புதன், 31 டிசம்பர், 2014

முந்துங்கள், நோபல் பரிசு உங்களுக்கே!

மின்சாரத்தை “உருவாக்குவது” மிகச் சுலபம். ஆனால் அதை “தயாரிப்பதுதான்” மிகச் செலவான ஒன்றாக இருக்கிறது. மின்சாரத்தை “உருவாக்குவதை” இறைவன் நமக்கு எளிமையாக்கிக் கொடுத்திருக்கிறான். 

மேக்னட்டை வேகமாகச் சுற்றி அதில் கரண்ட் எடுத்த முதல் முயற்சி, நமக்குத் தெரிந்து, சைக்கிள் டைனமோ. டயரில் தேய்த்துக் கொண்டு வேகமாகச் சுத்தும் மேக்னட் இரும்பில் மின்சாரம் வருகிறது. அது முன்பக்கம் உள்ள பல்பை எரியச் செய்கிறது.

(ஒரு மின்காந்தம் என்னும் மேக்னட் இரும்பை மிகவேகமாகச் சுழலச் செய்தால் அதிலுள்ள அயனிக் பொருள் அதிலிருந்து வெளியேறும். அதில் மின்சாரம் இருக்கும். அதை எந்த பொருளிலாவது செலுத்தினால் அங்கு மின்சார ஓட்டம் இருக்கும். அதுவே நாம் உபயோகிக்கும் மின்சாரம்.)

இந்த முறையை அடிப்படையாகக் கொண்டு, இந்த உலகம் முழுவதும் பலவகைகளில் மின்சாரத்தை “தயாரிக்கிறார்கள்”. ஆக மின்சாரம் தயாரிக்க, ஒரு மேக்னட் வேகமாகச் சுத்தவேண்டும், அவ்வளவே! நிலக்கரியை எரித்து, நீரை ஆவியாக்கி, அந்த ஆவியை ஒரு பிஸ்டன் பம்புக்குள் அனுப்பினால், அது மேலும் கீழும் சுத்தும். (ரயில் எஞ்சின் சுற்றுவதுபோல) அதில் மேக்னட்டை இணைத்தால் அது சுற்றும். மற்றொரு முறை, ஆயில் எஞ்சினை இயக்கி அதில் மேக்னட்டை இணைக்கலாம். மற்றொரு முறை, நீர்வீழ்ச்சியில் ஒரு உருளையில் தண்ணீர் விழும்படி செய்தால், அது வேகமாகச் சுற்றும். அதில் மேக்னட்டை இணைக்கலாம். மற்றொரு முறை, அணுவில் உள்ள ஒரு புரோட்டானை எடுத்தால், அது மிக அதிக வெப்பத்தை கக்கும். அந்த வெப்பத்தை ஒரு பாய்லரில் உள்ள நீரை கொதிக்கவைத்து, அந்த நீராவியை பிஸ்டன் பம்புக்குள் அனுப்பினால் அது மேலும் கீழும் சுத்தும். அதில் மேக்னட்டை இணைத்தால் அதிலிருந்து மின்சாரம் கிடைக்கும். 

ஆக இவை எல்லாவற்றிலுமே ஒரு மேக்னட் வேகமாகச் சுற்றுகிறது. அதில் மின்சாரம் கிடைக்கிறது. அவ்வளவு எளிமையான முறையில்தான் கடவுள் காண்பித்துக் கொடுத்துள்ளார். ஆனால் அந்த மேக்னட்டை சுற்றவைப்பதற்குத்தான் நாம் பலகோடி செலவு செய்ய வேண்டியுள்ளது. இதைத்தான் விஞ்ஞானிகள் ஒரு சுழற்சிமுறை என்கிறார்கள். அதாவது சுற்றவைக்கும் சக்தியிலிருந்து மேக்னட் சக்தி கிடைக்கிறது; மேக்னட் சக்தியிலிருந்து மின்சார சக்தி கிடைக்கிறது; மறுபடியும் அந்த மின்சார சக்தியிலிருந்து சுற்றவைக்கும் சக்தி கிடைக்கிறது. இது ஒரு வட்டவடிவ முறையில் உள்ளது. From Mechanical Energy to Magnetic Energy; From Magnetic Energy to Electric Energy: then again, from Electric Energy to Mechanical Energy; இப்படி இருக்கும்போது, கிடைத்த மின்சாரத்தையே அதன் ஒருசிறு பகுதியை மறுபடியும் மேக்னட்டை சுற்ற பயன்படுத்தலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. அதை யாரும் முயற்சிக்கவில்லையா? இல்லை இது சாத்தியமில்லை என்று விட்டுவிட்டார்களா? ஆராய்ச்சி செய்கிறார்களா என்று தெரியவில்லை. 

இதைப் புரிந்துகொண்டு யாரேனும் ஆராய்ச்சி செய்து அதில் வெற்றி கிடைத்தால், கண்டிப்பாக அவருக்கு நோபல்பரிசு கிடைப்பதுடன், இந்த பிரபஞ்சத்திற்கு வெளிச்சம் கொடுத்த மனிதன் என்ற பெருமையும் கிடைக்கும் என்றே நம்புகிறேன். நானும் மூளை அளவில் முயன்று கொண்டுதான் இருக்கிறேன்.
**

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று!

“வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று” – திருப்பாவையில் வரும் வரிகள்.
விடிவதற்கு இரண்டரை மணி நேரத்திற்கு முன்பாக இந்த வெள்ளி முளைக்கும். இதுவே “விடிவெள்ளி”. Morning Star. பூமியைப் பார்த்து இருக்கும் வானத்தில் இரவு முழுக்க வியாழன் என்னும் ஜூபிடர் பிரகாசித்து இருக்கும். ஆனால் வெள்ளி மிகப் பிரகாசமானது. இந்த வெள்ளி என்னும் வீனஸ் விடியலுக்கு இரண்டரை மணி நேரத்துக்கு முன்னரே, சூரியன் வருகிறது என்பதை முன்அறிவிப்பது போல மின்னிக் கொண்டிருக்கும். ஆனால் சூரியன் இருக்கும் திசைக்கு எதிரே இந்த வியாழன் என்னும் ஜூபிடர் இருக்கும். எனவே விடியற்காலை நான்குமணிக்கு வியாழன் என்னும் ஜூபிடர் மேற்கே மறைய ஆரம்பிக்கும்போது, கிழக்கு வானத்தில் வெள்ளி என்னும் வீனஸ் மின்னிக் கொண்டிருக்கும். இது மார்கழி மாதத்தில் மட்டுமே வெகு கச்சிதமாக இருக்கும் என்பது விஞ்ஞானபூர்வமான உண்மை. இதைத்தான் “வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று” என்று திருப்பாவை வெகு அழகாக நினைவூட்டுகிறது.

புல்லின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கில்லிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளம் தவிர்த்து கலந்தோலோர் எம்பாவாய்! – திருப்பாவை.

இந்த வெள்ளி ஒரு கிரகமே, நட்சத்திரமல்ல. ஆனாலும், செல்லமாக இதை விடிவெள்ளி Morning Star என்போம். வெள்ளியே Venus கிரகம். இது பூமியின் சுற்றுப்பாதைக்கு உள்ளே இருப்பதாலும், சூரியனை ஒட்டியே சுற்றிவருதாலும் இது சூரியன் உதிக்கும்போதும், சூரியன் மறையும்போதும் பளிச்சென்று தெரியும். விடிவதற்கு முன்னரே தெரியும் வெள்ளியை விடிவெள்ளி morning star என்றும், சூரியன் மறைந்த ஒரு மணி நேரத்தில் அந்திவான இருட்டில் தெரியும் அந்திவெள்ளியை evening star என்றும் செல்லமாக அழைக்கிறோம். (ஜூன் மாதத்தில் இரண்டரை மணி நேரம் கழித்தே தெரியும்). இரவு ஆரம்பிக்கும்போதும் இது மின்னும். இந்த குழப்பத்தாலேயே நம் மூதாதையர்கள் இதை இரண்டு தனித்தனி நட்சத்திரங்கள் என்றே வெகுகாலம் கருதிவந்தனர். கடிகாரத்தின் அறிமுகம் இல்லாத நம் மூதாதையர்கள் விடியலை இந்த விடிவெள்ளி எழுவதைக் கொண்டே கணக்கிட்டனர். விடியற்காலை நான்கு மணிக்கு இந்த பிராகாசமான கிரகம் ஒரு நட்சத்திரம்போல வெகு அழகாக மின்னிக் கொண்டிருக்கும். விடியப் போவதன் அடையாளம் இது. இந்த அனுபவம் கிடைக்காதவர்கள், காலை நான்கு மணிக்கு எழுந்து பார்க்கவும். கிரேக்கர்கள், காலையில் உதிக்கும் வெள்ளியை(morning star) ‘வெளிச்சத்தை கொண்டுவருபவர்’ (Phosphoros) என்றும், அந்திவெள்ளியை(evening star) ‘அந்தியைக் கொண்டு வருபவர்’ ‘Hesperos’ என்கின்றனர். பிரகாசத்தில் சூரியனே மிகப் பிரகாசமானது; அதற்கு அடுத்த பிரகாசம் நிலாவுக்கு; அதற்கடுத்த பிரகாசமானது இந்த வெள்ளியே; அதற்கடுத்து சிறிது பிராகசமானது புதன்; சூரியனைச் சுற்றிவர இந்த வெள்ளி எடுத்துக்கொள்ளும் காலஅளவு 225 நாட்கள். புதன் சுற்ற எடுத்துக் கொள்ளும் காலஅளவு 88 நாட்கள். பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர ஒரு வருடம் தேவை. எட்டுவருடத்தில் பூமி, சூரியனை 8 முறை சுற்றும்; ஆனால் இந்த எட்டு வருடத்தில் வெள்ளியானது சூரியனை 13 முறை சுற்றிவந்திருக்கும். இதை கொண்டு சில ஜோதிடர்கள் வெள்ளிக்கு 13 எண் என்றும், பூமிக்கு 8 எண் என்றும் கணக்கிட்டுக் கொள்கிறார்கள். இவ்வாறு பூமியும், வெள்ளியும் சுற்றிவருவதில், இந்த வெள்ளியானது எட்டு வருடத்தில் இந்த தனது 13 சுற்றுக்களில், இது பூமியை 5 முறை கடந்து சென்றிருக்குமாம். இந்த கணக்கின்படி, சூரியனை வெள்ளி சுற்றிய 5 வருடங்கள் 5x584=2920 நாட்கள். அதேபோல், சூரியனை பூமி சுற்றிய 8 வருடங்கள் 8x365=2920 நாட்கள். இந்த 8/5 கணக்கை கண்டுபிடித்தே ‘மாயன்கள்’ அவர்களின் பிரபலமான ‘மாயன் காலண்டரை’ உருவாக்கி உள்ளனராம். {இதேபோல், புதன் கிரகம் சூரியனைச் சுற்றிவர 88 நாட்கள் எடுத்துக் கொள்ளும். இது சூரியனை நேரில் சந்திக்க 115.88 நாட்கள் ஆகும். பூமி, சூரியனை 7 முறை சுற்றும் காலத்தில், புதன், சூரியன் 22 முறை சுற்றி இருக்கும். இதன்படி 22/7 கணக்கான “பை” Pi கணக்கும். (ஒரு வட்டத்தின் சுற்றளவு அதன் விட்டத்தின் இந்த கணக்கின்படியே அமையும் என்பது சூத்திரம். அதாவது விட்டத்தின் 3.14 மடங்குதான் அந்த வட்டத்தின் சுற்றளவு.) பூமியின் ஏழு வருடத்தில், புதன் கிரகமானது சூரியனை 22 முறை சுற்றிஇருக்கும்.} ஆர்வம் இருப்பர் நெட் உலகில் சஞ்சரிக்கவும்...

**

ரிஷப ராசியும் கிரேக்க ஜீஸ் கடவுளும்

ரிஷப இராசியும் ஜீஸ் கடவுளும் 
ஜீஸ் கடவுள்(Zeus) கிரேக்க இதிகாசத்தில் ‘கடவுள்களின் தந்தை’ என்று குறிப்பிடப்படுபவர். இவருக்கு பல மனைவிகள் உண்டு. இந்த மனைவிகள் மூலமே பல கடவுளைப் பெற்றுள்ளார். தனியே பல கடவுள்களை உருவாக்கியும் உள்ளார். ஈரோப்பா (Europa) என்ற அழகியே இவரின் முதல் மனைவி என்றும் சொல்வர். இந்த ஈரோப்பா அழகியின் பெயரைக் கொண்டே ‘ஐரோப்பா கண்டம்’ பெயரிடப்பட்டுள்ளதாம். இந்த ஈரோப்பா அழகியை, கதாநாயகன் ஜீஸ் கடவுள், ஒரு காளைமாடு வேடத்தில் வந்தே கவர்ந்து சென்றதாக கிரேக்க இதிகாசம் சொல்கிறது. ஒரு வெள்ளை காளைமாடாக தன்னை உருமாற்றிக் கொள்கிறார். ஈரோப்பா இருக்கும் பகுதிக்குச் செல்கிறார். ஈரோப்பா, அங்கு தன் தந்தையின் பசுமாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறாள். அந்த பசுக்கூட்டத்தில், இந்த ஜீஸ் கடவுள் காளைமாடு வேடத்தில் உள்ளே புகுகிறார். காளைமாடு திமில் மிக அழகாக ஆடிக் கொண்டிருக்கிறது. ஈரோப்பா அதைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு, அந்தக் காளைமாட்டை நெருங்கி அதன் திமிலைப்பிடித்து மயங்கி அதில் மேலேறி அமர்கிறார். அந்த மயக்கத்திலேயே ஈரோப்பாவை, அந்த காளைமாடு கடத்திக் கொண்டு கடலுக்குள் நீந்திச் சென்று அந்த பெண் உடலுடன் ஏமாற்றிக் உறவு கலக்கிறார். அவளுக்கு நிறைய பரிசுகளும் தருகிறார். ஏமாற்றித்தான் அந்த அழகி ஈரோப்பாவை அடைகிறார். இந்த காளைமாட்டின் அடையாளமாக வானத்தில் காளைமாடு போன்று வடிவில் இருக்கிறார். இதுவே ரிஷப ராசி மண்டலம். ரிஷபம் என்பது காளைமாடே. இந்திய காலச்சாரத்தில், சிவன் காளைமாட்டுடன் இருப்பதாகவே சொல்லப் படுகிறது. ஒருவேளை, சிவன்தான் இந்த கிரேக்க ஜீஸ் கடவுளா? காதலுக்கு காளைமாடு ஒரு அடையாளமோ? விஞ்ஞானபூர்வமாக, இந்த கிரேக்க ஜீஸ் கடவுளுக்கு, ரோமானியர் வைத்த பெயர் ஜூபிடர். இந்த ஜூபிடர் கிரகத்தைச் சுற்றி வரும் நிலவுக்குப் பெயர்தான் இந்த ஈரோப்பா. ஒருவேளை விஞ்ஞானத்தை விளங்கவைக்க இந்த கிளுகிளுப்பு கதையை சொல்லிவைத்தார்களோ!

**

கிரேக்க இதிகாசமும் கிருஷ்ணனும்


கிரேக்க இதிகாசத்தில், ஹோமர் இயற்றிய ‘இலியட்’ மற்றும் ‘ஒடிசி’ என்ற இரண்டு இதிகாசங்களும் மிகப் பழமையானது. 
ஐரோப்பியர்களின் பழமையான இதிகாசங்கள் இதுவே. நமது நாட்டில் ‘இராமாயணம்’ மற்றும் ‘மகாபாரதம்’ எப்படியோ அப்படி. இராமாயணம் சூரிய வம்சத்து இராஜாக்களைப் பற்றியும், மகாபாரதம் சந்திர வம்சத்து இராஜாக்களைப் பற்றியும் கூறியுள்ளது. ஹோமர் இயற்றிய இதிகாசங்களுக்கும் நமது மகாபாரதக் கதாபாத்திரங்களுக்கும் நிறைய தொடர்புகள் தென்படுகின்றன. கிரேக்க இதிகாசத்திலிருந்து மகாபாரதம் உருவானதா அல்லது மகாபாரதக்கதையிலிருந்து கிரேக்க இதிகாசக் கதைகள் உருவானதா என்று தெரியவில்லை. கிரேக்க இதிகாசத்தில், Zeus சீஸ் என்ற தலைமைக்கடவுள். இவரே கிரேக்க கடவுள்களின் அரசன் என்று வர்ணிக்கப்படுகிறார். The Zeus is the King of Gods or the Father of Gods. இந்த சீஸ் கடவுள் குரோனஸ் என்பவருக்கும் அவரின் மனைவி ரியா என்பவளுக்கும் பிறந்தவர். இந்த சீஸ் பிறந்த கதையும் வித்தியாசமானதே. எப்படி கிருஷ்ணன் பிறப்பு அவனின் மாமனை பலிவாங்கும் என்று கேள்விப்பட்டு, அவனின் தாய் வாசுகி பெற்ற அனைத்து குழந்தைகளையும் பிறக்கப் பிறக்க கொன்று போட்டானோ, அதுபோலவே இங்கும் இந்த குரோனஸ் தன் மனைவி ரியா பெற்றெடுக்கும் எல்லாக் குழந்தைகளையும் விழுங்கி விடுவான். அதில் ஏதோ ஒரு குழந்தை தன்னைக் கொல்லும் என தேவதை சொல்லி உள்ளதால் இதைச் செய்து வந்தான். ஆனால் அவனின் மனைவி இதற்கு ஒருமுடிவுகட்ட எண்ணி, சீஸ் பிறந்தவுடன் அந்த குழந்தையை மறைத்து வைத்துவிட்டு, அதற்குப் பதிலாக ஒரு கல்லை ஒரு துணியில் சுற்றி அதுதான் இப்போது பிறந்த குழந்தை எனச் சொல்லி அவளின் கணவனான குரோனஸிடம் கொடுத்துவிடுகிறாள். அவனும் அந்த குழந்தைபோலுள்ள கல்லை விழுங்கிவிடுகிறான். மறைத்து வைத்த குழந்தையை ஒலிம்பஸ் மலையில் கொண்டுபோய் விடுகிறாள். அங்கு ஒரு ஆடு அந்த குழந்தைக்கு பால் கொடுக்கிறது. அங்குள்ள ஆடுமாடு மேய்க்கும் இடையர்கள் ஆடிப்பாடி அந்த குழந்தையின் அழகுரல் வெளியில் கேட்டுவிடாதவாறு சமாளித்து வளர்க்கின்றனர். வளர்ந்த சீஸ், நாட்டுக்குள் வந்து, தன் தகப்பன் குரோனஸை சண்டையிட்டு அவனின் வயிற்றைக் கிழித்து, அதில் அவன் விழுங்கிய எல்லாக் குழந்தைகளையும் காப்பாற்றி வெளிய கொண்டு வருகிறான். இப்படி போகிறது இதிகாசக் காவியக் கதையான இலியட்.

இந்த சீஸ் கடவுளே தன் மனைவிகள் மூலம் மற்ற கடவுள்களைப் பெற்றும், தனியே உருவாக்கியும் உள்ளார். இடி, மின்னல்கள், மழை, ஆகாயம் இவைகளுக்கு இவரே காரணகர்த்தா. இவரை இந்திய வேதமான ரிக்வைதம் ‘டையஸ் பிதா’ என்று கூறுகிறது. ரோமானியர்களும் அவர்களின் வழக்கப்படி, இந்த சீஸ் கடவுளைத்தான் ஜூபிடர் Jupiter  குரு அல்லது வியாழன் என்று கூறுகின்றனர்.
**

கற்கை நன்றே! கற்கை நன்றே!!

                                                        
கற்கை நன்றே கற்கை நன்றே; 
பிச்சைபுகினும் கற்கை நன்றே.
பிச்சை எடுத்தாவது படிக்கவேண்டும் என்று சிலர் இதற்கு விளக்கமளிக்கின்றனர். இது தவறு. பிச்சை எடுத்துப் பிழைப்பை நடத்திக் கொண்டிருப்பவராக இருந்தாலும் ‘கற்றல் அவசியம்’ என்பதே சரி.
யாராக இருந்தாலும் படிக்க வேண்டும். அறிவை விருத்தி செய்ய, படிப்பு அவசியம். படிக்க முடியாதவர்கள், அனுபவ அறிவை வளர்த்துக் கொள்வர். அறிவு என்பது ‘உடலுக்கு’ தேவையான ஒன்று அல்ல; உயிர் என்னும் ஆன்மாவுக்கு அறிவு அவசியம் தேவை. இந்தப் பிறவி தாண்டி, அடுத்தடுத்த பிறவிகளுக்கு இது அவசியம் என்பதே இதன் இரகசியம். சிலர் சிறுவயதிலேயே மிகச் சிறந்த அறிவாளியாக இருப்பது, அவர் ஏற்கனவே கொண்டுவந்த அறிவின் முதிர்ச்சியேயாகும். ஆச்சரியமாக இருந்தாலும் இதுவே உண்மை. எனவே, நமது 90, 100 வயதிலும் நம் அறிவை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அறிவு என்பது இந்த உடலுடன் சேர்ந்தே அழிந்து வீண்போகாது. இந்த உடலுடன் மூளை அழியலாம், சிந்தனை அழியலாம், நினைவுகள் அழியலாம், அனுபவங்கள் அழியலாம். அவைகளைக் கூட்டாகச் சேர்த்து ஆன்மாவில் வைத்திருக்கும் அறிவு என்றும் அழியாது. ஆன்மாவின் வழிகாட்டி இந்த அறிவாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை!
காண்ட் என்ற தத்துவமேதை இப்படி ஆச்சரியப்படுகிறார். “ஒரு பசுமாடு, தன் கன்றுக் குட்டியை ஈன்றவுடன், அந்த இளம்கன்று சில விநாடிகளில் தள்ளாடித் தள்ளாடி தானே எழுந்து நிற்கிறது. பின்னர், சொல்லிக் கொடுத்ததைப்போல, மெல்லத் துள்ளி எழுந்து குதித்து, தன் தாயில் பின்னங்கால்களுக்கிடையில் சென்று, தாயின் மடுவை முட்டி, தன் வாயைச் சூப்பி பாலைக் குடிக்கிறது. இந்த விபரத்தை இப்போதுதான் பிறந்த இந்த இளம்கன்றுக்குட்டிக்கு யார் சொல்லிக் கொடுத்திருக்க முடியும். தாய் சொல்லிக் கொடுக்கவில்லை. சைகையும் செய்யவில்லை. எனவே இந்த விபரம், இந்த இளம் கன்றின் ஆன்மாவில் ஏற்கனவே பதிவாகியே இங்கு வந்துள்ளது” என ஆச்சரியப்படுகிறார். ஆன்மாவில்(உயிரில்) ஏற்கனவே பல விபரங்கள், அனுபவங்கள் பதிவாகியே நாம் வருகிறோம். ஒருவேளை இதைத்தான், ‘கர்மவினை’ என்கிறார்களோ?
அறிவு என்பது கல்வி மூலமும் வரலாம்; அனுபவம் மூலமும் வரலாம். கல்வி என்பது, இந்த பிரபஞ்சம் தோன்றி வெகுகாலம் கழித்து உருவாகி இருக்கும்! ஆனால் மனிதகுலம் தன் அனுபவத்தையே அறிவாகக் கொண்டே இயங்கி வருகிறது. அனுபவம் என்பது பட்டறிவே. பட்டறிவு கிடைக்கும்வரை பொறுத்திருக்க முடியாது. எனவே கல்வி மூலம் அதை எளிதில் அடையலாம். ஆனால் தற்காலக்கல்வி, அனுபவத்தைக் கொஞ்சம் கொடுத்து, மீதியை பணம் சம்பாதிக்கும் வழிமுறையைச் சொல்லிக் கொடுக்கிறது எனப் புலம்புகின்றனர். எப்படி இருந்தாலும், பணம் கிடைத்து, அதில் வாழும் வாழ்க்கையும் ஒரு அனுபவ அறிவே. இங்கு அறிவே பிரதானம். அதை அனுபவத்தாலும், கல்வியாலும் பெற முடியும்.

**

புத்தாண்டு வாழ்த்து


அல்லல்போம்! வல்வினைபோம்!
அன்னை வயிற்றில்பிறந்த தொல்லைபோம்!
போகத் துயரம் போம்!
நல்ல குணமதிக மாமருணை
கோபுரத்தில் வீற்றிருக்கும் கணபதியைக் கைதொழுதக்கால்!


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! 
இறைவன் எல்லா வளங்களையும் கொடுக்கட்டும்!!