ஞாயிறு, 29 மார்ச், 2015

மக்காலே

மக்காலே:
தாமஸ் பாபிங்டன் மக்காலே Thomas Babington Macaulay;
இந்தியாவில் தற்போதுள்ள "இந்திய தண்டனைச் சட்டம்" Indian Penal Code இவர் எழுதியதுதான். 1834-ல் இவர் "பிரிட்டிஷ் அரசின் முதல் சட்டக் கமிஷனுக்கு" தலைவராக இருக்கும்போது இவர் கொடுத்த யோசனைப்படி, இது 1860-ல் சட்டமாக வந்தது; இவர் இளம் வயதிலேயே இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் செய்து இங்குள்ள மக்களையும் வாழ்க்கை முறையை அறிந்து இந்த இந்திய தண்டனைச் சட்டத்தை இயற்றியதாகச் சொல்லப் படுகிறது; இந்தச் சட்டத்துக்கு அவரால் என்ன ஒரு பெருமை என்றால், "அவர் காலத்தில் இயற்றிய எல்லாச் சட்டங்களும் காலத்தால் அதிக திருத்தங்கள் செய்யப்பட்ட போதிலும், இந்த இந்திய தண்டனைச் சட்டம் மட்டும் ஒருசில திருத்தங்களுடன் அப்படியே இன்னும் இருக்கிறது என்பதே இதன் சிறப்பு; அந்த அளவுக்கு மிகத் தெளிவாகவும், பிற்காலத்தை யோசித்தும் எழுதிய சட்டம் என்றும் இதை புகழ்கிறார்கள்; இந்தப் பெருமையும் லார்டு மக்காலேவுக்கே சேரும்!" இத்தகைய பெருமை கொண்ட தண்டனைச் சட்டம்தான் இன்னும் பல நாடுகளில் இன்னுமே நடைமுறையில் இருக்கிறது என்பது ஒரு ஆச்சரியமே! இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மா, சிங்கப்பூர், இலங்கை, நைஜீரியா, ஜிம்பாவே போன்ற காலனி நாடுகளில் எல்லாம் இந்தச் சட்டமே இன்னும் நடைமுறையில் உள்ளது;
இவர் ஒரு வித்தியாசமான மனிதர் என்றும் சொல்வார்கள்; சிறு வயதிலேயே அதிபயங்கர ஞாபகசக்தி கொண்டவராம்; கண்ணால் பார்த்த ஒரு பொருளில் (படம்) இவற்றிலுள்ள பல நுணுக்கமான விஷயங்களையும் சேர்த்தே, ஒரே நொடியில் பார்த்து விடுவாராம்; சாதாரண ஆட்களால் இவ்வளவு விஷயங்களை நொடிப்பொழுதில் பார்த்து ஞாபகத்தில் வைக்க முடியாதாம்; இந்த திறமையை Eidetic memory என்கிறார்கள்;
இவர், உலகத்தில் அப்போதிருந்த நாடுகளை இரண்டாகப் பிரித்துப் பார்த்தார்; ஒன்று நாகரீகம் அடைந்த நாடுகள், Civilised nations: மற்றொன்று காட்டுமிராண்டிகள், Barbarism; இங்கிலாந்தை நாகரீகத்தின் உச்சத்தில் இருந்த நாடாகவே கருதினார்; இந்தியாவில் என்னதான் சமஸ்கிருதத்தில் படிப்புகள் இருந்தாலும், ஆங்கிலேயர்களின் அறிவுப் புத்தகங்களுக்கு ஈடாகவில்லை இந்தியா என்றே கருதினார்; இந்தியாவில் சமஸ்கிருத மொழியும், பெர்ஷியன் (பார்சி) மொழியும் புழக்கத்தில் இருந்த நேரம் அது; "இங்கிலாந்தில், நான் வாழ்ந்த காலத்தில், அங்குள்ள புத்தகசாலையில், ஒரு முறைகூட, இந்த சமஸ்கிருத மொழி நூலையோ, அரபு மொழி நூலையோ பார்க்க முடிந்ததில்லை" என்கிறார்;
இந்தியர்களை நாகரீகமாக ஆக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு ஆங்கிலத்தை கற்றுத் தர வேண்டும்; அப்போதுதான், ஆங்கிலத்தில் உள்ள பல நூல்களைப் படித்து அவர்களின் அறிவை வளர்ப்பார்கள்; இந்தியாவில் பெரும்பாலும் மூடநம்பிக்கையிலேயே (Superstition) மக்களை பழக்கி வைத்துள்ளார்கள்; அவர்களாகவே சுயமாகச் சிந்திக்கும் அறிவை அவர்களுக்குக் கொடுக்கவில்லை; எனவே இதற்கு முடிவே சமஸ்கிருத பள்ளிக்கூடங்களையும், மதராஸா பள்ளிக்கூடங்களையும் நிறுத்திவிட்டு, ஆங்கிலத்தை கற்றுத்தர வேண்டும் என்று இங்கிலாந்து பார்லிமெண்டில் ஓங்கிக் குரல் கொடுத்தவர்; இதன் பின்னர்தான் ஆங்கிலக் கல்வி சட்டம் 1835 அமலுக்கு வந்தது. The English Education Act of 1835; அப்போதைய இந்தியாவின் கவர்னர் ஜெனரல் வில்லியம் பென்டிங்க்; இங்கிலாந்து பார்லிமெண்டில் மெக்காலே உரையாற்றும்போது, "சம்ஸ்கிருதம், அரபு மொழிகளைவிட, ஆங்கிலமே அறிவு சார்ந்தது; இந்தியாவில் கற்பனைக் கதைகள் மட்டுமே அதிகம்; சட்டம், விஞ்ஞானம், சரித்திரம், அரசியல் சார்ந்த நூல்கள் இல்லை; அவ்வாறு இருந்தாலும் அவை ஆங்கிலேயர்களின் நூல்களுக்கு இணையாக மாட்டா! ஆங்கிலத்தை யார் கற்றுக் கொண்டாலும் அறிவுச் செல்வத்தை அடைவார்கள்; அவ்வாறு அதை அடைந்த அறிவான தேசங்கள் ஏராளம் உண்டு; இந்தியாவின் சரித்திர நூல்களில், மனிதன் 30 அடி உயரத்தில் இருந்ததாகவும், 30,000 ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாகவும், கற்பனைகளை அவிழ்த்து விட்டும், புவியியலில் பாதாள லோகம், பால் கடல், தயிர் கடல் இருந்ததாகவும் சொல்லி உள்ளவை, இங்குள்ள ஆங்கிலேய சிறுவர்களை சிரிப்புக்கு ஆளாக்குகிறது; அறிவு சார்ந்த நூல்களை ஏன் அவர்கள் கொடுக்கவில்லை; மூடநம்பிக்கையை வைத்தே மக்களை வழி நடத்தி வந்துள்ளார்கள்;
ஒரே நேரத்தில் இந்தியர்களை ஆங்கிலம் கற்ற வைத்துவிட முடியாது; அதற்குப் பதிலாக ஒரு சிலருக்கு ஆங்கில அறிவைப் புகட்டி, அவர்களை நமக்கு (ஆங்கிலேய அரசாட்சி செய்வர்களுக்கு) உதவிக்கு வைத்துக் கொண்டால், அவர்களின் மக்களை அவர்களைக் கொண்டே ஆள முடியும்; வேற்று நாட்டான் ஆள்வதை இங்குள்ள மக்கள் ஒப்புக்கொள்ள யோசிப்பர்; எனவே அவர்களைக் கொண்டே அவர்களை ஆள்வது எளிது; அத்துடன் அவர்களைப் பார்த்து மக்களும் ஆங்கில படிப்பில் நாட்டம் கொள்வார்கள்; "ஆங்கிலம் படிப்பவர்கள், உண்மையில் அவர்களின் உடல் இந்திய மண்ணின் ரத்தத்தையும், நிறத்தையும் கொண்டிருந்தாலும், ஒழுக்கத்தையும், அறிவையும் ஆங்கிலேயர்களைப் போலவே பெறுவார்கள் என்பது உறுதி" என்று மெக்காலே குறிப்பிட்டுள்ளார்;
மெக்காலே திருமணமே செய்து கொள்ளவில்லை; 1800ல் பிறந்து 59 வருடங்கள் வாழ்ந்தவர்; இந்தியாவில் அதிக சுற்றுப்பயணம் செய்தவர்; இங்கிலாந்து பார்லிமெண்ட் தேர்தலில் விக் கட்சி சார்பில் நின்று வென்றுள்ளார்; ஒரு முறை தோற்றுள்ளார்; மூன்றாம் முறை வென்றுள்ளார்; சட்ட மேதை; வக்கீலாக ஆகவில்லை; இவர் எழுதிய "இங்கிலாந்து வரலாறு" என்ற நூல் மிகப் பிரபலமானது. ஒருசிலர், "இவர் வரலாற்றை தவறுதலாக திரித்து சொல்லியுள்ளார்" என்றும் கூறியுள்ளனர்; கேம்பிரிட்ஜின் ரினிட்டி கல்லூரியில் சட்டம் படித்தவர்;


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக