டது என்றும், நித்தியமாய் இருக்கிறது என்றும், வடிவம் கொண்டது என்றும், எனவே சித்தும் சடமும்  நித்தியம் என்றும், சித்தின்றி, சடம் காரியப் படாது என்றும், ஆன்மகோடிகள் என்னும் இந்த உலக உயிர்கள் எல்லாம் அந்த சித்துப் பொருளின் அம்சமே என்றும், இந்த சித்து சிறிய உயிர்களில் நிலைப்பதால், சிறிய அறிவும், சிறு தொழிலும் கொண்டு இயங்குகின்றன என்றும் கூறுகின்றனர்;
அதேபால், ஜகத்காரணமாகிய பெரிய சித்து முற்றான அறிவு கொண்டது என்றும், முற்றான தொழிலைச் செய்கிறது என்றும், கூறுகின்றனர்;
ஆன்மாக்கள், சரீரத்தோடு (உடலோடு) கூடி இருக்கும்போது, அஞ்ஞானம் உடையதாய் இருக்கிறது (ஞானம் இல்லாமல் இருக்கிறது) என்கின்றனர்; ஆனால் இந்த ஆன்மாக்கள், தன் இடையறாத முயற்சியால் ஞானத்தை அடையும்போது, அத்தகைய ஆன்மாக்கள், முழுமுதல் சித்தோடு சேர்ந்து, பேரானந்தத்தை அனுபவிக்கத் தொடங்கிறது என்றும் கூறுகின்றனர்;
(இதுதான் நையாயியர்களின் மதக் கொள்கை)
**


நீலி


பழையனூர் நீலி:
பழையனூர் என்று ஒரு ஊர்; அங்கு ஒரு வணிகர் இருக்கிறார்; அவருக்கு திருமணம் ஆகி மனைவியுடன் வாழ்ந்து வந்தார்; அந்த மனைவி சிலகாலம் வாழ்ந்து இறந்து விட்டார்; தான் இறந்தவுடன், தன் கணவர் மறுமணம் செய்ய மாட்டார் என்று நினைத்தாள்; ஆனால் அதற்கு மாறாக அந்த வணிகனோ மறுமணம் செய்து கொண்டு, அந்த இரண்டாவது மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான்;
இறந்த முதல் மனைவி, பேயாக அலைந்து பூமியில் திரிகிறாள்; அவளுக்குத் தன் கணவர் மீது கொடும் கோபம்! இறந்தவள், பேயாக திருவாலங்காட்டு பகுதியில் திரிகிறாள்;
ஒருநாள், அந்த வணிகன், வியாபார நோக்கமாக, அந்த காட்டுவழியில் வருகிறான்; அதை அந்த முதல் மனைவி பேய் தெரிந்து கொண்டு, ஒரு பெரிய நாடகத்தை நடத்தி வைக்கிறது;
அந்த முதல் மனைவி என்னும் பேய், அவள் கணவனின் இரண்டாவது மனைவியைப் போல வேடம் அணிந்து கொண்டு, அவனிடம் வருகிறது; அவ்வாறு வரும்போது, அவள் புடவையில், ஒரு கள்ளிக் கட்டையைப் பிள்ளையைப் போல சுருட்டி எடுத்துக் கொண்டு வருகிறது;
அந்த வணிகன், இரண்டாம் திருமணம் செய்யும்போது, ஜோதிடம் பார்த்திருக்கிறார்; அப்போதே, ஜோதிடர் சொல்லி உள்ளார், "உன் முதல் மனைவி இன்னும் மேல் உலகம் செல்லவில்லை; இங்கு பேயாகத் தான் அலைகிறாள்; அவளிடம் நீ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்று எச்சரித்துள்ளார்;
இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்தக் காட்டுவழியில், தன் இரண்டாம் மனைவி வருவதற்கு வழியே இல்லை; அப்படி இருக்கும்போது, தன் இரண்டாம் மனைவி எப்படி இங்கு வருவார் என்று சந்தேகம்! இந்தப் பெண் தன் முதல் மனைவிதான் என்றும், அவளே பேயாக வந்துள்ளார் என்றும் இவனுக்கு தெளிவாகத் தெரிந்து விட்டது;
அந்தப் பேயும், அவனுடன் பேசிக் கொண்டே வருகிறது; "என்னை ஏன் இப்படி காட்டில் விட்டுவிட்டுப் போகிறீர்கள்; இது நியாயமா' என்னை ஏன் ஒதுக்கி வைத்தீர்கள்; நான் உங்களின் இரண்டாம் மனைவி தானே! என்னை நீங்கள் ஆசையாகத் தானே திருமணம் செய்தீர்கள்; நமக்கு குழந்தையும் இருக்கிறதே! என்னையும் குழந்தையையும் ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று முறையிட்டுக் கொண்டே காட்டு வழியில் வருகிறது; இவனும் ஒப்புக்கு பேச்சுக் கொடுத்துக் கொண்டே வருகிறான்; காட்டைத் தாண்டி விட்டார்கள்; ஒருவழியாக காஞ்சிபுரம் வந்து விட்டது; இனிக் கவலையில்லை என அவன் நினைக்கிறான்;
காஞ்சீபுரத்தின் தெருவில் ஆலமரத்தடியில் கூடியிருந்த அம்பலத்தை நெருங்கி விட்டனர் இருவரும்; அவள் நேராக அங்கு அமர்ந்திருந்த பஞ்சாயத்து பெரியவர்களான வேளாளர்களிடம் முறையிடுகிறாள்;
அம்பலத்தில் இருந்த வேளாளர்கள், "பெண்ணே, நீ சொல்வதற்கு சாட்சி இருக்கிறதா?" என்று கேட்கின்றனர்;
"ஓ! இருக்கிறதே! என் இடுப்பில் உள்ள எங்கள் பிள்ளையை இறக்கி விடுகிறேன் பாருங்கள்! அது நேராக அவரிடம் செல்லும்! அதைக் கொண்டே நீங்கள் நம்பலாம்! நாங்கள் இருவரும் கணவன் மனைவி தான் என்றும், இந்த குழந்தை எங்கள் குழந்தைதான் என்பதையும்" என்று மிகப் பொருத்தமாக அந்தப் பேய்-பெண் கூறினாள்;
அவள், தன் இடுப்பில் இருந்து பிள்ளையை இறக்கி விடுகிறாள்; அதுவும், அவனை அப்பா என்று கூப்பிட்டுக் கொண்டு அவன்மீது பாய்கிறது;
அம்பலத்து வேளாளர்கள் இதை முழுவதும் நம்பி விட்டார்கள்; ஏதோ, கணவன் மனைவி சண்டையால், இந்த கணவன் இப்படி கோபமாகக் கூறுகிறான்; இவள், இவனின் மனைவிதான் என்று நம்புகிறார்கள்;
அவள், "என் மீது இவருக்கு இன்னும் கோபம் தீரவில்லை; இவருடன் இந்த பக்கத்து வீட்டின் அறைக்குள் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தால், இவர் சமாதானம் ஆகிவிடுவார்: எனவே அதற்கு அனுமதி வேண்டும்" என மிகப் பொருத்தமாக அந்த பேய் பெண் கேட்கிறாள்;
ஆனால், கணவனோ, இவள் ஒரு பேய்! இவளுடன் அந்த அறைக்குப் போனால் என்னைக் கொன்று விடுவாள்; இவள் சொல்வதை நீங்கள் நம்பாதீர்கள் என்று கெஞ்சுகிறான்;
ஆனாலும், அம்பலத்து வேளாளர்கள் "ஐயா, நாங்கள் உன் உயிருக்கு பிணையாக இருக்கிறோம்! நீ பயப்பட வேண்டாம்; அவளுடன் சென்று சமாதானமாக பேசி வா" என்று கட்டாயப் படுத்தி அனுப்பி விடுகிறார்கள்; ஜோதிடர் சொன்னபடி, அவன் கையில் எப்போது ஒரு மடக்கு கத்தி வைத்திருப்பான்; அவன் அதையும் தன்னுடன் எடுத்துச் செல்கிறான்;
ஆனால், அந்தப் பேய் பெண், "ஐயா, இவர் கத்தி வைத்திருக்கிறார்; அதை வாங்கி வைத்திக் கொள்ளுங்கள்; உங்கள் முன்பாகவே இவ்வளவு கோபமாகப் பேசுபவர்; தனியே அறைக்குள் போனால், இன்னும் அவருக்கு கோபம் அதிகமாகி, கத்தியைக் கொண்டு என்னை கொலையும் செய்வார்" என்று புலம்பினாள்;
அதையும் நம்பிய, அம்பலத்து வேளாளர்கள், அவனிடமிருந்து கத்தியை கட்டாயப்படுத்தி பறித்துக் கொண்டனர்;
இருவரும், அந்த தனிவீட்டின் அறைக்குள் செல்கின்றனர்;
வெகுநேரமாகியும் இருவரும் வரவில்லை; அம்பலத்து வேளாளர்கள் "இருவரும் சமாதானம் ஆகிவிட்டனர் போலும்! எனவே சிறிது நேரம் சந்தோஷமாக இருந்துவிட்டு வரட்டும் என விட்டு விட்டனர்;
அந்த பெண் பேய், வீட்டுக்குள் வந்தவுடன், கதவைச் சாத்தி விட்டது; அவன் கழுத்தை கடித்து ரத்தத்தை குடித்து அவன் உயிரைப் போக்கிவிட்டு மறைந்து விட்டது;
வெகுநேரமாகியும் கதவு திறக்காததால், சந்தேகமடைந்த வேளாளர்கள், கதவை உடைத்துப் பார்த்தனர்; அங்கு கணவன் ரத்த வெள்ளத்தில்; மனைவியைக் காணவில்லை;
வேளாளர்கள் மனம் பதறி விட்டது; நாம் எழுபது பேரும், அவன் உயிருக்கு பிணையாக இருந்திருக்கிறோம்; ஆனாலும் அவன் உயிர் போய்விட்டது; சொன்ன சொல் காப்பாற்ற முடியவில்லை; எனவே நாம் அனைவரும் தீக்குளித்து இறப்போம் எனக் கூறி தீ வளர்த்து அதில் புகுந்தனர்;
சத்தியத்தை காப்பாற்ற தீக்குளித்தனர்;
இந்தக் கதை, தொண்டை மண்டல சதகத்திலும், சேக்கிழார் புராணத்திலும் சொல்லப்பட்டுள்ளது;
**



நரகன் என்னும் நகராசுரன்

நரகன் என்னும் நகராசுரன்:
விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒரு அவதாரம் வராக அவதாரம்; இது விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமாகும்; வராகம் என்றால் பன்றி; பூமியைக் கடலுக்கு அடியில் எடுத்துச் சென்ற அசுரனான இரணியட்சனுடன், இந்த பன்றி வேடத்தில் கடலுக்கு அடியில் சென்று ஆயிரம் வருடம் போராடி அவனைக் கொன்று, பூமியை விஷ்ணு மீட்டார் என்பது ஐதீகம்;
விஷ்ணுவின் இந்த வராக அவதாரத்தில், விஷ்ணுவுக்கு பூமியில் பிறந்தவனே நரகன் என்னும் இந்த அசுரன்; இவன் ஆண்ட பகுதிக்குப் பெயர் பிராக்சோதிஷம்; இந்த நரகனின் வாகனம் சுப்பிரதீகம் என்னும் யானை; இவனின் புத்திரன் பகதத்தன்;
இந்த அரசுனான நரகன், மிகக் கொடுமைகள் செய்துள்ளான்; அதிதி என்பவனது கர்ண குண்டலங்களை பறித்துக் கொண்டான்; வருணனின் சத்திரத்தையும் கவர்ந்து கொண்டான்; இவைகளுடன் இந்திரன் இருக்கும் தேவலோகம் சென்று அவனின் சிம்மாசனத்தையும் அபகரித்துக் கொண்டான்;
இந்திரன் பயந்து ஓடி விஷ்ணுவிடம் முறையிடுகிறார்;
விஷ்ணு, இந்த அசுரன் நரகனையும், அவன் தமையன் முராசுரனையும் கொன்று விடுகிறார்; இந்த நரகன், ஏற்கனவே 16,000 கன்னியரை தேவலோகத்திலிருந்து சிறைப்பிடித்து அடைத்து வைத்துள்ளான்; அவர்கள் அனைவரையும் விஷ்ணு மீட்கிறார்; அவர்கள் கேட்டுக் கொண்டதால், அத்தனை கன்னியரையும் விஷ்ணுவே திருமணம் செய்து கொள்கிறார்;
இவ்வாறு நரகன் என்னும் நரக அசுரனைக் கொன்ற தினமே நரக சதூர்த்தி தினம் எனப்படும்;
**


பெண்ணே, ஆண் வேடமிட்டுத் திருமணம்!

நடிகர் வடிவேலு படத்தின் சினிமாக் கதை போலவே, இந்தோனேசியாவில் நடந்துள்ளது;
ஆணாக வேடமிட்டு திருமணம், ஒரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளார்; அந்தப் பெண், தன் பெயரை ஆண் பெயராக மாற்றிக் கொண்டு, திருமணம் செய்துள்ளார்;
ஒருமாதம் ஆகியும், அவர் அந்த மணப் பெண்ணுடன் உடலுறவுக்கு ஒப்புக் கொள்ளாமல் ஏமாற்றி வந்திருக்கிறார்; எனவே அந்த மணப் பெண் சந்தேகப்பட்டு, போலீஸில் புகார் கொடுத்துள்ளார்; குட்டு அம்பலமாகி விட்டது;
ஏன் இப்படிச் செய்தார் என்று தெரியவில்லை; ஆள்மாறாட்டம் செய்து ஒரு பெண்ணே, மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்வதால் இவருக்கு என்ன லாபம்? விளங்கவில்லையே!
நடிகர் வடிவேலுவின் சினிமாக் கதையில், ஒரு ஆண், பெண்ணாக வேடமிட்டு ஒரு பெண்ணைத் திருமணம் செய்வார்; அதில் ஒரு லாஜிக் இருந்தது!
**

வயது குறைந்த முதல்வர்

வயது குறைந்த முதல்வர்
இந்தியாவில் இப்போதுள்ள முதலமைச்சர்களில் மிகவும் இளமையான முதலமைச்சர் அருணாசல பிரதேச மாநிலத்தின் முதல்வர் “பெம கந்து” Pema Khandu. இவரின் இப்போதைய வயது 37; இவர் 2011-ல் சட்டமன்றத்துக்கு எம்எல்ஏ-வாகத் தேர்வானவர்; இவரின் தகப்பனார் இறந்ததால், அந்த இடத்துக்கு இவர் எம்எல்ஏ-வாக தேர்வானார்;
ஆனால் ஏற்கனவே இந்தியாவில், மிகக் குறைந்த வயதில் ஒரு முதல்வர் இருந்துள்ளார்; அவர் பாண்டிச்சேரியில் இருந்த ஹாசன் பரூக்; இவர் முதல்வராக வந்தபோது இவரின் வயது வெறும் 29 தான்; இவர் 1967ல் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்;
ஆக பாண்டிச்சேரியின் முன்னாள் முதல்வர் ஹாசன் பரூக் என்பவர்தான் மிக குறைந்த வயது முதல்வர்;
**

புதன், 6 ஜூலை, 2016

சர் மோனிர் வில்லியம்ஸ் (Sir Monier Williams)

சர் மோனிர் வில்லியம்ஸ் (Sir Monier Williams);
ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி (Oxford  University); இது இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு நகரில் உள்ளது; மிகப் பழைமையான யுனிவர்சிட்டிகளில் இதுவும் ஒன்று;
இந்த ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் சமஸ்கிருத புரபசராக இருந்தவர் சர் மோனிர் வில்லியம்ஸ் (Sir Monier Williams);
இவர் பம்பாயில்தான் பிறந்தவர்; இவரின் தந்தை, பாம்பே பிரசிடென்சியில் சர்வேயர்-ஜெனரலாக வேலையில் இருந்தார்; எனவே மோனிர் வில்லியம்ஸ் பம்பாயில்தான் பிறந்தார்; பள்ளி படிப்புக்காக இங்கிலாந்து சென்று படித்தவர்; அங்கு பள்ளி படிப்புகளை முடித்து, பின்னர் ஆக்ஸ்போர்டில் படித்தார்; இவருக்கு திருமணம் ஆகி ஏழு குழந்தைகள் இருந்தனர்;
ஆக்ஸ்போர்டில் அப்போது மேக்ஸ் முல்லர் இருக்கிறார்; இந்தியாவைப் பற்றியும் இந்து கலாச்சாரத்தை பற்றியும், சமஸ்கிருத காவியங்களைப் பற்றியும், இந்த மோனிர் வில்லியம்ஸ்க்கு அவ்வளவாக தெரியாது என்று அவரை புரபசராக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்தார்; ஆனால் மேக்ஸ் முல்லர் தான் இந்தியாவுக்கே வந்ததில்லையாம்; மோனிர் வில்லியம்ஸ் இங்கு பம்பாயில்தான் பிறந்தவர், வாழ்ந்தவர்; ஆனாலும், ஒருவழியாக மோனிர் வில்லியம்ஸை சமஸ்கிருத புரபசராக ஆக்ஸ்போர்டு பல்கலை நியமித்து விட்டது;
மோனிர் வில்லியம்ஸ் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து (1875 களில்) இந்தியாவிலிருந்து மன்னர்களை சந்தித்து நிதி உதவியும் பெற்று சமஸ்கிருத ஆராய்ச்சிக்கு இந்த யுனிவர்சிட்டியை பயன்படுத்தினார்; இந்தியன் சிவில் சர்வீஸ் பயிற்சியும் இங்குதான் நடந்ததாம்; இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 வரை இந்த ஆராய்ச்சி தொடர்ந்ததாம்;
மோனிர் வில்லியம்ஸ் இந்து மத தத்துவத்தை தெளிவாக அறிந்தவர்; அத்வைத வேதாந்தமே சிறந்தது எனக் கருதினார்;
இவர் சமஸ்கிருத-ஆங்கில அகராதியை எழுதியவர்; அதை 1872ல் வெளியிட்டவர்;
இவர் மகாகவி காளிதாசனின் “விக்கிரமோர்வசி” சம்ஸ்கிருத நூலையும், “சாகுந்தலா” சம்ஸ்கிருத நூலையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டவர்; (1853ல்); இன்னும் பல பல இந்து தத்துவார்த்த நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகறிய அளித்தவர்;
ஒரு வரியில் சொல்வதென்றால் இந்தியராக வாழ்ந்திருக்கிறார்....


Song of the Lord


பகவத் கீதை
பகவானின் கீதம் (Song of the Lord).
இந்த கீதம் 700 சுலோகங்களால் ஆனது;
சுலோகம் என்பது பல வரிகள் கொண்ட ஒரு பாடல் தொகுப்பு;
இது மகாபாரதக் கதைக்குள் சொல்லப்பட்டுள்ளது;
இதை இடைச் செருகல் என்றும் சொல்வர்;
இடைச் செருகலோ, ஆதி உருவாக்கமோ, அதிலுள்ள விஷயமே முக்கியம் என்பதால், எப்போது சொல்லி இருந்தால் என்ன?
மகாபாரதக் கதை சுமார் 5000 வருடங்களுக்கு முந்தியது; அது கிட்டத்தட்ட துவாபர யுகம் முடிந்து கலியுகம் தோன்றிய போது, வரப்போகும் அல்லது வந்துவிட்ட, இந்த பொல்லாத கலியுகத்தில் எப்படி மனிதன் வாழ வேண்டும் அல்லது வாழ்வை ஏற்றுக் கொள்ள வேண்டும் என பகவான் ஸ்ரீகிருஷ்ணன் சொன்ன கீதமே இந்த பகவத் கீதை.
மகா பாரதக் கதையில் அத்தியாயம் 25 லிருந்து 42 வரை உள்ள அத்தியாயங்கள் இந்த பகவத் கீதை;
கீதையில் தர்மத்தையும், ஞானத்தையும், பக்தியையும், யோகத்தையும், கர்மத்தையும், கொண்டு மனிதன் மோட்சத்தை அடையும் வழியைக் கூறுகிறார் ஸ்ரீகிருஷ்ணன்;
இந்த மனித உடலுக்குள் வாழும் ஆத்மா என்ற விஷயத்துக்கும், இந்த பிரபஞ்சம் முழுமையும் ஆட்கொண்ட பிரம்மம் என்ற விஷயத்துக்கும் இடையே உள்ள தொடர்பே வாழ்வு;
இந்த மனித ஆத்மா, வாழ்ந்து தெளிவு பெற்று, பேராத்மா என்னும் பிரம்மத்தை, இறைநிலையை அடைய தவிக்கும்; அதை நோக்கிய பயணமே இந்த பிரபஞ்ச நகர்வும் வாழ்வும்; இதை அடைவதைத்தான். பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பல வழிகளில் அடைய முடியும் என்பதை கீதை மூலம் உணர்த்துகிறான்; மகா பாரதக் கதையும், கதையின் பாத்திரங்களும், அவைகளின் குணங்களும், சந்தேகங்களும், தெளிவுகளும், அவரவர் கர்மாக்களும், பக்திகளும், ஞானமும், தர்மமும் இத்தகைய செயல்களின் விளைவுகளும் என்று ஏகப்பட்ட விஷயங்களுடன் இந்த மானிட ஆத்மா, இறைநிலையின் உள்ள பிரம்மத்தை அடைய வழி சொல்லப்படுகிறது;




செவ்வாய், 5 ஜூலை, 2016

எடின்பர்க் யுனிவர்சிட்டி

எடின்பர்க் யுனிவர்சிட்டி
Edinburgh University

ஸ்காட்லாந்தில் உள்ள மிகப் பழைய பல்கலைக் கழகம்; இது 1582 ல் ஆரம்பிக்கப் பட்டதாம்; இந்தியாவில் அப்போது இதுமாதிரி பல்கலைக் கழகம் உருவானதா இல்லையா என்றே தெரியவில்லை; இந்த யுனிவர்சிட்டில் ஆராய்ச்சி படிப்புகள் பிரபலமாம்! கம்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேட்டிக்ஸ் ஆராய்ச்சி படிப்பில் உலகத்திலேயே இதுதான் முதலிடம் என்றும் சொல்கிறார்கள்; இதை "இன்னொரு ஏதென்ஸ்" என்றும் சொல்வார்கள்; பல பல நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் இங்கு உருவாகி உள்ளார்கள்; யுகே-வின் மூன்று பிரதமர்கள் இங்கு படித்தவர்கள்; யுகே-யின் இப்போதுள்ள இரண்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அங்கு படித்தவர்கள்தான்!

இங்குள்ள மெடிக்கல் ஸ்கூல் உலகப் புகழ் பெற்றதாம்! அந்த மெடிக்கல் ஸ்கூல் கட்டிடத்தை இன்றைக்கு முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாமாம், அவ்வளவு பிரமாண்டம்!

எடின்பர்க் நகரம் வடகடலுக்கு அருகில் உள்ளது; கடலை ஒட்டிய நகரங்கள் எல்லாம் நாகரிகத்திலும், கலாச்சாரத்திலும் உச்சத்துக்கு சென்றுள்ளது என்பது வரலாறு; ஜெர்மன் நாட்டுக்கு பக்கத்திலும் உள்ளது; இங்குள்ள மக்கள் ஸ்காட்ஸ் மொழி பேசுபவர்கள்; ஜெர்மன் மொழியை ஒட்டிய மொழி ஸ்காட்ஸ்; இயற்கையிலேயே அறிவாளிகள் போல!

செவ்வாய், 28 ஜூன், 2016

விசா கொடுக்காதீர்கள்!

விசா கொடுக்காதீர்கள்!
வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காவிட்டால், மறுபடியும் அவரிடமே கடன் வாங்க முடியாது; ஒரு நாட்டில் வசிக்க செல்பவர்கள் அந்த நாட்டில் வசிக்க விசா பெறவேண்டும்; அப்படி விசா வாங்கி அமெரிக்காவில் இருப்பவர்களில் சிலர், கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு சிறை சென்றனர்; அவர்களின் தண்டனை காலம் முடிந்து விடுதலை செய்யும்போது, அவர்களின் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பி விடுவர்; “நல்ல பிள்ளைகளை மட்டும் தங்க அனுமதித்துக் கொண்டு, கெட்ட பிள்ளைகளை அவர்களின் தாயிடமே ஒப்படைப்பது” என்ற நியதிப்படி, தண்டனை அனுபவித்த கெட்ட பிள்ளைகளை அவர்களின் தாய் நாட்டிற்கு திரும்ப அனுப்பி விடுவர்; ஆனால் எல்லாத் தாய்களும் அந்த கெட்ட பிள்ளைகளை திரும்ப பெற்றுக் கொள்வதில்லையாம்; இந்த பழக்கம் இந்தியாவிடமும் உள்ளதாம்;
அமெரிக்காவில் வருடத்திற்கு சுமார் 2000 பேர் விடுதலை ஆகின்றனர்; இவர்கள் எல்லோரும் வேறு வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள்; அமெரிக்காவில் குற்றம் செய்து தண்டனை பெற்றவர்கள்; அமெரிக்க அரசு, இவர்களை அவரவர் தாய் நாட்டுக்கு திரும்ப அனுப்பும்போது, அந்த நாட்டைச் சேர்ந்த அரசுகள் அவர்களை ஏற்றுக் கொள்ளவதில்லையாம்; இதில் இந்திய நாடும் ஒன்றாம்! இப்படிப்பட்ட நாடுகள் மொத்தம் 23 உண்டாம்!!
எனவே அமெரிக்க செனட்டர்களில் ஒருவரான ரிபப்ளிக்கன் செனட்டர் சக் கிராஸ்லி என்பவர், அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம், இனிமேல் இந்த நாட்டு மக்களுக்கு இமிகிரேஷன் விசா கொடுக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளாராம். ஆமாம்! இனி கெட்ட பிள்ளைகளை திரும்ப அழைத்துக் கொள்ளும் நாடுகளுக்கே இமிக்கிரேஷன் கிடைக்கும்போல! அமெரிக்கா இன்னும் முடிவு எடுக்கவில்லை;
**


திங்கள், 27 ஜூன், 2016

மயிரும் வழுக்கையும்

மயிரும் வழுக்கையும்
பாலூட்டிகளின் உடலில் மயிர் இருக்கும்; பறவைகளின் உடலில் இறகுகள் இருக்கும்; ஊர்ந்து செல்லும் உயிரிகளில் ஸ்கேல் என்னும் செதில்கள் இருக்கும்; ஆனால் இவை எல்லாம் தோலின் அடியில் உள்ள பிளக்கோடு என்னும் கடினமான தோல் அமைப்பான காலம்னார் செல்களில் மூலம் உருவாகும் என அறிந்து கொண்டனர்; ஆனால் இவை முதன் முதலில் எந்த உயிரில் தோன்றியது என்று முடியைப் பிய்த்துக் கொண்டிருந்தனர்; இப்போது ஒரு பெரிய ஆராய்ச்சியில் கண்டு கொண்டனர்; இது மூன்னூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ரெப்டைல் Reptile என்னும் ஊர்வன உயிரிகள் தான் இதற்கு ஆதாரமாம்! இதுவரை விஞ்ஞானிகள் வேறு மாதிரி நினைத்துக் கொண்டிருந்தார்களாம்; பாலூட்டிகளின் மயிர், பறவைகளின் இறகு, இவைகளுக்கு பூர்வீகம் தெரியாமல் இருந்திருக்கிறார்கள்; ரெப்டைல் இனமான ஊர்வனவற்றுக்கும் பாலூட்டி இனங்களுக்கும், பறவை இனங்களுக்கும் சம்மந்தம் இல்லாமல் இருக்கும் என நினைத்திருந்தார்களாம்! இது உண்மையில்லை என்றும், ஊர்வனவற்றின் அடித்தோலில் இருந்தே, மயிர், இறகு, செதில் தோன்றியது என்று தற்போதைய ஆராய்ச்சி முடிவாம்; காலம்னார் செல் தான் மயிர்களுக்கு காரணம்; இந்த குளறுபடியில் வழுக்கை வருகிறதாம்; இந்த காலம்னார் ஜீன்களின் குளறுபடிதான் வழுக்கைக்கு முழுக் காரணமாம்! தெற்கு கலிபோர்னியாவில் இந்த ஆராய்ச்சி தொடர்கிறது; வெற்றி கிடைத்தால் வழுக்கை இல்லை!
**


காஸ்மாஸ் கம்யூட்டர்

காஸ்மாஸ் கம்யூட்டர்
இந்த பிரபஞ்சம் எவ்வளவு பெரிது என்றோ, எவ்வளவு நீள-அகலம் என்றோ, என்னென்ன இருக்கிறது என்றோ யாராலும் சொல்ல முடியாது; பிரமாண்டத்திலும் பிரமாண்டம் இந்த அண்டம்; அண்டம், பிரமாண்டம், பேரண்டம்; மனித அறிவுக்கும் அப்பாற்பட்டது! இந்த அண்டத்தில் எத்தனையோ சூரியன்கள்! நட்சத்திரங்கள்! கிரகங்கள்! எது எதைச் சுற்றி வருகிறது என்றே தெரியவில்லை! இந்த நமது சூரியனைச் சுற்றி ஒன்பது கிரகங்கள்! இப்படி எத்தனை கோடி சூரியன்களை எத்தனை கோடி கிரகங்கள் சுற்றி வருகின்றனவோ! ஆனால் இந்த கோடி கோடி சூரியன்கள் என்னும் நட்சத்திரங்கள் எல்லாம் பொதுவாக எதைச் சுற்றுகின்றனவோ புரியாத புதிரே! கேலக்ஸி என்கிறார்கள்! பிளாக் ஹோல் என்கிறார்கள்! சூப்பர் நோவா என்கிறார்கள்! இன்னும் எத்தனையே பெயர்கள் உண்டு! இவை அனைத்தையும் பெயர் சொல்லவும் முடியவில்லை! மனிதன் பெரியவன் என்று நினைத்துக் கொள்கிறான்! ஆனால் அவன் இதில் ஒரு சிறு எறும்பு! இதையெல்லாம்  நினைக்கும்போது, இந்த பேரண்டம், மனிதனை சுற்றியோ, மனிதனை முன் வைத்தோ ஏற்பட்டிருக்க முடியாது; மனிதன், கர்வமாக நினைத்துக் கொள்கிறான், “தனக்காகவே இந்த பேரண்டம் இயங்குகிறது” என்று நினைக்கிறான்! இந்த கர்வமே மனிதனின் வாழ்வை நகர்த்துகிறது!
பேரண்டத்தை அளக்க முடியாதுதான்! ஆனாலும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள் இந்த பேரண்டத்தில் என்னென்ன நகர்கிறது என்று ஒரு மேப் தயாரிக்க உள்ளார்; அதை ஒரு மெகா சூப்பர் கம்யூட்டரில் பதிவும் செய்ய உள்ளார்; இந்த பேரண்டத்தில், முடிந்தவரை, என்னென்ன கிரகங்கள் எங்கு சென்று கொண்டிருக்கின்றன என்ற ஒரு வரைபடத்தை ஓரளவுக்காவது தயார் செய்யலாம் என்று நினைக்கிறார், ஆசைப்படுகிறார்; இவருக்கு கேம்பிரிட்ஸ் பல்கலை காஸ்மாலஜி புரபசர் உதவுகிறார்;
ஸ்டீபன் ஹாக்கிங் என்பவர் உலகம் போற்றும் பௌதீக விஞ்ஞானி; இவருக்கு இப்போது 74 வயதாகிறது; இங்கிலாந்து நாட்டவர்; மோட்டார் நியூரான் பாதிப்பால் இவரால் பேச முடியாது; கைகால்களை வீசி நடக்க முடியாது; லேசாக கைகளை மட்டுமே அசைக்க முடியும்; அந்த அசைவைக் கொண்டே கம்யூட்டர் மவுஸ் மூலம் எழுதி, அது பேசுகிறது; ஆனால் இவரின் மூளை மட்டும் மிக அதிகபட்ச வேகத்தில் வேலை செய்கிறது!



ஞாயிறு, 26 ஜூன், 2016

ஐஐடி கராக்பூர் IIT Kharagpur

ஐஐடி கராக்பூர் IIT Kharagpur
இந்தியாவில் முதன்முதலில் தோன்றிய ஐஐடி இதுதான்; 1951ல் கல்கத்தாவிலிருந்து 116 கி.மீ. தொலைவில் உள்ள கராக்பூர் நகரில் தொடங்கப்பட்டது; இந்த ஐஐடியில் என்ஜினியரிங், மேனேஜ்மெண்ட், மெடிக்கல், சட்டம் போன்ற துறைகளில் வல்லுனர்களையும், விஞ்ஞானிகளையும் உருவாக்கும் நோக்கில் ஏற்படுத்தப் பட்டுள்ளது; ஐஐடி கராக்பூர் என்பதை IIT KGP என்பர்; இதில் படித்து வெளிவரும் மாணவர்களை KGPians என்றே அழைத்துக் கொள்வர்; 
இந்த நிறுவனம் சுமார் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது; இதுபோன்ற ஐஐடி நாடு முழுவதும் பல நகரங்களில் உள்ளது; வாரணாசி, புவனேஸ்வர், பாம்பே, காந்திநகர், கவுகாத்தி, ஐதராபாத், இந்தூர், கான்பூர், கராக்பூர், மெட்ராஸ், மாண்டி, பாட்னா, ஜோத்பூர், ரூர்கி, ரோப்பர், தன்பத் போன்ற பல நகரங்களிலும் உள்ளது; ஜாயிண்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாம் என்னும் ஜெ.இஇ தேர்வுமூலமே இதில் சேர முடியும்; 
இந்த தேர்வுகளை ஆங்கிலத்திலும், ஹிந்தி மொழியிலும் மட்டுமே எழுத முடியும். எனவே மற்ற மொழிகளிலும் எழுத அனுமதி வேண்டும் என குஜராத்தில் ஒரு பொதுநல வழக்கு வந்தது; அதைத்தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு வந்தது; அதில் தமிழ்நாட்டில் சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் 12 வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள் என்றும், அதில் 75% மாணவர்கள் தமிழ் வழி பள்ளிகளில் படிக்கிறார்கள் என்றும், எனவே தமிழில் ஐஐடியின் ஜெ.இ.இ. தேர்வை எழுத அனுமதி வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினர் 2012ல் வழக்கு போட்டனர்; தாய்மொழியில் தேர்வு எழுத மறுப்பது என்பது அவர்களின் அடிப்படை உரிமையை மறுப்பதாக உள்ளதாக கூறினர்; 
அதே போன்று மும்பாயிலும் மராத்தியில் இந்த தேர்வை எழுத அனுமதி கேட்டு சிவசேனா கட்சியினர் மனு செய்தனர்;  அப்போதைய எச்ஆர்டி அமைச்சரான கபீல்சிபல் அவர்கள் இந்த நிறுவனம் தனித்து இயங்கும் அட்டானமஸ் நிறுவனம் என்றும் அதன் நிர்வாக கொள்கைகளில் அரசு தலையிட முடியாது என்றும் கூறினார்;


வியாழன், 16 ஜூன், 2016

உத்த பஞ்சாப் (Udta Punjab)

 உத்த பஞ்சாப் (Udta Punjab)
உத்த பஞ்சாப் என்று ஒரு சினிமா; இதை வெளியிடக்கூடாது என்று என்.சி.ஓ.க்கள் வழக்கு தொடுத்தன; அதில் போதை உபயோகத்தை சொல்லி உள்ளது என்றும் அது சமுதாயத்துக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் வழக்குப் போட்டது;
இந்த சினிமாவில் சாகித் கபூர், அலியா பட், கரீனா கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.
மத்திய சென்சார் போர்டும் இதில் உள்ள காட்சிகளை 13 இடங்களில் வெட்டி விட வேண்டும் என்று சொல்லி உள்ளது; பாம்பே மற்றும் பஞ்சாப், ஹரியான ஐகோர்ட்டுகள் இந்த சினிமாவைத் திரையிடலாம் என்றும் ஒரு ஒரே காட்சியை மட்டும் வெட்டிவிட்டால் போதும் என்றும் சொல்லி உள்ளது; இந்த சினிமாவை வெளியிட்டால், பஞ்சாப்பை பற்றி மோசமாக மக்கள் நினைத்துக் கொள்வார்கள் என கருத இடமில்லை என்றும் கோர்ட் சொல்லி உள்ளது; மத்திய சென்சார் போர்டு தேவையில்லாமல் பல காட்சிகளை வெட்டிவிடும்படி கேட்டது தவறு என்றும் கோர்ட் சொல்லி உள்ளது;
இதற்கிடையில் ஒரு என்ஜிஒ நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டை அணுகி இந்த சினிமாவை வெளியிடக் கூடாது என்றும், ஐகோர்ட் கொடுத்த உத்தரவுக்கு தடை கேட்டும் மனுச் செய்தது; ஆனால், சுப்ரீம் கோர்ட் பாம்பே ஐகோர்ட்டின் உத்தரவு மீது ஸ்டே கொடுக்க மறுத்து விட்டது; இந்த சினிவைப் பார்க்காமலேயே பாம்பே ஐகோர்ட், அந்த சினிமாவை வெளியிட உத்தரவு கொடுத்ததாக, சுப்ரீம் கோர்ட்டில் மனுச் செய்துள்ளனர்: ஆனால், பஞ்சாப்-ஹரியானா ஐகோர்ட் இந்த சினிமாவைப் பார்த்துவிட்டுத்தான் அதை வெளியிட உத்தரவு கொடுத்துள்ளதாம்;
சினிமாவோ, அதன் கதையோ, அதில் சொல்லப்பட்டுள்ள சம்பவங்களோ, சமுதாயத்தை ஒட்டு மொத்தமாக மாற்றிவிடும் என்று நம்புவதற்கில்லை! சினிமா என்பதே ஒரு கருத்தைச் சொல்லும் சாதனம் மட்டுமே!



தக்காளி விலை

தக்காளி
தக்காளியின் விலை கிலோ ரூ.100ஐ தாண்டிப் போய்விட்டது; காரணமே தெரியாமல் இதன் விலையானது விண்ணை முட்டிவிட்டது! இன்னும் இரண்டு மாதங்களுக்கு தக்காளியின் விலை குறையாதாம்; அடுத்த விளைச்சல் வந்தால் மட்டுமே விலை குறையுமாம்!
பொதுவாகவே ஜூன் முதல் செப்டம்பர் வரை தக்காளியின் விலை அதிகமாகவே எல்லா வருடங்களும் இருக்குமாம்! இந்த வருடம் திடீரென்று இதன் விலை ஆகாயத்தைத் தொட்டுவிட்டது!
நம்ம ஊர்  மக்களுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது; அப்போதைக்கு அப்போது காய்கறிகளை வாங்கி சமையல் செய்வது காலம் காலமாகத் தொடர்கிறது; தக்காளி விளைச்சல் அதிகமாக இருக்கும் காலத்தில், விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைக்கவில்லை என்று அதை கீழே கொட்டுவார்கள்; அதனால் விவசாயிகள், தக்காளியை விவசாயம் செய்ய ஆர்வம் காண்பிப்பதில்லை;
ஆனால், விளையும் தக்காளியை ஜூஸ் வடிவில் சேமித்து பாதுகாத்து, பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யும் கம்பெனிகளும் இல்லை; இந்த முறை அமெரிக்காவில் உள்ளது; இந்தியாவில் இல்லை; மக்கள் இப்படி பாட்டிலில் இருக்கும் தக்காளி ஜூஸை வாங்கி சமையலுக்கு உபயோகிக்க விரும்புவதில்லை என்ற காரணத்தினாலேயே, கம்பெனிகளும் ஜூஸ் முறைக்கு ஆதரவு தரவில்லை;
மக்கள், சூழ்நிலைக்கு ஏற்க வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள முன் வரவேண்டும்; இப்படித்தான் என் பழக்கம், நான் மாற மாட்டேன் என்று நிலை இருக்கும்வரை, தக்காளிகளின் விலை விண்ணை முட்டத்தான் செய்யும்;


புதன், 16 மார்ச், 2016

இங்கிலாந்து

இங்கிலாந்து
இங்கிலாந்து என்ற நாடு 10-ம் நூற்றாண்டில் உருவானதாம்; அப்போது, அங்கிருந்த மக்களுக்கு பெயர் “ஆங்கில்ஸ்”; அங்குள்ளவர்களை அதனால்தான் “ஆங்கிலேயர்” என்று அழைக்கிறோம்போல! 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே அந்த மண்ணில் மக்கள் வாழ ஆரம்பித்திருக்கிறார்கள்; மக்கள் வசிப்பதற்கு தகுந்த மண்ணாகவும், தட்ப-வெட்ப பகுதியாவும், இந்தப் பகுதி இருந்து வந்திருக்கிறது; இங்கிருந்த மக்கள், அதிகமாக ரோமன் மக்களுடன் வியாபாரத் தொடர்பில் இருந்திருக்கிறார்கள்; 7 முதல் 10-ம் நூற்றாண்டுகளில், ரோமானியர்கள், இங்கு கிறிஸ்தவ மதத்தை வேகமாகப் பரப்பி விட்டனர்; இடைப்பட்ட காலத்தில் ஏகப்பட்ட போர்கள் நடந்தன; ஒரு போருக்கு நூற்றாண்டு போர் என்றே பெயர்; மன்னர்களின் அதிகாரங்களை குறைக்க மேக்ன கார்ட்டா என்ற ஒரு சட்ட உடன்படிக்கையும் ஏற்படுத்தி கொண்டனர்;
1707-ல் இங்கிலாந்தும், ஸ்காட்லாந்தும் இணைந்து ஒரே நாடாக இருக்கலாம் என்று முடிவானது; அதன் பெயர் தான் “யுனிபைடு கிங்டம் ஆப் கிரேட் பிரிட்டன்”; 1800-ல் அயர்லாந்தும் சேர்ந்து கொள்ள ஆசைப்பட்டது; இந்த காலக் கட்டத்தில்தான் “இங்கிலாந்து பார்லிமெண்ட்” உருவானது; அப்போது, வெஸ்ட்மின்ஸ்டர் அபே என்ற மாளிகை கட்டப்பட்டது; (The Palace of Westminster Abbey); இங்கு இங்கிலாந்தின் அரசியல் விவகாரம் அலசப்பட்டது; மன்னர் வசிப்பதற்காக தனியே, பக்கிங்காம் பேலஸ் உருவானது; (Buckingham Palace);

**

செவ்வாய், 5 ஜனவரி, 2016

வீரம் சொல்லி வருவதில்லை!

சண்டிகாரில் 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் சின்னப் பையன், பெயர் மெகந்திரதா, 13 வயதுதான் ஆகிறது;

தன் தாயின் கழுத்தில் ஒரு கேடி கத்தியை வைத்து மிரட்டும் போது, மகன் எப்படிப் பொறுமை காப்பான்; ஆவேசத் துணிச்சலில் அந்த கத்தியை தன் கையாலேயே பறித்து எறிந்த துணிச்சலுக்கான வீரப் பதக்கத்தை பிரதமரிமிருந்து பெறுகிறான், இந்திய குடியரசு தினத்தில்;

National Bravery Award 2015 by the Indian Council for Child Welfare.

Creche கிரீச்

Creche கிரீச்கள் கட்டாயமாம்

லேபர் மினிஸ்டிரி இந்த கட்டாய கிரீச் முறையை கொண்டு வந்துள்ளதாம்; 50 தொழிலாளர்கள் இருக்கும் நிறுவனம் அல்லது 30 பெண்கள் பணிபுரியும் நிறுவனம் இவைகளில் கட்டாயம் ஒரு கிரீச் என்னும் பகல்நேர குழந்தை பராமரிப்பு நிலையத்தை வைத்திருக்க வேண்டுமாம்;

500 மீட்டர் இடைவெளியில் உள்ள பல நிறுவனங்கள் சேர்ந்தும் ஒரு கம்யூனிட்டி கீரீச் வைத்துக் கொள்ளலாமாம்; 

பஞ்சம்

பஞ்சம் இன்னும்தான் தலைவிரித்து ஆடுகிறது; இப்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் பஞ்சம்; 15 ஆயிரம் கிராமங்கள் பஞ்சத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனவாம்; மத்திய அரசு இதற்கு நிதி உதவியாக ரூ.3,049 கோடி கொடுக்க தீர்மானித்துள்ளதாம்; மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், இதுவரை மகாராஷ்டிரா பெற்ற நிவாரண நிதியில் இதுதான் அதிகம் என்கிறார்:

இதேபோல், மற்ற மாநிலங்களிலும் பஞ்சம் உள்ளது;
மத்திய பிரதேசத்துக்கு நிதி உதவி: 2033 கோடி
கர்நாடகாவுக்கு நிதிஉதவி 1540 கோடி
சட்டீஸ்கர்க்கு 1,275 கோடி