வியாழன், 30 ஏப்ரல், 2015

அந்த மூன்று ஆப்பிள்கள் (The Three Apples)

ஆயிரத்தோரு இரவுகள்:
இதை அரேபிய இரவுகள் என்றும் சொல்வர். கதைக்குள் கதையாக சொல்லிக் கொண்டே செல்வர்.
இதை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்தவர் சர் பிரான்சிஸ் பர்ட்டான் என்ற ஆங்கிலேயர்.
இதில் ஒரு கதை - அந்த மூன்று ஆப்பிள்கள் (The Three Apples).
கதை:
அரேபியாவில் ஓடும் டைகிரிஸ் நதி வெள்ளம் புரண்டு ஒடுகிறது. அதில் ஒரு பெட்டகம் மிதந்து வருகிறது. இதை அந்த நதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவன் எடுக்கிறான். அந்த பெட்டகம் வேலைப்பாடு நிறைந்து இருக்கிறது. அது பூட்டப்பட்டும் இருக்கிறது. அதை அந்த மீனவன் எடுத்து அங்குள்ள ஹாரூன் என்னும் பெயருடைய அப்பாசித் காலிப் (மதகுரு) அவர்களுக்கு விற்று விடுகிறான். அவர் அந்த பூட்டை உடைத்து பெட்டிக்குள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்து மிரண்டு விடுகிறார். ஒரு இளம் பெண்ணை கண்ட-துண்டமாக வெட்டி துணியில் மூடி அந்த பெட்டிக்குள் வைத்து ஆற்றில் விட்டுள்ளனர். ஹாரூன் அவர்கள் தன் கணக்கப்பிள்ளையான ஜாபர் அவர்களைக் கூப்பிட்டு, இந்த இளம் பெண்ணை கொலை செய்தவர் யார் என்று கண்டுபிடிக்கும்படியும், அதையும் மூன்று நாட்களுக்குள் அவர் கண்டுபிடிக்கவில்லை என்றால், அவரை தூக்கிலிட்டு விடுவதாகவும் கட்டளை இட்டார். கணக்கப்பிள்ளை பயந்து கொண்டு, எல்லா இடங்களிலும் விசாரனை செய்து பார்த்து விட்டார். ஒன்றும் விளங்கவில்லை. விசாரனையில் தோற்றுப் போய்விட்டார். முதலாளி ஹாரூன் காலிப், கணக்கப்பிள்ளையை தூக்கிலிட்டு விடுவார். மூன்று நாளும் முடிந்தது. கணக்கப்பிள்ளையை தூக்கிலிட உத்தரவிட்டார். அப்போது ஒரு திருப்பம் ஏற்படுகிறது. ஒரு வாலிபரும், ஒரு முதியவரும் அங்கு வந்து ஹாரூன் காலிப் முன்னர் நிற்கிறார்கள். அவர்கள் இருவரும் அந்த கொலையைச் செய்ததாக ஒப்புக் கொள்கிறார்கள். நான்தான் கொலை செய்தேன் என்று வாலிபனும், இல்லையில்லை நான்தான் அந்தக் கொலையைச் செய்தேன் என்று முதியவரும் மாறி மாறி சொல்கிறார்கள். இதில் உண்மையில் யார் இந்த பெண்ணை கொலை செய்தார் என்று ஹாரூனுக்கு விளங்கவில்லை. இளைஞன் சொல்கிறான், "நான் சொல்வதுதான் உண்மை, அந்தக் கிழவன் பொய் சொல்கிறார்" என்கிறான். கிழவனோ, "நான் தான் இந்தக் கொலையைச் செய்தேன், வாலிபன் பொய் சொல்கிறான்" என்கிறார். ஹாரூன் குழம்பி விட்டார். ஆனால் வாலிபன், மிகத் தெளிவாக, அந்த பெட்டி எப்படிபட்டது என்று தெளிவாக வர்ணிக்கிறான். அதில் அந்தப் பெண்ணின் உடல் எப்படி எல்லாம் வெட்டப் பட்டுள்ளது என்றும் தெளிவாகசச் சொல்கிறான். அந்த இறந்த பெண்ணின் கணவன் தான்தான் என்றும், அந்த முதியவர், இறந்த பெண்ணின் தகப்பனார் என்றும், மருமகனான என் பெயரில் இரக்கம் கொண்டு அந்த முதியவர், என்னைக் காப்பாற்ற பொய்யாக, தானே கொன்றாத சொல்கிறார். அதை நீங்கள் நம்பாதீர்கள், என் மனைவியை நானே கொன்றேன் என்று கூறுகிறான் அந்த வாலிபன். நம்பும்படியாகவே இருக்கிறது.
அவர்கள் இருவரும் கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்ததாகவும், அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளதாகவும், அவள் பெயரில் எந்தத் தவறும் இல்லை என்றும் சொல்கிறான். அவள் ஒருநாள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாள்; அப்போது, தனது மிக பிரியமான ஆப்பிள் வேண்டும் என்று கேட்டாள். அந்த ஆப்பிள், பசரா நாட்டில் உள்ள காலிப் அவர்களின் தோட்டத்தில் மட்டுமே உள்ளது. மனைவி பிரியமாக கேட்கிறாளே என்று நானும் பசரா நாட்டுக்கு சென்று காலிப் தோட்டத்தில் இருந்த மூன்று ஆப்பிள் பழங்களையும் பறித்துக் கொண்டு, பாக்தாத் நாட்டுக்கு வந்து என் மனைவியிடம் கொடுத்தேன். அவளுக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் அந்த மூன்று ஆப்பிள்களையும் அவள் சாப்பிடவில்லை. பக்கத்திலேயே வைத்து விட்டாள். நானும் கடைக்குச் சென்று என் வியாபாரத்தை கவனித்து வந்தேன். அப்போது அந்த தெருவழியே ஒரு அடிமை போனான். அவனிடம் ஒரு ஆப்பிள் இருந்தது. அது பசரா நாட்டின் காலிப் தோட்டத்தில் பறித்தே அதே ஆப்பிள். இவனிடம் எப்படி வந்திருக்கமுடியும். என் மனைவியிடம் தானே கொடுத்துவிட்டு வந்தேன் என்று குழப்பினேன். அந்த அடிமையை கூப்பிட்டு, இந்த ஆப்பிள் உன்னிடம் எப்படி வந்தது என்று கேட்டேன்; அவனோ, இந்த ஆப்பிள் பழத்தை அவன் காதலி கொடுத்ததாக சொல்லிவிட்டுப் போனான். அவன் காதலிக்கு அவளின் கணவன் மூன்று ஆப்பிளை பசரா நாட்டிலிருந்து கொண்டு வந்தானாம்; அதில் ஒன்றை, அவன் மனைவியான என் காதலி எனக்கு கொடுத்தாள் என்று சொல்லிவிட்டு அந்த அடிமை நகர்ந்தான். எனக்கு கோபம் தலைக்கு ஏறியது; நேராக என் வீட்டுக்குச் சென்று என் மனைவியிடம் நான் விட்டுச் சென்ற ஆப்பிளைப் பார்த்தேன்; அங்கு இரண்டு ஆப்பிள்கள் மட்டுமே இருந்தது; நான் அவளுக்கு மூன்று ஆப்பிள்கள் கொடுத்திருந்தேன்; ஆக அந்த ஒரு ஆப்பிளைத்தான் அந்த அடிமை வைத்திருந்தான்; கோபம் உச்சிக்குப் போனது. கத்தியை எடுத்து என் மனைவியைக் கொன்றேன். கொலையை மறைக்க வேண்டும் எனக் கருதி அவளைத் துண்டு துண்டாக வெட்டி பெட்டியில் போட்டு, ஆற்றில் விட்டுவிட்டேன். அந்த பெட்டிதான் இது; இவளே என் மனைவி;
மறுபடியும் ஒரு திருப்பம் ஏற்படுகிறது;
ஆற்றில் பெட்டியை எறிந்துவிட்டு வீட்டுக்கு வருகிறேன்; அங்கு என் மகன் சொல்கிறான், "அந்த மூன்று ஆப்பிள்களில் ஒன்றை அவன் திருடினானாம்; அதை கையில் வைத்திருக்கும்போது ஒரு அடிமை அதை தட்டிப் பறித்துக் கொண்டு ஓடிவிட்டானாம்; அந்த அடிமையிடம், இது என் தகப்பனார், பசரா நாட்டில் காலிப் தோட்டத்தில் என் அம்மாவுக்காக கொண்டுவந்தார் என்று சொன்னேன்;
இதில் நான் தான் தவறுதலாக என் மனைவியை கொன்று விட்டேன்; எனவே ஹாரூன் அவர்களே என்னை கொல்லுங்கள் என்று கேட்கிறார்;
ஹாரூன், அந்த கணவன் மேலே இரக்கம் கொள்கிறார்; அவனுக்கு தண்டனை அளிக்கவில்லை; மாறாக, தன் கணக்கப்பிள்ளையைக் கூப்பிட்டு, இவ்வளவுக்கும காரணம் அந்த அடிமைப்பயல்தானே, எனவே அவனைப் பிடித்துக் கொண்டுவா என்று கட்டளை இடுகிறார்; நீ, மூன்று நாளைக்குள் அவனை பிடிக்கவில்லை என்றால், உன்னை தூக்கிலிட்டுவிடுவேன் என்றும் கட்டளை இடுகிறார்; மூன்று நாள் முடிந்து விட்டது; கணக்கப் பிள்ளையால், அடிமையை கண்டுபிடிக்க முடியவில்லை; கணக்கப்பிள்ளையை தூக்கிலிட நேரம் குறித்து விட்டார்; சாவது உறுதி; எனவே கணக்கப் பிள்ளை தன் சொந்த பந்தகளை அழைத்து விடைபெறுகிறார்; தன் மகளை அழைத்து பாசத்தோடு கட்டிப்பிடிக்கிறார்; அப்படி கட்டிப்பிடிக்கும்போது, தன் மகள் அணிந்துள்ள சட்டையில் உள்ள பையில் ஒரு பொருள் தட்டுப்படுகிறது; அது ஒரு ஆப்பிள்; ஓ! பசரா நாட்டு காலிப் தோட்டத்து, காணாமல் போன அதே ஆப்பிள்!
அந்த பெண் சொல்கிறாள், "இந்த ஆப்பிளை ஒரு அடிமையிடமிருந்து வாங்கிதாகவும், அவன் பெயர் ரேகன் என்றும், அவனே அந்த பெண்ணின் தகப்பனான, கணக்கப்பிள்ளையின் அடிமை என்றும் தெரிய வருகிறது.
கணக்கப்பிள்ளை, தன் எஜமானரிடம், தன் அடிமைதான் இந்த குழப்பத்துக்கு காரணம் என்றும், அவனை மன்னித்து விடும்படியும், அதற்கு பிராயசித்தமாக, தான் ஒரு கதை சொல்வதாகவும் சொல்கிறார். அந்தக் கதையே "நூருதீன் அலியும் அவர் மகன் பதர் அல்தின் ஹாசனும்" என்ற வேறு ஒரு கதை.
இப்படி ஆயிரத்து ஒரு இரவுகளுக்கும் கதைகள் உள்ளன.


புதன், 29 ஏப்ரல், 2015

கான்சல் (Consul)

கான்சல் (Consul):
ஒரு நாட்டின் தூதுவராக மற்றொரு நாட்டில் இருந்து வருபவர் இந்த கான்சல் அதிகாரி. தன் நாட்டு மக்கள் வெளி நாட்டில் வசிக்கும்போது அவர்களுக்கு உதவியாக இருப்பவரே இந்த கான்சல் அதிகாரி.
அம்பாசிடர் வேறு, கான்சல் அதிகாரி வேறு. அம்பாசிடர் என்பவர் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு நியமிக்கப்படுவர். ஒரு நாட்டுக்கு ஒரு அம்பாசிடரே இருப்பார். ஆனால் கான்சல் அதிகாரி அவர் சென்ற நாட்டில் பல இடங்களில் (நகரங்களில்) பல அதிகாரிகளாக இருப்பர். கான்சல் அதிகாரி இருக்கும் அலுவலகத்துக்குப் பெயர் 'கான்சலேட்'. இது, அம்பாசிடரின் அலுவலகமான எம்பசி அல்லது ஹைகமிஷன் அலுவலகத்துக்கு துணையாக இயங்குவது.

ஒவ்வொரு நாட்டின் தலைநகரிலும் மற்ற நாட்டின் எம்பசி அலுவலகம் இருக்கும். எம்பசியின் தலைமை அதிகாரிதான் அம்பாசிடர். 

வியாழன், 16 ஏப்ரல், 2015

Tmc feet water?

Tmc feet = Thousand million cubic feet; அதாவது ஒரு பில்லியன்; 100 கோடி க்யூபிக் அடி நீர். (ஒரு க்யூபிக் = ஒரு நொடிக்கு 28.3 லிட்டர் நீர்)
கோதாவரியில் மட்டும், ஆண்டுக்கு 2000 tmc ft நீர் வீணாக கடலில் கலக்கிறதாம்!

க்யூசெக் (cusec)

ஆற்றுநீரை க்யூசெக் (cusec) அளவு முறையில் அளக்கிறோம். cusec என்றால் cu-sec= cubic second. ஒரு நொடியில் ஒரு க்யூபிக் அளவு நீர் வெளியேறும். அதாவது ஒரு நொடிக்கு 28.3 லிட்டர் நீர் வெளியேறும் அளவே ஒரு க்யூசெக் என்பது.

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

ஒலி முழக்கம்

தேர் முழக்கொலி மழைக்கடக்கரட 
            சிந்துரக்களிறு பிளிறுசீ
ரார் முழக்கொலி பரிச் செருக்கொலி
            பதாதிவந்தெதி ரடர்தெழும்
போர்முழக்கொலி சழக்கிலாதுயர்
            படைக்கலன்புணரு மோசையேழ்
கார்முழக்கொலியி னெட்டிரட்டி நிறை
            கடன் முழக்கென முழக்கெழ.

தேர் முழக்கொலி =தேரின் ஒலியும்;
மழைக் கடக்கரட = மழைவரும் மேகத்தைப் போல;
சிந்துரக்களிறு = சிந்துரம் எழுதிய யானைகள்:
பிளிறு சீரார் முழக்கொலி = பிளிறுகிற பெரிய ஓலியும்;
பரிச் செருக் கொலி = குதிரைகள் கணைக்கும் ஒலியும்;
பதாதி வந்து எதிர் = பாதாதிகள் எதிரில் வரும் ஒலியும்;
அடர்ந்து எழும் போர் முழக்கொலி = அவர்கள் சண்டையிடும் ஒலியும்;
சழக்கிலா துயர் = குற்றமில்லா கூரிய ஆயுதங்கள்;
படைக் கலன் புணருமோசை = ஆயுதங்கள் மோதும் ஓலியும்;
ஏழ் கார் முழக்கோலியின் = சத்த மேகங்களின் ஒலியும்;
எட்டிரட்டி = எட்டின் எட்டாக, பதினாறு பங்காக;
நிறை கடன் முழக்கென = கடல் முழக்கம் போல
முழகெழ = முழங்கி எழ.

திங்கள், 13 ஏப்ரல், 2015

அவசரச் சட்டமும் ஜனாதிபதியும்

Bill - பில் என்பது சட்ட முன்வரைவு. சட்டத்தை பார்லிமெண்ட், சட்டசபை இவைகளில் விவாதித்து, ஓட்டுப்போட்டு, நிறைவேற்றுவதற்காக இந்த சட்ட வரைவை எழுதி இருப்பர். இது சட்டமாகாது. ஓட்டுப் போட்டு நிறைவேற்றினால்தான் சட்டமாகும்.

Act - ஆக்ட் என்பது சட்டம். அதாவது பில் என்னும் சட்ட முன் வரைவை பார்லிமெண்ட், சட்டசபை இவைகளில் நிறைவேற்றிய பின் இதற்கு ஆக்ட் என்று பெயர். அதற்கு தேதி குறிப்பிடும் நாளில் இருந்து அது அமலுக்கு வரும்.

Ordinance ஆர்டினஸ் என்னும் அவசரச் சட்டம்; 
மத்திய அரசாக இருந்தால் ஜனாதிபதியும், மாநில அரசாக இருந்தால் அதன் கவர்னரும், மந்திரி சபை தீர்மானத்தை அவசர சட்டமாக இயற்றுவர். எதற்கு அவசரம் என்றால், சட்டம் அவசரமாக இயற்ற வேண்டிய அவசரம் இருக்கும், ஆனால் அப்போது பார்லிமெண்ட் நடந்து கொண்டிருக்காது. பார்லிமெண்ட் நடந்து கொண்டிருந்தால் மட்டுமே அங்கு சட்டத்தை (பில்) தாக்கல் செய்ய முடியும். ஆகவே அவசரத்துக்காக சட்டத்தை ஜனாதிபதியைக் கொண்டு இயற்றிக் கொள்ளலாம்; ஆனாலும் அடுத்த பார்லிமெண்ட் கூடும்போது ஆறு வாரத்துக்குள் அந்த அவசர சட்டத்தை பார்லிமெண்ட்டில் தாக்கல் செய்து சாதாரண சட்டமாக இயற்றிக் கொள்ள வேண்டும்.

அவசர சட்டம் கொண்டுவர ஜனாதிபதிக்கு அதிகாரம் இந்திய சாசன சட்டம் 123லிலும், மாநில கவர்னருக்கு அத்தகைய அதிகாரம் 213லிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

இத்தகைய அதிகாரத்தை கொண்டுதான், அவசர சட்டமாக 'நிலம் கையகப்படுத்தும் சட்டம்'  அவசர சட்டமாக ஜனாதிபதியின் கையெழுத்து பெறப்பட்டு கொண்டுவரப்பட்டது. இது காலாவதி ஆகிவிட்டதால், மறுபடியும் இரண்டாம் முறையாக ஜனாதிபதி கையெழுத்து பெற்று அவசர சட்டமாக்கப் பட்டுள்ளது. 

ஆனாலும், தற்போது விவசாயிகள் சங்கம் இரண்டாம்முறை அவசர சட்டம் ஆனதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுச் செய்துள்ளனர். 

அமெரிக்காவின் அடுத்த அதிபர்

Ms. Hillary Clinton 
திருமதி. கிலாரி கிளின்டன்:
அமெரிக்காவின் அடுத்த அதிபராக வர போட்டி போடும் ஒரு போட்டியாளர். இவர் முன்னாள் அதிபர் கிளின்டனின் மனைவி. தற்போதுள்ள அதிபர் ஒபாமா இருக்கும் கட்சியைச் சேர்ந்தவர். 2016க்கு இவரே தகுதியான அதிபர் என்று ஒபாமாவே புகழ்ந்துள்ளார். இவர்கள் டெமாக்ரடிக் கட்சியைச் சேர்ந்தவர்.

இவருக்கு எதிராக, பழைய அதிபர் ஜார்ஜ் புஷ் அவர்களின் இளைய சகோதரர் ஜான் ஜெப் புஷ் (John Jeb Bush) அவர்களும் களத்தில் உள்ளார். இவர் ரிபப்ளிக்கன் கட்சியைச் சேர்ந்தவர்.

அமெரிக்காவில் இரண்டு கட்சிகள்தான் உண்டு. 
ஒன்று  பழமையான, ரிபப்ளிகன் பார்ட்டி (Republican Party); (யானைக் கட்சி)
மற்றொன்று, டெமோக்ரட்டிக் பார்ட்டி (Democratic Party); (கழுதைக் கட்சி)

ரிபப்ளிகன் பார்ட்டி மிகப் பழையது; இதுதான் மனிதனை அடிமையாக விற்றதை ஒழித்தது. ஆப்ரகாம் லிங்கன் இந்த கட்சியில்தான் இருந்தார்;  இதுவரை 18 அதிபர்கள் இந்த ரிபப்ளிக்கன் கட்சியில் இருந்துதான் வந்துள்ளனர். முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் கூட இந்த கட்சிதான். இதை பழமையான கொள்கை உள்ள கட்சி என்று சொல்கிறார்கள். ரிபப்ளிக்கன் கட்சியின் சின்னம் யானை.

தற்போதுள்ள அதிபர் ஒபாமா டெமாக்ரிடிக் கட்சியைச் சேர்ந்தவர்.
டெமாக்ரிடிக் கட்சியின் சின்னம் கழுதை. இந்த கழுதைக் கட்சியை சேர்ந்தவர்தான் திருமதி. கிலாரி கிளிண்டன். 

கழுதைச் சின்னம் வந்த கதை;
முதன்முதலில் 1828ல் அதிபராக ஆன்ரூ ஜாக்சன் டெமாக்ரடிக் கட்சியில் போட்டியிடுகிறார். இவரின் கோஷமான "மக்களை மக்களேதான் ஆள வேண்டும்" என்ற கோஷம் பிரபல்யமானது. எனவே எதிர்கட்சிகள் இவரை ஜாக்ஆஸ் = ஜாக்கழுதை(Jackass) என்று விமர்சிக்கின்றனர். இதையே தனக்கு சாதகமாக்கிக் கொண்டார். கார்டூனிஸ்ட் தாமஸ் நாஸ்ட் என்பவர் கழுதை படத்தை போட்டு விட்டார். இதிலிருந்து டெமாக்ரிடிக் கட்சிக்கு கழுதை சின்னம். 

யானைச் சின்னம்:
இதே கார்டூனிஸ்ட் தாமஸ் நாஸ்ட் என்பவர் ரிபப்ளிக்கன் கட்சிக்கு கழுதையை வரைந்து அதன் மீது சிங்கத்தின் தோலை போர்த்தியது போல படத்தை போட்டுவிட்டார். எல்லா மிருகமும் பயப்படும், ஆனால் யானை பயப்படாது. எனவே இதை யானை ஆக்கி விட்டனர். விளையாட்டாக கார்டூனிஸ்ட் செய்த வேலைகள், கட்சியின் சின்னமாகி விட்டது. 


அட்சய திரிதியை குழந்தை திருமணங்கள்

ஏப்ரல் 21 அட்சய திரிதியை.
அட்சய பாத்திரம் என்பது அள்ள அள்ளக் குறையாமல் அன்னம் (சோறு) கொடுக்கும் பாத்திரம். இதை சூரியக் கடவுள், பஞ்சபாண்டவர்கள் பசியில்லாமல் சாப்பிட வேண்டும் என்பதற்காக, அதில் மூத்தவனான தர்மனுக்கு கொடுத்துள்ளார். ஏன், தர்மனுக்கு இதை கொடுத்தார். சொந்தக்காரன் பட்டினியாய் இருப்பதை  பங்காளி பார்த்துக் கொண்டிருக்க மாட்டான். சூரியக் கடவுளின் மகன் தான் இந்த யமன் என்னும் யமதர்மன். இந்த யமதர்மனின் மந்திரத்தை சொன்னதால்தான், பஞ்சபாண்டவர்களின் தாயான, குந்திதேவி, தர்மன் என்னும் யுதிஷ்டனைப் பெற்றாள். மந்திரத்தால் பெற்ற மகன் இந்த தர்மன். பஞ்ச பாண்டவர்களில் மூத்தவன் இவனே. 

இவன் பட்டினி கிடப்பதை இவனை மந்திரத்தால் பெற்ற யமனோ, இவனின் தாத்தா சூரியக் கடவுளோ  எப்படி கைகட்டி வேடிக்கை பார்ப்பர். அதனால்தான், சூரியன், தன்னிடமிருந்த அட்சய பாத்திரத்தை தர்மனுக்கு கொடுத்து, காட்டில் திரியும் காலங்களில், அள்ள அள்ள உணவு வரும்படி ஆசீர்வதித்தாராம். 

ஒருவேளை, அந்த அட்சய பாத்திரம் கொடுத்த நாள்நான் இந்த ஏப்ரல் 21-ந்தேதியா? 
ஏப்ரல் 18 = அமாவாசை
ஏப்ரல் 19 = பிரதமை
ஏப்ரல் 20 = துவிதியை
ஏப்ரல் 21 = திரிதியை
இந்த திரிதியை நாளே அதாவது அமாவாசைக்கு மூன்றாம் நாளே அட்சய திரிதியை. 

ஒருவேளை, சித்திரை அமாவாசைக்கு மூன்றாம் நாளான திரிதியை அன்று, சூரியக் கடவுள் இந்த அட்சய பாத்திரத்தை கொடுத்திருப்பார் என நினைக்கத் தோன்றுகிறது.

அன்று அட்சய திரிதியை (அட்சய பாத்திரம் கொடுக்கும் மூன்றாம் நாள்). 
அன்று எந்தப் பொருளை வாங்கி வைத்திருந்தாலும், அது அள்ள அள்ள வளரும் என்று நம் மக்களுக்குச் சொல்லிக் கொடுக்கப் பட்டுள்ளதோ? 

அன்று அன்னதானம் செய்தால், சூரியக் கடவுள் மகிழ்ச்சி அடைவான். சமீப காலங்களாக யாரோ கிளப்பி விட்டு, இந்த தங்கம் வாங்கும் அட்சய பாத்திரம் வந்துவிட்டது. நகைக்கடைகாரரிடம் வேண்டுமானால் அள்ள அள்ள தங்கம் வளரும்; வாங்குபவருக்கு சேமிப்பு வளரும். அவ்வளவே! அன்று வாங்குவதைவிட, விலை குறைவானபோது வாங்குவதே சூரியக் கடவுள் சொல்லும் யோசனையும் கூட. 

இந்த அட்சய திரிதியை திருநாளில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு பழக்கம் உள்ளதாம். அன்று குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறுமாம். மாநில அரசு, கண்ணில் விளக்கெண்ணைய் ஊற்றிக் கொண்டு கண்காணிக்கிறதாம். 

The Child Marriage Restraint Act 2006 என்று குழந்தை திருமணச் தடுப்புச் சட்டம் உள்ளது. அது 10.7.2007 முதல் அமலில் உள்ளது. அதன்படி, Child குழந்தை என்பது பெண்ணாக இருந்தால் 18 வயதுக்குள்ளும், ஆணாக இருந்தால் 21 வயதுக்குள்ளும் இருப்பவர் என்று பொருள். இந்த வயதுக்குள் திருமணம் நடந்தால் அது குழந்தை திருமணம். தகவல் தெரிந்த யார் வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம். 

அட்சய திரிதிய குழந்தை திருமணம் என்றே ஒரு தனிப் பிரிவு சொல்லப்பட்டுள்ளது இந்தச் சட்டத்தில். அதாவது, பிரிவு 13(4)ல் அட்சய திரிதிய நாளில், ஒட்டுமொத்தமாக குழந்தை திருமணம் நடப்பதை தடுக்க இந்த பிரிவு வழி சொல்கிறது. இந்த குழந்தை திருமணத்தை நடத்துபவர்களுக்கு 2 வருட சிறை தண்டனை, அல்லது ஒரு லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக கிடைக்கும். 

அட்சய திரிதியை நாளில் என்ன செய்தாலும் "வளரும்" என்று நம்புகின்றனர்.


கடவுளுக்கு பயப்படு, இல்லை, மனச்சாட்சிக்கு பயப்படு

"ஒன்று, கடவுளுக்குப் பயப்படு; இல்லை, மனச்சாட்சிக்குப் பயப்படு."

மும்பாயைச் சேர்ந்த 12 வயது சிறுமி மரியம் ஆசிப் சித்திக் (Maryam Asif Siddiqui) பகவத் கீதை சுலோகப் போட்டியில் வென்று முதலில் வந்துள்ளார் என்று எல்லா செய்தித்தாள்களும் அதை செய்தியாக்கி உள்ளன. அதைப் படிப்பவர்களின் மனநிலை என்னவாக இருக்கும்? ஒருசிலர், 'ஒரு முஸ்லீம் பெண், இந்துமத சாஸ்திரத்தை படித்துள்ளார் பார்; இந்துமதம் இவரைக் கவர்ந்துள்ளது பார்' என்று நினைப்பர். 

வேறு ஒரு இடத்தில், ஒரு இந்துப் பெண், குரானின் போதனைகளைக் கரைத்துக் குடித்துள்ளார். அவர்களும் அதே மனநிலையில்தான் இருப்பர். 

ஆனால், யாருமே இரண்டு மதங்களும் நல்ல போதனைகளையே சொல்கிறது என்றோ, இரண்டுமே மனிதன் மேம்பட ஏற்பட்டது என்றோ,  இரண்டு கடவுள்களுமே ஒரே கடவுள்தான் என்றோ ஒப்புக் கொள்ளும் துணிச்சலும் இல்லை, அவ்வளவுக்கு பெருந்தன்மையோ, ஆழ்ந்த சிந்தனையோ இல்லை." 

மனிதன், தன்னை உய்வித்துக் கொள்ள, இந்த உலக வாழ்வில் உள்ள நல்லது, கெட்டதை ஏற்றுப் பழக, மத போதனைகள் தேவைதான். ஆனால் தன் மதத்திடம் உள்ள போதனைகளைத் தவிர, மற்றவற்றில் எதுவுமே இல்லை என்ற அகங்காரம் "பரிதாபத்துக்கு உரியதே."  

மனிதன் நிம்மதியாக வாழவேண்டும் என்றால், அவனுக்கு ஒரு வரைமுறை தேவை. இந்த வரைமுறையே ஒரு கட்டுப்பாடு, பழக்கம், கலாச்சாரம் என்கிறோம். அதுவே மதம், இறைநிலை, அதுவே தன்னை இயக்கும் சக்தி. மிகப் பெரிய உண்மை என்னவென்றால், "தன்னை கட்டுப்படுத்தும் சக்தி, ஒன்று கடவுளாக இருக்கவேண்டும்; அல்லது மிகக் கடுமையான சட்டமாக இருக்கவேண்டும்." இந்த இரண்டையும் தாண்டிய மற்றொரு சக்தி, தன்னிடமே உள்ள தன் ஒழுக்கம் என்னும் மனசாட்சி. இந்த தன் ஒழுக்கத்தை எல்லோராலும் தனக்குத்தானே கொண்டு வந்துவிட முடியாது என்பதால்தான், இந்த, மதங்கள் ஏற்பட்டன; மதங்கள் இல்லாத நாட்டில் கடும் சட்டதிட்டங்கள் (அரச கட்டளைகள்) ஏற்பட்டன. 

எனவே, இறைநிலைக்கு ஒத்துப் போகிறவனுக்கும், தன் மன ஒழுக்கத்துக்கு ஒத்துப் போகிறவனுக்கும்  மதங்களே தேவையில்லை என்று கூடச் சொல்லலாம். மதம் என்பது அல்லது மத வழிபாடு என்பது கட்டாயாமில்லை. வாழ்வியல் நெறி தெரிந்திருந்தால் போதும், அவனுக்கு மதம் தேவையே இல்லை! எல்லோருக்கும் தெரியாத வாழ்வியல் நெறியை மட்டும் மதங்கள் கற்றுத் தருகின்றன. அந்த அளவில் மட்டுமே மதங்களை அணுக வேண்டும். கடவுளைக் கற்றுத்தரும் மதங்கள் தேவையில்லை. 

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

மிதமிஞ்சிய அதிகாரமே ஊழலின் ஆணிவேர் Absolute Power Corrupts Absolutely

சீனாவில் மிகப் பெரிய பெட்ரோலிய ஊழல் அம்பலம் ஆகி உள்ளதாம். சீன தேசிய பெட்ரோலிய கார்பரேஷனில் (CNPC) முன்னர் இருந்துவந்த தலைவர் ஜியாங் ஜீமின் (Jiang Jiemin). இந்த கம்பெனியானது பெட்ரோ சீனா லிமிடெட்-க்கு தாய் (முதன்மை) நிறுவனமும் ஆகும். 

சீனாவின் அதிபர் ஜீ ஜின்பிங் (Xi Jinping). இவர், சீன பெட்ரோலிய நிறுவனங்களை கண்காணித்து ஊழலை ஒழிக்க திட்டமிட்டுள்ளாராம். 

சீனா கம்யூனிஸ்ட் பார்ட்டியின் முன்னாள் தலைவர் ஜோ (Zhou)க்கும் ஊழலில் தொடர்பு என்று ஏற்கனவே சீன அரசு அவரைக் கைது செய்துள்ளது. இப்போது இந்த ஜியாங்கும், அந்த ஜோ-வுடன் ஊழலில் தொடர்பு இருக்கும் என சீன அரசு கருதுகிறதாம்.

"எவ்வளவு கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தாலும், ஊழலை தடுத்துவிட முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. "Absolute power corrupts absolutely." மிதமிஞ்சிய அதிகாரமே ஒட்டுமொத்த ஊழலுக்கும், கொடுங்கோன்மைக்கும் வழிவகுக்கும். 

இதற்கு தீர்வு ஒன்றே! அது  மக்களின் கையில்தான் உள்ளது. தனிமனித வழிபாட்டை/துதிபாடலை விட்டுவிட்டு, தனிமனித ஒழுக்கத்தை உரிய ஆளுமை குணமாக மக்கள் கருதினால், தலைவர்களும் தனிமனித ஒழுக்கத்துக்குள் வந்துவிடுவர். துதிபாடல் இல்லாத நாட்டில், ஊழல் மிக மிகக் குறைவே! 

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

புருஷார்த்தம் Goals of Life

மகாபாரதத்தின் யுத்தம் 18 நாட்கள் நடந்ததாக அந்த போரை வர்ணித்திருப்பர்; அதில் படைபலம், மன்னர், தளபதிகளின் வீரம் சிறப்பு போன்ற எண்ணற்ற பெருமைகளை சொல்லியிருப்பர்; வியாசர் எழுதிய மகாபாரதம் ஒரு லட்சம் ஸ்லோகங்களைக் கொண்டது; ஒரு ஸ்லோகம் என்பது இரட்டை வரிகளைக் கொண்டது; அப்படியானால், வரிக்கணக்கில் 2 லட்சம் வரிகள்; இதில் பல கிளைக் கதைகள் இருப்பதால் (கதைக்குள் கதையாக) இவ்வளவு பெரிதாக இருக்கிறது; சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது; ஆனால் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார், "கலியுகம் தொடங்கி விட்டது; மக்கள் எப்படி வாழ வேண்டும் என்று புருஷதர்மத்தை Goals of Life சொல்வதற்காக இந்த மகாபாரதக் கதை ஏற்பட்டது" என்கிறார்; கலியுகம் தொடங்கி இப்போது 5,000 ஆண்டுகள் ஆகி விட்டது; அதன்படி இந்த கதை நடந்து 5,000 ஆண்டுகள் ஆகி இருக்கலாம் அல்லது அதற்கு பின்னர் நடந்திருக்கலாம்; கதை எழுதப்பட்ட காலம், எப்போது என்று தெரியவில்லை; வியாசர் பழைய சமஸ்கிருத மொழியில் (பாணினி மொழியில்) விநாயகருக்குச் சொல்லச் சொல்ல, விடாமல் எழுதியதாகச் சொல்கிறார்கள்; பின்னர் மறுபடியும், அர்ஷூனின் கொள்ளுப்பேரன் ஜனமேஜயன் மன்னருக்கு, வியாசரின் சிஷ்யன் வைஷாம்பயனா சொன்னதாக சொல்கிறார்கள்; அதன்பின்னரே வெளி உலகுக்கு மகாபாரதம் அறிமுகமாகி இருக்கலாம்; 

பேரழகி ஹெலன்

பேரழகி ஹெலன் பிறந்த கதை:
கிரேக்க இதிகாசத்தில் இவளே பேரழகி; கடவுள்களின் அரசரான ஜூயஸின் மகள்; ஆனால் ஜூயஸுக்கும், வேறு ஒருவரின் மனைவியான லிடா என்ற பெண்ணுக்கும் பிறந்தவளே இந்த பேரழகி ஹெலன்; இவள் பிறப்பே வேடிக்கையானதும், வினோதமானதும்கூட; கடவுள்களின் அரசன் ஜூயஸ் இந்த லிடா என்ற வேறு ஒரு அரசனின் மனைவி மீது பேராசை கொண்டார்; நேரடியாக அடைய முடியாது என்று ஒரு திருட்டு வேலை செய்தார்; (இந்திய இதிகாசங்களிலும் இப்படி பல திருட்டு வேலைகள் சொல்லப் பட்டுள்ளன); ஜூயஸ் கடவுள் ஒரு அன்னப் பறவை போல வேடமிட்டுக் கொண்டார்; அதை ஒரு கழுகு துரத்துவது போல பயந்து நடுங்கி, இந்த லிடா பெண்ணின் மடியில் வந்து விழுந்தார்; லிடா, அந்த அன்னப் பறவையை எடுத்து ஆசையுடன் கொஞ்சினார்; அன்னமும் கொஞ்சியது; இருவரும் கலந்து விட்டனர்; அதனால் அவள் ஒரு கரு அவள் வயிற்றில் உருவானது; அன்றிரவே அவள் அவளின் கணவனுடன் கூடினாள்; அதிலும் ஒரு கரு உருவானது; எந்தக் கரு, யாருடையது என்று தெரியவில்லை; இரண்டு ஆண்களின் கலப்பும் இருக்குமாம்; ஜூயஸ் கடவுள்; எனவே கடவுள் இறப்பு அற்றவர்; அவளின் கணவனோ மனிதன்; இறப்பு உள்ளவன்; அந்த கலப்புக் கருவானது மனிதனும் கலந்து, தெய்வீகமும் கலந்து பிறந்த குழந்தைகள்; கடவுளின் தெய்வீகத்துடன் பிறந்த ஹெலன் உலக பேரழகி ஆனாள்;
இவள்தான் இலியட் காவியத்தின் நாயகி

Iliad இலியட் இதிகாசம்

Iliad இலியட்;
இலியம் கவிதை; சிங்கத்தின் கவிதை; Song of Ilion or Song of Lion (இலியம் =சிங்கம்); கிரேக்க இதிகாசத்தில் கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரத்தை பற்றி பேசும் காவியம்;இதன் கதாசிரியர் ஹோமர் (Homer); உலக அளவில் மிகச் சிறந்த இதிகாசமாக போற்றப்படுகிறது இந்த இலியட் காவியம்; இந்தப் பெருமையெல்லாம் அதனை இயற்றிய ஹொமருக்கே சேரும்; ஐரோப்பிய இலக்கியங்களில் முதன் முதலில் தோன்றியது இதுவாகத்தான் இருக்கும்; சுமார் 3000 வருடங்களுக்கு முன் இது இயற்றப் பட்டிருக்கலாம்; பழைய கிரேக்க மொழியில் எழுதப்பட்ட காவியம்; இலியட் காவியத்தில், இந்தப் போர் 10 வருடங்கள் நடந்திருத்தாலும், கடைசி வருட உக்கிரப் போரைப் பற்றி விரிவாகச் சொல்லும் ஹோமர், இந்த போர் எதனால் ஏற்பட்டது (வழக்கம்போல பெண்ணால்தான்), வீரர்களின் தனிச் சிறப்பு, எப்படி முற்றுகை இடுகிறார்கள், கூட்டணிகள் எப்படியெல்லாம் உருவாகின்றன என்ற உலக உண்மைகளை புட்டுப்புட்டு வைத்திருப்பார்; இலியட் காவியம் 15,693 வரிகளைக் கொண்டது;

அட்ரெயஸ் மன்னன் கிரேக்க நாட்டின் தென்பகுதிக்கு மன்னராக இருக்கிறார்; அட்ரெயஸூம் அவருடன் பிறந்த ரெட்டைப் பிறவி தையேஸ்டெஸூம் சகோதரர்கள்; இவர்கள் இருவரையும் இவர்களின் தந்தை நாட்டை விட்டே விரட்டி விடுகிறார்; காரணம், தந்தையின் சகோதரரைக் கொலை செய்து விட்டனராம் இந்த இரட்டையர்; கொலை செய்தால் ஒலிம்பியா நாட்டுக்கு மன்னர்கள் ஆகிவிடலாம் என்று ஆசைப் பட்டனராம் இந்த இரட்டையர்கள்; இருவரும், ஏதேன்ஸுக்கு தெற்கே உள்ள மைசேனா நாட்டுக்குப் போகிறார்கள், அதுதான் அவர்களின் தாயார் ஏரோப்பின் நாடு; அங்கு மன்னன் போருக்கு போய்விட்டதால், இவர்கள் அரசாட்சி செய்கிறார்கள்; அந்த மன்னர் போரில் இறந்து விட்டதால், அந்த நாட்டை இவர்கள்  தொடர்ந்து ஆட்சி புரிகிறார்கள்;


அட்ரெயஸூக்கு இரண்டு மகன்கள், அகமேம்னான் மற்றும் மெனலாயஸ்; அமமேம்னான் என்றால் பிடிவாதக்காரன் என்று பொருளாம்; மெனலாயஸின் மனைவி பெயர் ஹெலன் ஆப் டிராய் அல்லது ஹெலன் ஆப் ஸ்பார்ட்டா; இந்த ஹெலன், கடவுள்களின் அரசனான ஜூயஸின் மகள்; எனவே இவள்தான் உலகத்திலேயே மிக அழகானவளாம்; இவள் அட்ரெயஸின் இளைய மகனான மெனலாயஸை திருமணம் செய்து கொண்டு அந்த நாட்டு ராணி ஆகி விட்டாள்; இவள் அழகில் மயங்கிய டிராய் நாட்டின் இளவரசன் பாரிஸ், இவளைக் கடத்திக் கொண்டு சென்று விட்டான்; அண்ணன் தம்பி இருவரும் படைகளைத் திரட்டி டிராய் இளவரசனுடன் போருக்கு போகிறார்கள்; இந்தப் போரே ட்ரோஜான் சண்டை Trojan War; 

ஆப்ராம் என்னும் ஆப்ரகாம்

பைபிள் வழி மூதாதையர்கள் இந்த மூன்று பேரும், ஆப்ரகாம் (ஆப்ராம்), அவர் மகன் இஸ்மாயிலும், ஐசக்கும், ஐசக்கின் மகன் ஜேக்கப் (இஸ்ரேல்);
யூதகலாச்சாரம் ஏற்படுவதற்கு இவர்களே மூதாதையர் என்றும் சொல்வர்;
ஆப்ராம் என்கிற ஆப்ரகாம்;
முதல் மனிதன் ஆதாம் முதல் ஆப்ரகாம் வரை 10 மூதாதையர்கள் இருந்திருக்கின்றனர்; இந்த முதல் 10 பேர், பெரும் வெள்ளப் பெருக்கு வருவதற்கு முன்னர் வாழ்ந்த வழிதோன்றல்கள்; (மீதி 10 பேர் வெள்ளப் பெருக்குப் பின் வாழ்ந்த வழித் தோன்றல்கள்); இதில் 10-வது வழித்தோன்றலே ஆப்ராம் என்று அழைக்கப்பட்டு பின்னர் ஆப்ரகாம் ஆனவர்; இவரின் கனவில் கடவுள் வந்து "நீ உன் தகப்பன் சாரா-வின் வீட்டிலிருந்து வெளியேறி, கானான் நாட்டுக்குப் போ; அங்கு கானான் மக்கள் வசிக்கிறார்கள்; அங்கு உன் வழித்தோன்றல்களை உருவாக்கு;" என்கிறார்; ஆனால் கானான் நாட்டில் பெரிய பஞ்சம் ஏற்படுகிறது; எனவே கானான் நாட்டை விட்டு அதன் தெற்குப் பகுதியான எகிப்துக்கு போகிறார்கள்; ஆப்ராமின் மனைவி பெயர் சாராய்; இவளுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை; எகிப்தியரைப் பார்த்து பயந்து, சாராய் என் தங்கை என்று கணவனே பொய் சொல்லி வாழ்ந்து வருகிறார்; மனைவி என்றால், தன்னைக் கொன்றுவிட்டு மனைவியை அவர்கள் எடுத்துக் கொள்வார்களாம்; எகிப்து நாட்டை ஆண்ட மன்னர் பேர்ரோ Pharaoh (இது மன்னனின் தனிப்பெயர் இல்லை; எகிப்தை ஆளும் மன்னர்களின் பட்டப் பெயர் இது); சாராய் பெண் வந்திருப்பது அந்த எகிப்து நாட்டு இளவரசனுக்கு தகவல் தெரிந்துவிட்டது; வரச் சொன்னான்; ஆப்ரகாமுக்கு மாடுகளும், கழுதைகளும், ஒட்டகங்களும், வேலைக்காரர்களும், ஏராளமாகக் கொடுத்தான் இளவரசன்; ஆனால் கடவுள், மன்னனின் இளவரசனையும், அவன் செல்வங்களையும் அழித்தான்; இளவரசனுக்கு காரணம் தெரியவில்லை; காரணத்தை தேடும்போது, சாராய் என்ற பெண் திருமணம் ஆகாதவள் இல்லை; அவள் ஆப்ராமின் தங்கையும் இல்லை; உண்மையில் ஆப்ராமின் மனைவிதான் இந்த சாராய் என்று தெரியவருகிறது; கோபம் வந்து, ஆப்ராமிடம் கொடுத்த எல்லாவற்றையும் திரும்ப ஒப்படைத்து விட்டு ஓடிவிடும்படி கூறினான் இளவரசன்; எனவே ஆப்ராம், தன் ஆடுமாடுகளுடன் ஹெப்ரான் நாட்டுக்கு (பாலஸ்தீன நாடு) வந்துவிடுகிறார்; அவர் தம்பி மகன் "லாட்" என்பவனின் குடும்பத்தை பசுமையான ஜோர்டன் நாட்டுக்கு அனுப்பி விட்டார்; ஜோர்டான் நாட்டுப் போரில், ஆப்ராமின் தம்பி மகன் லாட்டை சிறைப் பிடித்து விட்ட செய்தி ஆப்ராமுக்கு தெரியவருகிறது; ஆப்ராம் தன் கூட்டத்தை இரண்டு பிரிவாக்கி, அந்த நாட்டை தாக்கி, தம்பி மகனை விடுவிக்கிறார்; ஜோர்டான் போரில் தோற்ற சோடோம் மன்னன், ஆப்ராமைமிடம் நட்பாக ஆகிவிட வருகிறான்; வரும்போது, ரொட்டியும், ஒயினும் கொண்டு வருகிறான்; ஆப்ராமின் கனவில் கடவுள் தோன்றி, உன் மக்களை இந்த மண்ணில் பெருக வைப்பேன் என்கிறார்; ஆனால் ஆப்ராமின் மனைவியோ பிள்ளை இல்லாமலேயே இருக்கிறார்; எனவே மனைவியின் எகிப்திய வேலைக்காரி மூலம் ஆப்ராமுக்கு குழந்தை பிறக்க ஏற்பாடாகிறது; அந்தக் குழந்தை இஸ்மாயில்; குழந்தை பிறந்தவுடன் அந்த வேலைக்காரி, எஜமானி சாராயை மதிப்பதில்லை; எனவே வேலைக்காரியை விரட்டி விடுகிறார்; போகும்வழியில் ஒரு நீரூற்றுக்கு அருகில், அந்த வேலைக்காரிக்கும் அவள் குழந்தைக்கும், தேவதை தோன்றி, திரும்பி வரும்படியும், உன் மகன் மூர்கன்போல வருவான் என்று சொல்கிறது; ஆப்ராமுக்கு வயதாகி விட்டது; இப்போதுதான் அவர் பெயர் ஆப்ரகாம் என்றும், மனைவியின் பெயர் சாராய் என்பதை சாரா என்றும் கடவுள் மாற்றி விட்டுஅவரின் மனைவிக்கு மகன் பிறப்பான் என்றும் கடவுள் சொல்கிறார்; (I'll give thee a son also of her.); இப்போதுதான், கடவுளின் ஆணைப்படி, தனக்கும், மகன் இஸ்மாயிலுக்கும் (13 வயது) சுன்னத் செய்து கொள்கிறார்; ஆப்ரகாம் பிலிஷ்டைன் பகுதியில் (கஜா பகுதி) வசிக்க செல்கிறார்; அங்குள்ள மன்னன் அபிமேலக் இவர்களை விசாரனைக்கு அழைக்கிறான்; அங்கு ஆப்ரகாம் தன் மனைவி சாராவை தங்கை என்று சொல்கிறார்; மன்னனின் கனவில் கடவுள் தோன்றி, நீ, சாராவை அடைய திட்டமிட்டால் உன் நாட்டை இழப்பாய் என்றும் அவள் ஆப்ரகாமின் மனைவி என்றும் எச்சரிக்கிறார்; மறுநாள், ஆப்ரகாமிடம், 'ஏன் என்னிடம் பொய் சொன்னாய்' என்று அரசன் கேட்கிறான்; அவரும் "உண்மையில் இவள் என் சகோதரிதான்; என் தந்தையின் மகள்; ஆனால் இவள் என் தாயின் மகள் இல்லை; அதனால் எனக்கு மனைவி ஆனாள்;" என்று விளக்கம் அளிக்கிறார்; அங்குள்ள ஒரு கிணற்றுக்கு சண்டை வருகிறது; ஆப்ரகாம் ஆட்களுக்கும், பிலிஷ்டைன் (கஜா) மன்னனின் ஆட்களுக்கும்; ஆட்டுக் குட்டிகளுக்கு தண்ணீர் இறைப்பதில் பிரச்சனையாம்;
ஆப்ரகாமுக்கு சாரா மூலம், முதன் முதலில் கடவுள் சொன்னபடி, ஒரு மகன் பிறக்கிறான்; அவனுக்கு "ஐசக்" என்று பெயர் வைத்து, அவனின் 8 வயதில் அவனுக்கும் சுன்னத்தும் செய்து விடுகிறார்; ஒரு விருந்து நடக்கிறது அதில் மூத்த மகன் இஸ்மாயில், இந்த பெரியம்மா கிழவியாகி ஐசக் மகனை பெற்றதற்காக கேலி செய்கிறான்; இதை கணவனிடம் சொல்லி மூத்த மகன் (வேலைக்காரியின் மகன்) இஸ்மாயிலை விரட்டிவிடும்படி கேட்கிறார்; என் மகன் ஐசக்குடன் அவன் பங்குக்கு வரக்கூடாது என்றும் சொல்கிறார்; ஆப்ரகாமுக்கு வருத்தமாகி விட்டது; கடவுளிடம் இதற்கு தீர்வு சொல்லும்படி கடவுளை வேண்டுகிறார்; "கவலைப்படாதே, உன் மனைவி சொல்லியபடியே செய், ஒன்றும் ஆகாது" என்று கடவுள் சொல்கிறார்; "ஐசக் மூலம் உன் வம்சத்தை உருவாக்குவேன், அவன் உனது வாரிசு; என்றும், இஸ்மாயில் மூலம் ஒரு தேசத்தை உருவாக்குவேன், அவனும் உன் இரத்த வாரிசே; என்றும் கடவுள் ஆப்ரகாமிடம் ஆறுதலாகச் சொன்னார்; மறுநாள் இஸ்மாயிலையும் அவன் தாயையும் பொருள்களை கொடுத்து வெளியே அனுப்பி விட்டார்; காடுகளில் அழைந்து திரிந்து கடவுளை வேண்டி அழுதனர்; ஒரு தேவதை தோன்றி, 'உங்களுக்கு என்றே தனி நாட்டை உருவாக்குவேன்' என்று கூறியது; பின்னர் தான் பிறந்த எகிப்து மண்ணில் தன் மகன் இஸ்மாயிலுக்கும் ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்து விடலாம் என்று கருதி பெண்தேடினார்;
இதற்கிடையில், ஆப்ரகாம் கனவில் கடவுள் தோன்றி, உன் மகன் ஐசக்கை எனக்கு பலி கொடு என்று கேட்டார்; அதை அப்படியே ஏற்று, மகனைக் கூப்பிட்டுக் கொண்டு மலை ஏறினார்; அங்கு மகனை பலி கொடுக்க தயாரானபோது, தேவதை தோன்றி "உன் மகனை விட்டுவிடு; அதற்குப் பதிலாக ஒரு ஆட்டை பலி கொடு" என்று சொல்லியது; கடவுள் சொன்னதை நம்பிய ஆப்ராகாமுக்கு நிறைய செல்வத்தையும் மக்கள் கூட்டத்தையும் கொடுத்தாராம் கடவுள்;
ஆப்ரகாமின் மனைவி சாரா இறக்கிறார்; அதற்குபின்னும் ஒரு பெண்ணை துனைவியாக வைத்துக் கொள்கிறார்; அவருக்கு 6 மகன்கள் பிறக்கிறார்கள்; 175 வருடம் வாழ்ந்து பின்னர் ஆப்ரகாம் இறக்கிறார்;
யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் இவர்கள் அனைவருக்கும் இந்த ஆப்ரகாம்தான் மூதைதையர் என்கிறார்கள்;
ஆப்ராகாமின் ரத்த வழி வந்தவர்களை யூதர்கள் என்றும்;
ஆப்ராகாமின் கடவுள் நம்பிக்கையைக் கைக் கொண்டவர்கள் கிறிஸ்தவர்கள் என்றும்;
ஆப்ரகாம் என்பவர் (ஆதாம் முதல், பின்னர் வந்த முகமது நபிகள் வரை  வந்த) கடவுள் தூதர் என்று மூஸ்லீம்களும் ஏற்றுக் கொண்டார்கள்;


வியாழன், 2 ஏப்ரல், 2015

ஒலிம்பஸ் மலை Mount Olympus

 ஒலிம்பஸ் மலை Mount Olympus
கிரேக்க இதிகாசத்தில் இந்த ஒலிம்பஸ் மலை கதாநாயகனாவே உள்ளது. இங்குதான் ஆதி கடவுள்கள் (டைட்டன்ஸ்) வசித்துள்ளனர்; சிவனுக்கு கைலாசம் இருப்பிடம் என்பதுபோல, ஜூயஸூக்கு இந்த ஒலிம்பஸ் மலைதான் கைலாசம் என்னும் வசிப்பிடம்; ஒலிம்பஸ் என்றால் சொர்க்கம்; கடவுள் வாழும் இடம் சொர்க்கமாகத்தானே இருக்க முடியும்; கிரீஸ் நாட்டின் கிழக்கு பகுதியில் இந்த ஒலிம்பஸ் மலை இருக்கிறது; மிக உயரமான மலை; சுமார் 9,500 அடி உயரம்; ஐரோப்பா நாட்டிலேயே பெரிய மலை; (எவரஸ்டின் உயரம் 29,000 அடி); ஒலிம்பஸ் மலை மொத்தம் 52 முகடுகளை கொண்டது; இந்த முகடுகளில் மிக உயரமான முகடுதான் "மிட்திகாஸ் முகடு"
இந்த ஒலிம்பஸ் மலையில்தான் கிரேக்க இதிகாசக் கடவுள்கள் வசித்தார்கள்; யுரானஸின் மகன் குரோனஸ்; இந்த குரோனஸூக்கு மொத்தம் 6 மகன்கள், 6 மகள்கள்; இந்த 12 பேரும்தான் முதல் கடவுள்கள்; இவர்களை டைடன்ஸ் என்று சொல்வர்; இந்த 12 பேரும், இவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் (தேவதைகள்) எல்லோரும் வசித்த இடம்தான் இந்த ஒலிம்பஸ் மலை; இந்த 12 கடவுள்களும் ஒலிம்பஸ் மலையில் வாழ்ந்ததால், இவர்களை "ஒலிம்பியன்ஸ்" என்று அழைப்பர்;
1) ஜூயஸ் = இவர்தான் கடவுள்களின் அரசர்; (தலைமைக் கடவுள்); ஆகாயம், இடி, மின்னல், சட்டம், ஒழுங்கு, நீதி, இவைகளுக்கு இவர்தான் கடவுள்; (இவர்தான் குரோனஸ்-ரியா இவர்களின் 6 குழந்தைகளில் இவர்தான் கடைசி மகன்); இவரின் மனைவி ரியா; இதுதவிர வேறு காதலிகளும் உண்டு;
2) ஹிரா = ஜூயஸின் மனைவி; கடவுள்களின் ராணி; இவர் திருமணம், குடும்பம் இவைகளுக்கு கடவுள்;
3) பொஷிடான் = ஜூயஸின் தம்பி; கடல், நிடுநடுக்கம், கடல் அலை இவைகளுக்கு கடவுள்;
4) டெமிட்டர் = ஜூயஸின் தங்கை = விளைச்சல், இயற்கை, இவைகளுக்கு கடவுள்;
5) ஏதெனா = ஜூயஸின் மகள் = அறிவு, ஆற்றல், முன்னேற்றம் இவைகளுக்கு கடவுள்;
6)  அப்போலோ = (இவர் இரட்டையர்; இவருடன் பிறந்தவர் அர்ட்டமிஸ்); ஜூயஸின் மகன்; வெளிச்சம், புத்திசாலித்தனம், ஆறுதல், இருட்டு, கலை, பாடல், வில்வித்தை, இளமை, அழகு இவை எல்லாவற்றுக்கும் கடவுள்;
7) அர்ட்டமிஸ் = (இவள் இரட்டையர்; இவளுடன் பிறந்தவர் அப்போலோ); ஜூயஸின் மகள்; வேட்டை, வில்வித்தை, கற்பு, விலங்குகள் இவைகளுக்கு கடவுள்;
8) ஏரெஸ் = ஜூயஸின் மகன்; போர், கொடுமை, ரத்தம் சிந்தல் இவைகளுக்கு கடவுள்; போர்கடவுள்;
9) அப்ரோடைட் = ஜூயஸின் மகள்; அன்பு, காதல், ஆசை இவைகளுக்கு கடவுள்; காதல் கடவுள் இவரே;
10) ஹெபாயஸ்டஸ் = ஜூயஸின் மனைவி ஹெராவின் மகன்; இரும்படித்தல், கைத்தொழில், நெருப்பு; இவைகளின் கடவுள்;
11) ஹெர்மஸ் = ஜூயஸின் மகன்; கடவுள்களுக்கு தூதுவன்; வியாபாரம், தொழில், திருட்டு, விளையாட்டு இவைகளுக்கு கடவுள்;
12) ஹெஸ்டியா = குரோனஸ்-ரியாவின் முதல் மகள்; குடும்பத்துக்கு கடவுள்; (இவரை இந்த கூட்டத்தில் சேர்க்க மாட்டார்களாம்);
13) டைனிசஸ் = ஒயின் கடவுள்; ஜூயஸின் மகன்; நாடகத்துறையின் கடவுள்;
 இவர்கள் எல்லோருமே இந்த ஒலிம்பஸ் மலையில்தான் கூட்டமாக வாழ்ந்திருக்கிறார்கள்; இவர்கள் எல்லோரும் மலையில் அடிக்கடி கூட்டம் கூடுவார்கள்;

**

புதன், 1 ஏப்ரல், 2015

Cronus குரோனஸ் கடவுள்

 Cronus குரோனஸ்
கிரேக்க இதிகாசப்படி --
கடவுள் யுரானஸின் கடைசி மகன் தான் இந்த குரோனஸ்; இந்தக் கடைசி மகன்தான், தன் தாய் கயாவின் (Gaia) கட்டளையை நிறைவேற்றுவதற்காக, தன் தகப்பனார் யுரானஸின் விரைகளை அறுத்து கடலில் எறிந்துவிட்டவர்; தாய் கயாதான் அந்த அரிவாளாக உருவம் மாறி, மகனுக்கு அரிவாளாக இருந்தார்; எனவே தான் இந்த குரோனஸ் எப்பொதும் அந்த அரிவாளுடன் காட்சி தருவார்; துணிச்சல்மிக்கவர் இந்த குரோனஸ் கடவுள்; ஆதிக் கடவுள் யுரானஸ் அவர்களின் 6 மகன்கள் 6 மகள்களில் கடைசி மகன்தான் இந்த குரோனஸ்; இந்த மகன்கள் கூட்டத்தை டைட்டான்ஸ் கூட்டம் என்பர்;
 ("கத்தியை எடுத்தவன் கத்தியாலேயேதான் சாவான்." குரோனஸூக்கும் இதே கதிதான் பின்னர் நேர்ந்தது; இவரின் மகன், பின்நாளில் இவரை போட்டுத் தள்ளிவிட்டான்;)
குரோனஸ் தன் தங்கையான ரியாவை (Rhea) திருமணம் செய்து கொண்டார்; (அந்தக் காலத்தில் கடவுளின் முதல் குழந்தைகளின் வழக்கம் இது);
குரோனஸ் ஆகாயத்துக்கு கடவுள் ஆனதால், மழை பெய்ய வைத்து, பயிர்கள் செழித்து வளர வைத்து, நல்ல அறுவடை நடப்பதால் இவரை அறுவடைக் கடவுள் என்றும் சொல்வர்; அவர் கையில் உள்ள அரிவாள் அதற்குத்தான் வைத்திருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள்; அறுவடை திருவிழாவுக்கு Kronia என்று பெயர்; குரோனஸ் கடவுளின் பெயரை வைத்தே "குரோனியா அறுவடைத் திருவிழா" நடத்தப் படுவதாக கிரேக்க இதிகாசத்தில் சொல்லப் பட்டுள்ளது.
முதல் கடவுள் யுரானஸ் சிந்திய ரத்தத்தில் தனித்தனி பகுதிகளை தன் பிள்ளைகளுக்கு கொடுத்து விட்டார். ஆனாலும், கடைசி மகனான குரோனஸுக்கு சாபமும் கொடுத்து விட்டாராம்; “மகனான நீயே என்னை தாக்கியதால், உனக்குப் பிறக்கும் மகனும் உன்னைத் தாக்குவான்” என்று சாபமாம்;
குரோனஸ் - ரியா தம்பதிகளுக்கு 5 குழந்தைகள் பிறக்கிறது;
1) டெமிட்டர்
2) ஹெஸ்டியா
3) ஹெரா
4) ஹேடஸ்
5) பொஷிடான்
குரோனஸுக்கு அவரின் தந்தையின் சாபம் ஞாபகம் வருகிறது; தன் மகன் தன்னைக் கொல்வானே என்று பயம்; எனவே, குழந்தை பிறக்கப் பிறக்க, குரோனஸ் அந்தக் குழந்தைகளை முழுங்கி விடுவார்; இது வழக்கமாக இருந்திருக்கிறது; எல்லாக் குழந்தைகளையும் முழுங்கி விட்டார்;
அவரின் மனைவிக்கோ, இது கவலையளித்தது; ஒரு தந்திரம் செய்தாள்; கடைசி குழந்தையின் பெயர் ஜூயஸ் (Zeus); இந்தக் குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையை மறைத்து வேறு மலைப் பிரதேசத்துக்கு கணவனுக்குத் தெரியாமல் கொடுத்து அனுப்பி விட்டார்; அதற்குப் பதிலாக ஒரு துணியில் கல்லைச் சுற்றி, அதை தன் கணவனிடம் கொடுத்து, இதுதான் இப்போது பிறந்த அந்தக் குழந்தை என்று சொல்லி விட்டாள்; அவனும் அந்த 6-வது  குழந்தையையும் விழுங்கி விட்டான்; அந்த 6-வது குழந்தை ஜூயஸ் காட்டில் வளர்ந்து, வாலிபனாகி நாட்டுக்குள் வந்து, தன் தகப்பனுடன் சண்டையிட்டு அவனின் வயிற்றைக் கிழித்து, அவன் விழுங்கிய ஐந்து குழந்தைகளையும் உயிருடன் மீட்டான் என்கிறது கிரேக்க இதிகாசம்; அந்தச் சண்டையில் குரோன்ஸ் இறந்துவிட்டார்;
அதற்குபின் கடவுளாக கடைசிவரை இருந்து வந்தவர் இந்த ஜூயஸ் கடவுள்தான்; இவர் தான், கிரேக்க இதிகாசத்தின் தலைமைக் கடவுள் ஆவார்;


முதல் கடவுள் யுரானஸ் Uranus

 கடவுளின் தகப்பனார் யார்?
கிரேக்க இதிகாசம்;
ஆகாயத்திலிருந்து வந்தவர் தந்தை; பூமியில் இருந்து வந்தவர் தாய்; ஆகாயத்தில் யார் இருக்கிறார்? Uranus யுரானஸ் கடவுள்; யுரானஸ் என்றால் ஆகாயம், சொர்க்கம்; இவர்தான் ஆகாயத்தின் தந்தை; பூமித்தாய் கையா Gaia. இவர்கள் இருவரும் சேர்ந்து பெற்ற பிள்ளைகள்தான் டைட்டான்ஸ் Titans; ஒவ்வொரு நாளின் இரவிலும் ஆகாயக் கடவுளான யுரானஸ், பூமிக்கு வந்து பூமியை தழுவி மூடிக் கொள்வாராம்; அப்போது தன் மனைவி பூமித்தாயான கயாவுடன் கலந்து குழந்தை பெற்றுக் கொள்வார்களாம்; இருந்தாலும், யுரானஸ் தந்தைக்கு, தன் குழந்தைகள் மேல் பிரியம் இல்லையாம்; உண்மையில் குழ்ந்தைகளை வெறுக்கிறாராம்; முதல் ஆறு மகன்களுக்கும் முதல் ஆறு மகள்களுக்கும் டைட்டன்ஸ் என்று பெயர் கூட்டம் உண்டு; ஏதோ ஒரு கோபத்தில் தந்தை யுரானஸ், கடைசி மகன் டார்டாரஸை பூமிக்கு அடியிலுள்ள பாதாள சிறையில் அடைத்து வைத்து விடுகிறார்; இதனால் தாய்க்கு, கணவர் மீது, கோபம் உச்சிக்கு போகிறது; தாய் கயா, ஒரு அரிவாளாக உருவம் மாறி, தன் பிள்ளைகளிடம் "இந்த அரிவாளைக் கொண்டு உங்களின் தந்தையின் விரையை வெட்டி விடுங்கள்" என்று கூறுகிறார்; "கொலையும் செய்வாள் பத்தினி."  கடைசி மகன் "குரோனஸ்" இதற்கு உடன்படுகிறான்; துணிச்சல் மிக்கவன்; தகப்பனுடன் சண்டையிடுகிறான், தாய் சொன்னது போலவே தந்தையின் விரைகளை அறுத்து கடலில் வீசிவிடுகிறான்; இதில் பயந்துவிட்ட தந்தை, தன் மகன்களை அழைக்கிறார்; என் ரத்தம் விழுந்த இடங்கள், ஜியான்ட்ஸ் (வீரம் மிக்கவர்கள்) ஆகவும்; மலியா என்னும் நிம்ஸ் (மரத்தில் வசிக்கும் இளம் தேவதைகள்) ஆகவும்; என் விரைகள் விழுந்த கடல்பகுதி அபோர்டைட் (காதல், காமம், குழந்தை பெறும் தேவதைகள்) ஆகவும்; மாறவேண்டும் என்று கூறினார்
இந்த நிகழ்வுகளுக்குப் பின்னர், கடவுள் யுரானஸ், இரவில் மனைவியைத் தேடி பூமிக்கு வரவில்லை; எனவே பூமியும் இரவில் இருளால் தழுவப் படவில்லை; இத்துடன் கடவுள் குழந்தை பெற்றுக் கொள்வது நின்றுவிட்டது;
யுரானஸ்-கையாவுக்கு பிறந்த குழந்தைகளில் கடைசி மகன் துணிச்சல்மிக்க இந்த குரோனஸ் முக்கியமானவர்; (கடைசிப் பையன்தான், தாயின் சொன்னபேச்சை தட்டாமல் கேட்பவன் போல!) குரோனஸின் சகோதரிதான் ரியா; சகோதரியையே குரோனஸ் திருமணம் செய்து கொண்டான்; (கடவுளின் முதல் குழந்தைகள் என்பதால், அவர்கள் வழக்கப்படி அப்படித்தான் திருமணம் செய்து கொள்வார்களாம்);


ஒமெகா (Omega)

ஒமெகா (Omega):
கிரேக்க எழுத்துக்கள் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்று அரிச்சுவடி இருக்கும்; இதில் ஒமெகா கடைசி எழுத்து; அதாவது 24 வது எழுத்து;
இதை எந்த அர்த்தத்தில் வைத்திருக்கிறார்கள் என்றால், ஓ-மெகா என்றால் "பெரியது" என்று; ஓ-மைக்ரா என்றால் சிறியது என்று;
இந்த எழுத்துதான் கிரேக்க எழுத்து வரிசையில் கடைசி என்பதால், கடைசியைக் குறிக்கும் எதையும் "ஒமெகா" என்றே குறிப்பிடுவர்; கடைசி குழந்தையைக்கூட, நாம், ஒமெகா குழந்தை என்று சொல்லலாம் போல!
ஒரு பெரிய "O" இதில் கீழே ஓட்டை போட்டிருந்தால் அது ஒமெகா சிம்பள்;
இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டின் சிம்பள் இந்த ஒமெகா அடையாளம்தான்;
கணிதம், இரசாயனம், பௌதீகம் இவைகளில் இது அடையாள எழுத்தாக உள்ளது;
.


பூமியின் வேகம்

பூமியின் நடுப்பகுதியின் சுற்றளவு 40,075 கி.மீ. (சுமார் 25,000 மைல்); இந்த பூமி, 24 மணி நேரத்தில் தன்னையே ஒரு சுற்று சுற்றிக் கொள்கிறது; அந்தக் கணக்குப்படி பார்த்தால், பூமியின் வேகம் ஒரு மணிக்கு சுமார் 1000 மைல் வேகத்தில் பூமி சுற்றுகிறதாம்; (சரியான கணக்குப்படி ஒரு மணிக்கு, 1041.7 மைல் வேகம்); பூமியானது, மேற்கிலிருந்து கிழக்காக தன்னைத்தானே சுற்றுகிறது;
பூமி, சூரியனை எவ்வளவு வேகத்தில் சுற்றி வருகிறது?
ஒரு நொடிக்கு 30 கி.மீ. வேகத்தில் பூமி, சூரியனைச் சுற்றுகிறதாம்; அதாவது ஒரு மணிக்கு 69,361 மைல் வேகத்தில் சுற்றுகிறாம்;
சூரியன் இந்த பிரபஞ்சத்தை எவ்வளவு வேகத்தில் சுற்றுகிறது?
சூரியன் இந்த பிரபஞ்சம் என்னும் கேலக்சியை ஒரு நொடிக்கு 220 கி.மீ. வேகத்தில் சுற்றுகிறதாம்; அதாவது ஒரு மணிக்கு 4,90,000 மைல் வேகத்தில் சுற்றுகிறதாம்;
ஒளியின் வேகம்?
லைட் என்னும் ஒளியின் வேகத்தை அளந்து சொல்வதற்கு "C" என்ற லத்தீன் மொழியான "Celeritas" என்ற வார்த்தையின் அடையாளத்தை வைத்துள்ளனர்; செலரிட்டாஸ் என்றால் லத்தீன் மொழியில் "பாய்ந்து செல்லும் வேகம்" என்று பொருள்; இந்தக் கணக்கில் ஒளியின் வேகத்தை கணக்கிட்டால், ஒரு செகண்ட் (நொடிக்கு) 1,86,280 மைல் வேகத்தில் ஒளி பாய்ந்து செல்லுமாம்; கண்ணால் கூட பார்க்க முடியாத வேகம் இது;
தூரத்தில் உள்ள நட்சத்திரங்களை எவ்வளவு தூரத்தில் உள்ளது என்று மைல், கிலோ மீட்டர் கணக்கில் எல்லாம் கணக்கிட முடியாதாம்; எனவே, இந்த ஒளி பாயும் வேகத்தை வைத்து கணக்கிட முடியுமாம்; அந்த ஒளி பாயும் வேகத்தை "ஒளி ஆண்டு" Light Year என்று கணக்கிடுகிறார்கள்; ஒரு ஒளி ஆண்டு என்றால் அது எவ்வளவு?

ஒரு ஒளி ஆண்டு = 9 லட்சம் கோடி கி.மீ. தூரம்;