பழையனூர் நீலி:
பழையனூர் என்று ஒரு
ஊர்; அங்கு ஒரு வணிகர் இருக்கிறார்;
அவருக்கு திருமணம் ஆகி மனைவியுடன் வாழ்ந்து வந்தார்; அந்த மனைவி சிலகாலம் வாழ்ந்து இறந்து விட்டார்; தான்
இறந்தவுடன், தன் கணவர் மறுமணம் செய்ய மாட்டார் என்று
நினைத்தாள்; ஆனால் அதற்கு மாறாக அந்த வணிகனோ மறுமணம் செய்து
கொண்டு, அந்த இரண்டாவது மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து
வருகிறான்;
இறந்த முதல் மனைவி, பேயாக அலைந்து பூமியில் திரிகிறாள்; அவளுக்குத் தன் கணவர் மீது கொடும் கோபம்! இறந்தவள், பேயாக
திருவாலங்காட்டு பகுதியில் திரிகிறாள்;
ஒருநாள், அந்த வணிகன், வியாபார நோக்கமாக,
அந்த காட்டுவழியில் வருகிறான்; அதை அந்த முதல்
மனைவி பேய் தெரிந்து கொண்டு, ஒரு பெரிய நாடகத்தை நடத்தி
வைக்கிறது;
அந்த முதல் மனைவி
என்னும் பேய், அவள் கணவனின் இரண்டாவது
மனைவியைப் போல வேடம் அணிந்து கொண்டு, அவனிடம் வருகிறது;
அவ்வாறு வரும்போது, அவள் புடவையில், ஒரு கள்ளிக் கட்டையைப் பிள்ளையைப் போல சுருட்டி எடுத்துக் கொண்டு வருகிறது;
அந்த வணிகன், இரண்டாம் திருமணம் செய்யும்போது, ஜோதிடம் பார்த்திருக்கிறார்; அப்போதே, ஜோதிடர் சொல்லி உள்ளார், "உன் முதல் மனைவி
இன்னும் மேல் உலகம் செல்லவில்லை; இங்கு பேயாகத் தான்
அலைகிறாள்; அவளிடம் நீ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்று
எச்சரித்துள்ளார்;
இப்படிப்பட்ட
சூழ்நிலையில், இந்தக் காட்டுவழியில், தன் இரண்டாம் மனைவி வருவதற்கு வழியே இல்லை; அப்படி
இருக்கும்போது, தன் இரண்டாம் மனைவி எப்படி இங்கு வருவார்
என்று சந்தேகம்! இந்தப் பெண் தன் முதல் மனைவிதான் என்றும், அவளே
பேயாக வந்துள்ளார் என்றும் இவனுக்கு தெளிவாகத் தெரிந்து விட்டது;
அந்தப் பேயும், அவனுடன் பேசிக் கொண்டே வருகிறது; "என்னை ஏன் இப்படி காட்டில் விட்டுவிட்டுப் போகிறீர்கள்; இது நியாயமா' என்னை ஏன் ஒதுக்கி வைத்தீர்கள்;
நான் உங்களின் இரண்டாம் மனைவி தானே! என்னை நீங்கள் ஆசையாகத் தானே திருமணம்
செய்தீர்கள்; நமக்கு குழந்தையும் இருக்கிறதே! என்னையும்
குழந்தையையும் ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று முறையிட்டுக் கொண்டே காட்டு
வழியில் வருகிறது; இவனும் ஒப்புக்கு பேச்சுக் கொடுத்துக்
கொண்டே வருகிறான்; காட்டைத் தாண்டி விட்டார்கள்; ஒருவழியாக காஞ்சிபுரம் வந்து விட்டது; இனிக்
கவலையில்லை என அவன் நினைக்கிறான்;
காஞ்சீபுரத்தின்
தெருவில் ஆலமரத்தடியில் கூடியிருந்த அம்பலத்தை நெருங்கி விட்டனர் இருவரும்; அவள் நேராக அங்கு அமர்ந்திருந்த பஞ்சாயத்து
பெரியவர்களான வேளாளர்களிடம் முறையிடுகிறாள்;
அம்பலத்தில் இருந்த
வேளாளர்கள், "பெண்ணே, நீ சொல்வதற்கு சாட்சி இருக்கிறதா?" என்று
கேட்கின்றனர்;
"ஓ! இருக்கிறதே!
என் இடுப்பில் உள்ள எங்கள் பிள்ளையை இறக்கி விடுகிறேன் பாருங்கள்! அது நேராக
அவரிடம் செல்லும்! அதைக் கொண்டே நீங்கள் நம்பலாம்! நாங்கள் இருவரும் கணவன்
மனைவி தான் என்றும், இந்த குழந்தை எங்கள்
குழந்தைதான் என்பதையும்" என்று மிகப் பொருத்தமாக அந்தப் பேய்-பெண் கூறினாள்;
அவள், தன் இடுப்பில் இருந்து பிள்ளையை இறக்கி விடுகிறாள்;
அதுவும், அவனை அப்பா என்று கூப்பிட்டுக்
கொண்டு அவன்மீது பாய்கிறது;
அம்பலத்து வேளாளர்கள்
இதை முழுவதும் நம்பி விட்டார்கள்; ஏதோ, கணவன் மனைவி சண்டையால், இந்த கணவன் இப்படி கோபமாகக்
கூறுகிறான்; இவள், இவனின் மனைவிதான்
என்று நம்புகிறார்கள்;
அவள், "என் மீது இவருக்கு இன்னும் கோபம் தீரவில்லை;
இவருடன் இந்த பக்கத்து வீட்டின் அறைக்குள் சிறிது நேரம் பேசிக்
கொண்டிருந்தால், இவர் சமாதானம் ஆகிவிடுவார்: எனவே அதற்கு
அனுமதி வேண்டும்" என மிகப் பொருத்தமாக அந்த பேய் பெண் கேட்கிறாள்;
ஆனால், கணவனோ, இவள் ஒரு பேய்! இவளுடன்
அந்த அறைக்குப் போனால் என்னைக் கொன்று விடுவாள்; இவள்
சொல்வதை நீங்கள் நம்பாதீர்கள் என்று கெஞ்சுகிறான்;
ஆனாலும், அம்பலத்து வேளாளர்கள் "ஐயா, நாங்கள் உன் உயிருக்கு பிணையாக இருக்கிறோம்! நீ பயப்பட வேண்டாம்; அவளுடன் சென்று சமாதானமாக பேசி வா" என்று கட்டாயப் படுத்தி அனுப்பி
விடுகிறார்கள்; ஜோதிடர் சொன்னபடி, அவன்
கையில் எப்போது ஒரு மடக்கு கத்தி வைத்திருப்பான்; அவன்
அதையும் தன்னுடன் எடுத்துச் செல்கிறான்;
ஆனால், அந்தப் பேய் பெண், "ஐயா,
இவர் கத்தி வைத்திருக்கிறார்; அதை வாங்கி
வைத்திக் கொள்ளுங்கள்; உங்கள் முன்பாகவே இவ்வளவு கோபமாகப்
பேசுபவர்; தனியே அறைக்குள் போனால், இன்னும்
அவருக்கு கோபம் அதிகமாகி, கத்தியைக் கொண்டு என்னை கொலையும்
செய்வார்" என்று புலம்பினாள்;
அதையும் நம்பிய, அம்பலத்து வேளாளர்கள், அவனிடமிருந்து
கத்தியை கட்டாயப்படுத்தி பறித்துக் கொண்டனர்;
இருவரும், அந்த தனிவீட்டின் அறைக்குள் செல்கின்றனர்;
வெகுநேரமாகியும்
இருவரும் வரவில்லை; அம்பலத்து வேளாளர்கள்
"இருவரும் சமாதானம் ஆகிவிட்டனர் போலும்! எனவே சிறிது நேரம் சந்தோஷமாக
இருந்துவிட்டு வரட்டும் என விட்டு விட்டனர்;
அந்த பெண் பேய், வீட்டுக்குள் வந்தவுடன், கதவைச் சாத்தி விட்டது; அவன் கழுத்தை கடித்து ரத்தத்தை குடித்து
அவன் உயிரைப் போக்கிவிட்டு மறைந்து விட்டது;
வெகுநேரமாகியும் கதவு
திறக்காததால், சந்தேகமடைந்த வேளாளர்கள்,
கதவை உடைத்துப் பார்த்தனர்; அங்கு கணவன் ரத்த
வெள்ளத்தில்; மனைவியைக் காணவில்லை;
வேளாளர்கள் மனம் பதறி
விட்டது; நாம் எழுபது பேரும், அவன் உயிருக்கு பிணையாக இருந்திருக்கிறோம்; ஆனாலும்
அவன் உயிர் போய்விட்டது; சொன்ன சொல் காப்பாற்ற முடியவில்லை;
எனவே நாம் அனைவரும் தீக்குளித்து இறப்போம் எனக் கூறி தீ வளர்த்து
அதில் புகுந்தனர்;
சத்தியத்தை காப்பாற்ற
தீக்குளித்தனர்;
இந்தக் கதை, தொண்டை மண்டல சதகத்திலும், சேக்கிழார்
புராணத்திலும் சொல்லப்பட்டுள்ளது;
**