சனி, 8 செப்டம்பர், 2018

அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி


விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி, மெய் புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி, அறிவு இழந்து,
சுரும்பிற் களித்து, மொழி தடுமாறி, முன் சொன்னவெல்லாம்
தரும்பித்தவர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே.

(அபிராமி அந்தாதி பாடல்-94)

(விரும்பி உன்னைத் தொழும் அடியார்கள் கண்களில் நீர் பெருகி, உடல் மயிர் கூச்செறிந்து புளகாங்கிதம் அடைந்து, அறிவு இழந்து, மதுக்குடித்த வண்டு போலாகி, மொழி தடுமாறி, முன்னர் சொன்னவை எல்லாம் நிகழ்வித்தவர் ஆவர் என்றால், அதற்கு மூலகாரணம் அபிராமியின் சமயம் நன்றே!)

நான் அறிவது ஒன்றேயும் இல்லை; உனக்கே பரம்;


நன்றே வருகினும், தீதே விளைகினும் நான் அறிவது
ஒன்றேயும் இல்லை; உனக்கே பரம்; எனக்கு உள்ளவெல்லாம்
அன்றே உனதென்று அளித்து விட்டேன்; அழியாத குணக்
குன்றே! அருட்கடலே! இமான் பெற்ற கோமளமே!

(அபிராமி அந்தாதி பாடல்-95)

(நல்லதே நடந்தாலும், தீமையுமே விளைந்தாலும் நான் அறிவது ஒன்றுமே இல்லை. எல்லாம் உன்னையே சேரும். எனக்கு உள்ளதெல்லாம் உன்னுடையே என்று அன்றே உனக்கு அளித்து விட்டேன். அழியாத குணக்குன்றே, அருட்கடலே, இமவான் பெற்று எடுத்த கோமளமே!)

சனி, 1 செப்டம்பர், 2018

தம்மால் ஆமளவும் தொழுவார் எழு பாருக்கும் ஆதிபரே!


கோமள வல்லியை அல்லியம் தாமரைக் கோயில் வைகும்
யாமள வல்லியை ஏதம் இலாளை எழுதரிய
சாமள மேனிச் சகல கலா மயில் தன்னைத் தம்மால்
ஆமளவும் தொழுவார் எழு பாருக்கும் ஆதிபரே!
(அபிராமி அந்தாதி பாடல் 96)

(கோமளவல்லியை, மலர்ந்த தாமரை மலரை கோயிலாக கொண்டு வீற்றிருக்கும் யாமள வல்லியை, குற்றம் இல்லாதாளை, எழுத்தில் விளக்க முடியாத சாமள மேனி (பச்சை வண்ண மேனி), சகல கலைகளிலும் வல்லவளான மயில் போன்றவளை, தன்னால் இயன்ற அளவு போற்றித் தொழபவர்கள், ஏழு உலகங்களுக்கும் அதிபதி ஆவார்கள்!)

சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே!


ஆதித்தன் அம்புலி அங்கி குபேரன் அமரர் தங்கோன்
போதிற் பிரமன் புராரி முராரி பொதியமுனி
காதிப் பொரு படைக்கு அத்தன் கணபதி காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே!
(அபிராமி அந்தாதி பாடல் 97)

சூரியன், சந்திரன், அக்னி, குபேரன், தேவர்களின் அரசனான இந்திரன், தாமரையில் வாழும் பிரமன், சிவன் (முப்புரம் எரித்துவன்), திருமால் (புல்லாங்குழல் ஏந்தியவன்), பொதிய முனியான அகத்தியர், போர் புரியும் வேல் படைக்கு அதிபதியான கந்தன், கணபதி, மன்மதன், இவர்கள் முதலாக சாதித்த புண்ணிய தெய்வங்கள் எண்ணிலடங்காதவர் போற்றுவர் தையலையே!

பொய் வந்த நெஞ்சில் புக அறியா மடப் பூங்குயிலே!


தை வந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்குக்
கை வந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்தது எங்கே
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒரு காலும் விரகர்தங்கள்
பொய் வந்த நெஞ்சில் புக அறியா மடப் பூங்குயிலே!
(அபிராமி அந்தாதி பாடல் 98)

(அபிராமியே, உன்னிடம் வந்து உனது அடித்தாமரையை சங்கரன் சூடிக் கொண்டபோது, அவன் கையில் இருந்த தீயும், தலையில் இருந்த கங்கையும் ஓடியது எங்கே? உண்மை வந்த நெஞ்சில் அல்லாமல் ஒரு காலும் பொய் வந்த நெஞ்சில் புகுவதற்கு விரும்பாத இளம் பூங்குயிலே!)

கயிலாயருக்கு அன்று இமவான அளித்த கனங்குழையே!


குயிலாய் இருக்கும் கடம்பாடவி இடைக் கோல இயல்
மயிலாய் இருக்கும் இமயாசலத்து இடை வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான அளித்த கனங்குழையே!
(அபிராமி அந்தாதி பாடல் 99)

(கடம்ப வனத்தில் குயிலாய் இருக்கும், இமய மலையில் மயிலாய் இருக்கும், வானத்தில் வந்து உதிக்கும் வெயிலாய் இருக்கும், தாமரையின் மீது அன்னமாய் இருக்கும், கயிலை நாதருக்கு இமவான் மணம் செய்து கொடுத்த கனங்குழையே!)

குழையத் தழுவிய கொன்றை அந் தார் கமழ் கொங்கைவல்லி!

குழையத் தழுவிய கொன்றை அந் தார் கமழ் கொங்கைவல்லி
கழையப் பொருத திரு நெடும் தோளும் கருப்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
உழையைப் பொருக் கண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே.
(அபிராமி அந்தாதி பாடல் 100)

(இளம் தளிரும் கொன்றைப் பூக்களும் கலந்த தொடுத்த மாலையின் மணம் கமழும் கொங்கைவல்லி! மூங்கில் போன்ற நெடும் தோள்களும், கரும்பு வில்லும், காண்பவர்கள் விரும்பும் மலர் அம்பும், வெண்மையான புன்னகையும், மான் போன்று மருண்ட கண்களும், நெஞ்சில் எப்போதும் தோன்றுகிறதே!)