பிச்சைபுகினும் கற்கை நன்றே.
பிச்சை எடுத்தாவது படிக்கவேண்டும் என்று சிலர் இதற்கு
விளக்கமளிக்கின்றனர். இது தவறு. பிச்சை எடுத்துப் பிழைப்பை நடத்திக்
கொண்டிருப்பவராக இருந்தாலும் ‘கற்றல் அவசியம்’ என்பதே சரி.
யாராக இருந்தாலும் படிக்க வேண்டும். அறிவை விருத்தி செய்ய,
படிப்பு அவசியம். படிக்க முடியாதவர்கள், அனுபவ அறிவை வளர்த்துக் கொள்வர். அறிவு
என்பது ‘உடலுக்கு’ தேவையான ஒன்று அல்ல; உயிர் என்னும் ஆன்மாவுக்கு அறிவு அவசியம்
தேவை. இந்தப் பிறவி தாண்டி, அடுத்தடுத்த பிறவிகளுக்கு இது அவசியம் என்பதே இதன்
இரகசியம். சிலர் சிறுவயதிலேயே மிகச் சிறந்த அறிவாளியாக இருப்பது, அவர் ஏற்கனவே
கொண்டுவந்த அறிவின் முதிர்ச்சியேயாகும். ஆச்சரியமாக இருந்தாலும் இதுவே உண்மை.
எனவே, நமது 90, 100 வயதிலும் நம் அறிவை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
அறிவு என்பது இந்த உடலுடன் சேர்ந்தே அழிந்து வீண்போகாது. இந்த உடலுடன் மூளை
அழியலாம், சிந்தனை அழியலாம், நினைவுகள் அழியலாம், அனுபவங்கள் அழியலாம். அவைகளைக்
கூட்டாகச் சேர்த்து ஆன்மாவில் வைத்திருக்கும் அறிவு என்றும் அழியாது. ஆன்மாவின்
வழிகாட்டி இந்த அறிவாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை!
காண்ட் என்ற தத்துவமேதை இப்படி ஆச்சரியப்படுகிறார். “ஒரு
பசுமாடு, தன் கன்றுக் குட்டியை ஈன்றவுடன், அந்த இளம்கன்று சில விநாடிகளில்
தள்ளாடித் தள்ளாடி தானே எழுந்து நிற்கிறது. பின்னர், சொல்லிக் கொடுத்ததைப்போல,
மெல்லத் துள்ளி எழுந்து குதித்து, தன் தாயில் பின்னங்கால்களுக்கிடையில் சென்று,
தாயின் மடுவை முட்டி, தன் வாயைச் சூப்பி பாலைக் குடிக்கிறது. இந்த விபரத்தை
இப்போதுதான் பிறந்த இந்த இளம்கன்றுக்குட்டிக்கு யார் சொல்லிக் கொடுத்திருக்க
முடியும். தாய் சொல்லிக் கொடுக்கவில்லை. சைகையும் செய்யவில்லை. எனவே இந்த விபரம்,
இந்த இளம் கன்றின் ஆன்மாவில் ஏற்கனவே பதிவாகியே இங்கு வந்துள்ளது” என
ஆச்சரியப்படுகிறார். ஆன்மாவில்(உயிரில்) ஏற்கனவே பல விபரங்கள், அனுபவங்கள்
பதிவாகியே நாம் வருகிறோம். ஒருவேளை இதைத்தான், ‘கர்மவினை’ என்கிறார்களோ?
அறிவு என்பது கல்வி மூலமும் வரலாம்; அனுபவம் மூலமும்
வரலாம். கல்வி என்பது, இந்த பிரபஞ்சம் தோன்றி வெகுகாலம் கழித்து உருவாகி
இருக்கும்! ஆனால் மனிதகுலம் தன் அனுபவத்தையே அறிவாகக் கொண்டே இயங்கி வருகிறது.
அனுபவம் என்பது பட்டறிவே. பட்டறிவு கிடைக்கும்வரை பொறுத்திருக்க முடியாது. எனவே
கல்வி மூலம் அதை எளிதில் அடையலாம். ஆனால் தற்காலக்கல்வி, அனுபவத்தைக் கொஞ்சம்
கொடுத்து, மீதியை பணம் சம்பாதிக்கும் வழிமுறையைச் சொல்லிக் கொடுக்கிறது எனப்
புலம்புகின்றனர். எப்படி இருந்தாலும், பணம் கிடைத்து, அதில் வாழும் வாழ்க்கையும்
ஒரு அனுபவ அறிவே. இங்கு அறிவே பிரதானம். அதை அனுபவத்தாலும், கல்வியாலும் பெற
முடியும்.
**
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக